Thursday, September 16, 2004

எனக்குப்பிடித்த நாட்களில் ஒன்று.

எம்.கே.
செப்டம்பர் மாதத்தில் எனக்கு எப்போதும் பிடித்த நாட்கள் இரண்டு. ஒன்று ஈஸ்வரன் சாருடைய மூத்த பையன் தினமாக வரும் சதுர்த்தி நாள். அன்று பெரிதாக ஏதும் செய்யாவிட்டாலும் கொஞ்ச நேரமாவது 'சும்மா' உட்காந்திருப்பேன். இரண்டாவது நாள் செப்டம்பர் பதினாறு.
இந்த பதினாறுக்கென்று எப்போதும் ஒரு 'கிக்கு' உண்டு. பன்னிக்குட்டி கூட பமீலா ஆண்டர்சன் மாதிரி தெரியுமாம் 16 ல். (நன்றி: ரங்கண்ணா) நான் பார்த்ததில்லை. அதுபற்றியும் ஏதும் தெரியாது. பதினாறு வயதில் வந்துபோன சீப்புக்கொடுத்த 'மயில்கள்' தெரியும். கோபாலகிருஷ்ணன் என்று எனக்கு பெயர் வைக்க வரவில்லை அந்த மயில்கள். சப்பாணி என்று வைக்க (அட! செல்லமாத்தான்ப்பா!) வந்த மயில்கள் அவை. மயில்கள் இருக்கட்டும், அது எப்போதும் வரும்; போகும்; இருக்கும். கதைக்கு வருவோம்.
செப்டம்பர் பதினாறில் அப்படி என்ன விஷேசம்? தி.மு.க வருடா வருடம் முப்பெரும் விழா கொண்டாடுகிறதே அதுதான் ஸ்பெசலா? செப்டம்பர் 15 ல் பிறந்தார் ஒரு அண்ணா தெரியுமா? அந்த அண்ணா பண்ணிய நல்ல வேலைகளில் ஒன்று 17 ல் நடந்தது. திராவிட முன்னேற்ற கழகம் பிறந்தது. பிற்காலத்தில் கீதைக்கு புது விளக்கம் சொல்லும் அளவுக்கு(!?) பல நல்ல தலைவர்களை உருவாக்கி விடும் அளவுக்கு கழகம் வளர்ந்தது. ஆக செப்டம்பர் 15 அண்ணா, செப். 17 திமுக. முப்பெரும் விழாவுக்கு இருகாரணங்கள் ரெடி. மூன்றாம் காரணம் வேண்டாமா? வந்தாரய்யா வந்தார் வெண்தாடி வேந்தர். தி.மு.க பிறந்த அதே 'செப்டம்பர் 17' ல் பிறந்தார். தி.மு.க வுக்கு முப்பெரும் விழா. அது சரிப்பா. 16 க்கு என்ன விஷேசம்?
இந்தியாவின் பொருளாதரப்புலி மன்மோகன்சிங். அவருக்கடுத்த பொருளாதார 'அஸிஸ்டண்ட் புலி'யான ப.சிதம்பரம் செப் 16 ல் பிறந்தார். புதிய பொருளாதாரக்கொள்கை பிறந்தது. பெப்சி வந்தது. சரி சந்தோசம். அது மட்டும்தானா?
அட! அதையெல்லாம் விடுங்கள். மீராவைத்தெரியுமா உங்களுக்கு? மீராவாக நடித்த எம்.எஸ்.எஸ் அம்மாவை? கேட்காத காதுகளிலும் புகுந்து செவியின்பம் தரவல்ல பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பிறந்த நாளாம் இன்று. ஆஹா! பாரதரத்னாவா? ம்ம். வேறு ஏதேனும்?
இருக்கிறதே, இந்திய காளைகளின் ஒரு காலத்து கனவு கன்னியும் இன்றைக்கு ஜப்பானிய இளவல்களின் கனவுலா நாயகியுமான 'கண்ணே மீனா, மீனே கண்ணா?' கவிதையின் மீன் கண்கள் நாயகி மீனா செப்டம்பர் 16 ல் பிறந்தாராம். ஆஹா! கொடுத்த வைத்த பதினாறய்யா! வேறு ஏதும் இருக்கிறதா? இருக்கத்தான் வேண்டுமா? அட! அவசரப்படாதீங்க!
இதெல்லாம் ரெக்கார்டுகள் சொல்வது. எனக்குத்தெரிந்த (ஆனால் அவருக்கு என்னைத் தெரியாத) ஒருவருக்கும் இன்றைக்குத்தான் பிறந்த நாளாம். சிங்கப்புராவை சிங்கப்பூராக்கியவர். இப்படி ஒருவர்தான் இப்போது இந்தியாவுக்கு வேண்டும் என்று நான் நினைக்கும் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான மூத்த அமைச்சர் லீ குவான் கியூ. ஆஹா! இந்த தினத்தில் ஏதோ விஷயமிருக்கிறது! அது நிச்சயம் தெரிகிறது. ஆனால்..?
'அட...எல்லாம் சரிப்பா! இன்றைய இன்று உனக்கேன் பிடித்தது? அதற்கு காரணம் சொல்லு!?' என்று நீங்கள் கேக்கலாம். என்ன சொல்வது? ஏதோ பிடித்திருக்கிறது.
(பின்னணியில், 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்...'பாடல் ஒலிக்கிறது!)
எம்.கே.

1 comment: