Friday, June 18, 2010

முனைவர் எம்.எஸ். ஸ்ரீலஷ்மியின் வல்லினம் இதழ் விமர்சனக் கட்டுரை - எனது பார்வையில்

நீண்டகாலமாய் பதிவெதுவும் போடாமல் கிடந்த எனக்கு இதைப்பற்றி எழுதவேண்டும் ஒரு உந்துதலை ஏற்படுத்தியதற்காக, வல்லினம் இதழில் "சிங்கப்பூரில் கவிதையின் போக்கு 90களுக்குப்பிறகு" என்ற கட்டுரையின் படைப்பாளர், முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்களுக்கு நான் முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

சிங்கப்பூரில் உள்ள (ஒரு கை விரல் மட்டுமே கொள்ளக்கூடிய) விமர்சன முனைவர்களில் எம்.எஸ்.
ஸ்ரீலஷ்மியும் ஒருவர். தொடர்ந்து அவர் புத்தகங்களை சேகரிக்கிறார் அல்லது வாசிக்கிறார் அல்லது விமர்சனமிடுகிறார் என்பதும் தொடர்ந்து அவர் இத்துறையில் இயங்குவதும் சிறப்பு! ஆனால் விமர்சனம் என்ற பெயரில் நெறியற்ற மேதைமையையும் போலி அக்கறையையும் தரமற்ற தகவல்களையும் தரும்போது கொஞ்சம் வருத்தமாய் இருக்கிறது.

எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி தொன்னூறுகளூக்குப்பிறகு வந்த அத்தனை கவிதைப் புத்தகங்களையும் படித்தாரா அல்லது 90களுக்குப்பிறகு எழுதிய நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு உடையோர் எழுதியவைகளை மட்டுமே படித்தாரா தெரியவில்லை. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மேலே சொன்ன வகையறாவைச் சேர்ந்தவர்கள்.

இன்னொரு ஐயமும் எனக்கு உண்டு. நான்கு கட்டுரைகளை எழுதி அதை அப்படியே இடியாப்பம் பிய்ப்பது போல் பிய்த்துப்போட்டு ஒன்றாக்கிவிட்டாரா என்றும். காரணம், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்கள், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்களின் வாழ்வு வந்ததும் - சென்றதும், கவிமாலை / கவிச்சோலை தோற்றமும் வளர்ச்சியும், நிரந்தரவாசிகள்/வேலை அனுமதிச்சீட்டு கவிஞர்களால் ஏற்பட்ட வயித்தெரிச்சல் என நான்கு கட்டுரைகளை எழுதி அதைப் பொதுத்தலைப்பாக்கி விட்டது போல இருக்கிறது.

கட்டுரையில் தொடர்ந்து பரவிக்கிடக்கும் குடியுரிமைச்சிக்கலும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் கவிதை உதாரணங்களும் ஒரு அந்நியத்தனமாய் நேர்மையின்மையாய் துருத்திக்கொண்டிருக்கின்றன.

பல இடங்களில் கட்டுரையாளர் சாடுகின்ற விஷயங்கள் உலகச் செம்மொழியாம் தமிழ் மொழியில் எக்காலத்திலும் பாடு பொருளாகவே இருந்திருக்கின்றன. புதுக்குடியேறி, உள்ளத்தை அங்கு வைத்து உடலை இங்கு வைக்கும் போக்கு, குடும்பத்தைப் பிரிந்திருக்கும் வலி, வாழூரில் ஏற்படும் உணர்வுகளை சேகரித்தல் என்பன எல்லாப்படைப்பிலும் காணப்படுபவையே.

கட்டுரையின் பல இடங்களில் சம்பந்தேமே இல்லாத தகவல்கள் நெருடுகின்றன. சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் எழுதப்பட்டிருக்குமோ எனவும் யோசிக்கவைக்கின்றன்.

எடுத்துக்காட்டுகள் பல,.

1. சம்பந்தமேயில்லாமல் மலேசியாவின் கே.பாலமுருகன் இக்கட்டுரையில் சாடப்பட்டிருப்பது.
2. ஜெயந்தி சங்கரைப் பற்றிய அவதானிப்புகள். (நிறைய முயற்சிகள் எடுத்து அவர் சீனக்கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து தந்திருக்கிறார் என்பதையும் மறந்து)
3. சுப்ரமணியம் ரமேஷ் காசு சம்பாதித்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டது
4. கவிமாலை மற்றும் கவிச்சோலையைப் பற்றி கூறுகையில் காசுக்காக / பணத்துக்காக அங்கே கவிதை எழுதச்செல்வார்கள் என்ற தொணியில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து. (உண்மையில் ஒரு பரிசுபெறும் சந்தோசத்திற்காக, ஒரு மோட்டிவேஷனுக்காக, அவர்களுக்குள்ளே யாராவது ஒருவர் பரிசை ஸ்பான்சர் செய்வார். நாள் ஒன்றுக்கு பதினெட்டு வெள்ளி சம்பளம் வாங்கும் நண்பர் தனது இலக்கிய ஆர்வத்திற்காக ஐம்பது வெள்ளி பரிசுத்தொகையை ஸ்பான்சர் செய்வது எவ்வளவு பெருந்தன்மையான விஷயம். அதைத் தவறான தகவல்களாக கொசைப்படுத்துவதா மேடம்?)
5.புத்தக வெளியீடு கண்டு காசு பணத்தை அள்ளிக்கொள்கிறார்கள், அட ஜெயந்தா! ராமா, நிறைய எழுத்தாளர்கள் புத்தக வெளியீடு விழாவையே விட்டுவிட்டார்கள்.

இன்னும் நிறைய.....

சிங்கப்பூரிலுள்ள சில முனைவர்களில் ஒருவர் என்ற முறையில், சிங்கப்பூரிலுள்ள சில இலக்கிய விமர்சகர்களில் ஒருவர் என்ற முறையில், சிங்கப்பூரில் எந்த முனைவரோ படைப்பாளரோ எப்படி வாந்தியெடுத்தாலும் அது பிற்காலத்திற்காக ஆவணப்படுத்தப்படும் என்பதாலும் நான் தங்களை அன்புடன் வேண்டிக்கொள்வது இதுதான்.

வருங்கால சிங்கப்பூருக்கு தவறான தகவல்களைத் தராதீர்கள். அல்லது தகவல்களை சொந்த விருப்பு வெறுப்பின் பேரில் தகனம் செய்யாதீர்கள்; தாராளம் செய்யாதீர்கள். தகவல்களை தகவல்களாக தராமல் தான்தோன்றித்தனமாக உங்களது மன ஓட்டங்களை இணைக்காதீர்கள். இவையெல்லாம் தமிழுக்கும் சிங்கப்பூருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நீங்கள் செய்யும்
துரோகங்களே.

தங்களது மேன்மையான படைப்பையும் அக்கறையையும் எதிர்நோக்கும்,

எம்.கே.குமார்.


வல்லினம் இதழில் வெளியான முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி – யின் கட்டுரைக்கான இணைப்பு
http://www.vallinam.com.my/issue18/essay5.html

முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி-யின் கட்டுரைக்கு பிற எழுத்தாளர்கள் அவர்களின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர் அதற்கான இணைப்பினையும் இங்கு கொடுத்துள்ளேன்.

கே.பாலமுருகன் (மலேசியா)
http://bala-balamurugan.blogspot.com/2010/06/blog-post_03.html

பாலுமணிமாறன் http://baalu-manimaran.blogspot.com

அப்துல்காதர் ஷாநவாஸ் https://shaanavas.wordpress.com

சூன்யா http://soonya007.blogspot.com

இந்திரஜித் http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3016

தம்பி பாண்டித்துரையின் மடல்.
http://pandiidurai.wordpress.com/2010/06/14