Thursday, September 22, 2011
சிங்கப்பூர் அதிபர் தேர்தல் சொல்லும் சேதி
நாட்டுக்காக உழைத்த நல்லவர், வயதாகி, உயிரோடிருக்கும் காலத்தில் வழங்கப்படும் உயரிய பதவியாகத்தான் ஜனாதிபதி பதவி, இந்தியா உள்ளிட்ட பெரும்பான்மையான நாடுகளில் இருக்கின்றது. சிங்கப்பூரிலும் அப்படித்தான்! இந்தியாவில் எம்பிக்கள் ஓட்டு போடுவர்; இங்கு எல்லா மக்களும்!
12 வருடங்களாக அதிபராய் இருந்த திரு. செல்லப்பன் ராமநாதன் அவர்கள் தாம் இனி போட்டிபோடப்போவதில்லை என்று சொல்லும் முன்பே ஆங்காங்கு தான் போட்டியிடப்போவதாகக் குரல்கள் எழுந்தன.
நான் வந்தால் நாய் தருவேன், ஆணையிட்டால் ஆனை தருவேன், போன் பண்ணினால் பூனை தருவேன் என்றெல்லாம் சில சவால்கள் வலம் வந்தன. சட்ட அமைச்சர் திரு கா சண்முகம் சாதரணமாய்ச் சொல்லிப்பார்த்தார். இது சாதாரண பதவி; எதையும் இதன்மூலம் உருவாக்கமுடியாது, ஆம் இல்லை என்று தான் சொல்லமுடியும் என்று ‘சொல்லாமல்’ சொன்னர். புரிந்தவர்களுக்குப் புரிந்தது. புரியாதவர்களுக்கும் புரிந்தது, ஆனால் அவர்கள் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.
சிங்கப்பூரில் ஜனாதிபதிக்குப் போட்டியிடுவதை விட, போட்டியிட அனுமதியளிக்கும் பத்திரத்தை, அதற்கான குழுவிடம் இருந்து வாங்குவதே ’இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவது மாதிரி’ கடினம். தனம், கணம், வனம், பாரிய வளம் என்று ’மில்லியனில்’ பொருத்தம் பார்க்கப்படும். காரணம், சிறை காக்கும் காப்பு எவனும்செய்யும்; இது ’தனம்’ காக்கும் காப்பு. நாட்டின் பல பில்லியன் சொத்தைக் காக்கும் பொறுப்பு.
ஏழாவது அதிபராகப் பதவியேற்க நான்கு ’டான்’கள் (திருவாளர்கள் டோனி டான், டான் செங் போக், டான் கின் லியான், டான் ஜீ சே) போட்டி போட்டார்கள்.
’திரு டோனி டான்’ பல காலம் நாட்டுக்காய் உழைத்தவர். துணைப்பிரதமர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். அறிவிக்கப்படாத ஆளும் அரசாங்க வேட்பாளராய் நின்றார் அவர்.
’திரு டான் செங் போக்’, ஆளும் கட்சியிலே 30ஆண்டுகள் இருந்தவர். இப்போது இல்லை. மருத்துவர். இலவச மருத்துவமனைக்குச் சொந்தக்காரராம்.
’திரு டான் கின் லியான்’ அரசாங்கத்தின் நிறுவமொன்றில் பெரிய பதவியில் இருந்தவர்.
’திரு. டான் ஜீ சே’ எதிர்க்கட்சி குழுமத்தைச் சேர்ந்தவர். மக்களின் நாடித்துடிப்பை பதம்பார்த்தவராய் களத்தில் குதித்திருந்தார். பிரச்சாரத்தில் இவர் பேசியதைப்பார்க்க பல ஆயிரம் மக்கள் திரண்டதைப் பார்த்து நாளிதழ்களே மிரண்டன.
கடந்த 27ஆம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் (நானும்) எதிர்பார்த்ததைப்போலவே திரு டோனி டான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். நாட்டின் ஏழாவது அதிபராகப்பொறுப்பேற்றார். வேறுபாடுகளைக் கடந்து எல்லா சிங்கப்பூரர்களையும் இணைக்கப்போவதாக, அவர் சொல்வதன் அர்த்தம் புரியாமல் அவர் பேசமாட்டார். அவருக்கு வாழ்த்துகள்.
இத்தகைய தேர்தல்கள் எனக்கு கொஞ்சம் பயத்தைத் தருகின்றன. இந்தியாவின் ஜனாதிபதியாய் அப்துல்கலாம் அவர்கள் ஆனதைப்போல மட்டுமே, சிங்கப்பூரில் இந்தியரோ மலாய்காரரோ அதிபராக ஆக முடியும். திரு. தேவன்நாயரும், திரு எஸ்.ஆர் நாதனும் அப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடுமையான தேர்தல்கள் அதற்கான வாய்ப்பைக் குறைக்கவே செய்யும்.
எம்.கே.குமார்
கறிக்கு சண்டை போடலாம்; Curryக்கி சண்டையா?
’காதல்’ படம் பார்த்தீர்களா? 10வது படிச்சிக்கிட்டு இருக்கும் பொண்ணு பாலத்துக்குக் கீழே உக்காந்து ’காதல்’ பண்ணுமே அந்தப் படம். சரி, அது என்னமோ பண்ணிட்டுப்போவுது விடுங்க, நம்ம கதைக்கி வாங்க. அந்தப்படத்துல, பூப்புனித நீராட்டுவிழா (அடடா! எவ்வளவு அழகா நம்மாளுங்க பேரு வெச்சிருக்காய்ங்க இந்த விழாவுக்கு!) நடக்கிற விருந்துல, பிரியாணியில ரெண்டு துண்டு கறி, கூடப்போடச்சொல்லி அருவா காட்டுவான் ஒருத்தன். அதனால பின்னாடி சண்டையும் நடக்கும். அதுதான் கறிக்கி சண்டை!
இப்போ சிங்கப்பூர்ல ரொம்ப ஃபேமஸா நடந்துக்கிட்டு இருக்க போட்டி curryக்கி சண்டை!
சிங்கப்பூரில், ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் கான்கிரீட் கூடுகளின் ஒரு மாடியில் அடுத்தடுத்த வீட்டில் ஒரு சிங்கப்பூர் இந்தியர் குடும்பமும் சீனாவிலிருந்த வந்த ஒரு சீனக்குடும்பமும் வசித்துவந்தது.
ஒட்டுமொத்த சிங்கப்பூரில், வீட்டில் சமைத்துச் சாப்பிடும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்டோரில், இந்த இந்தியர் குடும்பம் வைத்த மீன் குழம்பு பக்கத்து வீட்டிற்காரருக்கு வாசனையாய்ச் சென்று எரிச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது. மிளகாய் தான் எரிச்சல் கிளப்பும், இங்கே மீன் மசாலா எரிச்சல் கிளப்பிவிட்டு விட்டது போலும். சரி, நம்ம வீட்டு ’டூரியன்’ எதிர்வீடு, எதிர் பிளாக் என ஏரியா முழுக்க, ஏகக்கலவரம் பண்ணவில்லையா என்று அவரும் இருந்திருக்கலாம். படி தாண்டி வந்து பங்காளிச்சண்டை போட்டுவிட்டார் போலிருக்கிறது.
பத்திக்கொண்டது இணையதளத்தில்.
குழம்பு எங்களின் உரிமை, குழம்பு சமைப்பது எங்களது குலத்தொழில், குழம்பு சமைப்பது எங்களின் பாரம்பரியம், குழம்பு சாப்பிடுவது எங்களின் வீரம் என்று ஒரு பெண் வெப்கேமுக்கு முன்னால் வந்து வாயை வாயைக் காட்டிவிட்டுப்போனார். வெப்கேமிராவைக் கடிக்காத குறைதான்.
’ஆன்லைனில்’ வந்த அதை ’பிரிண்ட்லைனில்’ போட்டுவிட்டது ஒரு பத்திரிகை. ஏரியா ஏடாகூடமாகிவிடுமோ என்று பயந்திருந்தவேளையில் அமைச்சர் தலையிட்டு துள்ளிக்கொண்டுருந்த மீன் கறி பிரச்சனையை துடைத்து எறிந்துவிட்டார்.
மீன் கறி முடிந்தது. மீன் எலும்பு இன்னமும் இருக்கிறது. இணையத்தில் இப்போதும் அது துடித்துக்கொண்டிருக்கிறது.
எம்.கே.குமார்