Sunday, May 10, 2020

The Boy Who Harnessed the Wind (2019) - English

Image may contain: 1 person, sitting

The Warm Heart of Africa என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடு மலாவி Malawi. (ஆம், மலாவி என்றொரு தேசம் என்று சாரு எழுதிய அதே மலாவிதான்) பிரிட்டிஷ் காலனியாக இருந்து அறுபதுகளில் சுதந்திரம் பெற்றது. தனிநபர் வருமானத்தில் உலகிலேயே மிகக்குறைந்த ஏழை நாடுகளில் ஒன்று. விவசாயமும் காடழித்தலும் முழுநேரத்தொழில். அத்தகைய கிராமமொன்றில் ஒரு ஏழைச்சிறுவன் சுமக்கும் கனவு இப்படம்.

மின்சாரம் கிராமப்புறங்களுக்கு வருமுன் மழைப்பொழிவை நம்பி வாழும் விவசாயக்குடிமகன் Trywell. தன் மனைவி, கைக்குழந்தை, மகன் William மற்றும் மகளுடன் வறுமையில் வசித்துவருகிறான். வறுமையில் வாடினாலும் தன் மகனை எப்படியாவது படிக்கவைத்துவிடவேண்டும் என அருகிலிருக்கும் பள்ளியில் சேர்த்துவிடுகிறான். தொடர்ந்து பள்ளிக்கு செலுத்த பணமில்லாததால் பள்ளியிலிருந்தும் அவன் நிற்க நேரிடுகிறது. பள்ளியையே இப்படி மாணவர்கள் இல்லாமல் மூட நேருகிறது

பொய்த்த விவசாயம். மரங்களை வெட்டிக்கொள்ள நிறுவனங்களுக்கு சட்டமியற்றும் ஊழல் அரசாங்கம். தொடர் பஞ்சம். அரிசிக்கும் சோளத்துக்கும் ஆளாய்ப்பறக்கிறார்கள். திறந்து கிடக்கும் வீட்டுக்குள் வருபவன் என்னை மன்னித்துவிடு சாப்பிட்டு நான்கு நாட்களாகின்றன என்று அங்கிருக்கும் அரிசியை திருடிக்கொண்டு ஓடுகிறான்.

இத்தகைய வறுமைச்சூழலில் படிப்பை விட்ட சிறுவன் வில்லியம்ஸுக்கு டைனமோ வைத்த சைக்கிள், பேட்டரியால் இயங்கும் ரேடியோ, பேட்டரியால் இயங்கும் விளக்கு ஆகியவற்றின்மீது ஆர்வம் வருகிறது. பள்ளி நூலகத்தில் (திருட்டுத்தனமாக நூலகத்திற்கு வருகிறான்) இருக்கும் மின்சக்தி குறித்த புத்தகமும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

ஏதோ ஒன்று அவனை முன்னோக்கித்தள்ளுகிறது. இவைகளைப்பயன்படுத்தி காற்று அதிகம் வீசும் அப்பகுதியில் மின்சாரத்தை உருவாக்கமுடியும் என்று நம்புகிறான். அதைக்கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கமுடியும் என்றும் அதை வைத்து விவசாயம் செய்யமுடியும் என்றும் முயற்சி செய்கிறான். நண்பர்கள் நம்பவில்லை. தந்தையும் வேதனையின் உச்சத்தில், இவன் இப்படி விளையாட்டுப்பையனாய் இருக்கிறானே என்று திட்டி அடிக்கிறார்.

ஆனாலும் பிடிவாதமாய் இருக்கும் வில்லியம் காற்றிலிருந்து மின்சாரம் எடுத்தானா, அப்பாவுக்கு தன்னை நிரூபித்தானா என்பதுதான் இந்தப்படம்.

டைனமோ வைத்த சைக்கிள், இலண்டியம் விளக்கு என்று மின்சாரம் இல்லாத ஒருகாலத்தைக் கண்முன் கொண்டுவருகிறார்கள், வீட்டுக்குள் குவித்துக்கிடக்கும் சோளம், சாவுக்கு வரும் (வறுமையில் வாடும்) மலாவி ஆதிவாசி நடனக்குழு, காடுகள் அழிப்பு, ஊழல் அரசாங்கம் இப்படி வரலாற்று பண்பாட்டு அங்கங்களையும் கதைக்குள் கொண்டுவருகிறார்கள்.

William Kamkwamba and Bryan Mealer எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இதை எழுதி, தயாரித்து இயக்குனராக அறிமுகமாயிருக்கிறார்
ஆங்கில நடிகர் Chiwetel Ejiofor. அவரே தந்தையாகவும் நடித்திருக்கிறார்.

சாப்பாட்டிற்குத் தவிக்கும் துயரமாய் கடைசியாய் பார்த்த சினிமா வறுமையின் நிறம் சிகப்பு. அதற்குப்பிறகு பஞ்சம் பட்டினி குறித்த வாழ்வியலை முன்வைத்த சினிமாக்கள் அவ்வளவாய் இல்லையென நினைக்கிறேன். (இது ஒரு சினிமா ஆய்வுக்கட்டுரைக்குரிய முக்கிய சிந்தனை) பஞ்சம் சார்ந்த ஏதோ நினைவுகளை மீண்டும் தட்டி எழுப்பிவிட்டுவிட்டது இந்தப்படம்.

Maxwell Simba என்னும் நைரோபிய சிறுவன் வில்லியமாக நடித்திருக்கிறான். அவனுடைய கனவு நம் கண்களில் நிற்கிறது.

எம்.கே.குமார்
#MK_movies

No comments:

Post a Comment