Saturday, April 07, 2018

Nancy Ajram - Enta Eih - With English Translation - Arabic Song

அண்மையில் சிங்கப்பூர் வந்திருந்த எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது நான்ஸி அஜ்ரம் குறித்து பேச்சு வந்தது. சட்டென்று ஒரு பூஞ்சோலைக்குள் தாவி இறங்கிவிட்டதைப்போல இலகுவானார் சாரு. 'என்ன குரல் என்ன குரல், இந்த திராட்சை ரசத்தின் மென்மையை இந்தக்குரலின் பின்னணியில் அல்லவா உணரவேண்டும்' என்று அவர் சொல்லச்சொல்ல நானும், கடைக்காரரின் 'ஆளுமா டோலுமா' வைக் கெஞ்சி அப்புறப்படுத்திவிட்டு, இருமுறை கேட்டோம் இப்பாடலை. 

மனம் கிறங்கிப்போய் இதுவரைக்கும் இருபது முப்பது முறை கேட்டுவிட்டேன். இதோ ஒன்று ஆங்கிலபாடல்வரிகளுடன் இன்று கிடைத்தது முழு உணர்வைக்கொண்டுவர. சாருவிற்கு நன்றி.


மார்ச் 25, 2017 அன்று நடைபெற்ற கவிதை விமர்சன வாசகர் வட்ட நிகழ்வு

மார்ச் 25 அன்று நடைபெற்ற கவிதை விமர்சன வாசகர் வட்ட நிகழ்வு மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கான மவுன அஞ்சலியுடன் தொடங்கியது. அசோகமித்திரன் சில ஆண்டுகளுக்குமுன் வாசித்த அவருடைய கதையான "சேவை"யை, அவர் மீண்டும் வாசிக்க நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். பொருட்காட்சியில் தொலைந்துபோகும் குழந்தை ஒன்றை பெற்றோரிடம் ஒப்படைக்கப்போராடும் ஒருவனைப் பற்றியகதை. கதையில் வரும் சிலவரிகளுக்கு நாங்கள் வாய்விட்டுச்சிரிக்க, அவரே அடக்கமுடியாமல் வாசிக்கும்போதே சிரிப்பதைக் கேட்க, அவருக்கான அஞ்சலியிலும் மன எழுச்சியாய் இருந்தது. பிறகு அவருடைய பிரயாணம், இன்று, புலிக்கலைஞன் கதைகள் சார்ந்தும் ஒற்றன், 18வது அட்சக்கோடு நாவல்களையும் சிலாகித்து அடுத்த நிகழ்வுக்கு நகர்ந்தோம். (கணேஷ் பாபு மற்றும் சிவாவின் அஞ்சலி மிகுந்த உள எழுச்சியாய் இருந்தது, அதை அவர்கள் தனிப்பதிவாக பதியவேண்டுகிறேன்.)
Image may contain: 2 people, including Manor Param, people sitting, laptop, screen and indoor
இம்மாத படைப்பாளர் அறிமுகத்தில் கவிஞர் போகன் சங்கர் குறித்து அறிமுகப்படுத்தினார் பாரதி மூர்த்தியப்பன். குன்னிமுத்தாய் மிளிரும் கூந்தலையும் நீர்ச்சொட்டும் சத்தத்தையும் மதனியின் அன்பையும் ஒரு கவிதையில் கண்டு, இவரை வாசிக்க ஆர்வம் கொண்டதாய்ச் சொல்லி, தடித்த கண்ணாடிப்போட்ட பூனை தொகுப்பிலிருந்து சிலகவிதைகள் வாசித்துப்பேசப்பட்டன. கோடைகால வேப்பம்பழம் பற்றிச் சொல்லி, சில அழகியல்பார்வைகளோ படிமமோ போதும், ஒரு கவிஞனை நினைவில் வைத்துக்கொள்ள என்று சொன்னார் கணேஷ்பாபு.
சூடான கவிதை விமர்சனங்கள் அடுத்து வந்தன. (விரிவான விமர்சனங்களை வாசகர் வட்ட இணையப்பக்கத்தில் ஒளிக்காட்சியாகக் காணலாம்.)
லதாவின் "யாருக்கும் இல்லாத பாலையில் 'மாட்டிக்கொண்ட கர்ணன்" (ஈழக்கவிதை) பற்றிய ஒரு கவிதையைப் படித்து மனதைக்கனக்கச்செய்தார் ஷா நவாஸ்.
ஷானவாஸின் 'சுவை பொருட்டன்று' எப்படி வாழ்வின் அழகியலைச் சொல்கிறது என்பதை விளக்கி அது இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருக்கலாம் என்று சொன்னார் பாண்டித்துரை.
Image may contain: 2 people, people sitting, table and indoor
நவீன கவிதையின் மூன்று வடிவப்பிரிவுகளைச் சொல்லி எம்.கே.குமாரின் 'சூரியன் ஒளிந்தணையும் பெண்' எவ்வாறு ஆழமான வரிகளும் எளிமையான வரிகளும் கொண்டு கவிதைஅழகியல், பாடுபொருள் ஆகியவற்றில் சிறந்துவிளங்குகின்றன என்பதை 'பாடு, புன்னகை, மிருகவதை' போன்ற கவிதைகளின் மூலம் விமர்சித்த கணேஷ்பாபு, 'நிலவு தோற்ற என் காதலியின் முகம்' போன்ற காதல் கவிதைகளை எழுத குமார் தேவையில்லை, நிறையப்பேர் இருக்கிறார்கள் என்றும் சொன்னார்.
Image may contain: 1 person, sitting and indoor
தான் கவிதையின் புதுவாசகன் என்று மாதங்கியின் 'மலைகளின் பறத்தல்' கவிதைத்தொகுப்பு பற்றிப்பேசினார் சிவாநந்தம். பிலிப்பினோ காதலியின் முன்னால் முள்கரண்டியில் சாப்பிட எத்தனிக்கும் இந்தியக்காதலர் ஒருவரைப்பற்றிய மாதங்கியின் கவிதையை நினைவுகூர்ந்தார் ஷாநவாஸ்.
Image may contain: 5 people, including Kalimuthu Ayyappan K, Sivanantham Neelakandan, Manor Param and Mohamed Kassim Shanavas, people smiling, people standing, beard and indoor
சித்துராஜின் ' காற்றாய் கடந்தாய்' கவிதைகளின் விதவிதமான பாடுபொருள், செப்டம்பர் மத்தியானம், நத்தையின் காமம் போன்ற திரும்பத்திரும்ப வரும் வார்த்தைகள், சவத்துக்கும் சேர்த்து சாப்பிட்டாகிவிட்டது, சதை சாப்பிடும் சாலை போன்ற சிறந்த இறுதிவரிகள் என விமர்சித்த எம்.கே.குமார், சில கவிதைகள் வாசகனுக்காக எழுதப்பட்டவை போலில்லை, வாசித்துவிட்டு மெலேநகர முடியாமல் முட்டுச்சந்தில் நிற்பதைப்போலிருக்கிறது என்றும் சொன்னார்.
பாண்டித்துரையின் ' அவநிதாவின் சொல்' எவ்வாறு ஒரு புதிய பாடுபொருளாக அமைந்திருக்கிறது என்று சொன்ன பாரதி, அந்த பாடுபொருளே இங்கும் வந்திருக்கிறது என்றும் சொல்லி, கலகலப்பாக்கினார். பாண்டித்துரையின் மூன்று வயது மகள் அவநிதா தன் தாய் மற்றும் அத்தையோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். 'அவநிதாவின் சிரிப்பில் அப்பா இருப்பதாய்ச்சொல்லி' வரும் ஒரு கவிதையை வாசித்துக் கண்கலங்கினார் பாரதி.
Image may contain: 5 people, including Kalimuthu Ayyappan K, Manor Param and Mohamed Kassim Shanavas, people smiling, people standing and indoor
எம்.சேகரின் 'கைவிளக்குக் கடவுள்' பற்றிய விமர்சனத்தை சித்ரா எழுதி, ஷா நிகழ்ச்சியில் வாசித்தார்.
விமர்சனத்துக்குத் தேர்ந்தெடுத்த தொகுப்புகளிலிருந்து தனக்குப்பிடித்த கவிதைகளைப் பகிர்ந்துகொண்டார் அழகுநிலா.
தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சிராங்கூன் டைம்ஸ் புத்தக பரிசுகளை வழங்கினார் மூத்த வாசகர் அம்மா மனோரம் அவர்கள்.
Image may contain: Kalimuthu Ayyappan K, Manor Param, Bharathi Moorthiappan and Mohamed Kassim Shanavas, people smiling, people standing and indoor
அசோகமித்திரனின் சிரிப்பு, கவிதையின் அகரசனை கொண்ட ஒத்திசைவான மனங்கள் என மனதுக்கு மிகநெருக்கமான மாலையாய்க் கழிந்தன அத்தருணங்கள். கலந்துகொண்ட சத்யா உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
எம்.கே.குமார்.
Image may contain: 10 people, including Pandiidurai Neethipaandi, Manor Param, Mohamed Kassim Shanavas and Bharathi Moorthiappan, people smiling, indoor