Monday, September 13, 2004

புதுசா கண்ணா புதுசா?

எம்.கே.
ஆனந்த விகடனின் பின் தொடரும் வாசிப்பாளர்களுக்கு நான் சொல்லாவிட்டாலும் கூட அழகான மயிற்தோகையில் ஆங்காங்கு வெளுத்த நிறம் மருகி மிகுந்து வருவது போல ஒரு நுழைவு மனதில் ஏற்படக்கூடும். இந்த வெளுப்பு ஏதோ திடீரென்று தோன்றியதாயல்லாமல் சாயம் போவது போன்று காலத்தோடும் பயன்பாட்டோடும் பின்னிப்பிணைந்து உருமாறி வருகிறது என்பதைக் கொஞ்சம் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
அட்டை டு அட்டை வரை கிளுகிளுப்புப்படங்களையும் அதுசார்ந்த விவரிப்புகளையும் தாங்கி வந்த பத்திரிகைகளின் வரிசையிலிருந்து கொஞ்சமேனும் விலகி 'நாடார் கடையில் வாங்கும் விளம்பரமற்ற தரம் படைத்த பொருட்கள்' போல இருந்து வந்த அதன் இடம் இப்போது சராசரிக்கடையை ஒத்திருக்கிறது. சிலசமயங்களில் சாக்கடையையும்.
சிறுகதைகளைக் குறுக்காக வெட்டி புதுச்சிறுகதைகளைப் படைக்க ஆரம்பித்துவிட்டார்கள். படிக்கவே வெறுப்பாயிருக்கிறது. ஹாலிவுட், ரொமான்ஸ், விகடன் க·பே மற்றும் இன்னபிற நாகரீக தலைப்புகளின் வழியே இன்றைய மல்லுக்கட்டுக்குள் அவர்களும் தாவிக்குதித்து விட்டார்கள். செய்தி இல்லாமல் வரும் பின் அப் படங்களும் கூட ஏதாவது வழிந்தோடும் விமர்சனத்தோடு வளைய வர ஆரம்பித்துவிட்டன. இதுபோக மற்றவைகளும் சினிமா வழியாய் டிவி வழியாய் அனு அக்கா ஆன்ட்டி வழியாய் எளிதாக மேலாடையின்றி நடனமாடத் துவங்கிவிட்டன.
இந்த மல்லுக்கட்டுக்கிடையில் இலக்கிய உலகிலும் நிற்பதாய் காட்டவேண்டிய அவசியம் அதற்கு. ஜெயமோகனும் எஸ் ராமகிருஷ்ணனும் கொஞ்ச காலம் அந்த வேலையைச் சிறப்பாகச்செய்தார்கள். இதுபோக சன் டிவியில் மாதச்சம்பளம் வாங்கும் சாலமன் அய்யா போல விகடனில் சுஜாதா தாத்தா கண்ணில் கிடைத்ததை, காதில் கிடைத்ததை மற்றும் இன்னபிற அ, ஆ கதைகளையும் நடப்புகளையும் எழுதி இலக்கியப் பங்கு படைத்து வருகிறார். (இருமகன்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். எழுபதாயிரத்துக்கு இந்த இதழ் வழி கையேந்துகிறார்!)
இந்த இலக்கியப்பங்கை இன்னும் சிறப்பாகச்செய்ய அவ்வப்போது முயன்று கேவலப்படுத்திக்கொள்கிறது விகடன். இதன் தொடர்ச்சியாய் இப்போது பிரபல கவிஞர்களின் கவிதைகள் வாரா வாரம் வருகின்றன. அந்த வரிசையில் கபிலன், யுகபாரதி, பழனி பாரதி இன்னும் சிலரது கவிதைகளைப் படைக்கும் வாய்ப்புக் கிடைத்தது அண்மையில். எப்படிசொல்வது? கேவலம். சில கவிதைகளைக் கவிதைகள் என்று சொல்வதற்கே மனம் கூசுகிறது. மிகவும் சாதாரண வரிகளாய் ஒப்புக்கு மாவிடிக்கும் உப்பாத்தா போல வந்து போகின்றன அவை. கவிதைகள் வேண்டும் என்று கவிஞர்களிடம் கேடபதற்கு முன்னால் சற்று காலம் கொடுத்தாவது நல்ல கவிதைகளாய்க் கொடுங்கள் என்று கூற வேண்டாமா?
அன்மையில் நான் படித்த சில மரத்தடிக்கவிதைகள் கூட இந்த வரிசையில் மிக உயரத்தில் நன்றாக இருப்பதாய்த்தோணுகிறது. குறிப்பிடத்தகுந்தவர்களாய்ச் சொல்லவேண்டுமெனில் மீனாக்ஸ்ஸினுடையதும் ஷக்தியினுடையதும் ஆகும். இதுபோக இணையத்தில் இன்னும் சில எதிர்பாராத இடங்களில் செந்தாமரைகள் போலக் காணக்கிடைக்கின்றன சில அழகான கவிதைகள். இந்த வரிசையில் கவிதைகள் மட்டுமின்றி கட்டுரைகளும் உண்டு.
அவை பற்றிப் பிறகு பேசலாம். இப்போது விகடனுக்கு வருவோம். என்ன ஆனது விகடனுக்கு? இருப்பவர்கள் எல்லோர் பெயரும் ஏதாவதொரு ஆசிரியப்பொறுப்பில் இருக்கின்றன. எல்லா நிருபர்களையும் ஆசிரியராக்கிவிட்டார்களா? என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.
பின்னொரு நாளில் தொகுப்பாய் விற்றுக் காசு பண்ணும் வகையில் விகடனுக்கே உரிய புதுப்புது தொடர் கட்டுரைகளில் மட்டுமே அதிக கவனம் எடுத்து வரும் விகடன் இதுபோன்ற மற்ற விஷயங்களிலும் கொஞ்சம் கவனமெடுத்துச் செய்யவேண்டும். ஒரு சாதாரண வாசகனின் விருப்பம் அதுதான்.

4 comments:

  1. அன்பு குமார்,

    இன்று இந்தக் கட்டுரையை மரத்தடியில் படித்தேன். அதில் வந்திருந்த ஒரு வரி கொஞ்சம் மனதை கஷ்டப்படுத்துகிறது. அமேரிக்காவில் இரண்டு மகன்கள் இருந்தால் உடல்நலமின்று வாடும் ஒருவருக்கு உதவி செய்யுங்கள் என்று பொதுவில் எழுத்தாளர் சுஜாதா கேட்கக்கூடாதா? அதற்கு பெயர் கையேந்துதலா? எதற்காக இப்படி ஒரு பிரயோகம்? உடல்நலமின்று வாடும் ஒருவருக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் கையேந்துவது ஆகும். அவர் ஒன்றும் அவர் வீட்டில் அடுப்பெரியவில்லை என்று வந்து உங்களிடம் கேட்கவில்லையே.

    விகடன் கூட எழுத்தாளர் படுதலம் சுகுமாறனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது அப்படி கேட்டது. தினமலரில் கூட அடிக்கடி இது போன்ற செய்திகள் வருவது உண்டு. அதற்காக அவர்களிடம் "உங்கள் சர்குலேஷனில் வரும் வருமானத்தில் உதவுங்களேன்" என்று சொல்வீர்களா? பொதுவில் "உதவுங்கள்" என்று கேட்பவர் கண்டிப்பாக தனியாகவும் எதாவது உதவி செய்து இருப்பார்கள். ஏன் அவர்களது நல்ல செயலை கூட சந்தடி சாக்கில் குறை கூறுகிறீர்கள்?

    ReplyDelete
  2. ஒரு விஷயத்திற்காக இரண்டு (பெருந்தலைகளிடமிருந்து) மறுமொழிகள் வந்திருப்பது ஒரு விதத்தில் மகிழ்ச்சி.

    1. விரல்களிலிருந்து அவ்வார்த்தை உருவான கணம் முதலே மிகவும் நன்றாக யோசித்துத்தான் பிறகு அதை அப்படியே விட்டுவிட்டேன். மாற்றும் அவசியம் இல்லை என்பதை நான் இப்போதும் முழுதாக சார்ந்திருக்கிறேன்.

    2. சுஜாதா அவர்கள் நினைத்தால் இந்த எழுபதாயிரம் ரூபாய் என்பது மிகச்சொற்பம். அவரது குடும்ப நிலை, அவரைச்சார்ந்தவர்களின் வருமானம், எழுபது வயதிலும் புறநானூறு எழுதி வரும் பணம் இது போக இன்னபிற உயிர்மை, அம்பலம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டே அவ்வாறு எழுதினேன். (அட, 'சனிக்கிழமை சாட்'டில் சொன்னால்கூட போதாதா? :) ) பொருளாதார ரீதியாக பெரிய இடத்தில் இருக்கும் வாழ்வியலைச்சொல்லும் எழுத்தாளர்கள் கொஞ்சமேனும் எழுதுவதற்கேற்றவாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது என் கருத்து. இல்லையேல்...? ( ஏதும் எழுதவேண்டுமா என்ன?)

    3. ஏழு லட்சம் என்றிருந்தால் சரி நியாயமிருக்கிறது என்று விட்டிருப்பேன். நானும் கூட குறைந்த பட்சம் என் தகுதிக்கேற்றவாறு அனுப்பி வைத்திருப்பேன். இத்தொகைக் கெல்லாம் தனது கற்றது பெற்றதைப் பயன்படுத்துவது கொஞ்சம் அதிகமே. (அல்லது என்னால் இதெல்லாம் செய்யப்படுகிறது என்பதைக் காட்டுவதே!) இதைத்தொடர்ந்து இனி நாற்பது கடிதங்கள் அவருக்கு வரும், தனக்கு உதவி செய்யச்சொல்லி. அப்போது என்ன சொல்வார் என்பதை இப்போது நான் சொல்லட்டுமா? :(

    4. எனது இருமகன்கள் அமெரிக்காவில் இருந்து நான் எழுதுவதையெல்லாம் விகடனும் மற்றவர்களும் பிரசுரித்தால் இந்நேரம் அவருக்கு ஆபரேஷன் பண்ணிவைத்துவிட்டுத்தான் வீட்டுக்கே வந்திருப்பேன். (தயவுசெய்து கொஞ்சம் அதிகமோ என்று நினைக்காதீர்கள். மனதில் இருந்து வரும் வார்த்தைகள்.) இன்றைய வெளிநாட்டு வாழ்விலெல்லாம் அவ்வளவு பண்ணமுடியாவிட்டாலும் இயன்றதைச் செய்துகொண்டுதான் இருக்கிறேன், இருப்பேன், கடவுளின் ஆசியோடு.) சில விஷயங்களைச் சொல்லிவிட்டுச் செய்வதோ சொல்வதற்காகச் செய்வதோ எனக்குப்பிடிக்காது.

    5. படுதலம் சுகுமாரனுக்குத் தேவைப்பட்டது சில லட்சங்கள் என நினைக்கிறேன். அதற்கு அவ்விளம்பரம் அவசியம் என்றே கருதுகிறேன். (அண்மையில் யாரோ ஒருவருக்குத் தேவைப்பட்ட உதவிக்கு ரோஜா கம்பைன்ஸ் காதரும், மறுமலர்ச்சி பட அதிபரான பங்கஜ் மேத்தா (என நினைக்கிறேன்) வும் ஆளுக்கு சில லட்சங்களை வணங்கினார்கள். எவ்வளவு பெரிய விஷயம்! சுஜாதா அவர்கள் பொருளாதார ரீதியாக யாருக்காவது உதவியிருக்கிறார் என்று என்னிடம் சொல்லுங்கள், நான் எனது நின்றிருத்தலிலிருந்து பின் வாங்கிக்கொள்கிறேன். அவருக்கிருக்கும் வசதிக்கும் புகழுக்கும் இன்று எத்தனையோ இளைஞர்களை கைபிடித்துத் தூக்கிவிடலாம், பதிப்பகம் வழியாக படைப்புகள் தரலாம். (சிவகங்கை கண்ட மாணிக்கம் மீரா அவர்கள் நினைவுக்கு வருகிறார்.!) என்ன செய்கிறார் இவர்? தனக்கு வரும் கவிதைகள் பற்றிக்கிண்டலடிப்பதோடு சரி.)

    6. சிரிச்சி சிரிச்சி வாறான் சீனா தானாடோய்....வணிக ரீதியான வெற்றி தேடும் படத்துக்கு அவசியமான பாடல். படம் பார்க்காமல் இருந்துவிடக்கூடிய சாத்தியங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் விகடனுக்கு? சில பாரம்பரிய குடும்பங்கள் இன்றும் கல்கியையும் விகடனையும் உயர்வாக நினைத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு இது (வணிக ரீதியாக வெற்றி தேவைப்பட்டாலும்) தகுந்த மாற்றமல்ல.

    இன்னும் நிறைய இதுபற்றி எழுதலாம். நண்பர்கள் கருத்தறிய ஆவல். பிறகு தொடரலாம். கருத்துகளுக்கு நன்றி.

    எம்.கே.

    ReplyDelete
  3. உங்களுடைய பதிவில் இப்படி ஒரு வார்த்தையையும், மறுமொழிகளுக்கு தந்துள்ள பதில்களையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

    புகழ் பெற்றவர்கள் உதவ வேன்டும் என்று நினைப்பது நியாயம். அதற்காக, அவர்கள் மட்டுமே உதவ வேண்டும் என்று நீங்கள் நினைப்பது என்ன நியாயம்? இதை எழுதி இருக்கிறீர்களே! ஏன்! அந்த உதவி கோரலுக்கு நீங்கள் ஏதாவது உதவி அல்லது நிதி அளித்தீர்களா?

    ஜெய் சங்கர் நடித்த நூற்றுக்கு நூறு படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் உங்கள் கேள்விக்கு பதில் இருக்கிறது.

    ReplyDelete
  4. சுஜாதா தாத்தா என்றுத் துவங்கும் போதே தெரிந்து விட்டது, நீங்கள் எழுதப் போவது நடு நிலையுடன் இருக்காது என்று. நாமும் 70 வயதில் அவர் இப்போது இருக்கும் சுறுசுறுப்பில் பாதி இருந்தாலே மிக அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். அவர் ஒன்றும் பணம் அளிக்கவில்லை என்பதை நீங்கள் கண்டீர்களா? எதையோப் பார்த்து எதுவோ குலைப்பது போலிருக்கிறது உங்கள் எழுத்து.
    ராகவன்

    ReplyDelete