Thursday, September 22, 2011
கறிக்கு சண்டை போடலாம்; Curryக்கி சண்டையா?
’காதல்’ படம் பார்த்தீர்களா? 10வது படிச்சிக்கிட்டு இருக்கும் பொண்ணு பாலத்துக்குக் கீழே உக்காந்து ’காதல்’ பண்ணுமே அந்தப் படம். சரி, அது என்னமோ பண்ணிட்டுப்போவுது விடுங்க, நம்ம கதைக்கி வாங்க. அந்தப்படத்துல, பூப்புனித நீராட்டுவிழா (அடடா! எவ்வளவு அழகா நம்மாளுங்க பேரு வெச்சிருக்காய்ங்க இந்த விழாவுக்கு!) நடக்கிற விருந்துல, பிரியாணியில ரெண்டு துண்டு கறி, கூடப்போடச்சொல்லி அருவா காட்டுவான் ஒருத்தன். அதனால பின்னாடி சண்டையும் நடக்கும். அதுதான் கறிக்கி சண்டை!
இப்போ சிங்கப்பூர்ல ரொம்ப ஃபேமஸா நடந்துக்கிட்டு இருக்க போட்டி curryக்கி சண்டை!
சிங்கப்பூரில், ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் கான்கிரீட் கூடுகளின் ஒரு மாடியில் அடுத்தடுத்த வீட்டில் ஒரு சிங்கப்பூர் இந்தியர் குடும்பமும் சீனாவிலிருந்த வந்த ஒரு சீனக்குடும்பமும் வசித்துவந்தது.
ஒட்டுமொத்த சிங்கப்பூரில், வீட்டில் சமைத்துச் சாப்பிடும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்டோரில், இந்த இந்தியர் குடும்பம் வைத்த மீன் குழம்பு பக்கத்து வீட்டிற்காரருக்கு வாசனையாய்ச் சென்று எரிச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது. மிளகாய் தான் எரிச்சல் கிளப்பும், இங்கே மீன் மசாலா எரிச்சல் கிளப்பிவிட்டு விட்டது போலும். சரி, நம்ம வீட்டு ’டூரியன்’ எதிர்வீடு, எதிர் பிளாக் என ஏரியா முழுக்க, ஏகக்கலவரம் பண்ணவில்லையா என்று அவரும் இருந்திருக்கலாம். படி தாண்டி வந்து பங்காளிச்சண்டை போட்டுவிட்டார் போலிருக்கிறது.
பத்திக்கொண்டது இணையதளத்தில்.
குழம்பு எங்களின் உரிமை, குழம்பு சமைப்பது எங்களது குலத்தொழில், குழம்பு சமைப்பது எங்களின் பாரம்பரியம், குழம்பு சாப்பிடுவது எங்களின் வீரம் என்று ஒரு பெண் வெப்கேமுக்கு முன்னால் வந்து வாயை வாயைக் காட்டிவிட்டுப்போனார். வெப்கேமிராவைக் கடிக்காத குறைதான்.
’ஆன்லைனில்’ வந்த அதை ’பிரிண்ட்லைனில்’ போட்டுவிட்டது ஒரு பத்திரிகை. ஏரியா ஏடாகூடமாகிவிடுமோ என்று பயந்திருந்தவேளையில் அமைச்சர் தலையிட்டு துள்ளிக்கொண்டுருந்த மீன் கறி பிரச்சனையை துடைத்து எறிந்துவிட்டார்.
மீன் கறி முடிந்தது. மீன் எலும்பு இன்னமும் இருக்கிறது. இணையத்தில் இப்போதும் அது துடித்துக்கொண்டிருக்கிறது.
எம்.கே.குமார்
No comments:
Post a Comment