வாருங்கள், வணக்கம்! குருபகவான் நல்லது செய்ய ஆரம்பித்துவிட்டான். இந்தக் குருப்பெயர்ச்சியானது சகல செல்வங்களையும் உங்களுக்கு கொண்டு வரப்போகிறது. அதன் முதற்படியாகத்தான் இதோ இந்தக்கட்டுரையைப் படிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். இதுதான் ஆரம்பம். இன்று மிக நல்ல நாள், மிகவும் அதிர்ஷ்டமான நேரம் இது! சொல்லப்போகும் செய்தி அப்படிப்பட்டது. முதலில் மூச்சை இழுத்துவிட்டுக்கொள்ளுங்கள். மேலே போகலாமா?
சொல்லப்போகும் அனைத்தும் என் நண்பரொருவர் எனக்குச்சொன்னது. அந்த அதிர்ஷ்டக்காரக் குபேரர்களில் நானும் ஒருவனாகப்போகிறேன். என் நண்பரைப் போல நானும், ஏன் நீங்களும் விரைவில் அப்படி ஆகலாம். அதற்குத்தானே ஆசைப்படுகிறோம் நண்பர்களே! வாருங்கள், அந்த அலுவலமும் விரைவில் ஆளெடுக்கப்போகும் செய்தி மெதுவாக கசிந்துகொண்டிருக்கிறது, தயாராகுங்கள்.
முதலிலேயே சொல்லிவிடுகிறேன், உங்களுக்கு அரசாங்கத்தில் வேலை! என்ன வேலை என்பதையெல்லாம் இப்போது கேட்காதீர்கள். இருக்கட்டும் அது. எந்தவித ஸ்டிரைக்கும் எதிர்காலத்தில் செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்து வசதிகளையும் அள்ளித்தரப்போகும் அட்சயபாத்திர அலுவலகத்தில் என்ன வேலையாய் இருந்தால் என்ன? வேலை செய்யும்படியாகவா வேலை இருக்கப்போகிறது அதுவும் அரசாங்க அலுவலகத்தில்! அப்படியே இருந்தாலும் நமக்கென்ன பைத்தியமா வேலை செய்வதற்கு? அதுவும் அரசாங்க அலுவலகத்தில்?!
இந்தியாவின் தலைநகரில்தான் இருக்கிறது அந்த அலுவலகம். பயப்படாதீர்கள், எந்தவித அரசியல்வாதிகளின் குறுக்கீடும் இல்லாமல் ஆண்டவன் புண்ணியத்தில் வேலை நல்லபடியாய் நடக்கும். பயத்தையெல்லாம் விடுத்து கொஞ்சம் கவனமாய்ப்படியுங்கள். நத்தையின் வயிற்றிலும் முத்து பிறக்கும், டெல்லியிலும் நமக்கு நல்லது நடக்கும். தயாராகிவிட்டீர்களா? ம்ம். நல்லது.
முப்பது நாள் கொண்ட மாதத்தில் முப்பது நாட்களும் மக்களுக்காக உழைக்கப்போகிறோம் இல்லையா? எனவே முதலில் சம்பளத்திலிருந்து ஆரம்பிப்போம். ஒரு மாதச்சம்பளம், இந்திய ரூபாயில் பன்னிரெண்டாயிரம் மட்டும். சம்பளம் போக அவ்வப்போது நடைபெறும் அலுவலக கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நாளுக்கு ஐந்நூறு ரூபாய் உங்களுக்கு. போதுமா.? திடீரென்று வந்து கலந்துகொண்டுவிட்டுப் போய் விட்டால் பிறகு கூட்டத்து விஷயங்களில் பாலோ அப் இல்லாமல் போய் விடுமல்லவா? அதற்காகத்தான் அடுத்த வரும் சட்டம். குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது கலந்துகொள்ள வேண்டும். வேறென்ன வேலை? போய் அமர்ந்து சிறிது நேரத்தில் கூச்சல் ஆரம்பித்த பிறகு எழுந்து வருவதுதானே! ஐந்நூறு ஓகேதான். விடுங்கள்.
இப்படியே போனால் நல்ல சம்பளத்தில் அமைதியாக திளைத்து உட்கார்ந்து விடுவீர்கள்! சொந்தக்காரர்களையும் மிச்ச மீதி இருக்கும் ஊரையும் கவனிக்கவேண்டுமல்லவா? அதற்குத்தான் மாதாமாதம் 'மேம்பாட்டு படி'யாய் பத்தாயிரம் ரூபாய். இந்தத்தொகை நீங்கள் பதவியில் இருக்கும் முழுக்காலத்திற்கும் மாதாமாதம் வழங்கப்படும். கவலை இல்லைதானே! எல்லா ஊரையும் இதை வைத்து வளைத்து விடலாமே! அவகாசமும் இருக்கிறது.!
இதுபோக, வேலைக்குச்சேர்ந்த உங்களில் சிலர் படிக்காமல் இருக்கலாம், பேனா வைத்திருப்பீர்கள் அல்லவா? அது போதும்! அதற்குப் பணம் தருகிறார்கள். மாதம் மூவாயிரம் ரூபாய். இதுபோகவும் கடித செலவுகளுக்கென்று மாதம் ஆயிரம் ரூபாய். சந்தோசம்தானே! எல்லாம் இருந்தாலும் இவற்றைக் கவனிக்க ஒரு உதவியாளர் இருந்தால் நன்றாய் இருக்குமே என்று நினைப்பவரா நீங்கள்? சோகம் வேண்டாம்! அவரை நிர்ணயம் செய்வதற்கு ஆகும் செலவும் சம்பளமும் அரசாங்கமே கொடுக்கிறது. மாதம் பத்தாயிரம் ரூபாய். நாமே கூட அதில் பாதியைச் சுருட்டிக்கொள்ளலாம். எப்படி வசதி?
மொத்தமய் இதுவரை மாதம் எவ்வளவு தேறும் என்பதை நீங்களே கணக்கில் வைத்துக்கொண்டிருப்பீர்கள். அடுத்து பயணப்படி பக்கம் வருவோம்.
தனது சொந்த ஊரின் வீட்டிலிருந்து டெல்லியில் அலுவலகம் வரை செல்வதற்கும் அல்லது தன் வீட்டிலிருந்து அலுவலகக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நீங்கள் செல்லும் பயணத்திற்கு, பயணம் செய்யும் வழிகளைக் கணக்கில் கொண்டு பயணக்கட்டணம் தரப்படும்.ரயில் வழியாக நீங்கள் பயணித்திருந்தால் 'குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு' கட்டணம் ஒன்றும் 'ஒரு இரண்டாம் வகுப்பு' கட்டணமும் (எதற்கு இது என்றெல்லாம் கேட்காதீர்கள்; கொடுக்கிறார்கள் வாங்கிக்கொள்ளுங்கள்) கொடுக்கப்படும். இதற்கு எந்த வகுப்பில் பயணம் செய்தோம் என்பதெல்லாம் அவசியமில்லை. அப்படிப்போடு என்பீர்களே! அதேதான். அவசரப்படாதீர்கள்.
எத்தனை நாளைக்குத்தான் ரயிலிலேயே பயணிக்க முடியும்? நியாயம்தானே! அலுவலக வேலையில் கலந்துகொள்ள வான் வழியாகப் பயணிக்கப்போறீர்களா?
விமானக்கட்டணத்தின் 'ஒண்ணேகால் பகுதி' கட்டணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படும். இதுபோக கடல்வழியாகப் பயணிப்பவர்களும் இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்கு கட்டணத்தின் முழுப்பகுதியும் அதுபோக ஐந்தில் மூன்று பங்கு சேர்த்தும் வழங்கப்படும்.சாலை வழியே பயணிக்கும் எளிமையான மனிதரா நீங்கள்? உங்களுக்கு 'கிலோமீட்டருக்கு ஆறு ரூபாய்' கணக்கில் மொத்தமாக கணக்கிட்டுக் கொடுக்கப்படும். அதற்காக மீட்டரை நான்கு நான்காய் ஓட வைத்தெல்லாம் ஏமாற்றமுடியாது சார். இந்தியாவுக்குள் எல்லா இடத்துக்கும் எங்கிருந்து எங்கு எவ்வளவு தூரம் என்பது எல்லோருக்கும் தெரியும்.இருக்கட்டும்.
டெல்லி விமான நிலையம் வரை வந்து இறங்கியாகி விட்டது, அங்கிருந்து அலுவலகம் வருவதற்கு? அல்லது அலுவலகத்திலிருந்து ஏரோடிராம் போவதற்கு யார் கொடுப்பார்களாம்? அதற்குத்தான் ஒரு சவாரிக்கு 120 ரூபாய். புரிந்ததா? இப்போது எல்லாம் ஓகேதானே!
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இந்தியாவின் எந்த மூலைக்கும் நீங்கள் அலுவலக நிமித்தம் சென்று வரலாம். ஒரு முதல் வகுப்பு ரயில் பயணக்கட்டணம் அல்லது ஒரு முழு விமானக்கட்டணம் உங்களுக்குத் திருப்பித்தரப்படும். இது என்ன கொசுறு!? இருக்கிறது இன்னொரு பெரிய நலத்திட்டம் பாருங்கள்! ஆஹா!
இந்தியாவின் எந்த மூலையிலிருந்து எந்த மூலைக்கும் வருடத்திற்கு 32 முறை நீங்கள் இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம். அதிக வேளைப்பளு காரணமாக உங்களால் இவ்வசதியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் கவலையே படாதீர்கள். அந்த 32 ஐ அடுத்த வருடங்களுக்கும் கொண்டு செல்லலாம். பாதுகாப்பு மற்றும் இயற்கை காரணிகளால் சொந்த இல்லத்திற்கு திரும்ப முடியாவிட்டால் உங்களது ஊருக்கு வான் வழியாக பயணித்தால் எது நெருங்கிய இடமோ அதுவரை விமானக் கட்டணம் இலவசம்.
இதற்கு மேல் என்ன வேண்டும்?
கண்பார்வையற்ற அல்லது உடல் ஊனமுற்றவரா நீங்கள்? உங்களோடு இன்னொருவரையும் துணைக்கு அழைத்துச்செல்லலாம் அலுவலகத்திற்கு. இருவருக்கும் விமானக்கட்டணம் இலவசம்; ரயில் கட்டணமும் இலவசம். (இதற்காக சும்மாவாச்சும் அரவிந்த் ஆஸ்பத்திரில் ஆபரேஷன் செய்துகொள்ளக்கூடாது!)
சரி டெல்லிக்குப் பயணித்து விட்டீர்கள். சில பல காரணங்களால் நடந்துகொண்டிருந்த ஒரு முக்கிய கூட்டம் பாதியில் முடிகிறது அல்லது ஒரு கூட்டம் முடிந்து அடுத்த கூட்டம் ஆரம்பிக்க சிறிது நாளாகிறது. இப்போது என்ன செய்வது? ஒன்றும் பிரச்சனை இல்லை.இரு கூட்டத்தொடர்களுக்கும் இடையே ஏழு நாட்களுக்குள் இருந்தால் அந்த ஏழுநாட்களுக்கும் தினத்துக்கு ஐந்நூறு ரூபாய் கொடுக்கப்படும். அல்லது அந்த ஏழு நாட்களுக்குள் எங்காவது நீங்கள் குட்டி டிரிப் அடித்துவிட்டு வந்தால் கூட அந்த விமானக்கட்டணமும் இலவசம். இது எப்படி இருக்கு?
சரி, உள்நாடு வேண்டாம். வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசை வந்துவிட்டதா? செல்லுங்கள். தனது கடமையைச்செவ்வனே செய்வதற்காக நீ£ங்கள் செய்யும் வெளிநாட்டுப்பயணச்செலவு அனைத்துக்கும் அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளும். ஜஸ்ட் எஞ்சாய் மேன்!
விமானத்துறை இருக்கட்டும். இந்த ரயில்வே நிர்வாகத்திற்குத்தான் நம்மீது என்னே கருணை பாருங்கள்! ஒரு அலுவலர், இந்தியாவின் எந்த மூலைக்கும் எந்த ரயிலிலும் 'குளிரூட்டிய முதல் வகுப்பு' மற்றும் 'எக்ஸிக்யூட்டிவ் வகுப்பு'களில் தனக்கு 'இன்னொரு துணை'யுடன் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாமாம். ரயில்வே நிர்வாகம் அந்த 'பாஸ்' வழங்குகிறது. போதுமாசார்? 'எத்தனை வீடு' இருந்தாலும் கவலை இல்லைதானே!அதுமட்டுமா?
உங்களது மனைவி அல்லது உறவினர் ஒருவர், வருடத்திற்கு 8 முறை இதே போன்றதொரு 'குளிரூட்டிய முதல்வகுப்பில்' தனது சொந்த ஊரிலிருந்து டெல்லிக்குப் பயணிக்கலாம். இந்த சலுகை விமானத்திலும் தொடரும். (பாருங்கள் சார், நெல்லுக்கு இறைத்த நீர்..மாமனார் மாமியாருக்கும் பரவுகிறது...ம்ம்)
ஊர் சுற்றியது போதுமா? அங்குமிங்கும் அலைந்ததில் காய்ச்சல், தண்ணீர்ப்பிரச்சனையால் சளிப்பிரச்சனை, அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு; நோயா? கவலை இல்லை. வாருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எவ்வளவு செலவாகியது மருத்துவத்தில்? கைமேல் காசு! திருப்பித்தருகிறது அரசாங்கம்.
வேலைக்குச்சேர்ந்த நாளிலிருந்து ஒரு சில நாட்கள்வரை உங்களுக்கு நல்ல இருப்பிடம் இல்லையா? இலவசமாகத் தருகிறது அரசாங்கம்.
டெல்லியின் எந்தத் தெருவில் வேண்டும் உங்களுக்கு? அதற்குப்பிறகு டெல்லியில் இருக்கும் 84 பங்களாக்கள், 143 அடுக்குமாடி வீடுகள் மற்றும் ஹாஸ்டல்- ஹோட்டல்களில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் தங்கலாம்.வீடு மட்டும் தந்தால் போதுமா? பொறுங்கள், கோபப்படாதீர்கள்! எல்லாவற்றிற்கும் வசதி செய்து தரமாட்டோமா?
வருடத்திற்கு 25000 யூனிட் மின்சாரம் இலவசம், அனுபவியுங்கள். ஏசியை அரவணைத்துத் தூங்குங்கள். தண்ணீர்..அது வேண்டாமா? எவனாவது எங்காவது தண்ணீர் இல்லாமல் நாக்கு வரண்டு இறந்தால்...நமக்கென்ன? 2000 கிலோலிட்டர் வருடத்திற்கு. அள்ளிக்குளியுங்கள். ஆடுங்கள். பாடுங்கள். ஆனந்தமாயிருங்கள்.
உங்களது பெயர் மஸ்டர் ரோலில் சேர்ந்துவிட்டதா? போதும்! பிடியுங்கள், இரண்டு தொலைபேசி இலவசம் உங்களுக்கு, உங்களது பெயரில். வருடத்திற்கு ஒரு லட்சம் அழைப்புகள் இலவசம். யப்..ப்..ப்..பா!போதவில்லையா?
இண்டர்நெட் இருந்தால் வசதிப்படும் என நினைக்கிறீர்களா? இதோ..இலவச கம்ப்யூட்டர். இணைய வசதியோடு. போதுமல்லவா? பல நாடுகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம், அடிப்படை வசதிகளைப் பெருக்கலாம். அன்னிய முதலீடுகளையும் அன்னியச்செலாவணியையும் பெருக்கலாம். எப்படி வசதி? என்ன சொல்கிறீர்கள்?
கன்வேயன்ஸ் அல்லவன்ஸ் வேண்டுமா? ஒரு லட்சம் போதுமா? ஆனால் இது திருப்பிப் பிடித்துக்கொள்ளப்படும். பரவாயில்லையா?'
சரி, இப்போது எல்லாம் செய்வார்கள். ரிடயர்டு ஆனால்? எப்படி? என்ன செய்து தரும் இந்த அரசாங்கக் கம்பெனி?'
என்ன சகோதரரே, இவ்வளவு செய்து கொடுக்கும் செல்வச்சீமான்கள் அதற்கும் ஒரு நல்வழி காட்ட மாட்டார்களா?மனசாட்சி இல்லையா அவர்களுக்கு?
கேளுங்கள்!நான்கு வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தால் போதும். உங்களுக்கு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் கடைசிக் காலம் வரை. அதற்கு மேல் நீங்கள் ஆண்டு அனுபவித்த ஒவ்வொரு வருடத்திற்கும் 600 ரூபாய் சேரும்.
இல்லை குறைந்தது 'இரு' ஐந்து வருடங்கள் அலுவலக வேலை பார்த்தீர்களா? அடித்தது லக்கிப்பிரைஸ். பத்தாயிரத்து ஐந்நூறு ரூபாய் மாதம். போதுமா பென்ஷன்?! இருங்கள், தலை சுற்றிக் கீழே விழுந்து விடாதீர்கள். எடுத்தவுடன் 'ரிடயர்டு' ஆக்க முடியாது உங்களை. தயவுசெய்து யாரும் அடம் பிடிக்காதீர்கள்.
சரி, வேலைக்காலத்திலே அகாலமாய் ஏதாவது ஆகி இறந்துவிட்டோம் எனில்..? கவலையே இல்லை. நமது மனைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு. போதாதா?பெருமூச்சு விட்டு முடிந்தாகிவிட்டதா?
ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்.
இனி உங்களுக்குத்தான் அத்தனையும். எப்போது இவையெல்லாம் கிடைக்கும் என்கிறீர்களா? அவசரப்படாதீர்கள்! எல்லாவற்றிற்கும் காலம் வரவேண்டாமா? மாயாவதிகளுக்கும் லல்லுகளுக்கும் முலாயம்களுக்கும் மற்றும் இன்னபிற தேசத்தலைவர்களுக்கும் "மூடு" வரவேண்டாமா? உடனேயா கவிழ்க்க முடியும்.?
அடுத்த எம்.பி நீங்களாய் இருக்க எல்லாம் வல்ல அரசியல் கடவுளைப் பிராத்தியுங்கள். குருபகவான் உங்களைக் கைவிடமாட்டார்.
வாழ்க ஜனநாயகம்! வளர்க லோக்சபா ராஜ்யசபா உறுப்பினர்கள்!
எம்.கே.குமார்.
மறுபதிப்பு.
எழுதத்தூண்டிய மதுமிதாவுக்கு நன்றி.
(http://madhumithaa.blogspot.com/2005/09/blog-post_08.html)
kumar,
ReplyDeleteare you talking about 'utopia' 'eldaroda'
or historical golden age when there was a river flowing with milk and honey.(paalum thenum araay oodiyathu)then what else is going to happen? will i get job?
chitra
பின்னூட்டமிட்ட டி ராஜ் மற்றும் சித்ரா ஆகியோருக்கு நன்றி.
ReplyDeleteஆச்சர்யமாக இருக்கிறது
ReplyDeleteஇரண்டு வருடங்கள் ஆகின்றன இந்த பதிவிட்டு
கூகிள் சர்ச்சில் மதுமிதா போட்டுப் பார்க்கையில் எழுதத்தூண்டிய மதுமிதாவுக்கு நன்றி பார்த்து இந்த பதிவுக்கு வந்தேன்
நன்றி எம்.கே.குமார்