Wednesday, September 24, 2003

oru kaditham!

இது ஒரு கடிதம். எதிர்வாதக்கடிதம். உள்ளங்கை அளவுக்கு மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் நெல்லிக்காய் அளவுக்கு உண்மை இருப்பது உண்மை. அந்த உண்மையை வைத்து படைக்கப்பட்ட கடிதம் இது.

சொர்க்கத்திற்குக்கடிதம். கடிதம் 1.


அன்புள்ள அண்ணாவிற்கு,
ஆத்மார்த்தமான வணக்கங்கள். வெளியே நானும் நலமாய் இருக்கிறேன்.
'தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப்போல்
நீண்ட பொழுதாக- எனது
நெஞ்சந்துடிப்பது' யாருக்கும் தெரியாது. இந்தியாவின் நூறு கோடி முகங்களில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஆயிரம் பழகிய முகங்கள் கொல்லப்படுகின்றன. முப்பது கோடி முகத்தை நூறு கோடி ஆக்கியவர்களின் தீரம் மற்ற வீரச்செயல்களில் இங்கே எடுபடவில்லை. நதிகளை இணைக்கவே நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். தனியரு மனிதனுக்கு உணவென்ன? தவளையும் எலிகளுமே கிடைக்கவில்லை. தண்ணீர் வேறு. சொல்லவா வேண்டும்?

இதெல்லாம் இருக்கட்டும். இது தெரிந்தகதை. உலகம் அறிந்த கதை. நம் கதைக்கு வருகிறேன்.

ஏன் இப்படிச்செய்தீர்கள்? நீங்கள் எப்படிச்செய்யலாம் இப்படி? நீங்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்டீர்களோ இல்லை தமிழுக்காக பாடுபட்டீர்களோ எனக்குத்தெரியாது. அதெல்லாம் இந்நாட்டில் அவசியமே இல்லாததாய் ஆகிவிட்டது. நான் கேட்கப்போவது அதுவன்று. எப்படி நீங்கள், தங்களை நம்பி வந்த பெண்ணை கஷ்டப்படுத்தி ஒரு நல்ல குடும்பத்தலைவனாய் இல்லாமல் போகலாம்? ஞான மார்க்கத்தை அடைய எது சிறந்த வழி என்ற கேள்விக்கு நல் இல்லானாய் இருப்பதே என்பதை எல்லா மதங்களும் சொல்லிக்கொண்டிருக்க எப்படி நீங்கள் அதிலிருந்து மற்ற 'வெட்டி வேலைகளுக்காக' விலகி குடும்ப உறுப்பினர்களின் சுகங்களை மேம்படுத்தாமல் மொத்தமாய் அவர்களை துக்கத்தில் ஆழ்த்தலாம்? இது ஒன்றுதான் எனக்கு உங்கள்மேல் இன்னும் கோபத்தை வரவழைத்துக்கொண்டிருக்கிறது.

'பராபகாராத்தம் இதம் சரீரம்' என்றறிந்த தங்களுக்கு எப்படி தன் இல்லாளுக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் அது பொருந்தும் என்பது தெரியாமல் போயிற்று?

மிகுந்த திறமை மிகுந்தவரான தங்களது தந்தை பணக்கஷ்டத்தினால் வருந்தி இறந்த பின் கூட தங்களுக்கு அதை நினைத்து பணத்தின் மேல் வெறுப்பு வந்ததே தவிர அதுவேதான் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பது எப்படி தெரியாமல் போயிற்று? ஆயினும் தாங்கள் கடைசிவரை பணத்தாசையைக்குறைத்துக்கொண்டாலும் கூட உடை நடைகளில் புதுமையையும் விதவிதங்களையும் விரும்பியவராய் இருந்தீர்களே அது எப்படி? இது இல்லாமல் அது எப்படி இருக்க முடியும் என்றபோதாவது தாங்கள் அதைப்பற்றி யோசிக்க முயன்றிருக்கவேண்டாமா?
நாளன்று போவதற்குள் நான் பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ தறி படுமோ யார் படுவார்' என்றும் ஜீவியத்துக்காக திணறி, ஒரு வார்த்தையும் பேசாமல் நித்திரையும் செய்யாமல் தெருத்திண்ணையில் உட்கார்ந்து, ' தெய்வமே! ஒரு வழியுமில்லையா?" என்று அனுபவித்த தாங்கள் எப்படி இரண்டாம் நாளில் அத்தனையையும் மறந்து போனீர்கள்?

'தேடக்கிடையாத சொர்ணமே, உயிர்ச்சித்திரமே,
மடவன்னமே, அரோசிக்குது பால் தயிரன்னமே,
மாரன் - சிலைவேல்களை - கொலைவேலென - விரி
மார்பினில்- நடுவே தொளை
செய்வது கண்டிலை யின்னமே- என்ன
செய்தேனோ நான் பழி முன்னமே?
கன்னத்தில் குயிற்சத்தமே கேட்கக்கன்றுது பார்
எந்தன் சித்தமே, மயக்கம் செய்யுதே காமப்பித்தமே,
உடல் கனலேறிய மெழுகாயினும் உம் மடி பாதகி
கட்டியணைத்தொரு முத்தமே தந்தால்
கைதொழுவேன் உன்னை நித்தமே'

என்று கட்டிய மனைவிமேல் காதல் கணைகள் வீசிய தாங்கள் எப்படி " ஓர் உயர்ந்த அதிர்ஷ்டம் எனக்குக்கிடைத்தும் அதை அனுபவிக்கக்கொடுத்து வைக்க்காமற்போகுமோ" என்று அவள் புலம்பும்படி ஆக்கிவைத்தீர்கள்?

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையை உதறிய நீங்கள் எப்படி மனைவி நோக வாழ்ந்து பார்த்தீர்கள்?

பூரண கர்ப்பிணியான அவரை விடுத்து எப்படித்திரிந்தீர்கள் உலகை சுற்றும் எண்ணத்தோடு?

சிறீ சங்கரகிருஷ்ணனை ஞாபகம் இருக்கிறதா? தினம் தண்டால் எடுத்து பஸ்கி பழகி கட்டுமஸ்தான உடம்போடு காரியம் மேற்கொள்ளும் அவனையும் அல்லவா கெடுத்தீர்கள்? கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் உள்ளே போன அவன் திரும்பி வரும் வரை அவன் இளம் மனைவி தாய் தந்தையர் பட்ட கஷ்டம் எப்படித்தெரியும் உங்களுக்கு? வெளியில் வந்து சில நாளில் இறந்து போய் விட வறுமைப்பேய் அவர்களை வாட்டியது மறக்கமுடியுமா? என்ன பலன் கண்டீர்கள்? அவரை எத்தனை பேருக்குத்தெரியும் இன்று?

தனக்கே ஆகாரத்திற்கு அடுக்களையில் பூனை விரட்டியபடி இருக்கும் மனைவியிடம் போய் 35 பேருக்கு தினமும் சமைக்கச்சொன்னால் எப்படி முடியும் அண்ணா? அண்ணி என்ன அள்ள அள்ளக்குறையாத பாத்திரமா வைத்திருந்தார்?

சங்கர கிருஷ்ணனும் மற்ற 35 பேர்களுமா கஷ்டப்பட்டார்கள் உங்களால்? செல்லம்மா அண்ணியின் அண்ணன் ரங்கூனில் இருந்து வந்தார் அவரையும் அல்லவா போலீஸ் கைது செய்தது. அதுமட்டுமா அவரது தங்கை கணவர் பம்பாயில் படித்து வீட்டுக்கு வந்தபோது அவரையுமல்லவா கைது செய்து அக்குடும்பத்தை திக்குமுக்காடச்செய்தார்கள். 'மாப்பிள்ளை புதுச்சேரிக்கு போய்விட்டார், பிள்ளையும் தீவாந்திரம் போய்விட்டான், மற்றொரு மாப்பிள்ளையும் அப்படித்தான் அதேகதிதான்' என ஊரே அக்குடும்பத்தை எள்ளி நகையாட அல்லவா செய்தீர்கள்?கோயிலுக்குப்போகும் அவரது அம்மாவைக்கூட இரு போலீசார் அல்லவா பின் தொடர்ந்தார்கள்?

வாசலில் 15 பேர் காவலுக்கும் புறக்கடைக்கப்புறம் 15 பேருமாக காவல் காக்க அவர்கள் எப்படித்தூங்கியிருக்கமுடியும் நிம்மதியாக? வ.வே.சு.ஐயர் அவர்களின் மனைவி சிறீ மதி பாக்கியலஷ்மி அம்மாள் பட்ட கஷ்டங்கள்தான் எத்தனை?

அரிசி இல்லை என்று சொல்லாதே, அகரம் இகரம் என்று சொல் என்றால் எப்படிச்சொல்வாள் அண்ணி? அகரம் இகரம் பசி தீர்க்குமா அண்ணா?

செல்லம்மா! உன்னால்தான் உன் கணவன் கெட்டுப்போகிறான் அவன் எள் என்பதற்கு முன் நீ எண்ணையாக இருக்கிறாயே, என ஊர்ப்பெண்கள் அவரைத்தூஷிக்கும்போது அவரை உங்களால் முழுவதுமாக புரிந்துகொள்ளமுடியாவில்லையா அண்ணா?

எப்படி உங்களுக்கு இப்படித்தோணியது? சிங்கத்திற்கு இரையை இரண்டு நாட்கள் நிறுத்தியிருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

சிங்கத்திற்கு நல்ல புத்தியைக்கொடு என மனைவி வெங்கடாசலபதியை வேண்டிக்கொள்ள, "மிருகராஜா! கவிராஜா வந்திருக்கிறேன். உனது லாவக சக்தியையும் வீரத்தையும் எனக்குக்கொடுக்கமாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவன் என்று பயப்படுகிறார்கள். உங்கள் இனந்தான் மனிதரைப்போல உள்ளன்று வைத்துப்புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும் அன்பு கொண்டோரை வருத்த மாட்டீர்கள் என்பதையும் இங்கிருப்போர் தெரிந்துகொள்ளும்படி உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து ராஜா" என எப்படிச்சொன்னீர்கள்?
அது என்ன தேவர் ?பிலிம்ஸின் சிங்கமா அண்ணா?

தங்களைச்சந்தித்த பழைய நண்பர் ஒருவர், என்ன சுவாமி, இப்படிப்பாட்டு பாடிக்கொண்டு காலம் கழிக்கிறீகள், நான் வாழ்நாள் முழுவதும் அப்படி இப்படி பாடிவிட்டு பாரத நாட்டின் விடுதலைக்காக உழைத்து இன்று சாப்பாட்டிற்கே வழியில்லாமல் ஏதேனும் கொடிய செயலில் இறங்கலாமா என மனம் யோசிக்கத்தூண்டுகிறது. தர்ம சிந்தனையால் பசி ஆறாது என்பது திண்ணம், எங்காவது திருட்டோ கொள்ளையோ செய்யத்துணியட்டுமா என கேட்ட போதும் அது உங்கள் மனதுக்குள் வலிக்கவில்லையா அண்ணா? வழி ஏதும் யோசிக்கவில்லையா?

கடைசிக்காலமும் உங்களுக்கு அப்படித்தானே வந்தது! எப்படி நெருங்கலாம் மதம் கொண்ட யானையை நீங்கள்? மனிதர்கள் விலங்குகளைப்போல நடந்துகொள்கையில் விலங்குகள் கூட மனிதர்கள் மாதிரி நடந்துகொள்ளும் என்பது எப்படி உங்களுக்குத்தெரியாமல் போயிற்று?

இருந்தவரை கஷ்டப்பட்டீர்கள். இருப்போரைக்கஷ்டப்படுத்தினீர்கள். எல்லாம் விழலுக்கிறைத்த நீராய் இருக்கையில் அண்ணி பட்ட கஷ்டங்கள் மட்டும் கடலலையாய் எனக்குள் பொங்குகிறதே என்ன செய்யட்டும் அண்ணா?

உங்கள் படைப்பைக்காசாக்கிவிட்டார்கள், ஒருவர் குத்தகை கூட எடுத்திருந்தார். உங்களைப்பற்றி எழுதிவிட்டு காரில் போகிறார்கள். மேல் நாட்டு நாகரிகம் பார்க்கிறார்கள். பாரதி பெயர்க்காரணம் ஆராய்ந்துவிட்டு வாசலில் நிற்கும் பிச்சைக்காரனை அடித்துவிரட்டிவிட்டு காரில் பெருமையோடு போய்விடுகிறார்கள் அண்ணா!

எத்தனை கண்ட போதும் அண்ணியை நினைக்கையில் நெஞ்சு பொறுக்குதில்லையே அண்ணா, நெஞ்சு பொறுக்குதில்லையே!
ஒரு பிடி அரிசிக்காய் அழுத அண்ணியை நான் மறக்கமுடியுமா அண்ணா?

அன்புத்தம்பியாய்,
எம்.கே.குமார்.

No comments:

Post a Comment