Friday, August 04, 2006

ஒரு நதியின் கரையில் - எழுத்தாளர் ஜெயமோகனுடன்!

ஜெயமோகன் - தற்கால தமிழிலக்கியப் படைப்பாளி; விவாதத்தின் விஸ்வரூபம்; கருத்துரைகளின் அடைமழை; ஒரு வரிக்கேள்விக்கு பக்கங்கள் தொடரும் பதில்கள் தருபவர். அயராமல் எழுதுபவர். இலக்கியத்தின் போலி முகங்களைத் தயங்காமல் தோல் உரிப்பவர்.

இப்படியான சில எண்ணங்களோடு மட்டுமே திரு.ஜெயமோகனை நான் அறிந்திருந்தேன். கடந்த சில நாட்களாக அவருடம் பழகும் பேரதிர்ஷ்டம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

உள்ளே நுழையுமுன்.......

கடந்த எழுபத்தைந்து கால சிறுகதை வரலாற்றில் ஒரு திறனாய்வுப் பட்டியலாய் மிகச்சிறந்த கதைகளும் அவற்றின் படைப்பாளிகளுமாய் எழுபத்தைந்து பேரைச் சொன்னார் திரு. ஜெயமோகன். இங்குதான் போட்டி. ஜெயமோகன் குறிப்பிட்ட சிறுகதையாசிரியர்களில் அதிகச்சிறந்த கதைகளை எழுதி முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அல்லது முதல் மூன்று இடம் யாருக்கு? மனதில் வைத்துக்கொள்ளுங்கள்! விடைகள் கீழே.! சரியாகக் கணிப்பவர்களுக்கு (இந்த வருடத்தில்) ஒரு கலர் டிவியும் (ஐந்தாண்டு கழித்து) கம்யூட்டரும் அரைபவுன் தாலியும் பரிசாக வழங்கப்படும்!


இனி, பின் தொடர்ந்த உணர்வின் பதிவுகள்!


Photobucket - Video and Image Hosting

ஜெயமோகனின் உலகம் மிகப்பெரியதாய் இருக்கிறது. எந்தத்தலைப்பில் இவருடன் பேச ஆரம்பித்தாலும் சிந்தனைகள் பலவாறாக பின்னோக்கி அல்லது முன்னோக்கி ஓடுகின்றன.கடந்த வந்த பாதையின் ஒவ்வொரு அடிகளையும் ஞாபகம் வைத்திருக்கிறார். தன் வாழ்க்கையின் சில சிறந்த அத்தியாயங்களை உருவாக்கிய திரு.சுந்தர ராமசாமியை அடிக்கடி நினைவு கூறுகிறார். தான் கற்றுக்கொடுத்த சீடனே தன்னை மிஞ்சும் சூழ்நிலையில் சு.ராவைப்போல ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த குருக்கள் தமிழிலக்கிய உலகில் காண்பதறிது என்கிறார். அவருடைய 'குழந்தைகள் பெண்கள் ஆண்களுக்கு' தன்னுடைய விமர்சனத்தை நேரடியாக அவர் ஏற்றுக்கொண்டது அதற்குச் சான்று என்கிறார். தொடர்ந்து பதினான்கு மணி நேரங்களெல்லாம் அவருடன் பேசிக்கொண்டிருந்ததை எண்ணும்போது மேடையில் இரண்டு மணிநேரம் பேசுவது சிரமமில்லை என்கிறார்.

ஜெயமோகன் தன்னுடைய தாயாரின் புலமைமீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். இடதுசாரி சிந்தனைகள் கொண்ட குடும்பத்திலிருந்து வந்த பெண் அவர் என்பதால் இருக்கலாம் என்கிறார். ஓரிரு வருடங்களே வித்தியாசமிருப்பினும் தன்னுடைய அண்ணன் இன்னும் தன்னை ஒரு குழந்தையைப்போல நேசிப்பதை அக்கறைப்படுவதைச் சொல்கிறார். இவர்களைனைவரும் அசோகவனத்தில் இருக்கிறார்களாம். 'அசோகவனம்' அவருடைய அடுத்த படைப்பு மட்டுமல்ல நீண்டகாலத்தவம் என்பது உங்களுக்குத்தெரிந்திருக்கும். தன்மனைவி அருண்மொழி, குழந்தைகள் அஜிதன், சைதன்யா ஆகியோருடைய அன்புகளையும் சந்தோசங்களையும் ஒரு சராசரி மனிதனாய் பகிர்ந்துகொள்கிறார். சின்னச்சின்ன உணர்வுகளையும் இலக்கிய உதாரணங்களையும் இவர்கள் தொடர்பான பேச்சுகளிலிருந்தும் பெறமுடிகிறது.

முத்தமிழ் விழா முடிந்து கூட்டத்தினர் ஆங்காங்கு நின்றுகொண்டு கதைக்கும்பொழுது 'சங்க சித்திரங்கள் படித்தேன், ஒவ்வொரு வாரமும் அருமை, அருண்மொழியும் நீங்களும் காதலித்து திருமணம் செய்துகொண்ட கதைகூட வந்ததே!' என்றெல்லாம் சூழ்ந்துகொண்டிருந்த இளைஞர்குழாம் ஒன்று புளகாங்கிதமடைந்து கொண்டிருக்க, வெட்கப்பட்டு நிற்கும் அருண்மொழியவர்களை, இதோ இருக்கிறார் அருண்மொழி என்று கைகாட்டுகிறார். தன்னிடம் அறிமுகம் கொள்ளும் எவருக்கும் தனது மனைவியையும் அறிமுகப்படுத்துகிறார். எல்லாவற்றிற்கும்பின்னே இருக்கும் அவரது அருமை புரிகிறது நமக்கு.

நண்பர்கள் கூடிய ஒரு பொழுதில் சிறுகதையின் சாரம், நாவல், தனது நாவல்களுக்குப் பின்னேயான நாட்கள், மனம் உருகி கண்ணீர் உருண்டோட எழுதிய வரிகள், என்பனபற்றியெல்லாம் விரிவாகச்சொல்கிறார். சிறுகதையின் வடிவம் அதன் நுட்பம் சார்ந்த விஷயங்கள் சிறுகதைப்பட்டறையில் விளக்கப்படும் என்பதால் நாவலில் பேச்சு திரும்புகிறது. ஒரு முடிச்சை அவிழ்ப்பது போன்று, ஒரு கயிற்றைப் பிரிப்பது போன்று பலவேறு கோணங்களில் பிரித்து எழுதப்படவேண்டியது அது! நாவல் முடியவேண்டும் என்று எந்தச்சட்டமும் இல்லை என்கிறார். காட்டில் தானிருந்த அந்த அனுபவங்கள் அளப்பறிய ஞானங்களைத் தரவல்லது, ஒவ்வொரு சத்தமும் ஒவ்வொரு அசைவும் ரசிக்கக்கூடியது, பிரமிப்பூட்டக்கூடியது என்கிறார். காடு நாவலில் கிடைத்த குட்டப்பன், ரெசாலம், ரெஜினாமேரி யாவரும் தானாய் வந்து சேர்ந்த பாத்திரங்களே என்றும் அப்படி யாரையும் நேரில் பார்த்து எழுதவில்லை என்கிறார். தேவாங்கைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டு அதைப்பற்றி நகையாக விரிவாகப்பேசுகிறார்.

பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஓரிடத்தில் தனது இதயம் குழைந்து கண்ணீர் பொங்கிட வந்த வரிகள் சில இருக்கின்றன என்கிறார். கொற்றவை நாவலிலும் சில இடங்களில் அமாதிரி அனுபவம் வாய்த்ததை விவரிக்கிறார். கொற்றவை முழுக்க முழுக்க தமிழ்வார்த்தைகளால் எழுதப்பட்டது, எங்காவது ஓரிரு சமஸ்கிரீத வார்த்தைகள் வந்திருந்தால் கூட அது கவனக்குறைவால் வந்திருக்கவேண்டும் என்கிறார். (கடந்த ஜனவரியில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கொற்றவை வாங்கிக்கொண்டு கிழக்குப் பதிப்பக வாசலுக்கு வந்தபோது அங்கே ஒரு நண்பர், 'அப்படி என்ன இருக்கிறது இதில், ஏன் எல்லோரும் இதில் போய் விழுகிறார்களோ' என அங்கலாப்போடு சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது!)

நண்பர் தமிழினி வசந்தகுமாரைப் போன்ற வாசக பூரணத்துவம் பெற்றவர்கள் எவரும் இருக்கமுடியாது. மிகச்சிறந்த வாசகர் அவர் என்பதாலாலேயே மிகச்சிறந்த புத்தகங்களை அவரால் போடமுடிகிறது என்கிறார். மற்ற பதிப்பக புத்தகங்கள் அல்லது இணையத் தகவல்களின் புத்தகத் திரட்டிகளைப்பற்றிக் கேட்கும்பொழுது, எல்லாம் வருவது நல்லதுதான், யாருக்காவது எப்போதாவது பயன்படுமல்லவா என்கிறார். ஆனால் சிலரின் முக்கியப் புத்தகங்கள் சுமாரான பதிப்பகம் வெளியிட்டதால் அடையவேண்டிய இடத்தை அவை அடையாமல் போனதும் நடந்திருக்கிறது என்று எஸ்.ராமகிருஷ்ணனின் உதாரணம் கொண்டு விளக்குகிறார்.

தற்காலப் படைப்பாளிகளில் தனக்குத்தெரிந்து எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகியோர் நிறையப்படிக்கிறார்கள்; நன்றாகவும் எழுதுகிறார்கள் என்கிறார். ஆழிசூழ் உலகு புகழ் ஜோ டி குரூஸ் இன்னும் ஏழு எட்டு நாவல்களை எழுதலாம், அந்த அளவிற்கு அவரிடம் திறமை, விஷயம் இருக்கிறது என்கிறார்.

ஒரு நாவல் எழுதுவதற்கு முன், இது யாருடையது, எதைப்பற்றி எழுதுகிறோம், எங்கே ஆரம்பித்து எப்படி முடிப்பது என்பதை மட்டும் கொண்டால் போதும். ஒட்டுமொத்த காதாபாத்திரங்களையும் முதலில் உள்வாங்கிக்கொண்டு எழுதினால் ஒரு செயற்கைத்தன்மை வந்து ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் நிறைய நாவல்களை படிக்கவேண்டும் என்கிறார்.
Photobucket - Video and Image Hosting

நான் வெளியிலோ யாரிடமோ பேசுவது என்பது மிகக்குறைவு என்றும் ஆனால் என் காதுகள் எப்போதும் எவற்றையாவது கேட்டுக்கொண்டே இருக்கும் என்கிறார். டீக்கடையில் புழங்கும் சாதாரண உரையாடல்களிலும் பல நாவலுக்குரிய விஷயங்கள் கிடைக்கவாய்ப்பிருக்கலாம், நாஞ்சில் நாட்டு மக்களின் எல்லாப் பேச்சுகளிலுமே அவர்களறியா ஏதாவது ஒரு நையாண்டித்தனம், நறுக்கென்று வலிக்காமல் கொட்டும் தன்மை ஆகியவை இருப்பதாகவும் அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்பதே பெரிய விஷயஞானம் அளிக்கும் என்கிறார். ஒரு நல்ல எழுத்தாளன் காதுகளை எப்போதும் திறந்து வைத்திருக்கவேண்டும் என சுராவோ யாரோ சொன்னதாகச்சொன்னார்.

மதுரையில் ஒரு கல்லூரியில் பேச வந்திருந்தபோது மனுஷ்யபுத்திரன், சு.வேணுகோபால் மற்றும் பல இன்றைய எழுத்தாளர்கள் அன்றைய மாணவர்களாய்ச் சூழ்ந்துகொண்டு கேள்விகேட்டதை ஞாபகம் வைத்திருக்கிறார்.

நான் கடவுள் படத்திற்கு வசனம் எழுதும் அனுபவத்தை சந்தோசமாக விவரிக்கிறார். பாலாவின் சாப்பாடான ஒரே ஒரு இட்லியைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார். பாலாவும் அவரது டீமும் கொள்ளும் சுவாரஸ்யமான பிணைப்பைச் சொல்கிறார். மதுரை ஏரியாவில் மரியாதையின் முக்கியத்துவத்தையும் பாலாவிடம் தான் கண்டமையையும் கூறுகிறார். ஒரே இரவில் இருபத்தியிரண்டு பக்கங்கள் கொண்ட வசனத்தை அவரிடம் எழுதிக்கொடுத்ததையும் பாலா தன் பேட்டியில் அதைப்பற்றிச்சொன்னதையும் சொல்கிறார்.


சிறுகதைப்பட்டறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் அறுபது. கடைசிநேர ஆர்வத்தாலும் திடுமெனச் செய்தி கேட்டு வந்தவர்களுமாய் ஒரு பத்து பேர் சேர்ந்துகொள்ள எழுபது (பிளஸ்) நபர்களுடன் சிறுகதைப்பட்டறை தொடங்கியது. சிறுகதை என்பது என்ன என்பதில் ஆரம்பித்து அதன் தோற்றம், முடிவு, வடிவம், உரையாடல், கவித்துவ உணர்வு ஆகிய அனைத்து மூலக்கூறுகளையும் விரிவாகச்சொன்னார். பரிசுவாங்கிய எழுத்தாளர்கள், பரிசுவாங்கப்போகும் எழுத்தாளர்கள், எதிர்கால எழுத்தாளர்கள், விமரிகர்கள், மாணவர்கள் என்று பலவாறாய் வந்திருந்த அக்கூட்டத்திற்கு அவரது உரை மிக மிகப் பயனுள்ளதாய் இருந்ததாகச்சொல்லப்பட்டது. சிங்கப்பூர் தமிழ் வானொலியான ஒலி 96.8ல் சிங்கப்பூரின் (சிறுகதை) இலக்கிய உலகை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் வடிவில் மிக அருமையாய் இது இருந்ததாக திரு. பொன் மகாலிங்கம் செய்தியில் சொன்னார்.

ஜெயமோகனின் இப்பட்டறை குறித்தான பேச்சுகள், கருத்துகள் பிரிண்ட் செய்தும் கொடுக்கப்பட்டது. செவ்வியல் (classic) வடிவ சிறுகதையின் பலகூறுகளை மிகச்சிறப்பாக விளக்கும் அக்கட்டுரையை இங்கு போட்டால் மிகப்பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

விலாவாரியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக அதுபற்றிப் பார்ப்போம்.

"சிறுகதையில் முடிவில் இருக்கிறது அதன் உயிர். அவ்வுயிரைக்கொண்டே சிறுகதை தனது வடிவத்தைப் படைத்துக்கொள்கிறது. முடிவு ஒரு திருப்பமாகவோ அல்லது அதிர்ச்சியடையவைக்கும் படியாகவோ அல்லது வாசகன் இதுகாரும் படித்து யூகித்து வந்தபடியில்லாமல் படித்துமுடித்ததும் வேறு சிந்தனையைத் தூண்டும் விதத்திலோ இருக்கவேண்டும் என்பதில் மிக மிக உறுதியாக இருக்கவேண்டும். இதற்காய் குமுதத்தில் எழுதப்படும் ஒருபக்கக் கதையில் வரும் திருப்பத்தைக்கொண்டு அது சிறந்த கதையாய் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அது அத்திருப்பத்திற்காகவே படைக்கப்பட்டது என்பதால் அதில் அவ்வுயிர் இல்லை. சிறுகதையின் முதல்வரி எப்போதும் வித்தியாசமாய் கவர்ந்திழுக்கக்கூடியதாய் இருக்கவேண்டும். இதற்கு எனது மாடன் மோட்சம் கதையின் முதல்வரி மிகச்சிறந்த உதாரணம். சிறுகதையின் வடிவம் வேறு எங்கும் இழுத்துச் செல்லாவண்ணம் கட்டப்பட்டிருக்க வேண்டும்; முடிவை நோக்கியே அது ஓடவேண்டும்.

"சிறுகதையில் பின்னோக்கு உத்திகளைப் பயன்படுத்துதல் கதையைக் குலைத்துவிடும். பின்னோக்கு உத்தியைப் பயன்படுத்தாமல் உரையாடல்கள் மூலம் கடந்தகாலத்தைக்கொண்டு வருவது மிகச்சிறப்பு, அதையே நானும் வரவேற்கிறேன். இதில் அசோகமித்திரன் சுஜாதா மாஸ்டர்கள். கதையின் உரையாடல்கள் முடிவை நோக்கி இழுத்துச்செல்லும் வண்ணம் இருத்தல் அவசியம்; அதைவிடுத்து வழவழாகொழகொழா இருக்கவேகூடாது. பேச்சும் சுவாரஸ்யம் மிக்கதாய் செயற்கைத்தன்மை அற்று இருத்தல் மிக அவசியம்."

உதாரணத்திற்காய் வந்து விழும் பெயர்களில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுஜாதா, சுந்தரராமசாமி, நாஞ்சில்நாடன், வண்ணதாசன் ஆகியன அடிக்கடி வருகின்றன.

"முடிவிற்குப்பிறகு அல்லது திருப்பத்திற்குப்பிறகு கதையை இழுத்தல் என்பது வாசகனுக்குச்செய்யும் மிகப்பெரிய துரோகம். அவனைச் சிந்திக்க விடாது நீங்கள் படுத்தும் பாடு. எழுத்தாளனுடன் வாசிக்கும் வாசகத்தன்மையை கதைகள் பெற்றிருக்கவேண்டும். வாசக இடைவெளியுடனும் கதைகள் படைக்கப்படுவதுண்டு. கோணங்கியின் கதைகள் இவ்வகையைச்சார்ந்தவை."

"கதையின் நாயகன் யார் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அவனை/அவளை/அதை அவ்வபோது குறுக்குவெட்டு வெட்டிச்செல்லும் பாத்திரங்களை பிறகு அறிமுகப்படுத்தவேண்டும். நாயகனைத்தவிர வேறு எவற்றையும் விலாவாரியாய் விளக்கவேண்டிய அவசியமில்லை. சிலசமயங்களில் நாயகன்/நாயகியைக் கூட மாமி எழுத்தாளர்கள் மாதிரி ஒவ்வொன்றாய் விவரிக்காமல் சரேலென கதைக்குள் புகுந்து ஒரே ஒரு வரியில் அவரது அழகை இயல்பை வெளிக்காட்டிக் கதைக்குள் இழுத்துச்செல்லும் வைபவமும் அசோகமித்திரனால் நடப்பதுண்டு."

"இரு கதாநாயகர்கள்/ அல்லது மூன்று கதை நாயகிகள் ஆகியன சிறுகதையின் செவ்வியல் அழகை குலைக்கலாம். அது அழகும் இல்லை. புதுமைப்பித்தன் போன்ற ஜாம்பவான்களால் அது முடியும். கதையின் தலைப்பு ஒருபோதும் உள்ளடக்கத்தை நேரிடையாய் சொல்வதாய் இருக்கக்கூடாது. கதையின் தலைப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கதையின் முதல்வரி கதையின் செறிவை எடுத்துக்காட்டுவதாய் இருக்கவேண்டும் "

"கதையை டுவிஸ்ட் எனப்படும் திருப்பத்தோடுதான் முடிக்கவேண்டும் என்பதையே வளர்ந்துவரும் இலக்கியச்சூழல் மாறுபடுத்துகிறது. கவித்துவமான முடிவுகளை அது கொண்டிருந்தால் அதுவும் சிறந்த முடிவுகளாய் உருவாகும். உதாரணமாக சுந்தரராமசாமியின் பிரசாதம் கதை, வண்னதாசனின் நிலை கதை, தி.ஜானகிராமனின் ஒரு கதை, அசோகமித்திரனின் ஒரு கதை. ஆனால் இது மிகச்சிறந்த கவித்துவ வடிவத்தைத் தரவேண்டும். பொதுவாக மாஸ்டர்கள் உருவாக்கும் வடிவம் இது."


மக்களே, இது பற்றி விரிவாய் எழுத அல்லது அல்லது கட்டுரையை டைப் பண்ண இப்போது நேரமில்லை. இதுபோக, ஏற்கனவே சொல்லியவாறு கடந்த எழுபத்தைந்தாண்டுகால மிகச்சிறந்த சிறுகதைகளும் அவற்றைப் படைத்தவர்களும் என ஒரு 75 பேர் அடங்கிய பட்டியலையும் ஜெயமோகன் எல்லோருக்கும் அப்பட்டறையில் கொடுத்தார். (இரண்டையும் அவரிடமும் கேட்டுவிட்டு நேரமிருக்கும்போது தட்டச்சு செய்கிறேன்)

(அதை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புபவர்கள் நூறு ரூபாய்க்கு மணியார்டர், புத்தகஆர்டர், சாப்பாடு ஆர்டர், ஏதாவது ஒரு ஆர்டரை எனக்கு (இம்சை அரசன் 23ம் சிங்கப்பூர்வாசி) அனுப்பவும். எனது முகவரியை பின்னூட்டமிடுகிறவர்களுக்கு பிறகு சொல்கிறேன். ஆஸ்திரேலிய நியூஸிலாந்து ஆடு எனக்குப்பிடிக்காது. எனவே அங்கிருப்பவர்கள் 'மட்டன் ஆர்டர்' அனுப்பவேண்டாம். தாய்லாந்திருப்பவர்கள் என்ன ஆர்டர் அனுப்பவேண்டும் என நான் சொல்லாத வேளையிலும் ரத்தத்தின் ரத்தமே உடன் பிறப்பே உனக்கா தெரியாது? இலங்கை நண்டு பிடிக்கும். வேண்டாம் மக்களே, இலங்கை என்றவுடன் மனசு பாரமாகிவிடும்)

ஈழத்தமிழர்கள் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார் திரு.ஜெயமோகன். அவர்களது வாசிப்பனுபவத்தின் மீது அதீதப்பிரியம் வைத்திருக்கிறார். கனடாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து ஜெயகாந்தனை மட்டுமே பார்த்துவிட்டுச் செல்லக்கூடிய ஈழத்தமிழர்களைப்பற்றி பேசும்போது அவர்களது இலக்கிய உலகத்தில் பிரமித்துப்போகிறார். ஆரம்பத்திலிருந்தே ஈழநாடு அப்படியான இலக்கிய உணர்வுகளை மேம்படுத்திக்கொண்டு வந்திருக்கிறது என்கிறார். ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேசப்பேச நமக்கே அவர்களைப் பார்த்து பொறாமை வந்துவிடுகிறது. (கடந்த வருடம் சாருநிவேதிதா இங்கு வந்தபோது ஈழநாதன் ஒரு கேள்வி கேட்டார். ஒரு நிமிடம் ஆடிப்போன சாரு, 'அடடா! இந்தக்கேள்வியை ஒரு தமிழ்நாட்டு வாசகன் கேட்டிருந்தால் நான் எப்படி புளகாங்கிதம் அடைந்திருப்பேன், இவற்றையெல்லாம் இவர்கள்தானே ஊன்றிப் படிக்கிறார்கள்' என மனமறிந்து ஆச்சர்யப்பட்டார்.)

இன்றும் யாழ்ப்பாணத்தின் எல்லா ஊர்களிலிருந்தும் பல கடிதங்கள் தனக்கு வருவதாயும் அவர்களின் பெயர்களைக்கூட எதிர்ப்படும் ஈழநாட்டு வாசகர்களிடம் கேட்டுப்பார்க்கிறார் ஜெயமோகன். எல்லோருக்கும் எல்லோரையும் பெரும்பாலும் தெரிந்திருக்கிறது என்கிறார்.
Photobucket - Video and Image Hosting

தான் அடிக்கடி ஜெயகாந்தனைப் போய்ப் பார்ப்பதையும் அவரைப்போன்ற (எத்தகைய அரசாட்சிக்கு முன்னாலும்) கம்பீரமாய் நிற்கக்கூடிய எழுத்தாளுமை கொண்டவர்கள் அரிது என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

புதுப்பேட்டை படம் பற்றி உயிர்மை, காலச்சுவடு முன்வைத்த கருத்துக்களை நான் கேட்க, சில கவித்துவ பார்வைகளை ஏற்றுக்கொண்டு கதையைப் பற்றி கிண்டலடிக்கிறார். ஒருலட்சம் அடிக்கு படம் எடுத்தவர்கள் கதையைத் தொலைத்ததுதான் பாவம் என்கிறார். (புதுப்பேட்டைக்கு சாருவின் விளக்கத்தில், அவருக்கு வசன வாய்ப்பு தரவில்லையே என்கிற ஏக்கம் பொங்கி கொட்டுவதாய் நான் சொன்னேன்.)

குமரிக்கண்டம், கொற்றவை, புத்தர் மற்றும் சமண வைணவ மதங்கள் (விஷ்ணுபுரம்), சாவித்திரியின் நடிப்பு, அஜீத் பாலா பிரச்சனை, பதினெட்டுப்பட்டி நாட்டார்கள், கீரிப்பட்டி, பாப்பாபட்டி பிரச்சனைகள்(இது பற்றி கேட்கவேண்டும் என்று இவர் இங்கு வந்தபோதே நினைத்துவிட்டேன்!), மறைந்த உவமைக்கவிஞரின் (சுரதா) தனித்தமிழ் நேசம், மூடிய கதவுகளுக்குப்பின் சில எழுத்தாளர்களது ஆளுமைகள்(!) என்பனபற்றியெல்லாம் பேச்சு சுவாரஸ்யமாய் இருந்தது. நேசக்குமாருடன் தான் ஒரே ஒருமுறை பேசியதாய்ச் சொல்கிறார். (திண்ணை வாசகர்கள் கவனிக்கவும்!)

இந்தியாவிலே அதிக வார இதழ்களைக் கொண்டிருந்தாலும் கேரளாவில் நல்ல இலக்கியத்திற்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. அங்கிருக்கும் சில படைப்பாளிகளும் அதனைச் சிறப்பாய் வெளிக்கொணர்கிறார்கள் என்கிறார். ஒரு பத்திரிகை ஆசிரியப்பணி கேரளாவில் கிடைத்தபோது (அப்போதிருந்த சம்பளத்தை விட பத்து மடங்கு அதிகமாய் இருந்தாலும்) அதில் தான் எழுதுவதற்கு அதிகம் நேரமிருக்காது என்பதாய் அதை உதறியதைப் பெருமையாய்ச் சொல்கிறார்.

உணவுக்கட்டுப்பாட்டில் மிகுந்த சிரத்தையாய் இருக்கிறார் திரு.ஜெயமோகன். எண்ணையில் பொறித்த உணவுகளைக் கண்டு காததூரம் போகிறார். பேசிக்கொண்டிருக்கும்பொழுதே அவரது சிந்தனைகள் வேறொரு உலகத்தின் அடி ஆழத்துக்குச் சென்றுவிடுகின்றன. ஜீவன்தாரா அவரை நனவோடைக்குள்ளும் சிந்தனைச்சுரங்கத்துக்குள்ளும் அவ்வப்போது வயப்படுத்திவிடுகிறாள்.

முத்தமிழ் விழா, இலக்கிய நண்பர்கள் சார்ந்த கூட்டங்கள் மற்றும் உரையாடல்கள், சிறுகதைப்பட்டறை என எல்லா வகையான இலக்கிய சமாச்சாரத்திற்குள்ளும் (எழுத்தாளரின் மனைவி என்பதற்கப்பால்) ஒரு மேம்பட்ட வாசகியாய் பங்காற்றிய திருமதி. அருண்மொழிநங்கை ஜெய மோகனைப் பார்த்து பிரமித்தது உண்மை! எத்தனை இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் இத்தகைய பேறு!

தமிழிலயக்கிய உலகில் மிகச்சிறந்த விமர்சகராயும் மிகச்சிறந்த படைப்பாளியாயும் இருந்தும் ஒரு சராசரி மனிதராய் எல்லோரிடமும் கலக்கும் திரு.ஜெயமோகனைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்றமைக்காக இறைவனிடம் மீண்டும் நன்றி சொல்லி எல்லாம் வல்ல ஆதிபகவன் அவருக்கு நல்ல சுகங்களைத்தரவேண்டும் என வேண்டிக்கொண்டு தற்போதைக்கு உங்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.

அன்பன்,
எம்.கே.குமார்.



விடைகள்:

அ). மிகச்சிறந்த கதைகள்.
12 கதைகள் பெற்று முதலிடத்தைப் பிடிப்பவர்கள் இருவர். ஒருவர் புதுமைப்பித்தன் மற்றவர் அசோகமித்திரன்.

ஆ). மிகச்சிறந்த கதைகள்.
8 கதைகள் எழுதி இரண்டாமிடத்தைப் பிடிப்பவர்கள் பலர். 1.கு.அழகிரிசாமி 2.தி.ஜானகிராமன் 3.கி.ராஜநாராயணன் 4.சுந்தர ராமசாமி 5.ஜெயகாந்தன் 6.கோணங்கி

இ)ஏழு கதைகளுடன் மூன்றாமிடத்தில் சுஜாதா

ஈ) ஆறு கதைகளுடன் அடுத்த இடத்தில் லாசரா, ந.பிச்சமூர்த்தி, அ.முத்துலிங்கம், ஆ.மாதவன், வண்ணதாசன், ஜெயமோகன் மற்றும் எம்.யுவன்


நன்றி:
திரு & திருமதி ஜெயமோகன்,
தமிழ் எழுத்தாளர் கழகம் சிங்கப்பூர்.

13 comments:

  1. சோதனை பின்னூட்டம்...

    ReplyDelete
  2. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  3. தலைய பத்தி செய்திகள அள்ளி தெளிச்சதுக்கு நன்றிங்கோ... :) எனக்கும் ரொம்ப நாளா ஆச, தலைய குவைத் கூட்டிக்கிட்டூ வரனும்னு. ஜெயமோகன்னா யாரு? ன்னு தெரிஞ்ச கூட்டத்தோட எண்ணிக்கைய எண்ணி முடிச்ச அப்பறமும் கைல சில விரல்கள் பாக்கி இருக்கும். ஹும். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பன வேணுமுங்க...

    ReplyDelete
  4. பின்மடலிட்ட நண்பர்கள் அருள், பிகேஎஸ், சிறில், கார்திக் மற்றும் சித்தார்த் ஆகியோருக்கு எனது நன்றி.

    அன்பன்
    எம்.கே.

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவுக்கு நன்றி குமார்.

    ReplyDelete
  6. அருமையான விசயத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    இந்த வலைப்பக்கத்தை எனக்குச் சுட்டிக் காட்டிய கார்த்திக் வேலுவிற்கும் நன்றி.

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. நண்பர்கள் அருள்குமார், கே.சி மற்றும் வினையூக்கி அவர்களுக்கு நன்றி.

    அன்பன்
    எம்.கே.

    ReplyDelete
  9. வணக்கம்,
    ஒரு வேண்டுக்கோள். ஜெயமோகன் அவர்களின் படைப்புக்களை தாங்கிய வலைத்தளம் ஒன்றை வடிவமைத்துவருகிறோம். இந்தப் பதிவில் இருக்கும் படங்களை பயன்படுத்த அனுமதி வேண்டும். cyril.alex@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு மடல் செய்யவும்.
    நன்றி

    ReplyDelete
  10. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    ஜெயமோகன் எழுத்து அவருக்கென்று ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கியது. அவரது பேச்சோ அவருக்கென்று ஒரு ஆதரவாளர் குழுவையும், எதிர்ப்பாளர்கள் குழுவையும் உதிக்கச்செய்கிறது. எழுத்தைவிட பேச்சிற்குத்தான் reach அதிகமோ?

    சிறில் அலெக்ஸ் அவர்களே, தாங்கள் குறிப்பிடும் வலைத்தளம் www.jeyamohan.inதானோ? அல்லது வேறு ஒன்றாயிருப்பின் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.

    நன்றி.

    ReplyDelete