Sunday, October 31, 2004

அரசியல் கண்ணா அரசியல்!

ஜெயலலிதா அம்மையார் கரன் தப்பாருடன் பேசிய போது, 'சினிமாவில் மட்டுமே நடிக்கத்தெரிந்த எனக்கு அரசியலில் நடிக்கத்தெரியவில்லை' என்றார். இதைச் சொல்வது ஜெயலலிதா அம்மையார் என்பதால் வழக்கம்போல அப்படியே புறந்தள்ளிவிடக்கூடாது. அம்மையாரின் (இன்றைய தவறு உட்பட) அனைத்துத் தவறுகளுக்கும் இந்த அரைகுறைப்பழக்கமும் ஒரு காரணம் என்பதை அரசியல் பார்வையாளர்கள் உணர்வார்கள்.

நேரில் பேசமுடியாத சில விஷயங்களை முரசொலி வழிக் கிண்டல் செய்யவும் வேறுபடுத்தி நடிக்கவும் அம்மையாருக்குத் தெரியவில்லை. நேரில் இனிமையாகப் பேசி, பிறகு பொம்மைக்கத்தியைக் காட்டி மிரட்டியது போல சிரித்துக்கொண்டே புகைப்படம் எடுக்கச்சொல்லிவிட்டு படக்கென்று பொம்மைக்கத்தியை நிஜமாய் உருவி முதுகில் குத்தத் தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் அம்மையாருக்குச் சொல்லித்தர நெருக்கமான யாருமில்லை. எப்போதாவது 'சோ' மாதிரி சொந்தங்கள் வந்து 'அட..இப்படிப் பண்ணும்மா..'என்று 'எடுத்து'க்கொடுத்துவிட்டுப் போனால் உண்டு. இல்லாவிட்டால் கலைஞரின் 'கீதை வழி'ச்சொந்தங்கள் யாராவது வந்து 'ஹோம் ஒர்க்' செய்யவேண்டும். இதெல்லாம் செய்தாலும் காரியத்தின் இறுதியில் காரியமே கெட்டுவிடுவது போல் அம்மையாரின் பிறவிக்குணம் வந்து முன் நின்று விடும். இப்படியெல்லாம் இருந்தாலும் சிம்மராசியும் நட்சத்திரமும் ஜோவியலாக அம்மையாரை ஆட்கொண்டிருக்கிறது. அது ஆடும் ஆட்டம்; அத்தனையும்!

இதெல்லாமிருக்கட்டும். அரசியலில் அடிப்படைத்தேவைகள் என்ன என்பதை வெறும் ஊடகங்கள் வழியாக செய்திகளாகவும் நகைச்சுவைத் துணுக்குகளாகவும் நாம் பார்த்திருக்கக்கூடும். கண்டு நகைத்திருக்கக்கூடும். ஆனால் நிஜமாய் அங்கு நடப்பதுதான் என்ன? அரசியலில் அவ்வளவாய் ஜொலிக்காத தமிழருவி மணியன் சொல்கிறார். அது முழுக்க முழுக்க நிஜம் என்பதை ஒரு 'தேர்தலின் வழி அனுபவித்தவன்' என்ற முறையில் நான் மிக நன்றாக அறிவேன்.

79 வயதிலும், பையன்களே பதவிக்காகச் சண்டை போடும் நிலையிலும் இன்றுவரை அதிகாலை 3 மணிக்கு எழுகிறார், முரசொலியில் எழுதுகிறார், வட்டத்தலைவர்களைக் கூட நினைவில் வைத்து பேசுகிறார், சாமர்த்தியமாக சிலரைப் பழிவாங்குகிறார் என்றால் இவை அனைத்துக்கும் காரணமென்ன என்பதை ஒருநிமிடம் யோசித்துக்கொள்ளுங்கள். தகுதிகள் தெரிகிறதா இப்போது? 'இன்றைய அரசியலில்' நிலைத்து நிற்க வேண்டும் என ஒருவன் விரும்புவானாகில், அவன் கைகொள்ள வேண்டியதும் கடைபிடிக்கவேண்டியதும் கலைஞரின் ராஜதந்திரங்களைத்தான்! அதற்கு அடுத்து எம்.ஜி.ஆர்! கவனியுங்கள்..இன்றைய அரசியலில்..இன்றைய அரசியலுக்காக!

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சருடான உரையாடலைப் பதிவு செய்து வெளியிட்டதும் கூட அம்மையாரின் அத்தகைய குணங்களுல் ஒன்று என்றுதான் சொல்வேன். 'வீ£ரப்பனைச் சுட்டுக்கொள்வதற்கு சில மணித்துளிகள் முன்னால் விஜயகுமாருக்கும் ஜெ.மேடத்திற்கும் நடந்த உரையாடல்' எனக்கு வேண்டும். அம்மையார் வெளியிடுவாரா?

சுயவிருப்பங்களில் பொதுத்திட்டங்களை நகர்த்துவதும் பொதுத்திட்டங்களில் சுய நலத்தைக் காட்டுவதும் தவிர்க்கவேண்டிய ஒன்றல்ல, இன்றைய அரசியலில். ஆனால் அவை இரண்டையும் எப்போது சரிவிகிதத்தில் கலந்துகொள்ளவேண்டும் எப்போது ஒன்றைவிட்டு மற்றொன்றைப் பிரித்து வைத்திருக்க வேண்டும் என்பவைதான் அரசியலில் ஒருவன் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம். இன்னும் அம்மையார் அதைக் கற்றுக்கொள்ளாததே அவரின் பாஸிட்டுவானதும் நெகட்டிவானதுமாகும்.
ரஜினிகாந்த் இன்றும் அரசியலில் நிலை தடுமாறித்திரிவதும் எம்.எஸ் உதயமூர்த்தி சுரம் குறைந்து போனதும் ராஜாஜியின் பேரன் காங்கிரஸில் பின்னிறுத்தப்படுவதும் ஏன் வைக்கோவையும் கூட இந்த லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். (அன்பு அண்ணனிடம் இன்னும் அவர் கற்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது.) முகம் தெரியாது பெயர் தெரியாது அரசியல் களத்தில் நின்று தொலைந்து போய்விட்டவர்கள் இன்னும் ஏராளம்பேர்!இப்போது தமிழருவி மணியனும் இவர்களில் ஒருவர். வலம்புரி ஜானும் ஒருவர்.

இதற்கு எதிரான களத்தில் வெற்றிகரமாக நிற்பவர்கள் என்றால் கலைஞரை விடுங்கள், அவர் பல்கலைக்கழகம். ராமதாஸ் அய்யாவை எடுத்துக்கொள்ளுங்கள். நடிகர்களில் விஜயகாந்திற்கு அத்திறமை கொஞ்சம் இருப்பதாக எனக்குத்தோன்றுவதுண்டு. கவிஞர்களில் கவிப்பேரரசு கொஞ்சம் அறிவார் அவ்வித்தையை! பிற அரசியல் தலைவர்களில் 'எங்க ஊர் ஆள்' திருநாவுக்கரசருக்கு 100% அந்தத்திறமை உண்டு. இன்னும் நிறையப்பேரைச்சொல்லலாம். திருமாவளவனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அதில் சமத்து பத்தாது.

தமிழருவி மணியனின் கட்டுரையில் சிங்கும் கலாமும் வேறுபட்டவர்கள் என்பதாய் வருகிறது. உண்மைதான். மதம் வந்தபோது திறமை வந்தது. மதம் வராயிருக்காவிட்டால் திறமையும் வராது. திறமை இருந்தாலும் தெரிந்தாலும் வராது. வேற்றுநாட்டவரா என்ற பிரச்சனையால் சிங் வரமுடிந்தது. அதாவது திறமை! இந்நிலையில் ஒன்றை மட்டும் யோசியுங்கள்..கலாம் இஸ்லாமிய இனத்தவராய் இல்லாவிட்டால் எவ்வளவுதான் திறமையானவராய் இருந்தாலும் ஜனாதிபதியாகி இருப்பாரா? மிகவும் மேலானவர் அவர்! இதைவிட நல்லபதவியாக கிடைத்திருக்கும், நாலு ஏழைக்குழந்தைக்கு வாத்தியாராக!

ஆக அரசியலில் முதலில் விளையாடுவது ஜாதீயமும் மதங்களுமே! (அதானாலேயே தூத்துக்குடியில் ஒரு நாடாரையும் திருநெல்வேலியில் ஒரு நாடார் அல்லது தேவரையும் நாகர்கோவிலில் ஒரு கிறித்துவரையும் (கிறித்துவ நாடார்) வேலூரில் ஒரு பாயையும் விழுப்புரத்தில் ஒரு வன்னியரையும் ராமநாதபுரம், மன்னார்குடி, தேனிப்பகுதிகளில் ஒரு முக்குலத்தோரையும் நிறுத்துகிறது கழகங்கள்; கட்சிகள்! ஜெயலலிதா எப்படி வேலூரில் ஒரு இந்துவை நிறுத்தி ஜெயிக்கவைக்க முடிந்ததென்றால் அப்போது கலைஞர் பி.ஜே.பி. குழுமத்தில் இருந்தார். அதானாலேயே அவரின் மகமதிய நபர் கூடத்தோல்வியைத் தழுவ நேரிட்டது.)

இப்போது தமிழருவி மணியன் சொல்வதைப் பாருங்கள். உண்மையான இந்தியநாட்டு நல விரும்பியாய் நீங்கள் இருந்தால் அடுத்தமுறை ஓட்டுப்போடும்போது இவ்வார்த்தைகளையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அல்லது அரசியலில் நுழைந்தால் அனைத்தையும் கற்றுக்கொண்டு தெளிவா(க்)க் வாருங்கள்! வாழ்த்துகள்!

எம்.கே.


"இன்றைய அரசியல் உலகத்தின் பொது இலக்கணம் என்ன?

உள்ளுக்குள் வஞ்சம் வளர்த்து உதடுகளில் புன்முறுவலைப் பூசிக்கொள்ள வேண்டும். பொய் முகங்களோடு போலியாகப் பழகத் தெரிய வேண்டும். இல்லாத திறமைகளை யும், பெருமைகளையும் இருப்பதாகச் சொல்லி, விதம் விதமாய் பூச்சொரிந்து பல்லிளிக்க வேண்டும், பணத்துக்கும், அதிகாரத்துக்கும், பணிந்து நடக்க வேண்டும். எங்கே வளைய வேண்டுமோ அங்கே வளைந்து, எவருக்கு முதுகு சொறிய வேண்டுமோ அவருக்கு முதுகு சொறிந்து, கைகூப்பி வாய் பொத்தி நிற்க வேண்டும். குறைந்த பட்சம் கள்ளச் சாராயம்காய்ச்சி யாவது கணிசமாகப் பணம் வைத்திருக்க வேண்டும். கட்டைப் பஞ்சாயத்துக் கலையைக் கற்றுத் தேர்ந்திருந்தால் இன்னும் நல்லது. சாதிக் கட்டுமானம் பின்புலமாக இருப்பது மேலும் நல்லது. இந்திய அரசியலில் இன்று வெற்றிபெற அடிப்படை அரிச்சுவடி இதுதான். இதுதான் பொது விதி. அப்துல் கலாமும், மன்மோகன் சிங்கும் பெற்ற வெற்றிகள் விதிவிலக்குகள்."

தமிழருவி மணியன்.

நன்றி: விகடன்.

Friday, October 29, 2004

வாழ்க நீர் எம்மான்!

"என்னப்பா டியூன் இது??? இதுக்கு என்னத்தை எழுதுறது? எப்படி எழுத முடியும்? மூணாங்கிளாஸ் வாய்ப்பாட்டைத் திருப்பிப் போட்டு வாசிக்கிறமாதிரி இருக்கு?"

"சார் அப்படில்லாம் சொல்லாதீங்க! மியூசிக் டைரக்டர் கேட்டா கோபிச்சுக்கப்போறாரு!"

"கிழிச்சான்! எம் எஸ் வி, ராஜா, தேவா, சந்திரபோஸ், கங்கை அமரன் எல்லாரையும் மிக்ஸ் பண்ணி ஒரு டியூனு போட்டு வெச்சிருக்கான்! இதுக்கு பல்லவி எப்படி எழுத முடியும்?"

"ஆரியமாலா ஆரியமாலான்னு ஏதாவது போடச்சொல்லு. இல்லாட்டி மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்னு ஏதாச்சும் போடச்சொல்லு. டென்ஷன் பண்ணுறாங்கெ!"
****
மியூசிக் டைரக்டர் உதவியாளரைக் கூப்பிடுகிறார்.

"யோவ்..இந்த ஆளு சரி வரமாட்டான். அவரைக்கூப்பிடு. அவர்தான் லாயக்கு."

"சார் அவரு வயசானவரு."

"இருக்கட்டுமேய்யா!"

"இல்லே சார்! இது காதலைச் சொல்லி அவஸ்தை படுகிற காதலன் பாடுற பாட்டு. அவருக்கு முடியுமா?"

"யோவ்..'தொட்டால் பூ மலரும்' யார் தெரியுமா? 'மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'நீ எங்கே..என் நினைவுகள் அங்கே', 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், அட! 'நான் ஆணையிட்டால்' கூட அவருதான்யா எழுதுனது."

"அப்படியா சார்? இருந்தாலும் இதெல்லாம் பழைய படம் சார். புதுப்படம்ன்னு.."

"யோவ்...எழுபத்தி மூணுலயும் இளமையோடு இருக்க ஆளுய்யா அவரு. விகடன் படிக்கிறியா? நளதமயந்தி, ஹேராம், பாய்ஸ், காமராஜ், மின்னலே இன்னும் எத்தனை படம்ய்யா வேணும். எல்லாம் அவருதான். இன்னிக்கும் எழுத்துல இளமையை ஊத்தி எழுதுற ஆளு!"

"அப்படியா சார்? நடு நடுவுலே இங்கிலீஸ் வார்த்தையெல்லாம் போடணும். தேவைப்பட்டா தத்துவத்தையும் எழுதணும் சார்."

"அட! 'தரைமேல் பிறக்க வைத்தான்'னு எழுதணுமா? கலக்குவார்யா அவரு. 'சமஞ்சது எப்படி'ன்னு எழுதணுமா அசத்துவாருய்யா அவரு. இல்லை 'ஓ..மரியா ஓ..மரியா'ன்னு ரம்மியமா எழுதணுமா? இல்லை 'கட்டம் கட்டி கலக்கணு'மா? இல்லை 'சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது'ன்னு இன்னிக்கும் எழுதுவாருய்யா."

"அவ்வளவு பெரியாளா சார் அவரு?"

"என்னய்யா இப்படிக் கேட்டுட்டே? இன்னக்கி 73 வயசாம் அவருக்கு. வாழ்கன்னு மனதார வாழ்த்திட்டு இந்தப்பாட்டை அவரை வெச்சே எழுத வெச்சிடுவோம். என்னய்யா சொல்லுறே?"

"கண்டிப்பா சார். வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்ன்னு நான் சொன்னதா சொல்லிட்டு கூப்பிடுங்க சார்."

எம்.கே.

எஸ்கேப் கண்ணா எஸ்கேப்!

உதவியாளர் உள்ளே வருகிறார்.

நேரம்: 25 அக்டோபர். மாலை 6 மணி.

உதவியாளர்: குட் ஈவ்னிங் சார்.

கங்கூலி: குட் ஈவ்னிங். என்னாச்சு நான் சொன்ன மேட்டர்?

உதவி: ரொம்ப பிஸியா இருந்தார் சார். பேசிட்டு வந்துட்டேன்.

கங்கூலி: என்ன சொன்னார்? பாஸிட்டிவா? நெகட்டிவா?

உதவியாளர்: ரொம்ப ரொம்ப ரொம்ப நெகட்டிவ் சார். பிட்ச், பேஸ் பௌலிங்குக்கு கன்னா பின்னான்னு ஒர்க் அவுட் ஆகுமாம். 100 வது மேட்ச் ஆடுறாரு மெக்ராத். கில்லெஸ்பி, காஸ்புரோவிச் வேற. மூணு எம்டன் சார். பொளந்து புடுவானுக. ஏற்கனவே 35 வருச ரெக்கார்டு பிரேக் வேறயாம். குச்சி பறக்குங்குறாரு கிஷோர் பிரதான். (நம்ம நாட்டோட பிட்ச் மேன்.) யோசிச்சுங்குங்க சார்.

கங்கூலி: என்ன பயமுறுத்துருறீங்க? எனக்கே பேஸ் பௌலிங்கா? சும்மா அப்படி ஆ·ப் சைட்ல பேட்டைச் சுத்துனா நாலு பேருக்கும் இடையில பந்து பறக்கும்யா பவுண்டரிக்கு.

உதவியாளர், அந்தப்பக்கம் திரும்பி மையமாக சிரிக்கிறார்.

உதவி: சார், ஒண்ணுக்கு நாலு தடவை யோசிச்சுங்குங்க. 35 வருஷ ரெகார்டு உங்க கேப்டைன்ஸில போகணுமா? நமக்குத்தான் பலி ஆடு ஒண்ணு எப்பவும் இருக்கே சார். தள்ளிவிட்டுட்டுப்போங்க. ஏற்கனவே 1-0 ந்னு முன்னாடி இருக்குறானுவ. புலி மாதிரிப் பாய்வானுக. போதாதுக்கு சச்சின் வேற இருக்கார். பிரச்சனையே இல்லை. முக்கியமான மேட்சில அவர் அடிக்கமாட்டாருன்னு எல்லாரும் சொல்லுறது மாதிரி இந்த மேட்சிலேயும் அவர் மேலேயும் பழியைப் போடலாம். எதுக்கு சார் வேண்டாத வேலை.? இன்னக்கி தேதில இந்தியன் டீம்ல கேப்டன்ஸிக்கு உங்களை விட்டா ஆளே இல்லை. எத்தனை மேட்ச் சும்மா வந்துட்டுப்போனாலும் நீங்கதான் கேப்டன். அந்த நிலைமையில இருக்கு. எதுக்கு வீண் ரிஸ்க்?

கங்கூலி: (கண்ணை மூடி யோசிக்கிறார்.) அய்யோ..அம்மா..அய்யோ...அம்மா...

உதவி: சார்..சார்..என்னாச்சு? என்னாச்சு சார்? ஏன் கத்துறீங்க?

கங்கூலி: (ஒற்றைக்கண்ணால் பார்த்துக்கொண்டே,) பயந்துட்டியா உதவி? எல்லாம் நம்ம 'நக்மா' டிரையினிங். வயித்து வலி மாதிரி நடிச்சேன். எப்படி நம்ம நடிப்பு?

உதவி: ஹா..ஹா..நான் கூட பயந்துட்டேன் சார். தமிழ்நாட்டுல யாரோ கமலாம். அவர்கூட இப்படி நடிக்க மாட்டாரு சார். பின்னிப்புட்டீங்க. அப்போ உங்களுக்கு வயித்து வலி!? கரெக்டா சார்.?

கங்கூலி: யோவ்.. இப்படி பொத்தாம்பொதுவா சொல்லி வைக்காதே! தொடை மஸில் பிடிச்சுகிச்சுன்னு சொல்லு. ஹிப் மஸில்லயும் பெயின்ன்னு சொல்லு.

உதவி: ஓகேசார். டன்!

(செய்தி: திராவிட் பாவம்!)

எம்.கே.

Monday, October 25, 2004

நிஜமா கண்ணா நிஜமா?

வாசலில் வீரப்பனின் மகள்கள் வித்யாராணியும், பிரபாவும் நின்றுக் கொண்டிருக்க... அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். பிரபா நம்மிடம்,

"டாடியை போலீஸ் அங்கிள்ஸ் சுட்டுக் கொன்னுட்டாங்க. டாடியை போட்டோவுல தான் மம்மி காட்டினாங்க. இப்போதான் நேர்ல பார்த்தேன். எங்க டாடிகிட்ட மான், யானையெல்லாம் இருந்திருக்கு. மம்மி கூட்டிக்கிட்டுப் போய் காட்டுறதா சொன் னாங்க. காட்டவே இல்ல. எங்க டாடியை நான் பார்க்கலனாலும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க டாடியைக் கொன்ன போலீஸ் அங்கிள்ஸை நான் பெரிய பொண்ணாகி டுமீல்னு சுட்டுக் கொல்லுவேன் என திக்கித்திணறி சொன்னாள்."

"தமிழ் துப்பறியும் இதழ்களுக்குத் தாங்கள் எழுதும் எதைப்பற்றியும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜேம்ஸ் பாண்ட் போலக்கொல்வதற்கான உரிமம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒருவரைப் பற்றி -- பரபரப்பாக எழுதினால் விற்பனை அதிகமாகும் என்ற வணிக நோக்கத்தினால் - அவை செய்திகளை உருவாக்குகின்றன.
இன்று தமிழகத்தில் செய்திகளை ஆய்வு செய்தும் எழுதும் எழுத்திற்கான தேவைதான் உள்ளது. கதாசிரியர்களை வைத்து செய்திப்பத்திரிகை நடத்தும் போக்கு செத்து ஒழிய வேண்டும்"

---'காலச்சுவடு' கண்ணன் ஒரு கட்டுரையில்.

இந்த இரண்டு துணுக்குகளுக்கும் ஏதாவது சம்பந்தமிருப்பதுபோல் தோணவேண்டும் உங்களுக்கும். தோணுகிறதா?

பத்தாவது படிக்கிறாராம் வீரப்பன் மகள் திவ்யா. அவரை விட மூத்தவர் வித்யா ராணி. ஆனால் மேலே சொல்லப்பட்ட வீரப்பன் மகளின் வாக்குமூலம் ஒரு எல்.கே.ஜி படிக்கும் குழந்தையின் வாக்குமூலத்திற்கு நிகராயிருக்கிறது. இது நிஜமாகவே நடந்திருக்கக்கூடியதா? 'போலீஸ் அங்கிள்ஸ், அவரை நான் பெரியவளாகி சுடுவேன்' என்பதெல்லாம் அழ. வள்ளியப்பாவின் கதைகளில் வரும் காட்சிகள் போலல்லவா இருக்கிறது?

ஊடகங்கள் வழியாகப் பார்த்தபோது அப்பெண்களிருவரும் சுற்றியிருந்தவர்கள் அழுததாலேயே கண்கள் கலங்கினர். அதுவுமில்லாமல் பிறந்ததிலிருந்து இன்றுவரை எப்போதும் பார்த்திராத பேசியிராத அப்பா என்பவரைக் காட்டி செத்துப்போய் விட்டார் என்று சொன்னால் என்ன உணர்வு வரும்? ஏதோ திடீரென்று தங்கள் மீது வந்து விழும் ஊடக ஒளியிலும் பாடுகளிலும் தடுமாறி திருவிழாவில் தடுமாறும் குழந்தைகளைப் போலவே அவர்கள் என் கண்களில் நின்றனர். ஆனால் பத்திரிகைகள் அப்படியா எழுதுகினறன?

எம். கே.


Thursday, October 21, 2004

தவறு கண்ணா தவறு!

"சிரிப்பே அறியா சிடுமூஞ்சிக்கு மைனா போல் ஒரு பொண்டாட்டி. வந்தான் ஹீரோ பாட்டோட வடுகப்பட்டி ரோட்டோட!" இப்படி ஆரம்பிக்கும் ஒரு விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி பார்க்க நேர்ந்திருக்கும். பார்த்திருக்கிறீர்களா? முதல் வரிப்பாட்டுக்குள் தூங்கும் கணவனுடனான (அழகான) அவளின் புகைப்படத்தைக் காட்டி, சேலையை பின்னிழுத்துச் செருகி 'கை வலிக்குது கை வலிக்குது மாமா' ரேஞ்சில் அவள் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பதையும் காட்டுவார்கள். அப்போதுதான் வருவான் 'வடுகப்பட்டி ராஜா!' (வைர முத்து இல்லப்பா. நிழல்கள் சந்திரசேகர் மாதிரி!) ஓஹோ...வென்று பின்னணி இசையோடு ஹிப்பித் தலையுடன் அழகான வேலைப்பாடுள்ள சைக்கிளுடன்! இரண்டாம் வரிப்பாட்டுக்குள், கிழவர் கடையிலே 'மிண்ட்-ஓ-பிரஷ்' வாங்கித்தின்றுவிட்டு பாட்டு முடியும்போது சைக்கிளில் அவளையும் கூட்டிகொண்டு போய்விடுவான். இருவரும் போவதைத் தன் கண்ணாடியைத் துடைத்து மாட்டிப் பார்த்து விழிப்பார் முதியவர்.

நான் முதலில் அவ்விளம்பரத்தைக் காண நேர்ந்த போது கொஞ்சம் ஆடித்தான் போனேன். கேட்சிங் வாசகங்களோடும் இசையோடும் வந்த அவ்விளம்பரத்தின் சில விஷயங்கள் பிடித்திருந்தாலும் விளம்பரத்திற்காக எடுத்துக்கொண்ட செய்தி சரிதானா? உகந்ததுதானா எனவும் யோசித்தேன். என்ன இருந்தாலும் இந்தியாவில் இப்படியெல்லாம் காண்பிப்பது சரியில்லை எனத்தான் நினைத்துக்கொண்டேன். விளம்பரத்தைத் தயாரித்தவர்களின் எண்ணப்படி எனது நிலையும் இப்போது எழுதும் நிலையும் வெற்றியின் அறிகுறியாகவே இருக்கலாம். ஆனால் விளம்பரத்தின் கண்ணோட்டம் தவறானது தானே! (ஏம்ப்பா...இப்போ வாற சீரியல்லாம் பாக்குறியா? அதை விடவா இதுல மோசமா காமிக்கிறாங்கன்னு என் மனசாட்சி சொல்லும். கண்டுக்காதீங்க!)

ஒன்றுமில்லை. அவ்விளம்பரத்தில் காண்பிக்கும் அத்திருமண புகைப்படத்தை மட்டும் காண்பிக்காமல் இருந்தால் அவளுடைய கணவன், அப்பாவாகவும் இருக்கலாம் என்ற நிலை இருக்குமல்லவா? கொஞ்சம் யோசிக்கிற மாதிரியே விடலாமே! விளம்பர நிர்வாகிகளே இப்படியும் கொஞ்சம் யோசிங்க!
அதிருக்கட்டும், நீங்க என்ன யோசிக்கிறீங்க? சொல்லுங்க!
எம்.கே.

Tuesday, October 19, 2004

மனதைப் பாதித்த சம்பவம் 1.

சினிமா நடிகைகளின் வாழ்வுபற்றி கிசுகிசுவைத்தவிர நான் என்ன எழுதினாலும் அது யாருக்கும் புதிதாய் இருக்கப்போவதில்லை. கிசுகிசு ஒன்றுதான் மார்க்கண்டேயத்தனம் கொண்டது. தமிழ் சினிமாவில் நடித்த முதல்பெண்மணியிலிருந்து இன்றைய புது ஹீரோயின் வரை, எம்.கே.டி யிலிரூந்து சிம்பு, ஜெய் ஆகாஷ் வரை எல்லோருக்கும் கிசுகிசு இருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும். வாழ்வில் அதெல்லாமில்லாவிட்டால் சுவையிருக்குமா?

நான் சொல்ல வந்தது, நடிகைகளின் வாழ்வு பற்றி. உறவுகளின் பண ஆசையோ, அன்பென்றால் விலை என்ன என்று கேட்கும் குடும்பத்தார்களோ, இதுதான் சந்தர்ப்பமென்று உள்ளே புகுந்து காதல் நாடகமாடி, கர்ப்பமாக்கிவிட்டு தவறான கிசுகிசுவை பரப்பிவிட்டு, எனது குடும்பத்தினர் சொல்லியதால் வேறு பெண்ணை மணந்துகொண்டேன் என்று சொல்லும் சக திரைத்தொழிலாளர்களோ இவர்களால் அல்லது இவைகளால் எப்படி ஒரு நடிகை நிஜத்தில் சீரழிகிறாள் என்பதுதான் அது.

எல்லாம் நம்பிக்கைகளும் முடியும் தருணத்தில் என்ன செய்வார்கள் இந்த அபலைகள்? எல்லாப் பெண்களுக்கும் உள்ள ஒரே வழி! நடிகைகளானாலும் இவர்களும் பெண்கள்தானே? தற்கொலை! போ. இனிமேல் இவர்கள் யாரிடம் பணம் வாங்குகிறார்கள் பார்க்கலாம்? யாரிடம் தா தா என்று பிடுங்கப்போகிறார்கள்? அவனும்கூட துரோகம் செய்துவிட்டான்? அவனுக்கும் எனது உடல்தான் பிரதானமா? இனி எதன் மேல்புரண்டு படுப்பான்? இந்த உலகத்தில் யாருக்குமே நான் மனுஷி என்று தெரியவில்லையா? பணம்,பணம்,பணம்..மேலும் உடல்!

எதுவும் வேண்டாம் போ! இப்படித்தான் நடந்து முடிகிறது அவர்களின் வாழ்வு. கவர்ச்சி நடிகையாய் இருந்தாலும் சரி குடும்ப நடிகையாய் இருந்தாலும் சரி, தேசியவிருது வாங்கிய நடிகையாயிருந்தாலும் சரி. இதுதான் கதி.

மீராஜாஸ்மின் எனக்குப்பிடித்த நடிகைகளில் ஒருவர். நடிப்பிலும் சரி இன்னபிற ஊடகங்களாலும் சரி! அண்மையிலொரு விருது வழங்கும்மேடையில் அச்சின்னஞ்சிறிய தேவதை கண்ணீர் கலங்கி அழுகிறது. காரணமென்ன இருக்கமுடியும்? மேற்சொன்ன துரதிஷ்டங்கள்தான்! பாவம். நடிப்பில் தேசிய விருதுபெற்ற அழகான நடிகை! உறவினர்களைப் பிடித்து கழுத்தை நெறித்துக் கொலை செய்யவேண்டும் போல எனக்குக் கோபம் வருகிறது. தேவதைகள் அழலாமா? அல்லது அழத்தான் விடலாமா?

எம்.கே.

Wednesday, October 13, 2004

அதிர்ஷ்டக்காத்து அடிக்குது வாருங்கள்!

எம்.கே.குமார்.

வாருங்கள், வணக்கம்! குருபகவான் நல்லது செய்ய ஆரம்பித்துவிட்டான். இந்தக் குருப்பெயர்ச்சியானது சகல செல்வங்களையும் உங்களுக்கு கொண்டு வரப்போகிறது. அதன் முதற்படியாகத்தான் இதோ இந்தக்கட்டுரையைப் படிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். இதுதான் ஆரம்பம். இன்று மிக நல்ல நாள், மிகவும் அதிர்ஷ்டமான நேரம் இது! சொல்லப்போகும் செய்தி அப்படிப்பட்டது. முதலில் மூச்சை இழுத்துவிட்டுக்கொள்ளுங்கள். மேலே போகலாமா?

சொல்லப்போகும் அனைத்தும் என் நண்பரொருவர் எனக்குச்சொன்னது. அந்த அதிர்ஷ்டக்காரக் குபேரர்களில் நானும் ஒருவனாகப்போகிறேன்.என் நண்பரைப் போல நானும், ஏன் நீங்களும் விரைவில் அப்படி ஆகலாம். அதற்குத்தானே ஆசைப்படுகிறோம் நண்பர்களே! வாருங்கள், அந்த அலுவலமும் விரைவில் ஆளெடுக்கப்போகும் செய்தி மெதுவாக கசிந்துகொண்டிருக்கிறது, தயாராகுங்கள்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், உங்களுக்கு அரசாங்கத்தில் வேலை! என்ன வேலை என்பதையெல்லாம் இப்போது கேட்காதீர்கள். இருக்கட்டும் அது. எந்தவித ஸ்டிரைக்கும் எதிர்காலத்தில் செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்து வசதிகளையும் அள்ளித்தரப்போகும் அட்சயபாத்திர அலுவலகத்தில் என்ன வேலையாய் இருந்தால் என்ன? வேலை செய்யும்படியாகவா வேலை இருக்கப்போகிறது அதுவும் அரசாங்க அலுவலகத்தில்! அப்படியே இருந்தாலும் நமக்கென்ன பைத்தியமா வேலை செய்வதற்கு? அதுவும் அரசாங்க அலுவலகத்தில்?!

இந்தியாவின் தலைநகரில்தான் இருக்கிறது அந்த அலுவலகம். பயப்படாதீர்கள், எந்தவித அரசியல்வாதிகளின் குறுக்கீடும் இல்லாமல் ஆண்டவன் புண்ணியத்தில் வேலை நல்லபடியாய் நடக்கும். பயத்தையெல்லாம் விடுத்து கொஞ்சம் கவனமாய்ப்படியுங்கள். நத்தையின் வயிற்றிலும் முத்து பிறக்கும், டெல்லியிலும் நமக்கு நல்லது நடக்கும். தயாராகிவிட்டீர்களா? ம்ம். நல்லது.

முப்பது நாள் கொண்ட மாதத்தில் முப்பது நாட்களும் மக்களுக்காக உழைக்கப்போகிறோம் இல்லையா? எனவே முதலில் சம்பளத்திலிருந்து ஆரம்பிப்போம். ஒரு மாதச்சம்பளம், இந்திய ரூபாயில் பன்னிரெண்டாயிரம் மட்டும். சம்பளம் போக அவ்வப்போது நடைபெறும் அலுவலக கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நாளுக்கு ஐந்நூறு ரூபாய் உங்களுக்கு. போதுமா.? திடீரென்று வந்து கலந்துகொண்டுவிட்டுப் போய் விட்டால் பிறகு கூட்டத்து விஷயங்களில் ·பாலோ அப் இல்லாமல் போய் விடுமல்லவா? அதற்காகத்தான் இது. குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது கலந்துகொள்ள வேண்டும். வேறென்ன வேலை? போய் அமர்ந்து சிறிது நேரத்தில் கூச்சல் ஆரம்பித்த பிறகு எழுந்து வருவதுதானே! ஐந்நூறு ஓகேதான். விடுங்கள்.

இப்படியே போனால் நல்ல சம்பளத்தில் அமைதியாக திளைத்து உட்கார்ந்து விடுவீர்கள்! சொந்தக்காரர்களையும் மிச்ச மீதி இருக்கும் ஊரையும் கவனிக்கவேண்டுமல்லவா? அதற்குத்தான் மாதாமாதம் 'மேம்பாட்டு படி'யாய் பத்தாயிரம் ரூபாய். இந்தத்தொகை நீங்கள் பதவியில் இருக்கும் முழுக்காலத்திற்கும் மாதாமாதம் வழங்கப்படும். கவலை இல்லைதானே! எல்லா ஊரையும் இதை வைத்து வளைத்து விடலாமே! அவகாசமும் இருக்கிறது.!

இதுபோக, வேலைக்குச்சேர்ந்த உங்களில் சிலர் படிக்காமல் இருக்கலாம், பேனா வைத்திருப்பீர்கள் அல்லவா? அது போதும்! அதற்குப் பணம் தருகிறார்கள். மாதம் மூவாயிரம் ரூபாய். இதுபோகவும் கடித செலவுகளுக்கென்று மாதம் ஆயிரம் ரூபாய். சந்தோசம்தானே! எல்லாம் இருந்தாலும் இவற்றைக் கவனிக்க ஒரு உதவியாளர் இருந்தால் நன்றாய் இருக்குமே என்று நினைப்பவரா நீங்கள்? சோகம் வேண்டாம்! அவரை நிர்ணயம் செய்வதற்கு ஆகும் செலவும் சம்பளமும் அரசாங்கமே கொடுக்கிறது. மாதம் பத்தாயிரம் ரூபாய். நாமே கூட அதில் பாதியைச் சுருட்டிக்கொள்ளலாம். எப்படி வசதி?
மொத்தமாக இதுவரை மாதம் எவ்வளவு தேறும் என்பதை நீங்களே கணக்கில் வைத்துக்கொண்டிருப்பீர்கள். அடுத்து பயணப்படி பக்கம் வருவோம்.

தனது சொந்த ஊரின் வீட்டிலிருந்து டெல்லியில் அலுவலகம் வரை செல்வதற்கும் அல்லது தன் வீட்டிலிருந்து அலுவலகக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நீங்கள் செல்லும் பயணத்திற்கும், பயணம் செய்யும் வழிகளைக் கணக்கில் கொண்டு பயணக்கட்டணம் தரப்படும்.ரயில் வழியாக நீங்கள் பயணித்திருந்தால் 'குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு' கட்டணம் ஒன்றும் 'ஒரு இரண்டாம் வகுப்பு' கட்டணமும் (எதற்கு இது என்றெல்லாம் கேட்காதீர்கள்; கொடுக்கிறார்கள் வாங்கிக்கொள்ளுங்கள்) கொடுக்கப்படும். இதற்கு எந்த வகுப்பில் பயணம் செய்தோம் என்பதெல்லாம் அவசியமில்லை. அப்படிப்போடு என்பீர்களே! அதேதான். அவசரப்படாதீர்கள்.

எத்தனை நாளைக்குத்தான் ரயிலிலேயே பயணிக்க முடியும்? நியாயம்தானே! அலுவலக வேலையில் கலந்துகொள்ள வான் வழியாகப் பயணிக்கப்போறீர்களா? விமானக்கட்டணத்தின் 'ஒண்ணேகால் பகுதி' கட்டணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படும். இதுபோக கடல்வழியாகப் பயணிப்பவர்களும் இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்கு கட்டணத்தின் முழுப்பகுதியும் அதுபோக ஐந்தில் மூன்று பங்கு சேர்த்தும் வழங்கப்படும்.

சாலை வழியே பயணிக்கும் எளிமையான மனிதரா நீங்கள்? உங்களுக்கு 'கிலோமீட்டருக்கு ஆறு ரூபாய்' கணக்கில் மொத்தமாக கணக்கிட்டுக் கொடுக்கப்படும். அதற்காக மீட்டரை நான்கு நான்காய் ஓட வைத்தெல்லாம் ஏமாற்றமுடியாது சார். இந்தியாவுக்குள் எல்லா இடத்துக்கும் எங்கிருந்து எங்கு எவ்வளவு தூரம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இருக்கட்டும். டெல்லி விமான நிலையம் வரை வந்து இறங்கியாகி விட்டது, அங்கிருந்து அலுவலகம் வருவதற்கு? அல்லது அலுவலகத்திலிருந்து ஏரோடிராம் போவதற்கு யார் கொடுப்பார்களாம்? அதற்குத்தான் ஒரு சவாரிக்கு 120 ரூபாய். புரிந்ததா? இப்போது எல்லாம் ஓகேதானே!
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இந்தியாவின் எந்த மூலைக்கும் நீங்கள் அலுவலக நிமித்தம் சென்று வரலாம். ஒரு முதல் வகுப்பு ரயில் பயணக்கட்டணம் அல்லது ஒரு முழு விமானக்கட்டணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படும். இது என்ன கொசுறு!? இருக்கிறது இன்னொரு பெரிய நலத்திட்டம் பாருங்கள்! ஆஹா!

இந்தியாவின் எந்த மூலையிலிருந்து எந்த மூலைக்கும் வருடத்திற்கு 32 முறை நீங்கள் இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம். அதிக வேளைப்பளு காரணமாக உங்களால் இவ்வசதியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் கவலையே படாதீர்கள். அந்த 32 ஐ அடுத்த வருடங்களுக்கும் கொண்டு செல்லலாம். பாதுகாப்பு மற்றும் இயற்கை காரணிகளால் சொந்த இல்லத்திற்கு திரும்ப முடியாவிட்டால் உங்களது ஊருக்கு வான் வழியாக பயணித்தால் எது நெருங்கிய இடமோ அதுவரை விமானக் கட்டணம் இலவசம். இதற்கு மேல் என்ன வேண்டும்?

கண்பார்வையற்ற அல்லது உடல் ஊனமுற்றவரா நீங்கள்? உங்களோடு இன்னொருவரையும் துணைக்கு அழைத்துச்செல்லலாம் அலுவலகத்திற்கு. இருவருக்கும் விமானக்கட்டணம் இலவசம்; ரயில் கட்டணமும் இலவசம். (இதற்காக சும்மாவாச்சும் அரவிந்த் ஆஸ்பத்திரில் ஆபரேஷன் செய்துகொள்ளக்கூடாது!)

சரி டெல்லிக்குப் பயணித்து விட்டீர்கள். சில பல காரணங்களால் நடந்துகொண்டிருந்த ஒரு முக்கிய கூட்டம் பாதியில் முடிகிறது அல்லது ஒரு கூட்டம் முடிந்து அடுத்த கூட்டம் ஆரம்பிக்க சிறிது நாளாகிறது. இப்போது என்ன செய்வது? ஒன்றும் பிரச்சனை இல்லை.
இரு கூட்டத்தொடர்களுக்கும் இடையே ஏழு நாட்களுக்குள் இருந்தால் அந்த ஏழுநாட்களுக்கும் தினத்துக்கு ஐந்நூறு ரூபாய் கொடுக்கப்படும். அல்லது அந்த ஏழு நாட்களுக்குள் எங்காவது நீங்கள் குட்டி டிரிப் அடித்துவிட்டு வந்தால் கூட அந்த விமானக்கட்டணமும் இலவசம். இது எப்படி இருக்கு?
சரி, உள்நாடு வேண்டாம். வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசை வந்துவிட்டதா? செல்லுங்கள். தனது கடமையைச்செவ்வனே செய்வதற்காக நீ£ங்கள் செய்யும் வெளிநாட்டுப்பயணச்செலவு அனைத்துக்கும் அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளும். ஜஸ்ட் எஞ்சாய் மேன்!

விமானத்துறை இருக்கட்டும். இந்த ரயில்வே நிர்வாகத்திற்குத்தான் நம்மீது என்னே கருணை பாருங்கள்! ஒரு அலுவலர், இந்தியாவின் எந்த மூலைக்கும் எந்த ரயிலிலும் 'குளிரூட்டிய முதல் வகுப்பு' மற்றும் 'எக்ஸிக்யூட்டிவ் வகுப்பு'களில் தனக்கு 'இன்னொரு துணை'யுடன் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாமாம். ரயில்வே நிர்வாகம் அந்த 'பாஸ்' வழங்குகிறது. போதுமா சார்? எத்தனை வீடு இருந்தாலும் கவலை இல்லைதானே!

அதுமட்டுமா? உங்களது மனைவி அல்லது உறவினர் ஒருவர், வருடத்திற்கு 8 முறை இதே போன்றதொரு 'குளிரூட்டிய முதல்வகுப்பில்' தனது சொந்த ஊரிலிருந்து டெல்லிக்குப் பயணிக்கலாம். இந்த சலுகை விமானத்திலும் தொடரும். (பாருங்கள் சார், நெல்லுக்கு இறைத்த நீர்..மாமனார் மாமியாருக்கும் பரவுகிறது...ம்ம்)

ஊர் சுற்றியது போதுமா? அங்குமிங்கும் அலைந்ததில் காய்ச்சல், தண்ணீர்ப்பிரச்சனையால் சளிப்பிரச்சனை, அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு; நோயா? கவலை இல்லை. வாருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எவ்வளவு செலவாகியது மருத்துவத்தில்? கைமேல் காசு! திருப்பித்தருகிறது அரசாங்கம்.

வேலைக்குச்சேர்ந்த நாளிலிருந்து ஒரு சில நாட்கள்வரை உங்களுக்கு நல்ல இருப்பிடம் இல்லையா? இலவசமாகத் தருகிறது அரசாங்கம்.டெல்லியின் எந்தத் தெருவில் வேண்டும் உங்களுக்கு? அதற்குப்பிறகு டெல்லியில் இருக்கும் 84 பங்களாக்கள், 143 அடுக்குமாடி வீடுகள் மற்றும் ஹாஸ்டல்- ஹோட்டல்களில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் தங்கலாம்.

வீடு மட்டும் தந்தால் போதுமா? பொறுங்கள், கோபப்படாதீர்கள்! எல்லாவற்றிற்கும் வசதி செய்து தரமாட்டோமா?

வருடத்திற்கு 25000 யூனிட் மின்சாரம் இலவசம், அனுபவியுங்கள். ஏசியை அரவணைத்துத் தூங்குங்கள். தண்ணீர்..அது வேண்டாமா? எவனாவது எங்காவது தண்ணீர் இல்லாமல் நாக்கு வரண்டு இறந்தால்...நமக்கென்ன? 2000 கிலோலிட்டர் வருடத்திற்கு. அள்ளிக்குளியுங்கள். ஆடுங்கள். பாடுங்கள். ஆனந்தமாயிருங்கள்.

உங்களது பெயர் மஸ்டர் ரோலில் சேர்ந்துவிட்டதா? போதும்! பிடியுங்கள், இரண்டு தொலைபேசி இலவசம் உங்களுக்கு, உங்களது பெயரில். வருடத்திற்கு ஒரு லட்சம் அழைப்புகள் இலவசம். யப்ப்பா!

போதவில்லையா? இண்டர்நெட் இருந்தால் வசதிப்படும் என நினைக்கிறீர்களா? இதோ..இலவச கம்ப்யூட்டர். இணைய வசதியோடு. போதுமல்லவா? பல நாடுகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம், அடிப்படை வசதிகளைப் பெருக்கலாம். அன்னிய முதலீடுகளையும் அன்னியச்செலாவணியையும் பெருக்கலாம். எப்படி வசதி? என்ன சொல்கிறீர்கள்?
கன்வேயன்ஸ் அல்லவன்ஸ் வேண்டுமா? ஒரு லட்சம் போதுமா? ஆனால் இது திருப்பிப் பிடித்துக்கொள்ளப்படும். பரவாயில்லையா?

'சரி, இப்போது எல்லாம் செய்வார்கள். ரிடயர்டு ஆனால்? எப்படி? என்ன செய்து தரும் இந்த அரசாங்கக் கம்பெனி?' என்ன சகோதரரே, இவ்வளவு செய்து கொடுக்கும் செல்வச்சீமான்கள் அதற்கும் ஒரு நல்வழி காட்ட மாட்டார்களா? மனசாட்சி இல்லையா அவர்களுக்கு? கேளுங்கள்!

நான்கு வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தால் போதும். உங்களுக்கு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் கடைசிக் காலம் வரை. அதற்கு மேல் நீங்கள் ஆண்டு அனுபவித்த ஒவ்வொரு வருடத்திற்கும் 600 ரூபாய் சேரும். இல்லை குறைந்தது இரு ஐந்து வருடங்கள் அலுவலக வேலை பார்த்தீர்களா? அடித்தது லக்கிப்பிரைஸ். பத்தாயிரத்து ஐந்நூறு ரூபாய் மாதம். போதுமா பென்ஷன்?! இருங்கள், தலை சுற்றிக் கீழே விழுந்து விடாதீர்கள். எடுத்தவுடன் 'ரிடயர்டு' ஆக்க முடியாது உங்களை. தயவுசெய்து யாரும் அடம் பிடிக்காதீர்கள்.

சரி, வேலைக்காலத்திலே தகாத முறையில் ஏதாவது ஆகி இறந்துவிட்டோம் எனில்.. கவலையே இல்லை. நமது மனைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு. போதாதா?
பெருமூச்சு விட்டு முடிந்தாகிவிட்டதா? ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். இனி உங்களுக்குத்தான் அத்தனையும். எப்போது இவையெல்லாம் கிடைக்கும் என்கிறீர்களா? அவசரப்படாதீர்கள்!

எல்லாவற்றிற்கும் காலம் வரவேண்டாமா? மாயாவதிகளுக்கும் லல்லுகளுக்கும் முலாயம்களுக்கும் மற்றும் இன்னபிற தேசத்தலைவர்களுக்கும் "மூடு" வரவேண்டாமா? உடனேயா கவிழ்க்க முடியும்.?
அடுத்த எம்.பி நீங்களாய் இருக்க எல்லாம் வல்ல அரசியல் கடவுளைப் பிராத்தியுங்கள். குருபகவான் உங்களைக் கைவிடமாட்டார்.

வாழ்க ஜனநாயகம்! வளர்க லோக் சபா ராஜ்ய சபா உறுப்பினர்கள்!


Saturday, October 02, 2004

மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி.

மகானே!

மீண்டும் பிறந்து வா!
குண்டுகளுக்கும்
தோட்டாகளுக்கும் பயப்படாதவன் நீ!
ஆகையால்
மீண்டும் பிறந்து வா!

தலைவனை இழந்து துயரப்படும்
குழந்தைகள் நாங்கள்!

'இன்று' எங்களுக்கு
எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது

அம்மை அப்பனை
முதியோர் இல்லத்தில் சேர்க்க!
சகோதரனை சொத்துக்காக
ஹர சம்ஹாரம் செய்ய!
மனைவியை மந்தையாக்க!
எதிரிகளை முதுகில் குத்த!

என எல்லாவற்றையும்
இன்றைய இன்று எங்களுக்குக் கற்றுத்தருகிறது.

விலைமகளிடம் போய்விட்டு
விலை போகாமல் வந்தவன் நீ!

இன்று விலைமகளிடம் போய்விட்டு
விலைகொடுத்து வாங்கி வருகிறோம் நாங்கள்!
காலத்தைப் பார்த்தாயா மகானே!

வா! வந்து படித்த சிலருக்கேனும்
வாழும் வகையைச் சொல்லிவிட்டுப்போ!

ஏனெனில்
இவர்களெல்லாம்
ராமாயாணத்தையும் படித்துவிட்டு
கோயிலையும் இடிக்கிறார்கள்!
குரானையும் படித்துவிட்டு
குண்டும் வைக்கிறார்கள்!

மீண்டும் வா!
இன்னொரு கோட்சே எங்காவது இருப்பான்!
அவனிடம்இம்முறை என் முறை சாக என்கிறேன்!
பயப்படாமல் வா!
உனது தோளுக்கு காவலாகவும்
கொள்கைக்கு கோட்டையாகவும்
இன்று நானும் இருக்கிறேன்.

எம்.கே.

ஒரு ஷாம்பும் ஒரு நிகழ்வும்

சென்ற வாரத்தில் ஜெயலட்சுமி எத்தனை முறை தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். (தெரியவேண்டுமல்லவா?! சரித்திரத்தில் இடம் பிடிக்கும் முக்கிய நிகழ்வு அல்லவா அது?) ஜெயலட்சுமி கமகமவென்று ஷாம்பு போட்டு குளித்து கூந்தல், காற்றில் மோகனராகம் பாட பளிச்சென்று காட்டன் சேலையில் வந்து விரிந்த இதழ்களோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் இறங்கிய செய்தியை படித்தபோதும் பார்த்தபோதும் எரிச்சல் அதிகமாக, அட! என்னமா (இன்னும்) இருக்காய்யா என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் சக அறைவாசிகள். அதெல்லாம் இன்றைய இன்றுக்கு நிரம்ப முக்கியம் பாருங்கள்! இனி என்ன ஷாம்பூ போட்டார், எப்போது குளித்தார், எத்தனை முறை குளித்தார் என்றெல்லாம் விளம்பரம் வரலாம். சினிமாவில் நடிப்பீர்களா என்று வேறு அந்த மாதுவிடம் கேட்கிறார்கள்!

அதெல்லாம் பற்றி நான் சொல்ல வரவில்லை.

ராஜா ராமண்ணா என்றொருவர் கடந்த வாரம் இறந்து போனார் அது எத்தனை பேருக்குத் தெரியும் இங்கே? அந்த ராஜா ராமண்ணா யார் தெரியுமா?

1925 ல் கர்நாடகாவில் பிறந்தவர். சென்னைப் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று லண்டன் சென்று ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்று மீண்டும் இந்தியாவிற்கு வந்து (கவனிக்கவும், மீண்டும் இந்தியாவிற்கு வந்து) டாக்டர் பாபா ஆராய்ச்சிக்கூடத்தில் இணைந்தவர்.

1965 முதல் 1968 வரை இந்திய அணுகுண்டு வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றியவர்.

1974ல் இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்தியபோது (இந்திராவின் ஆட்சிக்காலத்தில்) முக்கிய பொறுப்பில் இருந்தவர்களில் அவரும் ஒருவர்.

1990களில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருந்தவர்.

எல்லாவற்றிற்கும் மேலாக நமது பாரத முதல் குடிமகனின் ஆசான் வேறு!

அப்படிப்பட்டவர் இறந்து போன செய்தி ஜெயலட்சுமியின் கூந்தல் வாசத்தில் தடம் பிறழ்ந்து போகிறது! என்னே மரபு இது! கேவலம்!

எம்.கே.

ஒரு கவிதை

என் நண்பன் யாரென்று சொன்னால்
என்னைப் பற்றிச் சொல்வேன்என்றார்கள்.

குருதி தோய்ந்த காயங்களை
மௌனம் தைத்த உதடுகளுக்குள்
புதைத்துவிட்டு,
வார்த்தைகள் இழந்து
ஜன்னலின் இந்தப் பக்கம் நான்!

வைத்துக்கொள்ள ஏதுமின்றி
எல்லாம் கொட்டித் தீர்க்கும்
ஜன்னலின் அந்தப் பக்கம் மழை!

அறுக்க முடியாத ஆயிரமாண்டு இழை
நீடிக்கிறது மழைக்கும் பெண்களுக்கும்!


இந்த கவிதையை எழுதியவர் தாமரை! கவிதையில் பூதாகரம் காட்டும் விஷயம் எதுவுமில்லை என்னும் போதிலும் ஒரு நிமிடம் கவிதை ரசிக்க வைக்கிறது. இந்த வார விகடனில் தாமரையின் மற்ற கவிதைகளை விட இது கொஞ்சம் பரவாயில்லை.
எம்.கே.