அஜீவனுக்கும் ஊடகத்திற்குமான புரிதல் பதின்ம வயதினிலே ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் பிறந்து, இயந்திர பட்டப்படிப்பு பயின்று, ஊடகம் சுழலும் வாழ்வில் மனம் நுழைந்து கிடந்தாலும் சிங்கப்பூருக்கு வந்து சில ஆண்டுகள் படிப்பு சார்ந்த வேதியியல் தொழிற்நுட்பத்தில் பிழைத்து, பிறகு சில ஆண்டுகள் நிரந்தரமாக தன்னை தனக்குப் பிடித்த வேலைக்குள் இழைத்திருக்கிறார். சீன முதலாளியிடம் வேலை செய்ய, நேர்மை, நம்பிக்கை மற்றும் திறமை ஆகியவற்றை அதிகமாகக் கொண்டிருக்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்லும் அவர், தனது பழைய முதலாளி 14 வருடங்கள் கழிந்தும் இன்னும் தன் மேல் கொண்டிருக்கும் அன்புக்கு அவற்றை சாட்சியாக்குகிறார். அஜீவனின் அன்றைய வழிகாட்டுதல் அந்த சீனரின் இன்றைய மாபெரும் வெற்றி!
'கல்யாணத்தில் வீடியோ எடுப்பதற்கும் விதவிதமான உடைகளில் மரத்தைச் சுற்றி வந்து காதல் புரியும் கலைக்கும் எனக்கும் வெகு தூரம். அதற்கெல்லாம் அப்பால் மனித உணர்வுகளுக்கு மத்தியில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.' என்கிறார். 'அரசியல் போராட்டங்களோ அது சார்ந்த சூழ்நிலைகளோ இந்தக் கலைஞனுக்கு அவசியமில்லை. அவைகளுக்கு மத்தியில் எனக்கு வேலையில்லை. எனது தலைவிதியை சரியாக நான் வைத்துக்கொண்டால் அதுவே எனது வாழ்தல். நான்கு பேரைத் திருத்துவதற்கோ நாட்டைத்திருத்துவதற்கோ என்னால் முடியாது. அது எனது வேலையும் இல்லை. தான் வாழும் குறும்பட உலகிலும் அத்தகைய சூழ்நிலை நிலவுவது எனக்குப்பிடிக்காது.' கேமிராவின் பார்வை நீண்ட சாலையைத் தேடுகிறது.
'லண்டன் குறும்பட விழாவுக்கு' நடுவராய் வந்த திரு. தங்கர்பச்சானை மிகவும் இகழ்கிறார் அஜீவன். அவருக்கு இப்படங்களைப் பற்றி என்ன தெரியும் என்றும் கேட்கிறார். 'எதுவும் தெரியாமல் சிறந்ததைத் தேர்ந்தெடுத்த அவரது நடுநிலைமையின் பின்னே ஏதோ நிழலாடுகிறது' என்கிறார். நிழல் நிஜமாகி இப்போது அது மறைந்ததும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்கிறார் நிஜமான வேதனையுடன்.
லீலா மணிமேகலையின் 'கனவுப்பட்டறை'க்கும் தனக்கும் நிகழ்ந்த பிரச்சனைகள் எந்தவொரு அப்பாவிக்கும் நேரக்கூடாது என்கிறார். அது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது என்பது பற்றியும் தான் எப்படி அங்கே புறக்கணிக்கப்பட்டேன் என்பதையும் வருத்தமாகச் சொல்கிறார். இலக்கியத்தில் 'ஒற்றையிலை(யென)', வியாபாரத்தில் இவ்வளவு படுத்துமா என்று யோசிக்க நேருகிறது.
குறும்படம் மட்டுமல்ல, சினிமா உலகிலும் கொடிகட்டிப்பறக்கும் பெண்போகங்களுக்கும் அது தொடர்பான விஷயங்களுக்கும் தனது கடுமையான கோபத்தை முன் வைக்கிறார். 'பதினைந்து டாலருக்கு' தாராளமாய் கிடைக்கும் 'வெளிச்சமாச்சாரம்' ஒன்றை, இங்கே வந்து ஏன் தேடுகிறார்கள் என்று விசனப்படுகிறார். தயவுசெய்து அதற்கெல்லாம் இங்கு வராதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறார். கேமராவிற்கும் பெண்போகத்திற்கும் இருக்கும் தவறான சிந்தனைகள் களையப்படவேண்டும் என்கிறார்.
சிங்கப்பூரில் தமிழர்களின் வாழ்வியலில் நடைபெறும் சமூகச்சீரழிவுகளை குறும்படமாக எடுத்து வெளியிடலாமே என்ற தனது நண்பரின் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறார். 'சமூகச்சீரழிவுகள் எங்குதான் இல்லை? அவற்றை மட்டும் காண்பிப்பது அநாகரிகம். மறுமுறை நான் சிங்கப்பூருக்கு வரமுடியுமா? எனது உலகில், போராட்டத்தின் உக்கிரமோ சமூகச்சீரழிவுகள் அல்லது அதற்கு என் போதனைகள் ஆகியனவெல்லாம் இல்லவே இல்லை. இது ஒருவரின் அல்லது இருவரின் தனிமன விதிகளின் விளையாட்டுக்களம்' என்கிறார்.
'இலங்கையிலிருந்து வந்த ஆண்கள் என்றாலே ஓரின உறவுக்காரர்கள் என்று எண்ணும் சுவிஸ், அங்கு பிழைக்க வரும் இலங்கை ஆடவர்கள், அல்லது அவர்கள் துரத்தும் பெண்களின் பாடுகள், அல்லது வெள்ளைக்காரன் வந்து உடைந்த வீட்டையும் பிணங்களையும் அப்புறப்படுத்த அவற்றை வேடிக்கை பார்க்கும் சுனாமியின் உள்ளூர்வாசிகள்- இவைகளுக்குப்பின்னே சில இதயங்கள் கிடந்து குமுறலாம். அவைகள்தாம் எனது களம்' என்கிறார். இலங்கையில் சுனாமியின் கோரத்தை டாகுமெண்டரியாக்கியும் குறும்படமாக்கியும் அதனுடன் 'என் ஜி ஓ'க்களோடு இணைந்து சுவிஸிலிருந்து வந்து நிவாரணப்பணிகளில் பங்குகொண்டதையும் குறிப்பிடுகிறார்.
'சிங்களம் வழியில் படித்து வந்தமையால் சிங்கப்பூரில்தான், தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன். அதில் எனக்குப் புலமை கிடையாது. சிங்களம் நன்றாகப் பேசுவேன். விமான நிலையத்தில், 'தமிழ்ச்செல்வன்' என்ற எனது பெயரைப் படித்துவிட்டு நிமிர்ந்து அவர் பார்க்கும்பொழுது நான் சிங்களம் பேசுவது இனிமையாய் இருக்கிறது. இலங்கையில் பிறந்த அனைவருக்கும் சிங்களம் தெரிந்திருப்பது நல்லது' என்கிறார்.
'ஜெர்மானியர்களுடன் வேலை செய்யும் அனுபவம் அலாதியானது. மோதல் இல்லை; ஈகோ இருக்காது. எனக்குத்தெரியாததை அவர்களிடம் கேட்கலாம்; அவர்களுக்குத்தெரியாததை நம்மிடம் கேட்பார்கள். பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றம் இருக்கும். ஏராளமான ஜெர்மன் படங்களுக்கு ஒளிப்பதிவு, எடிட்டிங், கோ-டைரக்ஷன் செய்திருக்கும்/செய்யும் ரகசியம் அதுதான்! ஒரு சின்ன விஷயத்திற்கு ஆயிரம் கேள்விகளும் விவாதங்களும் செய்யும் நம்மாட்கள் சிலருடன் எனக்கு எப்போதும் ஒத்துவராது. பெரியவர்களை விட மாணவர்களையும் இளைஞர்களையும் என்னிடம் விட்டால் நன்றாகச் செயல்படமுடியும்' என்று தனது ஆதங்கத்தையும் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார்.
கமலுடன் வேலை செய்த அனுபவங்கள், கன்னட படத்தில் பணிபுரிந்தது, திரையுல தனது நண்பர்கள், ஆபாவாணன் டீமில் வேலை செய்த தனது சிநேகிதர்கள் பற்றியெல்லாம் நம்மிடம் அளவளாகிறார். தான் நிறைய ஜெர்மன் படங்களில் வில்லனாக நடித்திருப்பதையும் மாணவர்களின் குறும்பட இயக்கத்தில் தனது ஈடுபாட்டையும், சுவிஸ் பட கழகத்தில் தனது பங்கு மற்றும் ஜூரியாக தான் ஆற்றிவரும் பணியைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
ஆங்கிலத்திலும் ஜெர்மன்மொழியிலும், தான் இப்போது குறும்படங்கள் தயார் செய்வது பற்றியும் சிங்களத்தில் ஒரு படம் செய்து அதைத் தமிழில் மொழிமாற்றம் செய்வது குறித்தும் பேசுகிறார். 'தமிழில் அல்லது தமிழ்நாட்டினருக்கென படம் செய்வது பெரியவிஷயமா என்ன' என்று கேட்கிறார். (ஹி..ஹி, மன்னிச்சுக்குங்க மானஸஜென்!)
'சிங்கப்பூரில் குறும்படங்கள் தயாரிப்பது தொடர்பாக, என்னால் எல்லாவித உதவிகளையும் வழங்கமுடியும்' என்கிறார் ஆர்வமாக. 'கதைகளைத் தயார் செய்துகொண்டு, திரைக்கதையை எனக்கு அனுப்பி வையுங்கள், என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்குச் செய்கிறேன், கதைகளில் நிறைய பாத்திரங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்' என்கிறார். சிங்கப்பூரில், 1981 வாக்கில், சிங்கப்பூர் பிராட்கேஸ்டிங் கார்ப்பொரேஷனிலும் (SBC), தமிழ் முரசில் சினிமா செய்திகள் எழுதியதையும், வானொலியில் பங்குபெற்றதையும் இனிமையாகப் பகிர்ந்துகொள்கிறார்.
சிங்கப்பூரில் அவருக்கு நடிகர்-நடிகைகள் தேவை எனச்சொன்னார்! அப்படியே மென்பொருள் வல்லுனராய் இன்னொரு பெண்ணும் பார்க்கிறாராம்! முன்னது 'தான் இயக்க', பின்னது 'தன்னை இயக்க'வாம்! அட்டகாசச் சிரிப்புடன் சொல்கிறார் பிரம்மச்சாரியான அஜீவன் தமிழ்ச்செல்வன்!
(நேரிடையாக உரையாடியதன் ஞாபகத்திலிருந்து எழுதியவை. கருத்துகளோ வார்த்தைகளோ மாறியிருக்கலாம்!)
எம்.கே.குமார்
குமார், அங்கு நீங்கள் மௌனமாய் இருந்ததற்கு இந்த பதிவில் கலகலக்கிறீர்கள். என்னடா குமார் இருந்தும் குமாரை காணோமே என்று நேற்று தேடிக் கொண்டிருந்தேன்.
ReplyDeleteவழக்கம் போல பணி நிமித்தமாக அஜீவனை சந்திக்க குறுகிய கால அவகாசமே கிடைத்தன. மதியத்திலிருந்து அவருடன் காலத்தை கழித்த நீங்கள் நிறைய புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். மாலையில் இடையில் புகுந்த எனக்கு அவர் என்ன சொல்கிறார் என புரிந்துக் கொள்ளவே 1/2 மணி நேரம் ஆகியது (நான் ஒரு டுயூப் லைட்). அவரது கலகலப்பான உரையாடலில் முழ்கியிருந்தேன். அருமையாக பேசுகிறார். அந்த டைரக்டர் டச் இருந்துக் கொண்டே இருக்கிறது அவரிடம். என்னை பொருத்த அளவில் நல்ல பதிவு. சில விசயங்கள் ரொம்ப ஒப்பனாக போட்டிருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.
//'அரசியல் போராட்டங்களோ அது சார்ந்த சூழ்நிலைகளோ இந்தக் கலைஞனுக்கு அவசியமில்லை. அவைகளுக்கு மத்தியில் எனக்கு வேலையில்லை. எனது தலைவிதியை சரியாக நான் வைத்துக்கொண்டால் அதுவே எனது வாழ்தல். நான்கு பேரைத் திருத்துவதற்கோ நாட்டைத்திருத்துவதற்கோ என்னால் முடியாது. அது எனது வேலையும் இல்லை. தான் வாழும் குறும்பட உலகிலும் அத்தகைய சூழ்நிலை நிலவுவது எனக்குப்பிடிக்காது.//
அவரின் இந்த சிந்தனை மிகப் பிடித்திருந்தது. திருத்த வேண்டாம் சினிமா. சினிமா சிலவற்றை லேசாக உணரவைத்தாலே அது வெற்றி சினிமா.
அச்சச்சோ... போகமுடியலியேன்னு நினைத்தேன் - அந்த கவலையைப்போக்கிவிட்டீர்கள், நன்றி குமார். திரு. அஜீவன் அவர்களைப்பற்றிய பல விபரம் அறியமுடிந்தது.
ReplyDeleteஎல்லாவற்றையும் சொன்ன அஜீவன் ஜீவீதாவை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையா? மறந்து விட்டாறோ?
ReplyDeleteஅன்புள்ள குமார்,
ReplyDelete'ரொம்ப நல்லா இருக்கு':-))))
எல்லாம் விளக்கமா எழுதியிருக்கீங்க! நேர்லே வந்து பார்க்காத
குறையைப் போக்கிட்டீங்க!
என்றும் அன்புடன்,
துளசியக்கா
வணக்கம் குமார்
ReplyDeleteநேரில் வந்து பார்க்கவோ கேட்கவோ முடியாத
அஜீவனின் கருத்துக்களை எங்களுக்கும் தெரியத் தந்ததற்கு நன்றி.
நட்புடன்
சந்திரவதனா
ரொம்ப நாள் பழகிய நட்பின் தொடர்ச்சி போல மனிதர்களைத் தழுவிக் கொள்கிறார், அது ஒரு நல்ல கலைஞனுக்கான அடையாளம், உணர்வுபூர்வமான படைப்புகளுக்கான ஊற்றுக்கண் அது எனப் பட்டது!
ReplyDeleteஅவரது புகைப்படம், அவரது இயல்பை காட்டுவதாகப் படவில்லை:)
-மானஸாஜென்.
பின்னூட்டமிட்ட அன்பு அல்வா, அன்பு அண்ணா, அனானிமஸ், துளசியக்கா, சந்திரவதனா மேடம், மானஸஜென் மற்றும் மூர்த்தி ஆகியோருக்கு எனது நன்றிகள்.
ReplyDeleteஅனானிமஸ் அம்மா/ஐயா, ஜீவிதாவைப்பற்றி நானும் ஏதும் கேட்கவில்லை. அதுசரி, டாக்டர் ராஜசேகரின் (இதுதாண்டா போலீஸ் புகழ்) மனைவியைப் பற்றி இவரிடம் ஏன் கேட்கவேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்லணும்.
மானஸஜென், முதல் நாள் சந்தித்ததில் நான் எடுத்த இரு புகைப்படங்களில் இதுதான் கொஞ்சம் பரவாயில்லையோ என்றிருந்தது. ஆனால் படத்தைப் போடும் போது உங்களுக்கு ஏற்பட்ட அதே எண்ணம் எனக்கும் எழுந்தது. படம் வேறுருவருடையதோ என்று. :-)
மாற்றிவிடலாம்.
அன்புடன்
எம்.கே.
Our Ramesh has written Whatever I thought of writing,.......
ReplyDeletegood posting Kumar !
//அதுசரி, டாக்டர் ராஜசேகரின் (இதுதாண்டா போலீஸ் புகழ்) மனைவியைப் பற்றி இவரிடம் ஏன் கேட்கவேண்டும்//
ReplyDeleteஒன்னும் பெரிய தப்பெல்லாம் இல்லிங்க.சில சுவையான மலரும் நினைவுகளை அவர் சொல்வார் என்பதற்க்காகத்தான். மற்றபடி அஜீவன் பண்பில் சிறந்தவர் என்பதில் துளியும் ஐயமில்லை.
இந்த படத்தை போடுங்கள் நண்பரே:
ReplyDeletehttp://i4.photobucket.com/albums/y106/kanchifilms/Ajeevans.jpg
அஜீவனை எனக்குத் தெரியாது. ஆனால் அவரது குறும்படங்களை நான் கனடாவில் பார்த்திருக்கின்றேன். லண்டனில் கடந்த வருடம் விம்பம் அமைப்பினால் நடாத்தப்பட்ட குறும்படவிழாவில் அஜீவனது குறும்படங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்றும் அதனால் அவர் கோபம் கொண்டு நடுவர்கள் சரி இல்லை என்று கூறியதாகவும் அறிந்தேன். இந்தக் குழப்பம் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வருவதுதான். விம்பம் குறும்படவிழாவில் கனடாவில் வாழும் இளைஞனான சுதன் மகாலிங்கத்தின் “அடிமை” எனும் குறும்படம் தான் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. என் பார்வையிலும் அஜீவனின் குறும்படங்களிலும் பார்க்க சுதனின் அடிமை குறுந்திரைப்படம் சிறந்ததாகத்தான் இருந்தது. எனவே இங்கே தங்கப்பச்சானையோ இல்லாவிட்டால் மற்றய நடுவர்களையோ சரியில்லை என்று கூறுவது பொருத்தமாகப் படவில்லை. வெற்றிகளை மட்டும் நினைத்துக் கொண்டு ஒருவரும் கலைப்படைப்புக்களைத் தர முடியாது. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் கலைஞர்களுக்கு வேண்டும்.
ReplyDeleteபின்னூட்டம் தந்த ஜெயந்திசங்கரி, அனானிமஸ், காஞ்சி பிலிம்ஸ் மற்றும் கறுப்பிக்கு எனது நன்றிகள்.
ReplyDeleteகாஞ்சி, நீங்கள் செய்த புகைப்பட வேலை அற்புதம், அதைத்தான் இப்போது போட்டிருக்கிறேன். ரொம்ப நன்றி.
கறுப்பி, அடிமை படத்தைப் பார்க்காமல் நான் கருத்து சொல்வது பத்தமாய் இருக்கும்.
தங்கர்பச்சான் தனக்கு பரிசு தராததால் அவரைத்திட்டவில்லை எனவும் தானும் சுவிஸிலும் ஜெர்மன் மொழிப்படங்களுக்கும் நடுவராய் இருந்தவனென்ற முறையில் அவருடைய தேர்வு சரியில்லை, நடுவருக்கான தகுந்த அடிப்படைகள் அவருக்கு இல்லை என்பதாக திரு. அஜீவன் சொன்னார்.
அன்புடன்,
எம்.கே.
மிக்க நன்றி குமார்.
ReplyDeleteசிங்கை நண்பர்களே மன்னித்துக் கொள்ளுங்கள்...............
ReplyDeleteமுத்தமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும்
எனது முதற்கண் வணக்கங்கள் உரித்தாகுக.
கடந்த 8ம் நாள்
எனது வருகைக்காக சிங்கையில் காத்திருந்து
ஏமாற்றமடைந்த அனைத்து உள்ளங்களிடமும்
மானசீகமாக மன்னிப்புக் கோருகிறேன்.
இலங்கையில் இருந்து பயணமாக வேண்டிய
விமானத்தை தவற விட்டது போக
தொடர்பு இலக்கங்களை பெட்டிக்குள் பத்திரமாக வைக்கப் போய்
ஏற்பட்ட விபரீதம் என்னை நோக வைத்தாலும்
சாக்கு சொல்லித் தப்ப நான் தயாராக இல்லை.
தவறு என்னுடையதாகவே கருதுகிறேன்.
ஏற்றுக் கொள்கிறேன்.
அதை பெரிய மனது கொண்டு மன்னிக்கவும்.
எனது பங்குபற்றுதல் இல்லாமல்
குறும்பட திரையிடல் மற்றும் சந்திப்பை
வெற்றிகரமாக நடத்திய
வெற்றியாளர்களான நண்பர்களை
நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
முத்தழுகுவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட நான்
சமூகமளிக்காத போது
எனது குறையை நிறைவு செய்த
ஈழநாதனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நிகழ்வை ஈழநாதன்
முகவுரையோடு தொடக்கி வைத்து
சிறப்பாக நடத்தியதாய் அனைத்து நண்பர்களும் சொன்னார்கள்.
அதுதான் என்னை கொஞ்சமாவது நிம்மதியடைய வைத்தது.
ஒரு நாள் தாமதமாக வந்த போது
ஒரு குறிப்பிட்ட சில நண்பர்களை
சந்திக்கவும் பேசவும் கிடைத்தது.
மனம் விட்டு என் எண்ணங்களை
என்னை வாழ வைத்த நாட்டில் பேசும் போது
மனதில் நிறைவு கொண்டதான ஓர் உணர்வு...............
எல்லோரும் பணிகளுக்குள் வாழ வேண்டிய நிலையால்
என்னை தனியாக்கினாலும்
தனிமையை மறக்க வைத்தது குமார்தான்.
இரவு வேலை முடிந்து
தூங்காமல் சிரித்த முகத்தோடு
என்னோடு சுற்றியவர் அவர்..........................
நான் எடுத்துச் சென்ற
குறும் படங்களை
நான் வெளியேறு முன் பிரதி பண்ணி
ஒரு புதுமையை தொடரும் எண்ணத்தில்
விழித்திருந்த ஈழநாதனின் மயக்கத்து கண்கள்
என்னை வழியனுப்ப வந்த போது
போதைக்குள் சிக்கியது போலத் தோன்றியது.
இனியாவது தூங்கம் வருமா?
பார்த்த நண்பர்கள் தவிர
ஒரு சிலரோடு தொலைபேசி வழி
தொடர்பு கொண்டேன்.
அப்படியாவது பேசினேனே என ஒரு நிம்மதிப் பெரு மூச்சு.
இருந்தாலும் அனைவரையும் சந்திக் க முடியாத வருத்தம் .............
இன்னும் தொடர்கிறது.......................
அது அடுத்த முறை வரை எனக்குள் தொடரவே செய்யும்.....................
சிங்கை தொலைக் காட்சியில் கொஞ்ச நேரம் பேசக் கிடைத்தது.
குறுகிய நேரத்துக்குள் ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும்
பேட்டியை நடத்திய இந்திரசித்துக்கும் என் நன்றிகள்.
நிகழ்வுக்காய் வந்த,
சந்தித்த அனைத்து நண்பர்களது விபரங்களும் இல்லாமையால்
பலரது பெயர்களை நான் குறிப்பிடாமல் விட்டிருக்கிறேன்.
இருப்பினும் தொடர்ந்து எழுதும் போது அவர்களையும் நினைவுக்குக் கொண்டு வருவேன்.
அவர்கள் எதிர்காலத்தில் செய்ய வேண்டிப் பேசிய விடயங்கள்
மற்றும் படைப்புகள் கூட அதற்கு வழி வகுக்கும்.
ஒரு இரவு இரு பகல்களை கடத்திய நான்
இதயத்தில் நட்பான எண்ணங்களை சுமந்து கொண்டு
பறந்த போது சிங்கை சிங்காரமாக என்னை வழியனுப்பியது.....................
நாம் வாழும் போது
நாம் வாழ்வது நம்மக்கான ஒரு தேசத்தில் என்று நினைத்தால்
அந்த தேசம் மட்டுமல்ல
உலகமே நமக்கான தேசம்தான்.
தொடரும்.......................................
_________________
அஜீவன்
குறும்படத் தேர்வு பற்றி தங்கரை இகழ்ந்ததாக நினைத்திருக்கிறார்கள்.
ReplyDeleteஅவரை இகழவில்லை.
அவர் ஒரு சிறந்த ஒளிபதிவாளர் ,இயக்குனர்.
ஆனால் நேர்மையான நடுவரல்ல.
அதை எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயார்.
லண்டனில் நடைபெற்ற விழாவில் நடந்த அசம்பாவிதத்துக்கு மௌனமாக இருந்ததே எனது குறும்படங்களும் இடம் பெற்றதால்தான்.
அங்கே என்ன நடந்தது என்பது அங்கேயிருந்த நடுவர்களது மனச்சாட்சிக்குத் தெரியும்.
அவர்களே எனக்கு பதில் தராமல் மௌனமாகியிருக்கிறார்கள்.
எனது படத்துக்கு விருது கிடைக்காததால் வந்த கோபமல்ல இது.
தவறான தேர்வுக்கு எதிராக வந்த விசனமே இது.
வாகனம் ஓட்டுவோர் வாகனச் சாரதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் வாகனம் ஒன்றைச் செலுத்துவதற்கு அனுமதிச் சான்றிதழ் அளிக்க அந்தச் சாரதிகளுக்கு அனுமதியில்லை.
அதற்கான தகுதியும் சான்றிதழை வழங்கும் நிலையும்
புலமை பெற்று அங்கீகரிக்கப்பட்டவர்களால்தான் முடியும்.
இது தொடர்பாக யாழில்
நான் கடந்த சித்திரை மாதத்தில் எழுதிய கட்டுரையை
இங்கே இணைக்கிறேன்.
அது பலருக்கு பயன் தரும் என நம்புகிறேன்.
நம்மவர்
குறும்பட விழாக்கள் நடை பெறுகின்றன.
பாராட்டுதலுக்குரியது.
தேர்வுகளை
சினிமா தெரிந்தவர்களையோ
ஆர்வலர்களையோ
வைத்து நடத்துகிறார்கள்.
நல்லது..............................
ஆனால் பலரது புலனுக்குப் புரியாத
புதிரான ஒரு குறைபாடு
தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
அதை
குறும்படப் போட்டிகளை
நடுத்துவோரோ அல்லது நடுவர்களோ
பெரிதுபடுத்துவதில்லை என்பதை விட
அலட்சியமாக
மக்களை மண்டபத்துக்குள் கொண்டு வர வேண்டும்
என்றே நினைக்கிறார்கள் என்ற தோற்றத்தை
குறும்பட விழாக்கள்
உருவாக்கி வருகிறது.
மனம் நொந்து வேதனைப்படுவோர்
படைப்புகளை உருவாக்கிய
படைப்பாளிகளும்
கலைஞர்களுமேயாகும்.
இதற்கான காரணங்களை - கருத்துகளை
புலம் பெயர் தமிழ் சினிமா வளர்ச்சிக்கான
ஆர்வலர்கள் முன் வைக்க வேண்டும்.
என் கண்களுக்கு பட்டவற்றை
அல்லது எனக்குத் தோன்றியதை இங்கேயாவது எழுதினால்
அதை யாராவது கருத்தில் எடுத்து செயல் பட்டால்
அது நமது எதிர்காலப் படைப்பாளிகளுக்கு நன்மை தரும்
என்று கருதுகிறேன்.
1.
குறும்படங்களை இறுதி நேரம் பெற்றுக் கொள்ளும் நோக்கோடு விழாக்களை ஏற்பாடு செய்யாதீர்கள்.
காலம் தாமதித்து வரும் குறும்படங்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
இதுவே
விவாதிக்கவோ நீதி கேட்கவோ முடியாதவர்களாக படைப்பாளிகள்
மற்றும் விழா நடத்துனர்கள் ஆவதற்கு காரணமாகிறது.
படங்கள் கடைசியில்தான் கையில் கிடைத்தது என்று ஒரு சாராரும்
இறுதி நேரம் வரை சில பிரச்சனைகளால்
நேரத்துக்கு அனுப்ப முடியவில்லை என்று ஒரு சாராரும்
காரணங்கள் சொல்லித் தப்பிக்க முடிகிறது.
2.
குறும்பட தேர்வுகள்
திரையிடப்படும் நாளில் நடைபெறுவதை நான் கண்டது
எமது தமிழ் புலம் பெயர் குறும்படப் போட்டிகளில்தான்.
இது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று.
இதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.
தேர்ந்தெடுக்கும் நடுவர்கள்,
ஆகக் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னமேயாவது
பார்வைளர்கள் இல்லாமல்
ஒன்றாக இருந்து
ஒவ்வொரு படமாகப் பார்த்து ,
விவாதித்து
புள்ளிகள் இட்டுத் தேர்வு செய்ய வேண்டும்.
அது தலைமை நடுவராலும்
ஏனைய நடுவர்களாலும்
பக்க சார்பற்ற நிலையில்
புள்ளிகள் இடப்பட்டுள்ளளன என ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும்.
அது இல்லாத விடத்து
யாராவது ஒரு நடுவர்
கருத்து முரண்பட்டாலும்
மீண்டும் அதே படத்தை திரையிட்டு
ஒரு இறுதியான முடிவுக்கு வர வேண்டும்.
( சிறிது நேரம் அதாவது 5 முதல் 15 நிமிட ஓய்வுக்குப் பின்னர்,
அதாவது முதல் படத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காகவே இந்த இடைவேளை)
அந்த முடிவுகள் சரியாகி ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர்தான்
அடுத்த படத்தை திரையிட்டுப் பார்த்து புள்ளி வளங்கப்பட வேண்டும்.
இப்படியல்லாது
ஒரேயடியாகவோ
அல்லது
5-6 நிமிட இடைவெளிக்குப் பின்
அடுத்தடுத்துப் படங்களை ஓட விடுவது
மிக மிகத் தவறான ஒரு செயலாகும்.
எங்களால் முடியும் என்பார்களும் இருக்கிறார்கள்.
அவர்களிடம் 5 சிறு கதைகளைக் கொடுத்து
தொடர்ந்து படித்து விட்டு
இதன் நன்மை தீமைகளை விளக்கச் சொல்லுங்கள்.
அத்தோடு அதன் சில பகுதிகளைப் பார்க்காது
குறிப்பிட்டு சொல்லச் சொல்லுங்கள்.
அது 100க்கு 100 சதவீதம் இயலாத காரணமாகும்.
அதற்கு மேலான ஒன்று,
பெண்கள் சாறிகளை தேர்ந்தெடுக்கும் போது
ஏற்படும் பிரச்சனையை ஒரு கணம் மனக் கண் முன் கொண்டு வாருங்கள். ( கோபப் படக் கூடாது பெண்கள்)
விபரீதம் புரியும்....................
இப்படி நேரம் ஒதுக்க முடியாத நடுவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள்
அல்லது
தேர்வு செய்யும் போட்டி விழாக்களாக அறிவிக்காதீர்கள்.
பார்வையாளர் தேர்வாக மட்டுமே நடத்துங்கள்.
குமுதம், தினகரன்,...................... போன்ற பத்திரிகைகள்
வாசகர்கள் தேர்விலேதான் தேர்வுகளை நடத்துகின்றன.
இவை பொழுது போக்கு படங்களுக்கோ, கலைஞருக்கோ எதுவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
இவர்கள் கூட பக்க சார்பாகவே செயல்படுவதாக
அவர்களே சொல்லுகிறார்கள்.
அது அவர்களுக்குள் இருந்து விட்டுப் போகட்டும்.
எமக்குள் வேண்டாம்.
இது
எம்மவரால்
எமக்காக
வளர்க்க வேண்டியதற்காக செய்வதாயிருந்தால்
அது கொடுமையானது மட்டுமல்ல
அநியாயமும் கூட..................
யாருக்குள்ளும், ஒரு சார்புத் தன்மை இருக்கும்.
இது பொது மனித இயல்பு.
எனக்கு
என் குடும்பம் மீது பற்று இருக்கும்.
ஆனால் நாலுபேருடன் அது விவாதத்துக்கு வந்தால்
சமூக நீதியொன்று இருக்கிறதே என்று
கொஞ்சமாவது அனுசரித்துப் போக வேண்டி வருகிறது.
அதுபோலவே
இக் குறும்படத் தேர்வுகள் பார்வையாளர்கள்
அற்ற நிலையில் பார்க்கும் போது
ஒரு சமூக விவாதத்துக்கு
நடுவர்கள் தம்மை உட்படுத்திக் கொண்டு
ஒரு பாதிப்பற்ற முடிவுக்காவது வரலாம்.
அப்படியில்லாத நிலையில்
நடுவர்கள்,
பார்வையாளர் மற்றும் படைப்பாளிகள் முன்
விவாதிக்க முற்றபட்டால்
நிலமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இவை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.
அதுவே புதிய படைப்பாளிகளுக்கு மட்டுமல்ல,
இருக்கும் படைப்பாளிகளுக்கும்
படைப்புகளை உருவாக்க
வழி செய்யும்...........................
உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
Kurumpan எழுதியது:
நல்ல யோசனைகள் அஜீவன் அண்ணா.
ஆனால்ää விழா நடத்துனர்கள் சிந்திப்பார்களா????
அஜீவன்:-
அவர்கள் யோசிக்கிறார்களோ இல்லையோ
இதுதான் நடைமுறை குறும்பன்.
சில நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்படாமல் இருக்கும் போது
அது தொடருகிறது.........................
சில வேளைகளில்
பலருக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற ஆதங்கம் இருக்கிறது.
ஆனால்
அவர்களுக்கும் சில வேளைகளில்
தெரியாமல் இருக்கலாம்.
படைப்பைக் கொடுக்கு முன்
படைப்பாளிக்கும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு.
போட்டி முடிவு அறிவித்த பின் கேள்வி கேட்க முடியாது.
நல்லதாகத்தான் செய்தாலும்
விபரம் தெரிந்து செய்தால் நாம்தானே முன்னேறுவோம்...................
நிதர்சன்:-
யோசனைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின் அதற்க்கு அனைத்து கலைஞர்களும் ஒன்றாக வேண்டும்... இப்பிரச்சினைகள் வருவதற்க்கு (பக்கச் சார்பு நிலை) குறிப்பிட்ட ஒரு கலைஞரும் காரணமாக இருக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட போவது அஜீவன் அண்ணா சொன்னது போன்று திறமையுள்ள கலைஞர்களே!...
-நேசமுடன் நிதர்சன்
அஜீவன்:-
நிதர்சன்
எல்லோரும் நல்லதை செய்ய வேண்டும் என்ற
ஆதங்கத்திலதான் செய்கிறார்கள்.
அவர்களுக்கு அந்த விதத்தில் நன்றி சொல்லயே ஆக வேண்டும்.
ஆனால் சரியான
நடை முறைகள் தெரியாமையால்
சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்,
அல்லது
பாதிக்கப்படலாம்.............................
போட்டிகளை நடத்துவதென்பது
மிகக் கடினமான ஒரு தலையிடி கொண்ட பணி.
தேர்வுக் குழுவுக்கான காலத்தை முன்னரே
நிர்ணயித்து
தேர்வு செய்ய வேண்டுமென்றே கூறுகிறேன்.
சுனாமி வரும் வரை யாருக்கும் தெரியாது.
வந்த பின்
அடுத்து முகம் கொடுக்க பல ஆலோசனைகளைச் சொல்கிறார்கள்.
அதுபோல பாதிக்கப்பட்டதாக பலர் முறையிடுகிறார்கள்.
நடந்ததை திருத்த முடியாது.
நடப்பதை திருத்த
இப்போதும் வழி சொல்லா விட்டால்
பழக்க தோசமாகி,
அதுவே அடுத்த தவறுக்கும் வழிகோலி விடும்.
_________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=4866
விரிவான பதிலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அஜீவன்.
ReplyDeleteஎம்.கே.
நிழ்ல் யுத்தம் குறும்படத்தினை இங்கெ பார்க்கலாம் : http://www.yarl.com/audio_video/shortfilms/shadow_fight.asf
ReplyDelete