Friday, April 08, 2011

“Tragedy of the commons” தமிழகத் தமிழனுக்கு ஒரு மடல்.

“Tragedy of the commons”
தமிழகத் தமிழனுக்கு ஒரு மடல்.


அன்புச் சகோதரா,

இம்மடலை படிக்கும் முன் ஒரு பிளேட் பிரியாணி நீ சாப்பிட்டிருக்கலாம் அல்லது உனது வீட்டு வாசலில் திடீரென்று ராவோடு ராவாக வந்திருக்கும் ஒரு வெள்ளிவிளக்கைத் தேய்த்து, பூதம் வருகிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கலாம். பூதத்தை நீ எதிர்பார்த்திருக்கையில் உனது வீட்டு வாசலில் கும்பிடு சகிதமாக ஒருவர் வருவதை நோக்கியிருக்கலாம். வந்தவர் படக்கென்று உன் காலிலோ உன் அம்மா காலிலோ விழுந்து வணங்கியிருக்கலாம். கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கண்ணகி குஷ்பு கதையையும் மாவீரன் வடிவேலு அல்லது அஞ்சா நெஞ்சன் சிங்கமுத்துவின் வரலாறையும் கேட்டுக்கொண்டிருக்கலாம். அல்லது எங்கேயிருந்தாவது ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு பறந்து, பாக்கெட்டுக்குள் வருமா என விக்கித்து வேடிக்கை பார்த்திருக்கலாம்.

எல்லாவற்றையும் பார்த்து பார்த்து அலுப்பான உனக்கு, ஐந்தாண்டு காலம் உன்னை வழிநடத்துவதற்கு, உனக்காகப் பரிந்து பேசுவதற்கு நீயே தேர்ந்தெடுக்கும் ஒரு முறைதான் இப்போது நீ செய்யப்போவது ”இந்த தேர்தலில்” என்பதை நான் உனக்கு நினைவுபடுத்த நேர்ந்தது காலத்தின் கோலம்தான்.

உனக்கும் உன் குடும்பத்திற்கும் ராஜபாட்டை விரித்திருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள். உலக வரலாற்றில், கடும் போரினாலும் வறுமையினாலும் அவதிப்படுகையில் கூட இலவசமாய்க் கிடைக்காதது எல்லாம் உனக்கு இனிமேல் இலவசமாய்க் கிடைக்கப்போகிறது.

மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம், ஆடு, மாடு, குடிக்கத்தண்ணீர் என்றெல்லாம் கிடைக்கும் என்று நீயும் சந்தோசத்தில் மிதந்துகொண்டிருப்பாய்; கூட, வீடும், வீடு கட்ட கடனும் தருகிறார்களாம். அரிசி தருகிறார்களாம். அப்படியே ஒரு பெண்ணையும் கொடுத்தால் நீ சந்தோசமாய் படுத்துக்கொண்டிருக்கலாம்.

சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்னால், விஞ்ஞானத்தின் விழுதுகள் நம்மைத்தீண்டாத வேளையில், கல்வி நிலையங்களையும் தொழிற்சாலைகளையும் திறந்த ’படிக்காத பெருந்தலைவர்கள்’ எங்கே, இன்று இலவசங்களை வாரி வழங்கும் முட்டாள்கள் எங்கே என்று கொஞ்சம் யோசிப்பாயா?

எந்த நாட்டிலும் ’இத்தனையாயிரம் வேலைகளை’ நான் எனது ஆட்சிக்காலத்தில் உருவாக்கினேன் என்று பெருமைப்படும் தலைவர்கள் எங்கே? எனது ஆட்சிக்காலத்தில் இதெல்லாம் இலவசமாகக் கொடுத்தேன் என்கிற அறிவற்ற நம் தலைவர்கள் எங்கே? இலவசமாக கிடைக்கும் எந்தப்பொருளையும் இலவசமாய் செய்யமுடியுமா என்று யோசித்துப்பார்ப்பார்களா? மிக்ஸி இலவசமாய் செய்ய முடியுமா? மிக்ஸியில் உள்ள இரும்பு இலவசமாய் வருமா? இலவசமாய் கிடைக்கும் ஒரு பொருளை பயன்படுத்துவதற்கு மின்சாரம் இலவசமாய் கிடைக்குமா? உள்ளதுக்கே மின்சாரம் இல்லாமல், அறிவிக்கப்படாத மின்சாரவெட்டு தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு பலமணிநேரம் பாடாய் படுத்தும்போது, மிக்ஸியை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய்?

சுகாதாரத்தையும், கல்வியையும், தொழிற்சாலைகளையும் மேம்படுத்தாத எந்தநாடும் இறுதியில் என்ன ஆகும் என்பதற்கு எத்தனை உதாரணங்கள் நம் கண்முன்னே உள்ளன!?

நீ குடித்தால் நீ மட்டும் ஆட்டம் போடுவாய். நீ குடியை நிறுத்தினால் அரசாங்கமே ஆட்டம் காணும் என்பதை நீ அறிவாயா? மக்களின் உடல்நலத்தையும் குடும்ப நலத்தையும் கெடுத்து இலவசங்களை வாரியிறைப்பதால் என்ன ஆகும்?

வெளிநாட்டில் பிழைப்பு நடத்தும் எல்லா மனிதனுக்குமே ஏதாவதொரு ஏக்கம் சொந்த ஊரைப்பற்றி இருக்கும். சுத்தத்தில் ஆரம்பித்து, வாழ்க்கை வசதிகள், சுற்றுலா வசதிகள், மனநிறைவான வாழ்வு என ஏதாவதொன்றை சொந்த ஊரில் காணும் கனவை இணைத்து வாழ்ந்து கொண்டேயிருப்பதுதான் வெளிநாட்டு வாழ்க்கை. இவையெல்லாம் அற்ப மாயைகளாய் ஆடம்பர கனவாய் இனி காலாகாலத்திற்கும் அமைந்துவிடுமோ என்று ஆதங்கப்படுகின்றது மனது.

இப்போது தமிழ்நாட்டில் நடப்பது என்ன தெரியுமா உனக்கு? ”பொதுத்தனத்தின் பயங்கரம்” என்றால் என்னவென்று அறிவாயா? எல்லோருக்கும் பொதுவான ’இரண்டு ஏக்கர்’ இடத்தில் வீட்டுக்கு நாலு மாடு மட்டும் என, வாங்கி வளர்த்தால், பிரச்சனையில்லை. வேண்டும் அளவுக்கு ஒவ்வொருவரும் மாடு வாங்கிவிடலாம் என்றால் என்ன ஆகும்? எல்லா மாடுகளும் செத்துப்போய்விடும் அல்லவா? அவன் ரெண்டு இலவசம் தருகிறான்; நான் நாலு இலவசம் தருகிறேன் என்றால், இந்த நாடு என்ன ஆகும்?

ஒவ்வொரு வீட்டு கழிவுமே ஒரு கூவம் நதியை உருவாக்கியதைப் போல இந்த ’இலவச பொதுப்புத்தி’ எத்தகைய பாதை விட்டுவிட்டுச்செல்லும் அறிவாயா நீ? உனது சந்ததி இனி காலாகாலத்திற்கும் இலவசத்தை எதிர்பார்த்தே பழக்கப்பட்டு கோயில் வாசலில் அமர்வதைப்போல தேர்தல் வாசலில் அமர்த்தப்படும். இலவசங்கள் தருவதே அவர்களின் கடமை; பெறுவது உனது உரிமை என்றாகும்; இலவசமாய் கிடைக்காதபோது வெகுண்டெழுவாய்; கொள்ளைகளும் களவுகளும் நிகழும். சமுதாயம் அதை புரட்சி என்றழைக்கும், ஒரு பூகம்பமோ சுனாமியோ அனைத்தையும் வாரிக்கொண்டு போகும் வரையில்.

இப்போது நான் உனக்குச் சொல்லப்போவது ஒன்றே ஒன்றுதான். உன்னைச்சுற்றி வருபவர்கள் கண்ணீர் விடுவார்கள்; கலங்குவார்கள்; காரியமாய் நடிப்பார்கள்; உனக்கு அடிமை என்பார்கள்; கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்பார்கள். காந்தி நோட்டுகளை அள்ளிவீசுவார்கள். கற்பு முதல் கல்லறை வரை அனைத்தும் இலவசம் என்பார்கள். காந்தியக்கூட்டணி என்பார்கள். முற்போக்கு என்பார்கள். அவன் குடிகாரன்; நான் யோக்கிவான் என்பார்கள்; நான் தமிழன்; தமிழனைக் காக்க வந்த தமிழன் என்பார்கள்; பரம்பரை வாழ்ந்த இடம் என்பார்கள்; படுத்து உறங்கிய தெரு என்பார்கள்; தன்மானம் என்பார்கள்; தமிழ் மானம் என்பார்கள்; சிறுத்தைகளாய் சிங்கங்களாய் ஜாதிக்கொடியுடன் வருவார்கள்; கல்வித்தந்தையர்கள் என்பார்கள்; இன்னும் என்னென்னவோ பிதற்றுவார்கள்.

யாருக்கு நீ ஓட்டுப்போடப்போகிறாய்? யாருக்கு நீ போட்டாலும் அவன் எவனுக்கோ ஜால்றா போடப்போகிறான். தமிழ் உணர்வு காக்கப்போகிறேன் என வருபவன் பதவியோடு அமர்ந்து சுகவாசியாகப்போகிறான். கூட்டணி இல்லை என்றவன் கூட்டணி ஆட்சிக்கு கோடிகளைப் பெறப்போகிறான்.

ஒன்றே ஒன்று மட்டும் செய். வைகோ என்ற மானத்தமிழன் செய்ததைச் செய். நேரே ஓட்டுச்சாவடிக்கு சென்று ”49ஓ” வை அழுத்தி விட்டு வா. வருங்கால சந்ததியினரின் மாபெரும் விடுதலைக்கு நீ இடும் முதல் கைரேகை அது!!


எம் கே குமார்

No comments:

Post a Comment