Thursday, August 02, 2018

உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல் - ஆக் மாண்டினோ

இந்த வாரம் வாசித்த புத்தகம் “ஆக் மாண்டினோ Mandino Og” என்பவர் எழுதிய உலகப்புகழ்பெற்ற ”உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்”  என்ற புத்தகம். ஆங்கிலத்தில் ”The greatest salesman in the world" என 1968ல் வெளிவந்திருக்கிறது. தமிழில் தேவவிரதன் என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். பொம்மையை அல்லாமல் ஏறக்குறைய பெண்ணை முத்தமிட்ட மொழிபெயர்ப்புதான். ஆங்கிலத்திலும் எளிய வகையில் படிக்கமுடிகிறது. 

மிகவும் ஏழையாயிருந்து செல்வந்தரான வயதானவர் ஹபீத், தன் நெருங்கிய உதவியாளத்தோழன் எராஸ்மஸிடம் தன் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு அவருக்குக்கொஞ்சம் வைத்துக்கொண்டு மற்றவற்றை இல்லாதவர்க்குக்கொடு என கட்டளையிடுவதில் ஆரம்பிக்கும் கதை. அவருடைய வீட்டின் ரகசிய உச்சி அறையில் விலையில்லா ரத்தினக்களும் பொன்னும் குவிந்துகிடப்பதாய் வதந்தி பரவிக்கிடக்கும் வேளையில் முதமுதலாய் அந்த அறையில் உள்ள பெட்டியைத்திறந்து தன் நண்பனுக்குக் காட்டுகிறார் ஹபீத். அதனுள்ளே பத்து ஓலைச்சுருள்கள் போன்ற துணியில் எழுதப்பட்ட சுருள்கள் உள்ளன. அவை என்ன அவற்றில் உள்ளது என்ன அவை எப்படி வந்தது அவரிடம் எனத்தொடரும் புத்தகம்..

தன்முனைப்புப் புத்தகங்களை எங்கு கண்டாலும் நான் மேலும் கீழும் பார்த்துவிட்டு வந்துவிடுவதுண்டு. இந்த புத்தகம் திடீரென எடுக்கத்தோன்றியதுகூட ஏதோ ஒரு நிலையற்ற தன்மையால் இருக்கலாம். ஏறக்குறைய இந்த புத்தகத்தின் ஆசிரியனுக்கு நேர்ந்ததுபோல.

ஆக் மாண்டினோ ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, வேலை இல்லாததால் வீட்டில் முடங்குகிறான். இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை, அதுவும் சரி வரவிலை. குடிக்க ஆரம்பிக்கிறான். குடிகாரனாகி குப்பைத்தொட்டியில் விழுந்து சாகும் நிலைக்கு வருகிறான். மனைவியும் மகளும் பிரிகின்றனர். இறுதியாக தற்கொலைக்குத்தயாராகிறான். கைத்துப்பாக்கி ஒன்றை வாங்கலாம் என கடைக்குச்சென்றுவிட்டு அக்கடையிலிருந்து நேரே மனம்போன போக்கில் நடக்கிறான். அங்குதான் அந்த தேவதையை அவன்கண்டுகொள்கிறான். அத்தேவதை அவனை எடுத்துவளர்க்கிறது, உருவாக்குகிறது, அவனுடைய ஆற்றலை அவனுக்கு உணர்த்துகிறது. அந்ததேவதை ஒரு நூலகம்.

பிறகு அவன் வாழ்க்கை திரும்புகிறது. வாழ்க்கையில் வெற்றிபெறுகிறான். உலகின் மிக அதிகமான விற்பனையாகும் புத்தகங்களை எழுதிக்குவிக்கிறான்.

புத்தகத்தில் பத்து சுருள்கள் என தனக்குத்தானே கொள்ளவேண்டிய பத்து கட்டளைகள் இருக்கின்றன. நன்று. எனக்கும் தேவைதான். மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக, சுருள் ஒன்பதில், (The Scroll Marked IX) ’செயல்வீரன்’ என்ற தலைப்பில்சொல்லப்பட்டது, 
”I will act now; 
  My dreams are worthless, my plans are dust, my goals are impossible.
  All are of no value unless they are followed by action.
  I will act now.” 
எனக்கும் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று இத்தருணத்தில். 


No comments:

Post a Comment