Friday, September 08, 2006

செந்நீர் விட்டே வளர்க்கிறோம் சர்வேசா!

கண்ணிவெடியில் சிதறியும் ஷெல்மழையில் சிதைந்ததும் போக
மீதமிருக்கும் எந்தமிழரினம் செந்தமிழரினம்
வாழ்வைத் தேடி உயிரைச் சிறையிட்டு
நீர்ப்பாதை நகரும் வாழ்க்கைப்படகுகளேறி!


சிந்திய செந்நீரெல்லாம் நிலமதற்குத்தானே என
நீயும் கேட்டா நீரன்னையே
உனது பங்குக்கு என்னினத்தைக்
கடலில் கரைத்து விழுங்கிச் சுவைக்கிறாய்!


சிசு இழந்து மனையிழந்து மாடு கன்று உறவிழந்து
கனவுகளின் அதிர்ச்சியிலும் கண்ணிவெடிகள் ஷெல்மழைகள்!
உரிமை கேட்கும் மனித இனத்தை
ஒடுக்க நினைக்கும் பேரினப்பேய்களே
உத்தமன் புத்தனின் ஒருவழிப் பிறப்புகள்தானா நீவிர்?


எந்தமிழர் ரத்தம் இனிப்புச்சுவையா இனவெறியர்காள்!
ஷெல்லால் சிதைத்து சிசு ரத்தம் குடித்த பின்
எனதருமை குலவிளக்குகளின் கருவறைக்குள்ளும்
துப்பாக்கி முனைகொண்டு இரத்தம் தேடுகிறீர்களே
இதென்னவோ அஃறிணைக் கொடுமை!


மொத்தத்தைத் துறந்த புத்தா
ரத்தம் குடிப்பதை மட்டுமா போதித்துச்சென்றாய் நீ

எங்களின் இருப்பிடத்திற்காய் ஆன இந்த இரத்தக்குளிப்பை
எடுத்துச்சொல்வாயா இவர்களுக்கு?


வாழுதடம் தெரியாமல் ஒழிக்க நினைக்கும்
துரோக வெறியர்களை மேடையேற்றி
உயிர் வாழ உயிர் துறக்கும் வாழ்க்கை -வேட்கைப் பரிகளை
கண்மூடி கைதடவி யானை காணும் குருடன் போல
பயங்கரவாதி என்றாக்குதல் தகுமா
பகுத்தறிவற்ற பன்னாட்டினரே?


உயிர்வாழப் போராடுவது உரிமைவாதமா
இல்லை தீவிரவாதமா?
குலம் வாழ உயிர் மரிப்பவர்கள் உரிமைவாதிகளா
இல்லை பயங்கரவாதிகளா?
சாத்தானின் வாய்ப்பூச்சுக்கு செவிட்டுப்பேய்கள் மயங்கிக்கிடக்கலாம்
சமதர்ம சமுதாயமே உனக்குமா உரைக்கவில்லை?


செந்நீர் விட்டே வளர்க்கிறோம் சர்வேசா
செந்நீர் விட்டே வளர்க்கிறோம் எனதருமை சர்வேசா!
சீக்கிரம் வேண்டும் நீதி செய்துகொடு சர்வேசா!
சீக்கிரம் வேண்டும் நீதி; செய்துகொடு எங்கள் சர்வேசா!


(நண்பரிடமிருந்து)

2 comments:

  1. உயிர்வாழப் போராடுவது உரிமைவாதமா
    இல்லை தீவிரவாதமா?
    குலம் வாழ உயிர் மரிப்பவர்கள் உரிமைவாதிகளா
    இல்லை பயங்கரவாதிகளா?

    nice

    ReplyDelete
  2. உயிர் வாழ போராடுவது மனித உரிமை. அதைத்தடுப்பது மனித உரிமை மீறல்
    இனம் வாழ உயிர் மரிப்பவர்கள் தியாகிகள். அதை ஏற்படுத்துவது சர்வாதிகாரம்.

    அன்புடன் ஜோதிபாரதி

    ReplyDelete