Monday, September 22, 2014

காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து- அரவாணிகள் பற்றிய கடிதம்

பாலியல் அரசியலின் கோமாளித்தனத்தை அனிருத்தன் வாசுதேவன் அவர்களின் கட்டுரை வேட்டையாடி விளையாடியிருக்கிறது.

ஓரின, ஈரின ஈர்ப்புடையோர் மற்றும் அரவாணிகள் பற்றிய உண்மைக்குப் புறம்பான அல்லது ஆரோக்கியமற்ற ஊடகங்களது சித்தரிப்புகள், அறியத்தராத ஒரு அவலநிலையை அல்லது அடிமை நிலையை அவர்களின்பால் ஏற்றிக்கொண்டேயிருக்கும் என்பதை ஊடக ராஜகன்னியான திரையகம் சார்ந்து சொல்லி இவர் வேட்டையாடியிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.

அதே ஊடகங்களில் தொன்றுதொட்டு வந்துகொண்டிருக்கும் இதுவரையான அக்கேடுகளை அறியத்தராமல் அல்லது தொட்டுணர்த்தாமல் நேற்றிலிருந்து இது புகுந்திருப்பதைப்போல இவர் 'வேட்டையாடு விளையாட்'டிலிருந்து உரைத்து வெறுமனே விளையாடியிருப்பது சிந்திக்கவேண்டியது ஆகும்.

அரவாணிகளை ஒரு நலிந்த இனமாக வெறுமனே கிளுகிளுப்பூட்ட அல்லது நகைப்பூட்ட ஏதுவாய் திரையுலகத்தினர் மேற்கொண்ட உத்திகள் நேற்று இன்று பிறந்தவை அல்ல. பாடலின் நடுவில் வந்து கதாநாயகர்களைக் கிண்டல் பண்ணிச்செல்வதிலும் பெண்புணர்த்தலில் தீராத வேட்கைகொள்ளும் ஒருவனை அரவாணியக்கொண்டு திகைக்கவைப்பதிலும் என திரை நுகர்வோருக்கு செறிவற்ற தன்மைகொண்டு வெறுமனே களிப்பூட்ட மட்டும் இத்தகு அரவாணிக் கொள்கைகளை நெடுங்காலமாய் திரையுலகம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சமூக, கல்வி, பொருளாதார, அரசியல்துறைகளில் மேம்பட்ட நிலையை நோக்கி அவர்கள் நகரும் வேளையிலும் அக்கூறுகளையே அடிப்படையாகக்கொண்டு அது இன்றும் கேலி பேசியபடியே இருக்கிறது. பெண்ணிய, தலித்திய மற்றும் அங்கஹீனத் தாழ்மைகளை அகற்ற புரட்சியும் விடுதலையும் பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் பிறப்பு சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் அங்கங்களை அடிப்படையாகக் கொண்ட இவைகளின் மூலம் அது நகைப்பூட்ட முற்படுவது அநாகரிகமே அன்றி வேறல்ல!

நல்ல கலைஞரின்(கமல்), நல்ல கலைநய காட்சி அமைப்பு இயக்குனரின்(கௌதம்) வேட்டையாடு விளையாடு சார்ந்ததாய் மட்டுமே இவரால் இதைப்பார்க்க முடிந்திருக்கிறது. கமலும் கௌதமும் செய்தால் மட்டுமல்ல; யார் செய்தாலும் இது வருத்ததிற்குரியதே. இதே காலகட்டத்து திரைப்படைப்பான 'சில்லுன்னு ஒரு காதலி'ல் கூட ஆரோக்கியமற்ற வெறும் கிளுகிளுப்பூட்ட கலக்கப்பட்ட காட்சியாகவே இது பரிணமித்திருக்கிறது.

தேவையற்றவைகளைக் கொண்டிருக்கும் ஒன்று முழுமையான கலைப்படைப்பாகாது என்றும் இத்திரைப்படத்திற்கு ஓரின உறவைச்சொல்லும் காட்சிகள் அவசியமற்றது என்பதையும் முன்மொழிந்திருக்கும் இக்கட்டுரையை வரவேற்கிறேன். ஆனால் கமல்-ஜோதிகா உறவு, உரிமையாளர்-சொத்து என்றாவதை இவர் சுட்டிக்காட்டுவது இங்கு அவசியமற்றது. அது எளிதில் மாற்றியிருக்ககூடிய வசனத்தின் வெளிப்பாடேயன்றி அதை பொருட்கொள்ளுதல் தகாது. இப்படிச் சுட்டிக்காட்ட முயன்றால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையையும் இவர் சாடவேண்டியிருக்கும். தவறான வசனம் வேறு; அவசியமற்ற காட்சி வேறு!

கலைப்படைப்பிற்கு மட்டுமின்றி வெறும் 'களிப்புதரும்' படைப்பிற்கும் கூட இத்தகு வலிமையற்ற இனங்களின் வாழ்க்கையை அவலமாக்குதல் அவசியமன்று. ஆண்கள் பெண்கள் மட்டுமின்றி அரவாணிகளுக்கும் தார்மீக வாழ்க்கை நெறிகள் உள்ளன. எனவே இப்போதையத் தேவை அரவாணிகளை நோக்கிய ஒரு முழுமையான புரிந்துகொள்ளல் மற்றும் கூடி வாழுதல் சார்ந்த ஒரு அறம்! இதைக் கேலிக்குள்ளாக்கும் படைப்பு திரைப்படைப்பு மட்டுமின்றி எப்படைப்பாயினும் கண்டிக்கப்படவேண்டியது ஆகும்.

கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் போது நிறையப்பேருந்துகள் விடுவதும் அதனைச்சுற்றி விடுதிகள்/கழிப்பறைகள் கட்டுவதும், அழகுப்போட்டி மற்றும் பட்டிமன்றங்கள் வைப்பதும் அல்லது விழுப்புரத்தில் வியாபாரஸ்தலத்தை உருவாக்குவதும் போன்ற காரியங்களைத் தாண்டி உண்மையான உணர்வுகளைக் கொண்டு இவர்களை யாவரும் அணுகுவது நலம்.

உடற்குறையுள்ளவர்களை யார் கேலி செய்தாலும் அது தவறுதான்; தலித்துகளை யார் சாதிசொல்லி திட்டினாலும் தண்டனை உண்டு; பெண்களின் பால் எத்தகு வரம்புமீறலெனினும் குற்றமே; மிருகங்களை எப்படித் துன்புறுத்தினும் மிருகவதைச் சங்கம் கேட்கும் என்பதைப்போல இதற்கும் தகுந்த சமூக அறிவுறுத்தல்களும் அரசியலைப்புகளும் உடனடி அவசரத் தேவை.

எம்.கே.குமார்.
சிங்கப்பூர்

http://www.kalachuvadu.com/issue-83/letters.asp
நன்றி: காலச்சுவடு

சிங்கப்பூர் பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு

நண்பர்களே, சிங்கப்பூர் வாசகர் வட்டம் புதுப்பொலிவுடன் பல்வேறு இலக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதை அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், சிங்கப்பூர்ப் பெண்படைப்பாளர்களை ஊக்குவிக்கும்பொருட்டும் சிங்கப்பூர்த் தமிழ்க்கவிதைப் பரப்பினை உலகுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டும் சிங்கப்பூர் பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு ஒன்றை வாசகர் வட்டம் வெளியிட இருக்கிறது. முழுக்க முழுக்க பெண் கவிஞர்களின் படைப்புகளைக் கொண்ட இத்தொகுப்பில் 15 பெண்கவிஞர்கள் பங்குபெறுவார்கள். பாடுபொருள் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். குறைந்தது ஐந்து முதல் 10 பக்கங்களுக்கு ஒவ்வொரு கவிஞர்களின் கவிதைகளும், அவர்களைப்பற்றிய சிறு குறிப்புடன் தொகுப்பில் இடம்பெறும். புதியதாகவோ, நாளிதழ், வார, இணைய இதழ்களிலோ வெளியானதாக இருக்கலாம், ஏற்கனவே புத்தகமாக பிரசுரிக்கப்பட்ட படைப்புகளைத் தவிர்க்கவும்.
பெண் கவிஞர்கள் தங்கள் படைப்புகளை 
singaporepoet@gmail.com என்ற இணையமுகவரிக்கு வரும் 30 செப்டம்பர் தேதிக்குள் அனுப்பவேண்டுகிறோம். தொகுப்பாசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் மட்டுமே பிரசுரிக்கப்படும்.
அன்புடன்
எம்.கே
வாசகர் வட்டம் சார்பாக.