Tuesday, October 05, 2010

எந்திரன் - 25 (விமர்சனமல்ல)

எந்திரன் - 25

1. ரஜினி நாமம் வாழ்க! ஷங்கர் நாமம் வாழ்க! மாறன் குடும்பம் வாழ்க!!

2. ரஜினி படத்தை இப்படி முதல் இரண்டு நாட்களில் தியேட்டர்க்குச் சென்று பார்ப்பது எனக்கு இது முதல் முறை. எப்போதும் ஆகாத ஒன்று என்று நினைத்திருந்தாலும் எந்திரனுக்குச் செல்ல நேர்ந்தது குடும்பத்தினருக்காக.

3. செல்லக்குட்டி ஆதித்யா(3) இது திரையில் பார்க்கும் முதல்படம். சேட்டை பண்ணுவான் என நினைத்து பயந்திருந்த வேளையில் படம் முழுவதும் கண்களை திரையில் விட்டு அகலாமல் பார்த்தது எங்களுக்கே ஆச்சரியம். ரஜினியா கொக்கா அல்லது கார்ட்டூனா கொக்கா?

4. சிங்கப்பூரிலும் ரஜினி ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து குதூகலிக்கிறார்கள் தியேட்டரில். வழக்கம்போல விசில் சத்தம் காதைப் பிளந்தது.

5. ரஜினியின் அறிமுகம் படத்தில் மிக இயல்பாக இருந்தது. வண்டுசிண்டு பண்ணுவது போல பறந்து வராமல், தாவிக்குதிக்காமல், விரலை ஒடித்து வித்தை காட்டாமல் சாதாரண அறிமுகம் சிறப்பாய் இருந்தது.

6. ஐஸ்வர்யா ராய் மிக அழகாக இருந்தார். மனம் லயித்து அவர் ஒவ்வொரு காட்சியிலும் இணைந்திருந்தார் என்று தோன்றியது.

7. சுஜாதா என்ற மேதைக்கு எப்போதும் ஒரு குறும்புத்தனம் உண்டு. சீரியஸான நேரத்தில் சிறுபிள்ளைத்தனமோ என்று சந்தேகிக்கும் அளவு அவர் அதை வெளிக்காட்டுவார். அதை அவரிடமிருந்து கற்ற ஷங்கர், அமரராகிவிட்ட அவருக்கு ஒரு நன்றியைச் சொல்லியிருக்கலாம்.

8. என்னதான் 'ரஜினி ரோபோ'வாக இருந்தாலும் இப்படியெல்லாம் உடலை வளைத்து பிரபுதேவா மாதிரியெல்லாம் ஒரு ரோபோ செய்யுமா என்ன? (சோனி நிறுவனத்தார் கவனித்திற்கு)

9. சுல்தான் த வாரியர் படத்திலிருந்து பல காட்சிகளைச் சுட்டு விட்டார்களோ எனத் தோன்றுகிறது.

10. ரஜினியின் குரல் கதாநாயகனுக்குப் பொருத்தமாக இல்லாமல் வில்லனுக்குப் பளிச்சென பொருந்துகிறது.

11. ரஜினி மிகச்சிறந்த வில்லன் நடிகர் என்பதை நான் இன்னொருமுறை இங்கே பதிவு செய்கிறேன்.

12. பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, டெக்னிக் சமாச்சாரங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதியதும் உலகத்தரத்துக்கு இணையானதும் ஆகும். ஆனால் ஆங்கிலப்படங்களை ஒப்பிடக்கூடாது.

13. ரோபோவின் செயல்பாடுகளைத் திரையில் ஆங்கில எழுத்தாகக் காட்டுவதால் (உதா. மேக்னெட் மோட் ஆக்டிவேடெட்) சி சென்டரில் புரிவதில் சிக்கல் ஆகலாம்.

14. கொசு தேசியபறவையாக ஆசைப்படுவது (சுஜாதாவின் குறும்புத்தனம் என நினைக்கிறேன்) என்ன, கொடுத்தே விடலாம். நாடு அப்படித்தான் இருக்கிறது. டெங்குலட்சுமி பாத்தும்மா.

15. ஒண்ணுமேயில்லாததை இப்படிச்செய்ய முடியுமாதலால், "தசாவதாரத்தை" ஷங்கர் இயக்கியிருந்தால் இன்னும் பெரிதாய் இருந்திருக்குமோ என்ற எண்ணம் வந்தது ஆச்சர்யம் அல்ல.

16. செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்துக்கு இப்படி யாரும் பணம் செலவு பண்ண முன்வந்திருந்தால் அது உலகத்தரத்துக்கு எட்டியிருக்கும் என்பதும் எனக்கு வந்த இன்னொரு எண்ணம்.

17. வசனம் சுஜாதா, ஷங்கர் மற்றும் கார்க்கி. ஜெயமோகனையும் சேர்த்திருக்கலாம், 90சதவீத வசனங்களில் நகைச்சுவையே மிஞ்சியிருக்கும் இந்தப் படத்துக்கு அவர் பொருந்தியிருப்பார்.

18. கலாபவன் மணி, கொச்சின் ஹனிஃபா, சந்தானம், கருணாஸ் ஆகியோரும் உண்டு. கொடுத்ததை நிறைவாக செய்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்.

19. உணர்வுகளைப் பரிணமிக்கும் சினிமா என்கிற கலையில் காசு பண்ணிக்கொடுப்பது என்பதைத் தொடர்ந்து காட்டிக்கொடுத்து ஆதரவளித்துவரும் ரஜினி, இனி உண்மையிலேயே நல்ல கதையை தேடி நடிப்பது காலம் கடக்கும் அவசியம்.

20. இயந்திரத்தையும் மனிதன் தனது காமகுரோத பேராசை எண்ணங்களினால் கெடுத்துவிடுகிறான் என்பதே ஷங்கர் சொல்லவரும் கடைசிச்செய்தி.

21. கமல் நாயகனாகவும் ரஜினி வில்லனாகவும் ஓர் படம் வந்தால் (என்னிடமும் ஒரு கதை இருக்கு) அது தமிழ்சினிமாவின் மகா வெற்றியாக இருக்கும்.

22. எந்திரன் - காஸ்ட்லி கார்ட்டூன்.

23. லாஜிக் பார்க்காவிட்டால் மேஜிக்.

24. சிவாஜி மறந்துபோனது போல எந்திரனும் மறந்து போகும்.

25. ரஜினி நாமம் வாழ்க! ஷங்கர் நாமம் வாழ்க! மாறன் குடும்பம் வாழ்க!!

4 comments:

  1. கரெக்ட், விமர்சனமல்ல. வயித்தெரிச்சல்.

    பைதபை, தசாவதாரம் ரீலிஸாகிவிட்டதா??

    ReplyDelete
  2. கரெக்ட். எரிச்சல், ஆனா வயித்தெரிச்சல் இல்லை. நெஞ்செரிச்சல்.

    என்ன செய்வது..? நெஞ்சு பொறுக்குதில்லையேன்னு எப்போதோ எழுதிவைச்சுட்டுப்போய்ச்சேர்ந்துட்டாலும் இப்போ அந்த பாட்டை நினைக்கவைக்கிற ரஜினிக்கு நன்றி.

    ஒரு திறமையானவனுக்கு கெடைக்கவேண்டிய எல்லா மரியாதையும் கௌரவமும் இவங்களுக்கும் கிடைக்குதேன்னு ஏதோ ஒரு வசனம்.... இடிக்குது, அவ்வளவுதான்.

    படம் முடிந்து ரிலீசானபின் சம்பளம் வாங்கிக்கொள்கிறேன் என்று ரஜினி சொல்லியிருக்கிறாராம், பாவம்முலா, கலாநிதிமாறன்! இருக்குற சொத்து பத்தையெல்லாம் வித்து, பொண்டாட்டி நகையெல்லாம் அடகு வெச்சு, ரஜினியை வெச்சி ஒரு படம் எடுக்குறார், நல்லது ஏதும் செய்யவேண்டாமா ரஜினி? நல்ல மனுஷனாச்சே!

    *******

    சிவாஜின்னு ஒரு படம், பட்டிமன்றம் ராஜாவும் சாலமன் பாப்பையாவும் நடிச்சது; அந்தப்படம் ரிலீசானது ஞாபகம் இருக்கா, அப்போ ரிலீஸ் ஆச்சு தசாவதாரம்.

    ReplyDelete
  3. உங்களை மாதிரியே எனக்கும் இடிக்குது...பாக்ஸ் ஆபிஸில் பத்து பைசாவுக்கு தேறாதவர்களெல்லாம் மத்தவங்களை தங்களுக்கு போட்டியா நினைச்சுட்டு அல்லாடறதை பார்க்கும்போது.... :-)

    ReplyDelete
  4. "ஒரு திறமையானவனுக்கு கெடைக்கவேண்டிய எல்லா மரியாதையும் கௌரவமும் இவங்களுக்கும் கிடைக்குதேன்னு ஏதோ ஒரு வசனம்.... இடிக்குது, அவ்வளவுதான்".

    அப்படியென்றால் தாங்கள் கமல் அவர்களை திறமையானவர் எனவும், ரஜினி அவர்களை திறமை அற்றவர் எனவும் கூற வரவதாக எனக்குத்தோன்றுகிறது.

    சினிமாவை உணர்ச்சிகளின் ஊடகமாக பார்ப்பவர்கள் மிகச்சிலரே தோழரே(அதில் நீங்களும் ஒருவர்). அன்றாட வாழ்விலும் அதே உணர்ச்சிகளுடன் அலுத்து, சிரித்து, வெறுத்து வாழும் எனகளுக்கு சினிமா என்பது அந்த உணர்ச்சியை சற்று நேரம் விடுதலை அடையச்செய்யும் மருந்து. அந்த பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படங்களையே எங்களை போன்ற சராசரி ரசிகர்கள் விரும்புவார்கள். நாங்கள் 150 ரூபாய் கொடுத்து உள்ளே சென்று அமர்ந்தால், எங்களுக்கு புரியதாற்றை படமாக கொடுக்கும் திறமைசாலிகளை விட, எங்களை சிறிது நேரம் ரசிக்க வைக்கும் வ்யபரிகலையே எங்கள் மனம் நாடுகிறது.

    ReplyDelete