Friday, October 14, 2005

எனது தாடி நண்பர்!

எனக்கும் அவருக்கும் ரொம்ப வயசு வித்தியாசம். தாடியத்தடவிக்கிட்டே அவரு பேசுறதக் கேக்குறதுன்னா எனக்கு அப்படி ஒரு சந்தோசம்.

ஆனா இன்னக்கி அப்படி ஒரு சந்தோசமே என்கிட்டே இல்லை. மனசு கஷ்டமாகத்தான் இருந்தது. தாடியாரும் வந்தார்.

என்னவே...என்ன பண்ணுதெ?

வருத்தத்தைக்கலைத்துக்கொண்டு அவர் பக்கம் திரும்பி ஒண்ணுமில்லெ, சும்மா உக்காந்திருக்கேன்னேன்.

இல்லையே..மக்கா மொகத்துலெ என்னமோ தெரியுதே. என்னலே பிரச்சனையின்னார்.

இல்லே..ஒரு தப்பு பண்ணிட்டேன். வருத்தமா இருக்குன்னேன்.

தப்பு பண்னிட்டேலெ. விட்டுடு. வருத்தமும் படுறேலெ..அது போதும். ஆனா என்ன காரணமுன்னு மட்டும் நெனச்சி பொழச்சிக்கோன்னார்.

காரணத்தை அவரிடம் சொன்னேன். காலதாமதத்தால் வந்த வெனையின்னேன்.

வழக்கம்போல ஆரம்பிச்சார்.ஏலே..காலம் ரொம்ப முக்கியமானதுலெ. நா இருப்பேன். போயிருவேன். நீ இருப்பே போயிருவே. காலம் இருக்குமுடோய். நேத்தக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது? நாளக்கின்னு சொல்லுறோமே என்னலெ அது. வயசாருச்சின்னு சொல்லுறோமே என்னலெ அது? எளமையின்னு சொல்லுறோமே என்னலெ அது? எல்லாமே காலமிலெ. காலந்தான் முக்கியம்ன்னார்.

மேலே தொடர்ந்தவர், கொக்கெ பாத்திருக்கியாலே? ஆத்தோரத்திலெ அதுபாட்டுக்கு நின்னுக்கிட்டே இருக்கும். பாக்க ஒனக்கு அப்படித்தான் இருக்கும். ஆனா பட்டென்னு கொத்துமுல்லெ, மீனைக் கண்டவோடனே.

காக்கையப்பாத்திருக்கியாலெ, பகல்லே..கோட்டானை வெரட்டி வெரட்டிக்கொத்தும். ஆனா ராத்திரின்னு ஒன்னு வரும் பாத்தியா. அதுக்காகத்தான் காத்திருக்கும் கோட்டான். ராத்திர்லெ வெச்சித்திருப்பிக்கொடுக்கும். காலத்தை நோக்கிக்காத்திருக்கணுமில்லெ. கரெக்டா கொத்திடனும். விட்டுப்போச்சின்னோ வரவேயில்லையினோ வருத்தப்படக்கூடாது.

இப்பொ பேசி என்ன பண்ண? எல்லாந்தான் முடிஞ்சிப்போச்சேன்னேன். எடமறிச்சிப்பேசினாரு.

ஏலெ, செல நேரத்துலெ முட்டாப்பயலுக செயிச்சுருவானுக. அதெல்லாம் எப்புடின்னு நெனக்கிறெ? காலம் பாத்து குத்துன கத்திலெ. வேலைய நேரத்தோடு கட்டிப்போட்ட கயிறுலெ. அதுலதான் ஜெயிச்சானுக. ஏன்லெ கலங்குறெ? ஏன் கலங்குறெ? வந்தது போகும்லெ. போனது வரும்லெ. முடியாததுன்னு ஒன்னு இல்லவே இல்லைலெ. ஒலகம் உன் கைக்கி வரணுமாலெ? எல்லாத்தையும் எடுத்துக்குட்டு ரெடியா இருலெ. வரும்போது அடிலெ. நீ ஜெயிப்பே.

செலபேரப்பாரு. அமைதியா இருப்பானுவ. என்னதான் தேருன்னாலும் பாருன்னாலும் மொகத்தத்திருப்ப மாட்டானுவெ. என்னன்னு நெனக்கிறெ? நேரம் வரும்போது பாருலெ. மொத்த ஆம்பளத்தனத்தையும் காட்டுவானுவ. ஜெயிப்பானுவ. அது அடக்கமுல்லலெ. எதிர்பாத்துக்காத்திருக்கது. குறிவெச்சி அடிக்கிறது. ஒன்னை விட பலமான ஒருத்தன் உன்ன அடிக்க வாரானா, அடிவாங்கிட்டுப்போலெ. ஆனால் மறந்துறாதெலெ. நேரம் வரும்போது திருப்பி அடிலெ. புழுங்கணுமுல்லெ. ஜெயிக்கிறவரைக்கும் அடங்கி இருக்கனுமுல்லெ. ஆனா அந்தக்காலம் வந்து உன் கையிலெ நிக்குது பாரு., அப்போ மட்டும் விட்டுறாதெலெ. தொவச்சிரு. காலத்தே ஜெயிச்சுருலே..
..ன்னு என்னன்னமோ சொல்லிட்டுப்போனாரு மனுசர்.

நா வானத்தையே பாத்துக்குட்டு இருந்தேன்.

"The whole world is his who chooses the right time and right place."

கலைஞரைக் கேக்கணுமுன்னா இங்கே போங்க! http://www.thedmk.org/thirukural/49.htm

எம்.கே.குமார்.

மறுபதிப்பு.

நோய்க்கூறு சிந்தனை = எஸ்.ஜே.சூர்யாஹ்?

இந்தமாத காலச்சுவடின் சினிமா பகுதியில், திரு. அ.ராமசாமி எழுதியிருக்கும் இக்கட்டுரை எஸ்.ஜே.சூர்யாஹ்வையும் அவரது சினிமா மற்றும் தமிழக ரசிகர்களின் நாடிபிடிப்புப்புலமையையும் வெளிச்சமிட்டுக் காட்ட முயல்கிறது.

முதலில் அக்கட்டுரையிலிருந்து சில வரிகள்:

ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையறையில் மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகளை சுவரொட்டிகளாக்குவதன் மூலம் தனது படம் படுக்கை அறைக் காட்சிகள் நிரம்பிய படம் எனச்சொல்ல விரும்புகிறார் சூர்யா. எப்படிப்பட்ட படுக்கையறைக்காட்சிகள் என்பதை மேலும் விளக்க அவர் பயன்படுத்தும் உத்திதான் B.F அதாவது அ.ஆ.

அந்தப்படத்தின் சுவரொட்டியை மிக அருகில் சென்று வாசித்தால் மட்டுமே 'அன்பே ஆருயிரே' என்பதும் 'Best Friend' என்பதும் உங்களது கண்களுக்குப்புலப்படும். அப்படிச் சுவரொட்டியின் மிக அருகில் சென்று பார்க்கும்போது மிகக் கவனமாகச்செல்லவேண்டும். உங்களூக்குத்தெரிந்தவர்கள் யாராவது பார்த்தால் சுவரொட்டியில் ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் மோகநிலைக்காட்சியை அருகில் பார்க்கச்செல்கிறீர்கள் எனக் கருத இடமுண்டு. மேலும் அதன் மூலம் நீங்கள் ஒரு நீலப்பட விரும்பி என நினைத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு. உங்களூக்கு உங்கள் ஆளுமை மீது கவலையில்லை என்றால் அச்சுவரொட்டிகளையும் எஸ்.ஜே.சூர்யாவின் படங்களையும் பார்க்கலாம்.

இதற்கு முன்பு வந்த அவரது வாலி, குஷி, நியூ என எல்லாப்படங்களுமே எஸ்.ஜே.சூர்யாவின் இரட்டை அர்த்த மோக வசனங்களைக் கொண்டதாகவே இருக்கின்றன என்பதைத் தனியாகச்சொல்லவேண்டியதில்லை.

'வாளிப்பான உடல்களைக் காட்டுவதும் அவற்றில் பொதிந்துள்ள ரகசியங்களைத் தேட எதிர்ப்பாலினர் முயல்வதைச் சொல்லாடலாக மாற்துவதும் மட்டுமே பார்வையாளர்களுக்குப் போதுமானது' என்பதுதான் இயக்குனர் சூர்யாவிற்கு வந்துள்ள நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் பேரிலேயே தனது மூன்றாவது நான்காவது படங்களில் தானே நாயக நடிகராகவும் ஆகியுள்ளார்.

தனது முதல் படமான வாலியில் ஒரு இயக்குனராய் வசனம், பாடல் காட்சியமைப்புகளின் ஒழுங்கு மற்றும் காமிராகோணங்கள் ஆகியவற்றை ஓரளவு சரியாகச்செய்த சூர்யா தனது நான்காவது படத்தில் இவற்றையெல்லாம் தவறவிடுகிறார் என்றால் பார்வையாளர்களுக்குத் தேவை எதிர் பால் உடல்களின் நெருக்கமும் அவைகளைப் பற்றிய பேச்சும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் என்றுதானே அர்த்தம். இந்த முடிவு, குடிப்பவர்களூக்குத் தேவை போதை மட்டுமே என நினைத்துச்செயல்படும் கள்ளச்சாராய வியாபாரிகளின் நோக்கம் போன்றதுதான்.

சூர்யாவின் நான்கு திரைப்படங்களூம் ஒரே சட்டகத்தின் மேல் உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதைகள் தான்.

உடல்பற்றிய ரகசியங்களை முன்வைக்கும்பொழுது பார்வையாளர்களின் மனமோ உடலோ வேறு எதையும் எதிர்பார்க்காது என்றும்கூட அவர் நம்புகிறார். வழக்கமாகத் தமிழ் சினிமாக்கள் நம்பிக்கை வைக்கும் காமெடிக்காட்சிகள், சண்டைக்காட்சிகளில் சூர்யா அதிகம் நம்பிக்கை வைத்திருப்பதாகத்தெரியவில்லை. படத்தின் நாயகி புதுமுகமானாலும் பரவாயில்லை; இளமையும் வாளிப்பும் கொண்ட உடலும் அதை வெளிப்படுத்தத் தயங்காத மனமும் கொண்டவராக இருந்தால் மட்டுமே போதும் என்பதும் அவரது நம்பிக்கையாக இருக்கிறது. உடல் - அதிலும் பெண்ணுடல் பற்றிய பரவசம், அதுதான் அவரது ஒரே ஆதாயம்.

கலைகளின் பெயரால் சில உடல்கள் விற்கப்படுவதும் அதனைக் காசுகொடுத்துப் பார்ப்பதன் மூலம் நுகரும் சில பார்வையான உடல்களும் மனங்களூம் நோய்க்கூறுகளுக்குள் நுழைய நேரிடும் என்றால் கூடுதல் கவனம் செலுத்தத்தானே வேண்டும்.
*******
அண்மையில் அ.ஆ படத்தை நானும் பார்த்தேன். படத்தைப் பற்றி விமர்சனம் எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.


தமிழ் சினிமாக்களில் ஒரு பாடல்காட்சிக்கு மட்டும், அதிலும் ஹீரோவை/வில்லனை மயக்கவோ அல்லது வில்லன்கள் கூடும் இடத்தை ஹீரோ கண்காணிக்கும்பொழுதோ அல்லது ஹீரோ எசகுபிசகாக மாட்டிக்கொள்ளும் ஆதிவாசிகள் மத்தியிலோ என சிலுக்கு சுமிதாவையோ அனுராதாவையோ அல்லது காலை இறுக்கிப்பிடிக்கும் வகையில் உடை போட்ட நடனப்பெண்மணிகள் ஆடும் நாட்டியத்தையோ கொண்ட சினிமா வியாபார அச்சாரத்திற்கு இன்றைய எஸ்.ஜே.சூர்யாஹ் போன்றவர்கள் செய்துகொள்ளும் சமரசம் திரு. அ.ராமசாமி சொன்ன கள்ளச்சாராய வியாபாரத்திற்கு ஒத்ததுதான்.

வாலி, குஷி, நியூ மற்றும் அ.ஆ படங்களின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாஹ்வைப் பற்றி புரியாதவர்கள் யாரும் இருந்துவிடப்போகிறார்கள் என்ற அவரது எண்ணத்தை உடைக்கும் வகையில், 'அ.ஆ' படத்தில் அவராகவே, "இந்த நாய்க்கு என்ன பிடிக்கும் என்று இவங்களூக்குத்தெரியாதா" என்று உங்களைக் கைகாண்பிக்கிறார். அது ஒன்றே அடுத்து வரப்போகும் நான்கைந்து படங்களின் வெற்றிக்கு அச்சாணி என்பதை தமிழ்நாட்டு 'பி, சி' ரசிகர்கள் தங்களது சீழ்கை மூலம் உறுதி செய்யாமலா இருந்துவிடப்போகின்றனர்.

'வாலி' படத்தில் சிம்ரனின் அறிமுகக் காட்சியின் காமிரா கோணமே 'திரு.கர்ணன்' அவர்களுடையதற்கு இணையாக எப்படி ஆரம்பிக்கும் என்பதை யாரும் மறக்க முடியாது. இதே ராமாயணக்கதையையே இந்தளவுக்கு 'பெண்ணுடல் பரவசம்' இன்றி வெளிப்படத்திய இதற்கு முந்தைய வெளியீட்டுப்படமான மு.களஞ்சியத்தின் 'பூமணி', பெரிய அளவு வெற்றி பெறாததும் சூர்யா தனது ரசிகர்கள் மேல் கொண்ட நம்பிக்கையை தெளிவாக்குகிறது.

'குஷி' படத்தின் அடிப்படை கருத்துக்கு அப்படம் பத்து நாட்கள் கூட ஓடியிருக்கக்கூடாது. ஆனால் வெள்ளிவிழா காண்கிறது என்றால் 'கட்டிப்புடிடாவை'யும் கவனத்தில் கொள்ளாமல் விடமுடியாது. 'நியூ' படத்தில், 'மடிசார்' பெண்ணுடலை அவரின் நம்பிக்கையாளர்களுக்கும் 'தாய்மை-பாசம்' என ஒரு பத்து நிமிடம் அத்தகைய நம்பிக்கையாளர்களுக்கும் தீனியாய் போட்டு வெற்றிபெற்றதை யாரும் மறைக்க முடியாது.

எஸ்.ஜே சூர்யாஹ்வின் சினிமா மீதான முழுப்பரிணாமத்தையும் கவனமாக உற்று நோக்கும் யாருக்கும் இன்னொன்று தோன்ற வாய்ப்பிருக்கிறது. மக்களின் அல்லது சராசரி ரசிகர்களின் மனத்தைப்புரிந்துகொண்டவர்களாக இவர்கள் நடத்தும் விளையாட்டு தொடர்ந்து இப்படியே நடந்து, நிறைய வசதியும் அறிமுகமும் வந்தபிறகு இதே 'தரத்தைக் கொண்ட' பக்திப்படங்களை எடுத்து பெயர் காப்பாற்றிக்கொண்டு (அல்லது அப்படி நடித்து) ஏதாவது ஒரு இயக்கத்திலோ அல்லது அரசியலிலோ சேர்ந்து சமூகத்தொண்டாற்றவும் கூட்டமாய் இவர்கள் கிளம்பக்கூடும். (இதற்கு தற்போதைய உதாரணங்கள் நிறைய இருக்கின்றன!)

சமுதாயத்தின் அடிப்படையில் வக்கிரத்தை முளையிட்டு வாழ நினைக்கும் இத்தகைய பாவிகளின் வாழ்தலானது கேடுகெட்ட அரசியல்வாதிகள், கந்துவட்டிக்காரர்கள், கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் வன்புணர்பாலியல் குற்றவிலங்குகளின் வாழ்வை விட எதிலும் மேம்பட்டதுமில்லை; நியாயமனதுமில்லை. வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள் இவர்கள்!

எம்.கே.

Monday, October 03, 2005

பாபு யோகேஸ்வரனும் கே.எஸ்.அதியமானும்!

நூன் ஷோ!

டைரக்டர் பாபு யோகேஸ்வரன் யார்? இது நீங்கள் பதில் சொல்லவேண்டிய கேள்வி! நான் சொல்லப்போவது, டைரக்டர் பாபு யோகேஸ்வரனைப் பாராட்டுவதற்கு பத்து காரணங்கள். அவை யாவன?

1. மிகப்பெரிய பூதாகரமான சமூகப் பிரச்சனைகளையெல்லாம் படத்தின் கமர்சியல் தன்மையில் எவ்வித குறைபாடும் இல்லாமல் எளிதாக ஆனால் காட்டமாகச் சொல்ல முடியும் என்று நிரூபித்ததற்காக.!

2. 'கரணம் தப்பினால் கொட்டகை காலி; தியேட்டர் காலி!' என்றாகிவிடக்கூடிய கதையை தனது முதல் படமாய்க்கொண்டதற்காக!

3. சிறுபான்மை இன கதாநாயகனை பெரும்பாலும் (அதுவும் அவன் புரட்சிக்காரனாக இருந்தால் முற்றிலும்) ஏற்றுக்கொள்ளாத தமிழ் சினிமா ரசிக உலகில் அப்படி இயக்கி, வெற்றியும் பெற முடியும் என்று சாதித்ததற்காக!

4. விரலை வைத்தே கண்ணைக் குத்துவது போல பிரச்சனைகளின் முளைகளை அதனதன் பிறப்பிடத்தில் வைத்தே தோலுரித்ததற்காக!

5. எதற்கும், எத்தகைய விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் எல்லா மதங்களின் உள்ளழகையும் வசனங்களின் மூலம் எடுத்துச்சொல்ல முனைந்ததற்காக!

6. சேரிக்கும் (எப்போது) தேர் வரும் என்ற (புகழ்பெற்ற) கவிதையை காட்சியாக்கி காட்டும் தீரத்தை வெளிப்படுத்தியதற்காக!

7. படத்தில் கவர்ச்சியையோ ஆபாசத்தையோ எங்கும் பெரிதாக நம்பாமல் கதையையும் அதன் அழகான நகர்த்தலையும் நம்பியதற்காக!

8. இனிமையான பாடல்களை யுவனிடம் இருந்து பெற்றதற்காக! அப்படியே அவற்றை ஒளியோவியமாக்கியதற்காக! அப்படியே ஒரு ஹோம்லி ஹீரோயினை அறிமுகப்படுத்தியதற்காக(வும்)! (சம்பந்தப்பட்டவர்களுக்கும் சாரும்!)

9. படத்தின் பெரும்பாலான ஓட்டைகளை மறைக்க முயன்றளவு முயற்சி செய்தது தெரிந்தாலும் அதையெல்லாம் மீறி ஒரு கருத்து சொல்லும் படத்தை இயக்கியதற்காக!

10. கை நிறைய ரிஸ்க்குகள் இருந்தாலும் அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இதை வெற்றிப்படமாக்கமுடியும் என்று இறங்கியதற்காக! (மக்களுக்கும் நன்றி!)

பாபு யோகேஸ்வரன், வெற்றிகரமான "தாஸ்" படத்தின் இயக்குனர். சமுதாயத்தின் புரையோடிக்கிடக்கும் பழக்கவழக்கங்களான ஜாதி ஆதிக்கம், காதல் எதிர்ப்பு, இந்து முஸ்லீம் மதவெறி, குண்டு கலாச்சாரம், அரசு அலுவலர்களின் ஒரு சார்பு நிலை என அத்தனை பிரச்சனைகளையும் கண் எதிரே காலில் உதைத்து கோல் வளைக்குள் விளாசியிருக்கும் இளைஞர்!

ஆங்காங்கு பெரிய ஓட்டைகள், உயிரை வதைக்கவேண்டிய காட்சிகளில் உயிரூட்ட குறைபாடுகள் என்பதையெல்லாம் மறந்து இவருக்கு கண்டிப்பாக கை கொடுக்கலாம்! வாழ்த்துகள்!

****************************
ஈவ்னிங் ஷோ!

ஈவ்னிங் ஷோவில் என்னைக் கவர்ந்த படம் பிரியசகி. தாமதமாக பார்க்க நேர்ந்தாலும் மிகவும் ரசிக்க வைத்தது என்னை!

படத்தில் மாதவனும் சதாவும் ஏதோ நம் எதிர் ·பிளாட்டில் குடியிருக்கும் குடும்பத்தினரைப்போல நமக்குள்ளே ஒன்றிப்போகிறார்கள்.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வு வரும் அளவுக்கு மிக இயல்பாக ஒரு கணவன்- மனைவி- குடும்பக் கதை. அருமையாக படமாக்கிய இன்னொரு (தொட்டாச்சிணுங்கி) இயக்குனர் கே.எஸ்.அதியமான் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை!

எம்.கே.