Monday, August 22, 2005

ஜனநாயகமும் 'சன் டிவி' குழுமமும்!

ஒலி, ஒளிபரப்பு, அச்சு மற்றும் அரசியல் என அனைத்து துறைகளிலும் சன் டிவி குழுமத்தின் அதிகாரப்போக்கை இந்திய அச்சுப்பதிப்பு உலகில் முதன் முறையாக கொஞ்சம் காட்டமாகவே கண்டித்துள்ளது காலச்சுவடு. இந்தமாத காலச்சுவடின் தலையங்கப் (பக்கத்திற்கு பக்கத்துப்) பக்கத்தில் 'சூரியன் விழுங்கும் நாடு' என்று தலைப்பிட்டு விளக்கமாகவும் காரமாகவும் எழுதியுள்ளார் காலச்சுவடு கண்ணன்.

உண்மையில் அக்கட்டுரையின் தன்மை 100 % ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே! முரசொலி மாறனின் இந்திய நற்பணிகளில் ஆரம்பித்து அவருக்காக அல்லது அவருடைய லாபத்திற்காக, தி.மு.கவின் கொள்கைகளை 'சங் பரிவாரோடு' பறக்கவிட்டு, 'கமாலாலயம்' பக்கத்தில் படுத்து கைகோர்த்துக்கொண்டது வரை அரசியல் சார்ந்தும், ஒரு ஒளிபரப்பு ஊடகமாக அப்போது அப்பாவின் தயவால் ஆரம்பிக்கப்பட்டு, இப்போது ஒளிபரப்பு ஊடகங்களாக விரவிக்கிடப்பதும் ஒலிபரப்புத்துறையில் விரிந்து போய்க்கொண்டிருப்பதும் அத்துடன் விட்டுவைக்காது 'பராசக்தி' கொண்ட 'குங்கும'த்தைக் கவர்ந்து தனது எல்லாக்கரங்கள் கொண்டும் அதை விற்று வருவது வரையென நீளும் அதன் போக்கு எல்லோரையுமே உள்ளுக்குள் அசைத்துப்பார்க்க ஆரம்பித்துவிட்டது.

அடுத்த முறை 'வணக்கம் தமிழகத்திற்கு' தங்களை அழைத்தாலும் அழைப்பார்கள் எதற்கு இப்போது ஏதாவதுசொல்லி அதில் கொள்ளிவைத்துக்கொள்ளவேண்டுமென்றோ இல்லை 'விளம்பரமோ தொடர்நாடகமோ படவிமர்சனமோ' போட்டு நாலு காசு பார்க்கலாம் அதையேன் கெடுத்துக்கொள்ளவேண்டுமென்றோ இல்லை உலகத்தமிழர்களிடையே உறவை இணைக்கும் பாலமாக இருக்கிற ஒன்றில்(!?) இடறுகள் செய்து தமிழ்த்தாயின் குரல்வளையைப்பிடித்து ஏன் நெறிக்கவேண்டும் என்றோ அமைதியாய் இருந்துவிட்டார்கள் தமிழர்களில் பலர். இன்னும் சிலர், 'சன்' யானைக்காலில் மிதிபட்டு 'வைகோ' போன்ற 'புலி'களெல்லாம் காணாமல் போய்விட்டார்கள், எங்களைப்போன்ற எலிகளெல்லாம் எம்மாத்திரம் அவர்களுக்கு? என்று அமைதியாய் இருந்துவிட, இந்தப் பூனைக்கு மணிகட்ட ஏன் இவ்வளவு தயக்கம் என்று தயங்காமல் முன் வந்து மணியையும் கட்டிவிட்டிருக்கிறது 'எஸ். ஆர். எஸ்' (கண்ணன்) என்ற எலி.

உண்மைதான், அண்மையில் படித்தேன். பினாமி மற்றும் போலிப்பெயரில் கடன் கொடுத்து ஊழல் செய்துவிட்ட கூட்டுறவு சங்க அலுவவலர்களை காவல்துறை கைது செய்ய, அதை, 'விவசாயிகள் கைது' என்று சன் டிவி அரசுக்கு எதிராக முழக்கமிட்டதாம். இதைப்பற்றி ஜு.வி யிலோ துக்ளக்கிலோ படித்ததாக ஞாபகம். இதுமட்டுமா? ஒரு பேச்சுக்குச் சொல்லவில்லை, இன்று இரவு சன் செய்தியைப்பாருங்கள்! எத்தனை போராட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், கருப்புக்கொடிகாட்டுதல், பேருந்தை வழிமறித்தல் மற்றும் அரசு அலுவலர்களை 'கேரோ' செய்த காட்சி (என்று நால்வர் நின்று பேசிக்கொண்டிருப்பதைக் காண்பிப்பார்கள்.) என்று தமிழ்நாட்டில் ஏதாவது 'முக்கு முடுக்கில்' நடக்கும் அரசுக்கெதிரான மாபெரும் (!?) போராட்டங்களைக் காட்டுவார்கள், எண்ணிக்கையில் இவற்றை வைத்துக்கொள்ளுங்கள்! எலக்ஷன் நெருங்கும்போது இது இரண்டு, நான்கு அல்லது பதினாறு மடங்காகளாம்!

அடுத்து தினகரன் வந்துவிட்டது. இனி நாளுக்கு 24*60/10 தடவை, வாங்கிவிட்டீர்களா தினகரன்? மும்தாஜ் கர்ப்பமா, திரிஷா தமிழ்ப்பெயரில்லையா? சிவகாசி ஜெயலட்சுமியின் உண்மைக்கதையை அவரே எழுதுகிறார்! பக்கத்திற்குப்பக்கம் இலவச இணைப்பு.! என்று விளம்பரங்கள் வரலாம். (இனாமாய் தரப்படும் பொருட்களின்) விற்பனையில் தினகரன் டாப்புக்கு வரலாம். தினகரன் வசந்தத்தில் வரும் கேள்விக்கு பதில் சொல்லி இமயமலைக்கு ரஜினியுடன் சென்றுவிட்டு வரலாம்! இன்னும் என்னென்ன இருக்கிறதோ?

குங்குமத்தை என் வாழ்க்கையில் நான் காசுகொடுத்து வாங்கியதே கிடையாது, அப்படிப்பட்ட என்னையே 'ரஜினியின் அடுத்தபடம் ஆதிசேஷா, கௌதமி பற்றி கமல் பதில்!' என்ற இரண்டு வாக்கியங்களைச்சொல்லி வாங்க வைத்துவிட்டார்கள். (கடைசியில் இரண்டும் ஒருவரிச்செய்திகள் உள்ளே! இந்தப்பாவம் அவர்களைச் சும்மா விடாது!)

அரசியல் துறையில், தி.மு.கவின் எதிர்காலம் இருக்கட்டும். தளபதி ஸ்டாலினின் எதிர்காலம் முழுவதும் சன் டி வின் செய்திகளுக்குப்பின்னே தான் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையிலும், குறைந்தது இன்னும் நாற்பது ஆண்டுகளுக்கு அதாவது தயாநிதி மாறன் வாய் குழறி நடை பிறளும் வரை டெல்லி அதிகாரத்தில் எப்பாடு பட்டாவது (எவர் கொள்கையை பட்டத்தில் விட்டு அல்லது ஏதாவது மாலையை எவர் படத்தில் மாட்டிவிட்டாவது) இருப்பார் என்ற நிலையிலும் சன் டி வி குழுமத்தின் அதிகாரம் இப்போது முடிவுக்கு வருவது அல்லது நேர்கோட்டுக்கு வருவது அசாத்தியம் என்பதும் எல்லோரும் அறிந்திருக்கும் விஷயம்.!

இந்நிலையில் அச்சு ஊடகமும் முழுவதும் அவர்களால் வளைக்கப்பட்டுவிட்ட (இப்போது கால்கட்டைவிரல் மாட்டிவிட்டது!) சூழ்நிலை வருமாயின் அது தமிழக அரசியலுக்கு மட்டுமின்றி இந்திய அரசியல் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கும் கூட ஆபத்தாய் இருக்கலாம் என்பதும் அப்போது இருட்டை மட்டுமே கக்கும் சூரியனாய் கூட அது மாறிவிடலாம் என்பதும் காலச்சுவடு மட்டுமல்ல நாம் எல்லோரும் கூட அறிந்துகொள்ள உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

எம்.கே.குமார்

26 comments:

  1. கழக அன்பர்கள் பொருமப்போகிறார்கள்.

    ReplyDelete
  2. Kaalacuvadu

    சன் செய்திகளை நடுநிலை என்று கருதி எவர் பார்க்கிறார்கள்? பொழுதுபோக்காகவே செய்திகளைப் பலரும் கருதுகிறார்கள். திமுக ஆட்சியைத் தொடரவேண்டும் என்று கலர்ஃபுல்லாக விளம்பரம் சன் செய்திகளில் தொடர்ந்து வந்தாலும், மக்கள் அதிமுக-வுக்கு வாக்களித்தார்கள். சன்னுக்கு ரைட்ஸ் கொடுக்கப்படும் திரைப்படங்கள் எல்லாம் ஓட்டப்படுகிறது (ஹிட்டாகிறது) என்று வேண்டுமானால் நிலை நிறுத்தலாம். (சன் டிவியும் எண்டெர்டெயின்மெண்ட்; திரைப்படங்களும் கேளிக்கை அம்சம் நிறைந்தவை).

    அமெரிக்காவில் அதிகமாக விற்கும் பல பத்திரிகைகளும் தின்சரிகளும் ஜான் கெர்ரிக்கு வாக்களிக்குமாறு தலையங்கள் தீட்டியிருந்தது. எனினும் ஜார்ஜ் புஷ் ஜெயித்துவிட்டார்.

    இலவச பொருட்களுக்காக வாங்கப்படும் குங்குமத்தை யார் ஆழ்ந்து படித்து 'ஆமாம் சாமீ' என்று நினைத்து வாக்களிக்கப் போகிறார்கள்?

    ஆஸ்திரேலியா, அமெரிக்கா புள்ளிவிவரங்களை வைத்துக் கொண்டு ஓரிரண்டு ஊடக நிறுவனங்களே செய்திகளை எவ்வாறு ஆட்டிப் படைக்கவில்லை (அல்லது பாரபட்சமாக தருகிறது) என்று எளிதில் விளாசலாம்.

    ஓரளவு கவலைப்பட வேண்டிய விஷயம்தான் என்றாலும் குங்குமம் #1 ஆக இருப்பதற்கும் தினகரன் வாங்கப்பட்டதற்கும், சீரியல் பார்ப்பவர்கள்தான் தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போவதாகவும் கருதுவது சரியா....

    ReplyDelete
  3. ஜெயாவில் வர சட்டசபையில் இன்றுக்கும் சன் செய்திகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் போலிருக்கு. ஒரே காமெடி தான் போங்க.

    ReplyDelete
  4. உங்களுக்கு ஜெயலலிதா பிடிக்கும். கருணாநிதி பிடிக்காது. அதற்காக சன் தொலைக்காட்சியைத் திட்டுகிறீர்கள். ஜெயா டிவி மட்டும் ஒழுங்கா என்ன? நியாயம் என்றால் நீங்கள் அதனையும் சேர்த்து அல்லவா திட்டி இருக்க வேண்டும்?

    ReplyDelete
  5. In one way or other all media have an inclination towards some political party. There was also a news that an ex-MP from AIADMK wanted to buy the daily "Dinaboomi". I wonder why you have ignored that particular news ????

    Prince

    ReplyDelete
  6. பின்னூட்டமிட்ட நண்பர்கள் பாஸிட்டிவ் ராமா, பாஸ் பால், ராஜா ராமதாஸ், ஓட்டப்பன் மற்றும் ஆனானிமஸு ஆகியோருக்கு நன்றிகள்.

    பாஸி ராம், கழக அன்பர்களுக்குத்தான் இந்தப்பதிவே, பொருமுவது இருக்கட்டும். இதைப்படித்தாலாவது அவர்களுக்குப் புத்தி வந்து தி.மு.க வை சன் டிவி குழுமம் கபளீஸ்கரம் செய்வதை உணர்ந்தால் சரி.

    எம்.கே.

    ReplyDelete
  7. //சன் செய்திகளை நடுநிலை என்று கருதி எவர் பார்க்கிறார்கள்? பொழுதுபோக்காகவே செய்திகளைப் பலரும் கருதுகிறார்கள்//

    பாஸ் பால், நடுநிலையற்ற செய்திகளைத்தொடர்ந்து கொடுத்துக்கொண்டு வருவதும் ஆபத்தானது. எல்லாரும் அன்னப்பறவைகளல்ல. அதிலும் உண்மைச்செய்திகளைப்போல அவற்றைத் திறம்பட பிரித்தறிய இயலாது அறியத்தருவது ஆபத்திலும் ஆபத்தானது தானே!

    கலஞரைக் கைது செய்தபோது சன்டிவி அய்யோ கொல்றாங்களே என்று அலறியது நாமெல்லாம் அறிந்தது. அது கலைஞரில்லை, மாறன் என்று மக்களுக்கு உணர்த்த அரசு எவ்வளவு பாடுபட்டது. நல்லவேளை அவர்களும் ஒரு பதிவு வைத்திருந்ததால் தப்பிக்கமுடிந்தது, இல்லையேல் என்ன ஆகியிருக்கும்?

    ///இலவச பொருட்களுக்காக வாங்கப்படும் குங்குமத்தை யார் ஆழ்ந்து படித்து 'ஆமாம் சாமீ' என்று நினைத்து வாக்களிக்கப் போகிறார்கள்?//

    உண்மைதான்! ஆனால் வாக்களிக்கப்போகிறார்கள் என்று சொல்லவில்லை! தரமில்லாத, கருத்துச்செறிவற்ற, ஆழமில்லாத படிப்பவர்களுக்கு எவ்விதத்திலும் மன அமைதியையோ இலக்கிய அறிவையோ வளர்க்காத ஒரு பத்திரிக்கையை தமது உலகத்தரம் மிக்க வியாபார உத்திகளால் மக்களிடையே விற்று பொருளீட்டுவது சரிதானா என்பதைச்சொல்லுங்கள். இது இனி தினகரனிலும் தொடரும்.

    இப்படி இவர்கள் மட்டுமா சம்பாதிக்கிறார்கள் என்பீர்கள். நியாயம் தான், ஆனால் அப்பணம் அரசியலிலும் தனிமனித செல்வாக்கிலும் இழைய விடப்படுமாயின் அது எவ்வளவு பெரிய ஆபத்தாகவும் ஆகலாம் என்பதை நாம் அறியாதவர்களாக இருக்கக்கூடாது!

    //ஓரளவு கவலைப்பட வேண்டிய விஷயம்தான் என்றாலும்//

    ஓரளவல்ல; பெரிய பிரச்சனை இது! அச்சு ஊடகமும் அரசியல் ஊடகமும் ஒருவரிடையே குவிந்திருப்பது எல்லா வகையிலும் ஆபத்தாகலாம்.

    எம்.கே.

    ReplyDelete
  8. ராஜா ராமதாஸ்,

    உண்மைதான். ஜெயா டிவியில் அந்நிகழ்ச்சி காமெடி டைம் போன்றது தான்.
    ஆனால் சன் செய்திகள் உண்மையைப்போன்றே வடிவமைக்கப்படும் பொய்மைகள். இவை பிரித்தறியாத மக்களுக்கு பெரிய ஆபத்து.

    சன் செய்திகளைச் சொல்லியது ஒரு உதாரணத்துக்காகத்தான். இதே நிலையை அவர்கள் அரசியலிலும் (ஏற்கனவே நடப்பதுதான்! எனினும் அச்சு, ஒளி அரசியல் ஊடகம் அனைத்தும் கைக்கொண்ட இவர்கள்) இன்னும் எடுத்தால் பிரச்ச்னை மிகப்பெரியதாகலாம்.

    ReplyDelete
  9. அன்பு ஓட்டப்பன்,

    ஜெயா டிவி இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருந்து அவர்களும் 'விகடனையும் குமுதத்தையும்' வாங்கியிருந்தால் 'சாவின் விளிம்பில் ஜனநாயகம்!' என்று ஒரு பதிவு போட்டிருப்பேன். உண்மைதான்! அவர்களுக்கு பிஸ்னஸில் தேர்ச்சி போறாது.


    அதுசரி, எனக்கு கலைஞரைப்பிடிக்காது என்று யார் சொன்னது? எனது கவிதைகளோடு அவரைச்சந்திக்கலாம் என்று ஒரு திட்டம் இருந்தது, உங்களால் அது கெட்டுவிட்டது.

    அன்பு அனானிமஸ் பிரின்ஸ்,

    உங்கள் கேள்வியில் உண்மை இருக்கிறது. எல்லாம் (வீதி வியாபாரிகளிலிருந்து விபச்சார ஏஜண்ட் முதலைகள் வரை எல்லாம் ஏதோ கட்சியைச்சார்ந்துதான் இருக்கின்றனர். பத்திரிக்கைத்துறையும் அப்படித்தான்.

    ஆனால் மேலே சொன்ன பதிலின் உள்ளடக்கம் உங்களுக்கும் உரியதுதான்.

    அதிமுக முன்னால் எம்பி தினபூமியை வாங்கி அதை (முழு) மஞ்சள் மத்திரிக்கையாக்கினால் கூட காசு பார்க்க முடியாது; அம்மாவைச் சந்தோசப்படுத்தலாம். அவ்வளவுதான்!

    ஆனால் தினகரனை சன் டிவி குழுமம் வாங்கி அதை அப்படியே நடத்தி விளம்பரம் மட்டும் செய்தால் போதும்! விளம்பரத்திற்கு(ம் இலவசப் பொருட்களுக்கும்) மயங்கும் தமிழக முட்டாள்களான நாங்கள், கஷ்டப்பட்டு உழைக்கும் காசைக்கொடுத்து வாங்கி அதைப்படித்து திரிஷாவின் ராத்திரி நடனத்தை அறிந்துகொள்ளமாட்டோமா என்ன?!
    நன்றி சன் டி குழுமம்.

    ஆனால் நான் சொல்ல வந்த செய்தி, பெரிய வெற்றி பெற்றுவிட்ட ஒளி ஊடகம் அச்சு ஊடகத்திலும், அரசியல் ஊடகத்திலும் இணைந்து மொத்தமாய் தனது 'செய்தி'களைப்போல புறப்படுமாயின் அவ்வளவுதான்!

    எம்.கே.

    ReplyDelete
  10. குமார்,

    நல்ல பதிவு .. உன்மையான கருத்துக்கள்...
    ஆனால் ஒரு சின்ன தடுமாற்றம் தெரிகிறது.. எழுத்து நடையில் அல்ல.. கருத்தளவில்..
    நீங்கள் தி மு க என்கிற ஒரு கட்சியை பற்றி சொல்கிறீர்களா.. அல்லது சன் டீவி குழுமத்தையா..அல்லது குங்குமத்தையா.. இல்லை மாறன் குடும்பத்தையா??

    சன் டிவி குங்குமம் மற்றும் தினகரனை வாங்கியதை பற்றியா?

    எப்படி பார்த்தாலும், தி மு க , சன், குங்குமம், தினகரன் .. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடயவை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.. என்ன , தி மு க என்ற ஒரு மரத்தின் பல்வேறு விழுதுகள் தான் குங்குமம், சன், தினகரன், முரசொலி..

    எப்படி ஜெயா டிவியும், நமது எம் ஜி யாரும், மக்கள் குரலும் , தினபூமியும் அதிமுக எனும் ஆலமரத்தின் விழுதுகள் போலவோ அதே போலத்தான் இதுவும்..

    தனித்தனி விழுதுகளாக இருந்தது இன்று ஒன்றாகியுள்ளது.. என்ன வேறுபாடு என புரியவில்லை..

    தெரிந்தோ , தெரியாமலோ, பிடித்தோ , பிடிக்காமலோ சன் என்பது ஊடகங்களில் ஒரு பெரிய இடத்தை பிடித்துள்ளது.. அது நிலைத்தும் இருக்கலாம், விரைவில் சரிந்தும் போகலாம்..
    இன்றைய நிலையில் சன்னுடன் சேர்ந்ததால இந்த பத்திரிக்கைகள் அதிகம் விற்கலாம்.. என்ன கொடுக்கப்படும் இலவசங்களுக்காக, மற்றபடி இந்த இனைப்பினால் ஜனநாயகம் .. ஆபத்து என்பதெல்லாம் ஏற்கும்படி இல்லை ..

    காலச்சுவடின் கட்டுரை இந்த இனைப்பை பற்றிய அலசல் என்பதை விட, சன் டீவி, தி மு க மீதான அவர்கள் கருத்து என்றே தெரிகிறது... அது உன்மையாகவும் இருக்கலாம்.. அந்த கருத்தை
    சன் டீவியும் - தி மு கவும் என்ற தலைப்பிலேயே சொல்லலாம்.. "சன் குழுமம் - தினகரன், குங்குமம்' என்ற தலைப்பு தேவை இல்லை


    வீ எம்

    ReplyDelete
  11. //உன்மையான கருத்துக்கள்...
    ஆனால் ஒரு சின்ன தடுமாற்றம் தெரிகிறது.. எழுத்து நடையில் அல்ல.. கருத்தளவில்..
    நீங்கள் தி மு க என்கிற ஒரு கட்சியை பற்றி சொல்கிறீர்களா.. அல்லது சன் டீவி குழுமத்தையா..அல்லது குங்குமத்தையா.. இல்லை மாறன் குடும்பத்தையா//

    இதில் ஒன்றும் சந்தேகம் வரக்கூடாது. உங்கள் கேள்வியின் கடைசியிலிருந்து பதில் துவங்குகிறது.

    அரசியலில் கொஞ்சம் செல்வாக்கிருந்த மாறன் குடும்பம் சன் டிவியை ஆரம்பித்து பெரியதாக முன்னேறி, குங்குமத்தை வாங்கி, தினகரனை வாங்கி இப்போது தி.மு.க என்ற கோட்டைக்குள் விழுதை இறக்க ஆரம்பித்துவிட்டது. இதுவரை பிரச்ச்னை இல்லை.

    இனியும் அது அப்படியே வியாபாரத்தளமாகவும் கட்சியை ஒரு விழுதாகக்கொண்டுதாகவும் இருந்தால் சந்தோசம். ஆனால் அவற்றையும் வளைத்து இன்னும் அடுத்தடுத்த விஷயங்களில் தனது பொய்ப்பிரச்சாரங்களையும் பொருளீட்டுதலையும் மேற்கொண்டால் ஜனநாயகத்திற்கும் ஆபத்து வரலாம்.

    எம்.கே.

    ReplyDelete
  12. எம்.கே.,
    இது மக்களை முட்டாளாக சித்தரிக்கும் முயற்சி. மக்கள் என்ன கருத்த கேக்கணும், பார்க்கணும், இது ஜனநாயகத்திற்கு நல்லது, இது ஜனநாயகத்திற்கு ஆபத்து, இதெல்லாம் தனி நபர் தானா பாத்து தெரிஞ்சிப்பாங்க. இது சீனாவோ, கூபாவோ இல்ல.

    ReplyDelete
  13. MK, you have again forgot the fact that making amma happy means having a rain of money inside your home. The MP would make a hell lot of money by pleasing amma. But I should also say that making kalaigar happy would earn you a name "thambi"

    I posted this to say that you are not looking into the two sides of the coin the same manner.
    Cheers
    prince

    ReplyDelete
  14. அன்பு வீ.எம், பார்த்தா மற்றும் ப்ரின்ஸ்,

    தங்களது மறுமொழிக்கு நன்றி.

    பார்த்தா, எனது பதிவைப்படித்தோ காலச்சுவடைப் படித்தோ யாரும் முட்டாளாகப்போவதில்லை. அதற்கெல்லாம் அவசியமுமில்லாமல் அவர்கள் ஏற்கனவே குங்குமத்தை 'நம்பர் ஒன்' ஆக்கி தங்களது புத்திசாலித்தனத்தைக் காண்பித்துவிட்டார்கள்.

    சன் டிவியால் விரைவில் தினகரனும் இந்திய அளவில் விற்பனையில் முதலிடத்தைப் பிடிக்கும்போது உங்களுக்கு தனி மடல் அனுப்புகிறேன்.

    பிரின்ஸ், கலைஞர் என்னை தம்பி என்றழைப்பது இருக்கட்டும். கட்சியைக் காப்பாற்றிக்கொள்ளட்டும் முதலில் அவர்!
    தி.மு.க வின் கிளைகளில் ஒன்றாக இருந்த சன் டிவிகுழுமம போய் சன்டிவியின் அதிகாரமையங்களூல் ஒன்றாக தி.மு.க ஆகிவிடப்போகிறது பாவம்!

    எம்.கே

    ReplyDelete
  15. All I am saying is, both the parties have their own propaganda machinery. Being in singapore, we guys get only our daily dose of Sun TV and its pro DMK stand is truly annoying. But what about Jaya TV ? Is it presenting neutral view ? And why havent you mentioned that in your columns. What you and Kalachuvadu have given is simply the half truth. This, I believe Sir, is worse than a blatant lie.

    Prince

    ReplyDelete
  16. Again MK, I wonder if you have know how Dinamalar Varamalar was boasting it self of being the No. 1 weekly in TN. Though it was a free supplement to the sunday's paper, the guys shamelessly advertised that it was the No. 1 weekly. And have you read about the controversies of Hindustan times and TOI on readership in which both were quoting different sources to claim that they were the market leaders.

    My stand point is clear, all these people are selling lies. One has to be prudent in knowing what is true and what is not. But merely dumping all blame on SUN TV group and turning blind eye towards other similar mispresented truths is certainly not healthy for democracy.
    Prince

    ReplyDelete
  17. எம்.கே.குமார்,
    //ஆனால் சன் செய்திகள் உண்மையைப்போன்றே வடிவமைக்கப்படும் பொய்மைகள். இவை பிரித்தறியாத மக்களுக்கு பெரிய ஆபத்து.//
    ஏதோ உங்களைப்போல அறிவுஜீவிகள் மட்டுமே புரிந்தறிகிறீர்கள் என நினைகாதீர்கள் .மக்கள் நாம் நினைப்பதை விட தெளிவாகவே இருகிறார்கள் .அவர்களுக்கு சன் டிவி-ன் சார்பு நன்றாகவே தெரியும்.

    //ஆனால் நான் சொல்ல வந்த செய்தி, பெரிய வெற்றி பெற்றுவிட்ட ஒளி ஊடகம் அச்சு ஊடகத்திலும், அரசியல் ஊடகத்திலும் இணைந்து மொத்தமாய் தனது 'செய்தி'களைப்போல புறப்படுமாயின் அவ்வளவுதான்!//
    வெகு காலமாக அனைத்து ஊடகங்களிலும் ஒரே சமுதாயமே ஆதிக்கம் செலுத்தி மக்களை மழுங்கடிக்க முயற்சி செய்து ,அது வெற்றி பெறவில்லை .இப்போது மட்டும் நீங்கள் புலம்புவது வேடிக்கயாக இருக்கிறது .இப்பவாவது சன் குழுமம் வெளிப்படையாக சார்பு நிலை கொண்டிருக்கிறது ..நடுநிலை என்று சொல்லிக்கொண்டு மறைமுகமாக அடிவேலைகள் செய்வதை விட இது எவ்வளவோ மேல்.

    ReplyDelete
  18. அன்பின் பிரின்ஸ்,

    எல்லாக்கட்சிக்கும் அது சார்ந்த ஒரு பத்திரிகை இருக்கிறது என்பதை நான் மறுக்கவேயில்லை...இது 1.

    2.ஜெயா டிவியில் நடுநிலலமை தவறாமல் செய்திகளைத் தருகிறார்கள் என்றும் நான் சொல்லவில்லை.

    இவை இரண்டையும் கொண்டு நான் நடுநிலைமை தவறவில்லை என்பதை உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன். ஒரு நாணயத்தின் இருபக்கங்களையும் நான் பார்க்கிறேன்.

    3. ஜெயா டிவி பெரிய வெற்றியைப் பெறவில்லை, அது சாரும் கட்சி அச்சு ஊடகங்களும் பெரிய வெற்றி பெறவில்லை. அதனால் தற்போதைக்கு அதனால் எந்தப்பெரிய பாதிப்பும் இல்லை. அதனால் அது பற்றிய கமெண்டுகள் இங்கு அவசியமில்லை(என நினைக்கிறேன்!). இப்போதைக்கு அது எவ்வளவுதான் நடுநிலைமைகொண்டோ அல்லது நடுநிலைமை அற்றோ செய்திகளைப்படைத்து உயரப்பறந்தாலும் அது ஊர்க்குருவி மட்டுமே!

    4. //My stand point is clear, all these people are selling lies.// உண்மை! ஆனால் திண்ணைப்பொய்யர்களைவிட பெரிய தேர்தல்பொய்யர்களும்
    வெற்றிபெற்றுவிட்ட 'வியாபாரகாந்த' பொய்யர்களும் அதிகம் ஆபத்தானவர்கள்.

    தங்களது ஆரோக்கியமான விவாதம் பல செய்திகளை மீண்டும் அசைபோட உதவியது. இத்தகையவைகளுக்காக நன்றிகள் பல.

    எம்.கே.

    ReplyDelete
  19. அன்பின் ஜோ,

    //ஏதோ உங்களைப்போல அறிவுஜீவிகள் மட்டுமே புரிந்தறிகிறீர்கள் என நினைகாதீர்கள் .மக்கள் நாம் நினைப்பதை விட தெளிவாகவே இருகிறார்கள்.//

    என்னைப்போன்ற அறிவுஜீவியா? நீங்களும் கிண்டல் செய்யாதீர்கள். ஆறுகோடித்தமிழர்களில் நானும் ஒருவன். குங்குமத்தை இரண்டு வரி விளம்பரத்திற்காக வாங்கிவிட்டிருந்தேன் என்பதைச்சொன்னேனே, கவனிக்கவில்லையா?

    ஒரே விஷயம்தான்! எளிமையாக்ச்சொன்னால், 'நான்காம் எஸ்டேட்டுகள்' என அழைக்கப்படும் பத்திரிகைகளும் (அதாவது அச்சு ஊடகங்கள்) அதற்கு 'அடுத்த எஸ்டேட்டோ' இல்லை அதைவிட வலியதோ ஆன ஒளி & ஒலிபரப்பு ஊடகங்களோ அரசியலில் செல்வாக்கு பெற்றவர்களின் கையில் முழுமையாக இருப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து." இவ்வளவுதான் நான் சொல்ல வந்தது.

    இதற்கு தங்களது ஆட்சேபனையையோ கருத்துகளையோ நீங்கள் தயங்காமல் கூறலாம்.

    ஜெயா டிவி அல்லது அது சாரும் பத்திரிகைகள், பா.ம.க டிவி அது சாரும் பத்திரிகைகள், தலித் டிவி அல்லது அது சாரும் பத்திரிகள் இதெல்லாம் பெரிய வெற்றிபெறவில்லை, அதுவரை பாதிப்புகள் இல்லை.

    எனவே அதைப்பற்றிய எனது கமெண்டுகளும் இங்கு இல்லை. ஜெயா டிவி விகடனைவாங்கினால், எனது பதிவி எப்படி இருக்கும் என்பதையும் நான் இங்கு சொல்லிவிட்டேன், எனவே மறுபடியும் எனது நடுநிலையில் தவறு என்று சொல்லாதீர்கள்.

    தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.

    எம்.கே.குமார்.

    ReplyDelete
  20. நன்றி எம்கே. பழுத்த மரம் கல்லடிபடும். அவ்வளவே. தினமலரை பற்றிய எனது செய்திக்கு நீங்கள் பதில் சொல்லவேயில்லையே? தினமலர் இன்றும் கூட ஜெ சொல்லாததை சொன்னதாக இட்ட பொய்யை கண்டீர்களா ?

    ப்ரின்ஸ்

    ReplyDelete
  21. நன்றி பிரின்ஸ்.

    தினமலர் பற்றிய செய்தியா? அட விடுங்கள், இல்லாததை இருப்பதாகச் சொல்லி பத்துச்சேனல்களையும் (இன்னும் வாங்கப்போகிற) பத்து அச்சு இதழ்களையும் வாங்கி முன்னேறியவர்களை விட இது பெரிய பாவமா என்ன? :-)

    குங்குமம், விகடன், தினத்தந்தி, டைம்ஸ் ஆகியவை போல ஏதாவது ஒன்றில் 'நாங்களும் முதலில் இருக்கிறோம்' என்று அவர்களுக்கும் சொல்லிக்கொள்ள ஆசையிருக்காதா என்ன? விட்டுவிடுங்கள் பாவம்!

    எம்.கே.

    ReplyDelete
  22. அன்பின் சத்யம்,

    உங்களுடைய ஒரு வரியை நான் மிகவும் உண்மையென ஒப்புக்கொள்கிறேன். அது இதுதான்.

    //கலா நிதி மாறன் தன்னை சுற்றியுள்ள வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்தி தீர்க்க தரிசனத்தோடு முன்னேறி செல்லும் ஒரு வியாபாரி//

    100% உண்மை! மிகச்சிறந்த வியாபாரி! ஆனால் அவருடைய தமையனார் தி.மு.க வில் முக்கிய புள்ளியாகவும், டெல்லி தி.மு.கவில் அடுத்த தலைவராக விளக்கங்கூடிய அளவுக்கு செல்வாக்கோடும் வளைய வருவதுதான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்.

    வெறும் புரோ திமுகவாக மட்டுமே அது இருந்துவிட்டால், தயாநிதியும் அரசியலில் இருந்து விலகி சாதாரன் வியாபாரியாகிவிட்டால் அம்பானி குடும்பத்தைப்போல அவர்களையும் விட்டுவிடலாம்.ஆனால் இங்கு அப்படியா நடக்கிறது? இல்லை நடக்குமா?

    தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

    எம்.கே.குமார்.

    ReplyDelete
  23. You have uttered exactly the same reply that I expected MK. FYI, turning blind eye to one of popular daily is certainly a demcratic blunder.

    Prince

    ReplyDelete
  24. அன்பின் பிரின்ஸ்,

    தினமலர் விஷயத்தில் நான் கண்ணை மூடிக்கொள்ளவில்லை. (சன் டிவி செய்யும் வேலைகளை தினமலருடன் ஒப்பிட்டிப்பார்த்து நகைக்காக சொன்னேன்!)

    மட்டமான ரசனைகள் மூலமோ அல்லது மூன்றாந்தர செயல்பாடுகள் மூலமாகவோ மக்களை திசை திருப்புவது கேவலமானது. அதை தினமலர் மட்டுமில்லை; யார் செய்தாலும் அதுவும் அதற்குரியதுதான்.

    இதுவும், பத்திரிகைகளை போற்றிக்கொண்டாடும் ஜனநாயகத்திற்கு அருவருப்பு ஊட்டக்கூடியதுதான்.

    எம்.கே.குமார்.

    ReplyDelete
  25. குமார்,
    கிண்டல் செய்யவில்லை.வருத்தம் வேண்டாம்..உங்களோடு மற்ற பல விடயங்களில் ஒத்த கருத்துக்கள் கொண்டிருகிக்கிறேன்..ஆனால் படித்தவர்கள் தான் அரசியல் நிலைப்பாடுகளில் தெளிவாக இருக்கிறார்கள் என்று நானும் ஒரு காலத்தில் நினைத்தேன் ..ஆனால் இன்றைய படித்த தலைமுறை எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது என்று சொல்லி அதை பெரிய புத்திசாலித்தனமாக பறைசாற்றும் கூட்டம் .அரசியல் அறிவு கட்சி சார்பு நிலைகளுக்கப்பால் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அடிப்படை என்பதே தெரியாமல் ,அரசியல் என்றாலே அரசியல் கட்சி சார்நிலை என்று எண்ணும் அளவுக்குத்தான் இப்போதுள்ள படித்த தலைமுறை இருக்கிறது ..பஸ் சரியில்லை ,ரோடு சரியில்லை ,சிக்னல் சரியில்லை ..லொட்டு லொசுக்கு என்று ஆயிரம் நொள்ளை சொல்லித்திரியும் கூட்டம் தேர்தல் அன்று விடுமுறை மட்டும் அனுபவித்து விட்டு நம்ம அந்தஸ்துக்கு வரிசையில் காத்து நின்று ஓட்டுபோடுவதாவது என்று இருந்து விட்டு "யாரு வந்தா எனக்கென்ன ..I don't like this nonsense" என்று தத்துவம் வேறு பேசுகிறது ..அரசாங்கத்தின் கொள்கைகள் நேரடியாக பாதிக்கும் கீழ்தட்டு மக்களே பொறுப்புணர்வோடு ஓட்டு போட செல்கின்றனர் ..பாமரன் தான் இன்றைக்கு நல்ல அரசியலின் தேவையையும் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறான் .படித்தவனை விட ,மேல்தட்டு வர்க்கத்தை விட அவன் அரசியல் தெளிவு அதிகமாகவே கொண்டிருக்கிறான் .இது தான் நான் சொல்ல வந்தது.

    ReplyDelete
  26. படித்தவர்கள் ஓட்டுப்போட வருவதில்லை என்ற ஆதங்கமா?

    இப்போது புரிகிறது உங்களது எண்ணம்.

    விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி ஜோ.

    எம்.கே.

    ReplyDelete