Wednesday, September 24, 2003

iLamaikkolai kathai

இளமைக்கொலை....

எம்.கே.குமார்.


வெளிச்சம் என்பது ஏதோ ஒரு மூலையில் இருந்து மெல்ல அந்த அறைக்குள் வியாபித்திருந்தது. அதன் வருகை கூட அங்கு சுதந்திரமாய் இல்லை. எப்படியோ திருட்டுத்தனமாக அது உள்ளே நுழைந்திருந்தது. அதன் வருகையில் மனம் லயிக்க விடவில்லை அவனை. கையில் இருக்கும் காரியத்திலே மனது ஈடுபட்டுக்கொண்டிருந்தது. வெளிச்சத்தை மிகவும் ரசித்தபோதும் இன்றிருந்த நிலையில் அதை ரசிக்க அந்த சுகத்தை அனுபவிக்க ஏனோ அவனுக்கு மனம் வரவில்லை.

அவனது கையில் இன்றைய நாளிதழ் இருந்தது. சாணி நிறத்திலான அந்தப்பத்திரிக்கையின் முதல் பக்கத்தை 'வரட்டு வரட்டெ'ன்று கையின் கூர்மையான நகத்தால் கிழித்துக்கொண்டிருந்தான் அவன். அதன் கணம் குறைந்து இப்போது அது கிழிந்து விடும்போல் இருந்தது. ஆனாலும் அவன் கண்களில் கண்ட கூர்மை அதை விடுவதாய் இல்லை. தொடர்ந்து அதைச்சேதப்படுத்திக்கொண்டே இருந்தான். அது அவன் உள்ளத்தை ஏனோ கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவதாய் இருந்தது.

திடீரென்று அவன் கண்களில் தீப்பொறி. மனம் முழுவதும் கொலை வெறி. உடல் ஜிவ்வென்று துடித்தது அவனுக்குள்ளே. எழுந்தான். எதையோ நடத்தப்போகிறான் என்ற எச்சரிக்கை உணர்வு நமக்குள் வந்து நின்றது. அருகில் எதையோ தேடினான். அவன் முகத்தில் ஏற்பட்ட திடீர்ப்பிரகாசம் அவனது எண்ணம் ஈடேறப்போவதாய் நமக்கு சொல்லியது. தேடியது கிடைத்ததுவிட்டது போலும். கண்களில் ஏற்பட்ட வெளிச்சம் இன்னும் அந்த அறையைக்கொஞ்சம் வெளிச்சமாக்கியது.

படக்கென்று இழுத்தான் அவன். ஒரு தீக்குச்சியில் இருந்து வந்தது தீ. அந்தப்பத்திரிக்கையின் முதல் பக்கத்தை அது தீண்டப்போகும் நேரத்தில் யாரோ கதவைத்தட்டும் சத்தம்.

தீக்குச்சியை அணைத்துவிட்டு பத்திரிக்கையை ஓரமாக வீசிவிட்டு எழுந்து 'யார்?' என்று கேட்டான்.

'சகா...நான் தான்' என்றது குரல்.

கொஞ்சம் நிம்மதியாய் மூச்சை இழுத்துவிட்டு 'ஓ.. ராம்' என்றபடி வந்து கதவை மெல்லத்திறந்தான் அவன்.
கதவு முழுவதும் திறக்கப்படவில்லை. ஒருக்களித்து திறக்கப்பட்ட கதவின் வழியே உள்ளே வந்தவனைக்கட்டி அணைத்து வரவேற்றான் அவன்.

'என்ன சகா எப்படியிருக்கிறீர்கள்........நாம் எப்படி இருக்கிறோம்.......நலம்தானே? நம்மவர்களெல்லாம் நலம்தானே.....?'

'என்ன சகா இப்படிக்கேட்கிறீர்கள்...நம்மவர்களுக்கு நாமெல்லாம் இருக்கும்வரை என்ன குறை வந்துவிடப்போகிறது.? அதுவுமில்லாமல் நம்மவர்கள் முன்னம் மாதிரியெல்லாம் இல்லை இப்போது தெரியுமா.........நமக்கே கற்றுத்தருவார்கள் போல இருக்கிறது.'

'சந்தோசம்தானே........சகா. அதுதானே வேண்டும். இதோ இந்த வெளிச்சத்தை, இந்த காற்றை நான் என் ஐம்புலன்களால் உணர்ந்து உயிரால் வணங்கி சிராவணன் போல என் தாய்தந்தையரை என் தோள்களில் தூக்கிக்கொண்டு தேரோடும் நம் கோயில் நகர வீதிகளில் சந்தோசமாக நடந்துபோகவேண்டும். ஹரே ராம் என்று என் தாய் சொல்ல அதை என் தந்தையும் சொல்ல அந்த இன்பத்தில் என் அன்னையின் ஸ்பரிஸம் போன்ற இந்தக் காற்றை நான் ஆசைதீர அனுபவிக்கவேண்டும். அதற்குத்தானே இந்த அத்தனையும் சகா......'

'உண்மைதான் சகா. கொஞ்சம் இருங்கள். இதோ வருகிறேன்.....' சொல்லியவன் இன்னொரு கதவைத்திறந்து உள்ளே சென்றான்.
உள்ளே சென்றவன் எதையோ தேடுவது போல் இருந்தது அங்கே.

'என்ன சகா தேடுகிறீர்கள்? என்னிடம் சொல்லக்கூடாத ரகசியமா ...... என்ன..?'

'இல்லை சகா.. இன்று காலையில் வந்த பத்திரிக்கையில் அந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வந்திருப்பதாகச்சொன்னார் ஒரு சகா. அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் சகா.'

'அதுவா? அது இதோ என்னிடம் இருக்கிறது சகா.'

'அதைவைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் சகா........உங்களது கோபத்தை அதில் காட்டி கிழித்துவிடாதீர்கள். அந்த பத்திரிக்கைசெய்தி மிகவும் அவசியம் நமக்கு.' அக்கறையோடு சொன்னான் அவன்.

'இல்லை சகா. பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த ஈனநாய்க்கு என் கையில்தான் சாவு சகா. அது நிச்சயம். என் தாய் என்னை சுயமரியாதையோடுதான் வளர்த்திருக்கிறாள் என்பது உண்மையானால் நான் இதை செய்யாமல் விடமாட்டேன்.' அவன் கண்களில் தீஜுவாலை வந்து நின்று போனது.

'அவசரப்படாதே.....ராஜ். அதைத்தான் நாம் செய்யப்போகிறோம். ஆசாத் அண்ணாவைப்பார்த்தாயா? என்ன சொன்னார் அவர்? நமது திட்டங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது.?'

'மெதுவாகப்பேசு கோபால். இது சங்கத்தில் நம்நால்வருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். சகா தோரணையில் பேசினால்தான் குரல் உயர்ந்துவிடுகிறது என்றால் நண்பனாய் பேசும்போதும் அப்படித்தான் பேசுகிறாய்.'

'என்ன செய்யச்சொல்கிறாய் ராஜ்? என் சுபாவமே அப்படித்தானே....! சரி அதை விடு. ஆசாத் அண்ணா வந்தாரா? திட்டமெல்லாம் எப்படிப்போய்க்கொண்டிருக்கிறது?'

'அதெல்லாம் இப்போதைக்கு கனகச்சிதம். அவனை இதோ என் விரல்களின் நரம்புகள்தான் சுட்டு வீழ்த்தப்போகின்றன. நான் அதற்காகவே பிறந்திருக்கிறேன். என்றவன் மெல்ல ஆசுவாசமாகி, 'ஆசாத் அண்ணா வந்தார். இந்தநிகழ்ச்சியில் வைத்து அவனைக்கொலை செய்வது அவ்வளவு எளிதில்லை என்கிறார்.'

'பிறகு...........?' கோபமாக இழுத்தான் கோபால்.

'நானும் அதையேதான் கேட்டேன். ஒரு தடவை முயற்சிக்கலாம் என்று. ஆனால் அவர் வேண்டாம் என்கிறார். முயற்சியே இருக்கக்கூடாது. நேரிடையாய் ஜெயிக்கவேண்டும் என்கிறார். முயற்சி தோல்வி அடைந்தால் அந்த சூப்பரிண்டெண்ட் தப்பிவிடுவான். சுதாரித்துக்கொள்வான். நமக்குத்தான் சிக்கல் என்கிறார். அவர் சொல்வதும் சரிதான் எனப்படுகிறது.........ஆனால்.....'

'என்ன இழுக்கிறாய்? அவருக்கு வயதான அளவுக்கு புத்தியும் மங்கிப்போய்விட்டதுபோல. எவ்வளவு முக்கியமான காரியம் இது? நமது மானசீகத்தலைவரை அந்த சூப்பரிண்டெண்ட் நாய் அடித்துக்கொன்றிருக்கிறான். அவனைப்போய் பாவ புண்ணியம் பார்த்துக்கொண்டிருப்பது. என்ன சொல்கிறார் இவர்?'

'இல்லை கோபால் பொறு. உன்னைவிட எனக்குத்தான் இதில் பொறுப்பு இருக்கிறது. நான் தான் அவனை சுட்டுக்கொல்லவேண்டும் என்று நமது அன்னையால் பொறுப்பேற்றிருக்கிறேன். அவனை நான் கொல்வேன். காலம் வரட்டும். கதாயுதத்தால் துரியோதனின் தொடையைக்கிழித்து பீமன் போல அவன் உயிரை அழிப்பேன்; சுட்டு வீழ்த்துவேன்.'

'எல்லாவற்றையும் இப்படி பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? நமது திட்டம் என்ன?'

'விளக்கமாகச்சொல்கிறேன் கேள். நாளை நடைபெறும் அந்த நிகழ்ச்சிக்கு அந்த சௌந்தர் வருகிறான். சூப்பரிண்டெண்ட். நாமும் அந்த நிகழ்ச்சிக்குச்செல்கிறோம். கொலை செய்வதற்கு அல்ல. ஒரு பார்வையாளனாக. அதற்காக எல்லாம் தயார். பள்ளியின் ஆசிரியைகளில் ஒருவரான சகோதரி ஒருவர் நமது பிஎஸ்க்கு தூரத்து சொந்தம். அதனால் உள்ளே நுழைய எந்தத்தடையும் இல்லை. நாம் இருவரும் மட்டுமே செல்கிறோம். பிஎஸ்ஸோ ஆசாத் அண்ணாவோ வரவில்லை. அவனை அவனது நடவடிக்கைகளைத்துல்லியமாக ஆராய்கிறோம். சரியா? காரில் வந்தானாகில் யார் முதலில் இறங்குகிறார்கள்; எந்தப்பக்கம் அவன் இறங்குகிறான்; முன்னாலும் பின்னாலும் யாராவது செல்கிறார்களா? எவ்வளவுதூரத்தில் நாம் இருக்கிறோம்; துப்பாக்கியை பயன்படுத்தமுடியுமா? அத்தனையையும் நாம் பார்க்கவேண்டும்.....பின் நிகழ்ச்சி முடியும் போது அவன் அருகில் சென்று அந்தக்கொடூரனை நமது தலைவனைக்கொன்ற அந்த அயோக்கியனை ஒரு நிமிடம் நான் பார்க்கவேண்டும்.'

'எல்லாம் சரிதான். கடைசிவரை நாம் எதற்கு அங்கு இருக்கவேண்டும்? அதுவும் அவன் அருகில் வேறு போய்ப்பார்க்கவேண்டும் என்கிறாய்...அது ஆபத்து ராஜ். கொஞ்சம் யோசித்துப்பார். அவன் கண்கள் பயங்கரமானது. நம்மை எளிதில் அவன் அடையாளம் கண்டுபிடித்துவிடுவான். பிறகு அது ஆபத்தாகிவிடும். அல்லது வெறுமனே நம்மை வேவு பார்க்க ஒரு ஆளை நம் பின்னால் அனுப்பி வைத்தால் கூட போதும். நமது இடம் தெரிந்துபோய்விடும். அது அதைவிட ஆபத்து. யோசித்துப்பார். வேண்டாம். நாம் உடனே வந்துவிடலாம். வழியில் ஏதாவது பிரச்சனை என்றால் கூட எனக்கோ உனக்கோ உடம்பு சரியில்லை, வயிற்று வலி என்று சொல்லிவந்துவிடலாம். ஆனால் முக்கியமான ஒரு செய்தி. தயவுசெய்து மறுபடியும் அந்தத்தவறை செய்துவிடாதே. நாம் எளிதாக மாட்டிக்கொள்வோம்.'

'என்ன தவறு கோபால்..........? நான் செய்தேனா என்ன?'

'ஆம். நீதான். சென்றமுறை காவல் நிலைய கட்டிடத்துக்குள் நாம் செல்லும்போது யாருக்கும் தெரியாமல் உனது கைத்துப்பாக்கியைக்கொண்டுவந்தாயே......அன்று பகவான் நம்மைக்காக்காவிட்டால் இந்நேரம் அவ்வளவுதான். நமது உயிர் எங்காவது வானவீதியில் பறந்துகொண்டிருக்கும்.............'

'மன்னித்துக்கொள் கோபால். அன்று எனக்கிருந்த வெறி அது. ஆசாத் அண்ணன் எவ்வளவோ சொல்லியும் யாருக்கும் தெரியாமல் நான் எடுத்துக்கொண்டு வந்தேன், அவனைச்சுட்டு வீழ்த்த. அன்று பிஎஸ்ஸ¤க்கும் என்னைப்போலவே கோபம். அவனை விட்டால் அன்று அந்த போலீஸ் நாயை அடித்தே கொன்றிருப்பான். ஆனால் இன்று கொஞ்சம் அனுபவம் வந்திருக்கிறது. பொறுமையாக இதையெல்லாம் செய்யவேண்டும். ஆசாத் அண்ணன் பிளான் தவறாகாது'

'சரி......ராஜ். கொஞ்சம் இரு. வயிறு சரியில்லாததுபோல் இருக்கிறது. கொஞ்சம் போய்விட்டு வருகிறேன்.'

'அட.............என்னடா..சௌந்தர் பற்றிப்பேசியதும் வயிற்றைக்கலக்கிவிட்டதா. பெரிய ஆளுதான் போல அவன்.' பெரிதாகச்சிரித்தான் ராஜ்.
கள்ளமில்லாத சிரிப்பு அது.

எல்லா ஒத்திகைகளும் தெளிவாக அரங்கேறின. பள்ளி நிகழ்ச்சியில் தலைமையேற்ற போலீஸ் சூப்பரிண்டெண்ட் சௌந்தர் ஆரவாரமாக இருந்தான். ஆறரை அடி உயரம். உயரத்தைப்பார்த்ததும் ராஜ் சிரித்தான். 'என்னடா' என்றான் கோபால். 'பரவாயில்லை நல்ல உயரம். எப்படியும் குண்டு வயிற்றில் இல்லை எனினும் வேறு எங்காவது பாய்ந்துவிடும் 'என்றான். அதைக்கேட்ட கோபாலும் புன்முறுவலித்தான். இப்படி இவர்கள் பேசுவதை பக்கத்தில் இருந்த காவலன் ஒருவன் கவனித்ததை அவர்கள் கவனிக்கவில்லை.

சூப்பரிண்டெண்ட் உஷாரானான். செய்தி சொன்ன காவலனை அழைத்து பளார் என்று விட்டான் ஒன்று. 'என்ன செய்து கொண்டிருந்தாய்......அங்கே. அவர்களைப்பிடித்திருக்கலாம் அல்லவா? இல்லை பின்தொடர்ந்து சென்றிருக்கலாமல்லவா?'

செய்தியைக்கொண்டுவந்து தலைமைக்காவலன் மீது கைபோட்டபடியே மெதுவாக ஏதோ பேசிக்கொண்டு நடந்து போய்க்கொண்டிருந்தான். அடிபட்டவன் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டிருந்தான்.

ஒரு மாதம் வெகு வேகமாக ஓடியது.

அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிட்டான் ராஜ். முதலிலேயே எழுந்து அனைத்தையும் சரி செய்திருந்தான் பிஎஸ். ஆசாத் அண்ணன் குளித்துவிட்டு வந்தார். கோபால் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.

'அவன் ஒரு சோம்பேறி அவனை விட்டு விடலாம் . நாம் செல்வோம்' என்றான் ராஜ்.

'என்ன பேசுகிறாய் நீ ராஜ்? அவனை விட்டு விட்டு நாம் மட்டும் எப்படி செல்லமுடியும்? நால்வரும் தான் பொறுப்பேற்றிருக்கிறோம்.
அவனை எழுப்பு. அவனை இங்கேயே விட்டு விட்டு சென்றால்கூட ஆபத்துதான். எங்கேயாவது சென்று லேசாக உளறினால்கூட சந்தேகம் வந்துவிடும். அவன்மீது. ஏற்கனவே அவனை அந்த தலைமைக்காவலன் நன்றாக தெரியும் என்று சொல்லியிருக்கிறான். அவனை வெளியே விடுவதே தவறு. நம்மோடு வரட்டும். சபதம் வென்று செத்தாலும் பரவாயில்லை.' இது பிஎஸ்.

'என்ன? இன்னும் கிளம்பவில்லையா?' கேட்டுக்கொண்டே வந்தார் ஆசாத்

'எல்லாம் ஆகிவிட்டது. கோபால்தான் தூங்கிக்கொண்டிருக்கிறான்.'

'அவனை எழுப்பு முதலில். அவன் எதிலுமே இப்படித்தான். யூஸ்லெஸ்.'


இடம்: போலீஸ் ஹெட்குவாட்ட்ரஸ்.

வாசலுக்கு வெளியே எதிரே இருந்தார்கள் அவர்கள் நால்வரும். கோபாலுக்கு கைகால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. ராஜ்ஜின் கண்களில் கொலை வெறி வந்துவிட்டிருந்தது. ஆசாத் அண்ணன் முகம் தீர்க்கமாக இருந்தது. பிஎஸ் கடைசியாக கைத்துப்பாக்கியை சரிபார்த்துக்கொண்டிருந்தான். ஆசாத் அண்ணன் கையிலும் இன்னொரு துப்பாக்கி இருந்தது. வெளியே அந்த வளைவுக்குப்பின்னால் அவர்கள் மறைந்திருந்தார்கள். ராஜ் தன் மூச்சுக்காற்றை இழுத்து மெதுவாக விட்டு தான் தயார் என்பது போல பிஎஸ் பக்கம் திரும்பினான்.
அவன் கையில் அதைக்கொடுத்தான் பிஎஸ்.

அதே ஆரவார நடையோடு வெளியே வந்தான் போலீஸ் சூப்பரின்டெண்ட் சௌந்தர்.

திடீரென்று 'ஐய்யோ 'என்றான் கோபால்.

'என்ன......ஏன் கத்துகிறாய்?' ஆசாத் அண்ணன்.

'இல்லை....அவன் இன்று காரில் போகமாட்டான் போல இருக்கிறதே...........வாசலில் கார் வேறு இல்லை.....'

'மடையா அவன் எதில் போனா என்ன? வாசலை விட்டு அவன் தாண்டமாட்டான்.................விதி முடிந்து விட்டது.'..தீர்மானமாக சொன்னான் ராஜ்.

அடுத்த நிமிடம் அது நடந்தது. வாசலை விட்டு வெளியே வந்த சௌந்தர் அமர்க்களமாக காலைத்தூக்கிப்போட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தான். தன் வாழ்வில் கற்ற அத்தனை திறமையயும் தன் கைவிரலுக்குக்கொண்டுவந்தான் ராஜ்.

சீறிப்பாய்ந்ததுகுண்டு.

'ஓ........காட் 'என்றபடி கீழே விழுந்தான் சௌந்தர்.

குண்டு வந்த திசைபார்த்து 'ஹே..............'.என்று வேகமாக ஓடி வந்தான் தலைமைக்காவலன்.

'ம்ம்.....ராஜ். ஓடு. வேறு யாரையும் நாம் சுட வேண்டாம். நம் பழி தீர்ந்து விட்டது. ஓடு...........பகத், கோபால் ஓடூங்கள்.......' ஆசாத் அண்ணன் பேச்சில் ஆளுக்கொரு பக்கம் பறந்தார்கள்.

கோபால், ராஜ், பிஎஸ் ஆகியோர் ஓடியபக்கம்தான் ஓடி வந்தான் அந்தத்தலைமைக்காவலன். அவர்களை விடாதவாறு கையில் துப்பாக்கி வேறு. எப்படியும் சுட்டு விடுவான் போல இருந்தது.

ஆசாத் அண்ணன் யோசித்தார். தீர்மானத்திற்கு வந்தார்.

தலைமைக்காவலன் செத்து விழுந்தான்.

நால்வரும் ஓடி தப்பித்தார்கள்.

இது நடந்த முன்று நாட்கள் கழித்து அந்த ரயிலின் இரண்டாவது பெட்டியில் அந்த விசாரணையை நடத்திக்கொண்டிருந்தான் ஒரு காவலன்.

"இவர் யார்?"

"என் வீட்டு வேலைக்காரன்...."

"அப்போ...இது....?"

"என்..மனைவி.அது என் குழந்தை........சொந்த ஊருக்கு போகிறோம்........."'

கொஞ்சம் சந்தேகமாகவே பார்த்துவிட்டு சென்றான் அந்தக்காவலன்.

"மன்னித்துக்கொள்ளுங்கள் சகோதரி. உங்களை என் மனைவி என்று சொல்லியதற்கு......... ராஜ் நீயும் என்னை மன்னித்துக்கொள். உன்னை என் வீட்டு வேலைக்காரன் என்று சொல்லியதற்கும். நான் லக்னோ வில் இறங்கிக்கொள்கிறேன்..........சகோதரி உங்களையும் வீட்டில் விட்டு விடுகிறேன். நண்பர் பகவதி சரணுக்கு என் வாழ்க்கை முழுவதும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவரிடம் சொல்லிவிடுங்கள்."

"ராஜ்..இனிமேல் தான் நீ கவனமாக இருக்கவேண்டும். அடிக்கடி உன்னோடு தொடர்பு கொள்கிறேன்........ஜெய்கிந்த்."

சரியாக பத்து மாதங்கள் கழித்து தூங்கிக்கொண்டிருக்கும்போது ராஜ் கைது செய்யப்பட்டான். அதிலிருந்து ஐந்து மாதங்கள் கழித்து அவனும் பிஎஸ் எனப்படும் பகத்சிங்கும் தூக்கிலிடப்பட்டார்கள் தன் இன்னொரு நண்பன் சுக்தேவ் உடன்.

அப்புரூவராய் மாறியவர்களில் ஒருவன்.............கோபால் எனப்படும் ஜெய்கோபால்.

சுதந்திரக்காற்றை சுவாசிக்காமல் தூக்கில் தொங்கிய ராஜ் எனப்படும் ஷிவ் ராம் ராஜகுருவுக்கு அப்போது வயது 23.



No comments:

Post a Comment