Friday, October 17, 2003

kadavu

கடவு- எனது வாசிப்பும் ரசிப்புகளும்.

கடவு
திலீப் குமார்.


ஒரு இரண்டு மூன்று வருடத்திற்கு முன்னால் அந்த புத்தகத்தைப்படிக்க நேர்ந்தது என்னால். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தமிழ் சிறுகதைகளாய் சா. கந்தசாமி அவர்கள் தொகுத்த முதல் பாகம் அது.

மொத்தம் பதினைந்து அல்லது இருபது கதைகள் இருந்தன அவற்றில். முழுவதுமாக படித்தேன். ஜெயமோகனைப்பற்றியோ இல்லை திலீப் குமார் பற்றியோ எனக்கு 'அ' கூட தெரியாத காலம் அது.

அந்தத்தொகுப்பில் சுஜாதா அவர்களின் கதையும் பாலாவின் ஒரு கதையும் கூட இருந்ததாய் நினைவு. ஆனால் என்ன கதை அவற்றின் கரு என்ன என்பது கூட எனக்கு ஞாபகமில்லை. ஆனால் பெயர் எனக்கு அப்போது பரிச்சயமில்லாத சிலர் எழுதிய கதைகள் பசு மரத்தாணி போல் மனதுக்குள் பதிந்து இன்றுவரை என்னை அந்த நினைவில் தொலைத்துப்போவதுண்டு.

அவற்றில் முதலில் ஜெயமோகன் கதை ஒன்று. திசைகளின் நடுவே தொகுப்பிலும் அந்தக்கதை உள்ளது. தனது மனத்துக்குள் உள்ள இந்த உலக லௌகீக இச்சைகளையும் பிச்சை புகிர்ந்து வாழும் சில பிராமண வாழ்க்கையைக்கண்டித்தும் உலக ஈஷித்தல் வாழ்க்கையின் அவலங்களையும் வெறுக்கும் ஒரு சாதா மனிதனின் நிலையை எண்ணத்தை, சாமியார் ஒருவர் அப்படி வெளியே பேசித்திரிய, அவரை ராஜாங்க காவலர்கள் இழுத்துச்சென்று தீக்குள் தூக்கிப்போடும்போது இந்த சாதாரண மனிதனின் காலடியில் அவர் விட்டுச்சென்ற அந்த சாமியாரின் கைத்தடி தட்டுப்படும். அது மறக்கமுடியாத கதை.

அடுத்தது இது. ஒரு மனிதன் வேலை முடிந்து லேட்நைட்டில் வீடு திரும்பும்போது அவனது பார்வையில் தெரு மிகவும் சாந்தமாகவும் ஆரவாரமாகவும் இருக்கும். காரணம் அடுத்த நாள் வரும் தீபாவளி. அவனது வீட்டில் அந்த லேட்நைட்டில் நடக்கும் சுரம் குறைந்த உரையாடல்கள் நம்மை ஒரு நிமிடம் வறுமையின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தும். அந்தக்கதை இனி.

ஆனால் அதற்கு முன்னால் இன்னும் இரண்டு கதைகளும் மறக்கமுடியாததாய் அதில் இருந்தன. ஒன்று வண்ணநிலவனோ இல்லை வண்ணதாசனோ எழுதியது. குறவன் குறத்தி வாழ்க்கை பற்றியதாய்.

அடுத்தது, எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அது ஒரு வரலாற்றுச்சிறுகதை. மிகவும் அட்டகாசமாய் மந்திரி மகளான தன் மீது ஆசை வைக்கும் ராஜாவை பழிதீர்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணின் கதை.

இந்த நான்கு கதைகளும் இன்றுவரை நினைவில் இருந்தாலும் இப்போது எதிர்பாரா விதமாக அவற்றில் சிலவற்றைப்படிக்க நேரும்போது முதல் வரியைப்படித்த உடனே எனக்கு பொறி தட்டியது என்று நினைக்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

கடந்த சில வாரமாக திரு. ஆனந்த ராகவ் அவர்கள் இவர் கதை பற்றி இங்கு எழுதிவருகிறார். அதற்கு முன்னே நான் படிக்க ஆரம்பித்திருந்தாலும் இந்த மடல்களுக்குப்பின் என் வாசிப்பின் வேகம் அதிகமானது என்பது உண்மை.

சரி. இனி அந்த கதைத்தொகுப்பு பற்றிய எனது வாசிப்பும் ரசிப்புகளும்.

கடவு. இது அந்தத்தொகுப்பின் பெயரும் முதல் கதையும் இரண்டும்.

அப்பட்டமாய் ஒரு ஆபாச கதை. ஆனால் படிக்கும்போது உங்களுக்கு அப்படித்தோன்றினால் அதை நாம் எட்டாவது அதிசயமாக்கிக்கொள்ளலாம். அப்படி ஒரு நடை. எழுத்து. வெள்ளக்காரனும் கூட என் மேலே படுத்துருக்காண்டி என்று சாதாரணமாய்ச்சொல்லும் அந்த கங்குப் பாட்டி. தன் கையைக்கூட தன்னால் மடக்கமுடியாத நிலையில் தன்னிடம் வந்து லெஸ்பியனிசம் பேசும் பெண்ணுக்கு இரண்டும்கெட்ட தன் நினைப்பைச்சொல்லாமல் வெறுமனே திட்டும் கங்குப்பாட்டி. அப்படியே ரிக்ஷாவில் ஏறி பீச்சுக்குப்போவதுபோல சட்டென்று சாய்ந்து செத்துப்போகும் சாவு. வாழ்க்கையின் எதார்த்தத்தை இவ்வளவு லேசாய் யாரும் சொல்லிவிடமுடியாது.

படித்து முடிக்கும்போது ஒரு பாய்ஸ் படத்தை சென்சார் கண்ணோடு பார்த்த திருப்தி. ஆனால் சந்தேகமே இல்லாமல் நாம் U கொடுத்துவிடுகிறோம். அதற்காகத்தானே அவரும் எழுதியிருக்கிறார். எழுத்தின் வெற்றி.

கானல்:

"ஒரு அழகிய விலங்கைப்போல தகித்து உருகி குழந்தையாய் ஆடைகளைக்களைந்த அவள் அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு ஒரு உலர்ந்த மரத்துண்டைப்போலக்கிடந்தாள்."

கதை புரிந்துவிட்டிருக்கவேண்டுமே!

ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களோடு உறவுகளில் ஈடுபட நேரும் ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி எண்ணங்கள் வர வாய்ப்பிருக்குமா என்பது பொதுவான ஒரு சந்தேகம்.

அதை முடிவில் அந்தப்பெண்ணே சொல்லும் வார்த்தைகளின் மூலம் விளக்குகிறார் திலீப் குமார் அவர்கள்.

கடிதம்:

கடிதத்தில் மிட்டு மாமாவின் லௌகீக விஷயங்கள் அலசப்படுகின்றன. அவரே சொல்லும் ஒரு கடிதத்தின் வாயிலாக. 70 வயதானாலும் கை காலில் சிரங்கு கனத்து நீர்த்தாலும் இன்னும் மஹேஷ்வரி பவன் பூரி கிழங்குக்கு ஆசைப்படும் மிட்டு மாமா. கையில் ஒரு ரூபாய்க்கு வழியில்லாமல் இருந்தாலும் குழலூதும் கண்ணனுக்கு தினம் அம்பீஸ் கபே தோசையை நைவேத்தியம் படைக்கும் மிட்டு மாமா. ரிக்ஷாக்காரன் காத்தவராயனுக்கும் கடன் பாக்கி. கவர்னர் என்று வாயில் எதார்த்தமாக வந்தாலும் உடனே பிரபுதாஸ் பட்வாரி வந்துவிடுகிறார். அதைத்தொடர்ந்து இந்திராகாந்தியும்.

தற்கொலைக்கு வழியைத்தேடும் மிட்டு மாமா, சென்ற வாரம் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் மகாக்கஞ்சன் ஜீவன் லாலின் எட்டு வயது மகன் மாடியிலிருந்து கீழே விழுந்ததைச்சொல்கிறார். அதுவும் கீழே போய்க்கொண்டிருந்த ஒரு பொதி கழுதையின் மீது. பாவம். கழுதைக்குத்தான் எலும்பு முறிவாம். சொல்லும்போதே நமக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. சத்தமே இல்லாமல் நகை வெடியை உண்டு பண்ணுவதில் திலீப்குமார் வல்லவர் போல.

கடைசியில் கடிதம் எழுதி முடிக்கும்போது பின் குறிப்பில் கடிதத்தின் முக்கிய நோக்கமாகிய 100 ரூபாயை அனுப்பச்சொல்கிறார்.

ஆனால் கதையின் முடிவு அவருக்கு இரு மடங்கு சோகமாக ஆகிவிடுகிறது.

அடுத்த கதையான நிகழ மறுத்த அற்புதம் முழுக்க முழுக்க ஒரு மனோ தத்துவ கதை.

தன்னை விட்டு விலகிப்போகும் தனது மனைவியின் தரப்பு நியாத்தை உணர்ந்தவனாய் ஒருவன் தன்னிலையில் இருந்து கூறும் கதை. அதற்கு காரணத்தையும் 'அவள் ஒன்றுமே சொல்லாமல்' தானே சொல்லிக்கொள்வது இக்கதையின் இன்னொரு சிறப்பம்சம்.

இரண்டு பேர் சம்பந்தப்பட்ட இந்த வாழ்க்கையின் எல்லா தருணங்களையும் மிக அழகாக அலசுகிறார் திலீப்குமார் அவர்கள்.

மனத்தின் ஆழத்திலிருந்து உருவி எடுக்கப்பட்ட சில வார்த்தைகளாய் வரும் அவனின் வெளிப்பாடுகள் நம்மை அதிசயிக்கவைக்கின்றன.

முதலிரவில் தன் மீது சிவந்த திரட்சியான சர்ப்பம் போலே படர்ந்திருந்த தன் மனைவி - அருகில் வதங்கிய கொடியைப்போல கிடக்கும் அவளிடம் அதிருப்தியில் எ·குத்துண்டைப்போல அவன். தான் மலடனானதில் சமூக சேவை செய்ய குடிப்பது தடையாய் இருக்க கழிவிரக்கத்தில் கவிதை எழுதும் அவன். எல்லாரிடத்திலும் எல்லாவற்றிலும் பழிப்படைந்த அவனுக்கு எல்லாவற்றிற்கும் காரணமாய் இருந்து இன்னும் அவனை மலடனாய் காட்டுவதிலேயே குறியாய் இருக்கும் அவளின் அழகிய அடிவயிறு. தன் கோபத்தைக்கிளறும் அதிலேயும் ஒரு உதை விடும் அவன்.

அவளை அடித்தாலும் அவளின் சுகங்களை அடியோடு அழித்தாலும், அவளின் கவிதை மனதை கவனித்து பாராட்டும் அவன். அவளின் ரசிப்புகளாய் அவன் சொல்லும் ஒவ்வொரு நிகழ்வும் அப்படியே எடுத்துக்கொள்ள முடிந்த சிறு சிறு கவிதைகள். மழையில் நனையும் காகமும், சோற்றுப்பருக்கையை வாயில் திணித்து முழித்து முழித்துப்பார்க்கும் சுண்டெலி, அசையாமல் கிடக்கும் கர்ப்பிணிப்பல்லி, தேங்காயை இழந்தாலும் மழை நாட்களில் 16 வயதாய் உடல் வனப்பை பெறும் அந்தத்தென்னை மரம் என்று அத்தனையும் கவிதை.

முதுமைக்கோளம் அவர்களை இணைக்கிறது. மீண்டும் சிறு சிறு கொடிகளாய் அருகருகில் அவர்களை இணைத்துப்பார்க்கிறது.

வயதுக்கு வருவது தெரியும் போது வயதாவதும் தெரிய வேண்டுமல்லவா?

அது எப்படி வருகிறதாம் தெரியுமா?

வைகறைக்கு முன்பான அந்த இளம் இருட்டில் ஒளியின் முதல் கீற்று சந்தடியின்றி திடீரென்று இழைந்து விடுவதைப்போன்றதாம் அது.

சிந்திக்க வைக்கும் நல்ல கதை.

அடுத்த கதையான மனம் எனும் தோணி பற்றி ஒரு நாட்டில் உள்ள நடுத்தரவர்க்கத்து புதுக்கவிஞர்களில் ஒருவரது கதை.
தற்கொலை செய்துகொள்ளக் காத்திருக்கும் அவனை படக்கென்று நாம் சொல்லிவிடலாமாம். அவன் ஒரு கவிஞன் என்று. லேசான கிண்டலாக நமக்குத்தெரிந்தாலும் அடுத்துள்ள சில வரிகள் அதை இன்னும் அதிகமாக்கி உண்மையிலேயே அப்படித்தானா என நம்மைக்கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன.

வறுமையின் பின்னணியில் அவன் காணும் கனவுகள் எல்லாம் வெறும் கனவுகளாகத்தான் இருக்கமுடியும் என்ற ஆசிரியரின் வரிகள் நிதர்சனத்தைச்சொல்கின்றன.

அவனது வாழ்க்கையிலும் அவனது கவிதையை வழக்கம்போல புரிந்துகொள்ளாத காதலி, ஒரு ராஜகுமாரியாய். காதலிக்கிறாள்; காதலிக்காததால் வருந்தி விலகிப்போகிறாள்; வாழ்க்கை அவனை விரட்ட தற்கொலைக்கு ஓடுகிறான். அங்கே வருகிறாள் அவள். இருவரும் பத்து நிமிடங்களுக்குள் ஒன்று சேர்ந்து ஒன்றாய்க்கலந்து வீட்டுக்குச்செல்ல எழுகிறார்கள். வாழ்க்கை விளையாட்டு அவனைப்பார்த்து பாவம் என நம்மைச்சொல்ல வைக்கிறது.

நல்ல கதை.

அக்ரகாரத்தில் பூனையை படித்து முடிக்கும்போது ஒரு சின்ன த்சொ மட்டுமே சொல்லமுடிவதில்லை நம்மால். அதற்கும் மேலே நம்மை மனிதாபிமானம் பற்றியும் பிற உயிர்களிடத்தில் நாம் காட்டும் அன்பு பற்றியும் யோசிக்க வைக்கிறது இந்தக்கதை.

தங்கசாலையில் ஏகாம்பரேஷ்வரர் அக்ரகாரத்தில் நீண்ட நாட்கள் இருந்திருப்பார் போலும் ஆசிரியர். இரண்டு கதைகளில் அந்தப்பகுதியின் வர்ணனைகள் அதிகமாக வருகின்றன. லேசான குஜராத்தி வாழ்க்கை கலந்த இந்த கதைகளைப்படிக்கையில் அவற்றின் வழியே நாமும் ஒன்றிப்போகிறோம்.

முதுமைக்கோளம் என்றொரு கதை.

தனிமைச்சிறையில் தவித்து மனம் தகித்து வாழ்வும் உறைந்துவிட்ட ஒரு தாயின், கடைசி நேர ஆசைகளும் வெறும் நிராசையாகவே போக கண்கலங்கி கண்ணை மூடுகிறாள் அவள்.

அவளின் மகன் சாலமன் பனித்தகண்களுடன் தனக்குள் மனம் வாடுகிறான்.

மனிதத்தன்மை இன்னும் இருக்கிறதா என்பதற்கு அவளுடைய எண்ணங்களும் மனித வாழ்வின் நிலையில் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதற்கு அவனது வருத்தமான வார்த்தைகளும் நம்மை யோசிக்கவைக்கின்றன.

முழுமையான ஒரு கதை.


நிலை:

இந்தக்கதைதான் எனக்கு நினைவிருக்கும் கதைகளில் ஒன்றாக நான் சொல்லிய சா.கந்தசாமி அவர்களின் தொகுப்புக்கதை.

ஒரு சாதாரண, வறுமையின் பிடியில் இருக்கும் ஒருவனது வாழ்க்கையை கண்முன்னே படம் பிடித்துக்காட்டியிருக்கும் ஆசிரியர் அவனது எண்ணங்களைக்கோட்டையேற்றிக்காண்பிக்கிறார்.

மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கும் கதை முடியும்போது நம்மை கனக்கச்செய்துவிடுகிறது. அதுவும் இறுதியில் வரும் சுரம் குறைந்த தன் தாயுடனான அவனது உரையாடல்கள் வறுமையின் வலியை நமக்குக்கூட்டுகின்றன.

பகலில் பரபரப்பாய் இயங்கிய தெரு இப்போது உறங்குகிறதாம் ஒரு விலைமாதரைப்போல. உணர்வுப்பூர்வமாய் உணரச்செய்யும் வரிகள்.

நடுத்தர மக்களின் தூக்கங்களைக்கற்பனை செய்கிறான். ஒரு சில புலம்பல்களைக்கேட்கிறான். துரத்திப்பார்த்தும் அசராதவனின் நடையை நாயும் வெறுத்து விலக, அவனது ஒரு சமீபத்திய கனவும் அவனுக்குள் வருகிறது. யானை புணர்ந்துகொள்ளும் நேரத்தில் ஒரு முயலின் குடலையும் வயிறையும் கிழித்து இழுக்கும் ஒரு காட்டெருமை.

நடுரோட்டில் நசுங்கிக்கிடக்கும் ஒரு பெருச்சாளியின் அருகில் அமர்ந்து யோசிக்கிறான் அவன். வால் நசுங்கி தலை தப்பிய அதன் இறப்பில் அந்த இடைப்பட்ட காலத்துகளில் எவ்வளவு வலியையும் வேதனையையும் பயத்தையும் அது உணர்ந்திருக்கும் என எண்ணுகிறான். அப்படியே அவற்றிற்கும் மனித இறப்புக்கும் உள்ள் வேறுபாடுதான் என்ன எனவும் யோசிக்கிறான்.

மிகுந்த பசியோடு நள்ளிரவு தாண்டி அந்த குடிசைக்குள் நுழைந்ததும் அடுப்பைப்பார்க்கும் அவனுக்கு அதன் புதிய வெள்ளை நிறம்
எரிச்சலாய் இருக்கிறது. எவரிடம் தன் கோபத்தை நம்மால் எப்போதும் காண்பிக்கமுடியுமோ அதே தாயிடம் அவனும் கோபத்தைக்காட்டுகிறான். ஆயினும் அவளது ஒரே ஒரு வருடலில் மொத்த நிகழ்வும் மறந்துபோய் ஒரு குழந்தையாய் உறங்க ஆரம்பிக்கிறான்.

அருமையான கதை.

நாம் அன்றாடம் தெருவின் ஓரத்திலோ இல்லை ஏதாவது ஒரு பெரிய மரத்தின் அடியிலோ காணும் ஒரு குடும்பத்தின் கதை, கண்ணாடி.

டீத்தண்ணிக்கு வளி பண்ணச்சொல்லும் மாரியப்பன் அவளால் அது முடியாது என்கிறபோது பொசுக்கென்று அடித்து உதைக்கிறான் அவளை. பிறகு அவனே குடித்து தூங்கி எழுந்து விழித்து தன் குழந்தையிடம் 'வளர்த்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா' பாணியில் பீடிக்கும் டீத்தண்ணிக்கும் பழனியம்மாளிடம் கெஞ்சுவது வேடிக்கை.

சண்டை போட்டு அடி வாங்கிய அவளே தான் ஈயம்பூசிய காசில் அவனுக்காக ஒரு பீடிக்கட்டு வாங்கி வைப்பது பொதுவாக பெண்களின் குணத்தை எடுத்துக்கூறும் சிறப்பு.

பழனியம்மாளூக்கு தன் முழு உடலைக்கண்ணாடியில் பார்த்து வரும் வேதனையை அவளது பழைய நிலையை நமக்குச்சொல்லாமல் உணர வைத்து கதையை முடிக்கிறார் ஆசிரியர்.

இயல்பான கதை.

மூங்கில் குருத்து கதை படித்து முடிக்கும்போது முரசில்லாமல் நாம் உரக்கச்சொல்கிறோம் கிண்டல் மன்னர் திலீப் குமார் வாழ்க என்று.

நடையெங்கும் கிண்டல்கள்.

ஒரு கதையை எழுதும்போது என்ன மூடில் அமர்ந்து எழுத ஆரம்பிக்கிறோமோ அது சார்ந்துதான் இந்த கிண்டலும் நக்கலும் கதையில் ஊடுருவுமா என்பது என் சந்தேகம். இல்லை என்றால் போன கதைகளில் சொல்லாத ( இதே போன்ற நையாண்டிக்கு ஏற்றதாய் சில இடங்கள் அதிலும் வந்துபோன போதிலும்) கிண்டல் எப்படி இதில் மட்டும் எல்லா இடத்திலும் கொட்டி இறைக்க அவரால் முடிந்தது என்பது ஆச்சரியம்.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன்பே கோயம்பத்தூர் தையல் கடைக்காரர்கள் வாரக்கூலியைக் கண்டுபிடித்துவிட்டார்களாம்.
ஒரு நாளைக்கு முப்பது தடவை மலம் கழிப்பாளாம் கடை ஓனரின் பொண்ணு. அந்தக்கால புகழ்பெற்ற நடிகையின் மூக்கில் கோட்டை விட்ட போஸ்டர் வரைந்தவன் அதை நடிகையின் முலையில் சரிக்கட்டி இருந்தானாம். அண்ணாவும் கலைஞரும் கொடிகட்டி ஆண்ட காலத்தில் அரிசி எளிதாய்க்கிடைக்க மக்கள் லாட்டரிக்கு அலைந்தார்களாம். இப்படியாய்த்தொடர்கிறது அவரது கிண்டல்கள்.

மேல் வயிற்றில் ரகசியமாய்த்துவங்கி, அமைதியாய் முன் எழுந்து, அவசரமில்லாமல் முன் வட்டம் போட்டு, பின் வெடுக்கென்று இறங்கிச்சரிந்து இருக்குமாம் அது. அது எது தெரியுமா?

மதுக்கிண்ண வார்ப்புகளுக்கு மாதிரியாய் ராஜ வம்சத்து அரசிகளின் மார்பை அளவு எடுத்து சரித்திரம் படைத்த கலைஞானிகளுக்கு இவனது கடை ஓனர் ராவின் தொந்தி பற்றித்தெரியாதது நியாயமில்லை என்று வருத்தமாக 'அதை'ப்பற்றிச் சொல்கிறார்.

பாக்கெட்டில் இருந்த பத்து பைசாவுக்கு டீயும் பீடியும் போட்டி போட்டு பீடி ஜெயித்தது, சிவப்பு விளக்கு பதித்த கடவுள் படத்துக்கு கீழ் ஊதுபத்திகள் எரிய இடமெங்கும் குருதி வாசனை கசாப்புக்கடையில்.

இப்படி எல்லாம் செல்லும் கதை கடைசியில் அப்பாவின் திவசத்திற்காக வைத்திருந்த அம்மாவின் பிரிய மூங்கில் குருத்தை எடுத்து அவள் இவன் மீது தூக்கி எரியும் வேகத்தோடு முடிகிறது. எல்லாமே அதுக்காகத்தான் என்னும்போது வாழ்க்கை அவனுக்கு அர்த்தமற்று இருப்பதாக நினைக்கிறான்.

எங்கெங்கோ சென்று சரியாகத்திரும்பிய கதை.

ஐந்து ரூபாயும் அழுக்குச்சட்டைக்காரரும்:

ஜெயமோகனின் 'பின்தொடரின் நிழலின் குரல்' நாவலில் கே.கே.எம் என்று ஒரு கம்யூனிச தலைவர் வருவார். அவருக்கு நண்பராய் இன்னொரு தலைவர் (தோழர்) வருவார். காலப்போக்கில் நண்பரது தனித்தன்மையான கொள்கைகள் இவர்களை வாட்ட திட்டம் போட்டே அவரை வெளியில் தள்ளி அந்தத்திறமையானவரை ஏதோ ஒன்றுக்காக கம்யூனிசம் தவிர்த்துக்கொள்ளும்படி செய்துவிடுவார்கள். அவர் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாயாய் அலைந்து அர்த்தமற்று முழுமை பெறாத வாழ்வு வாழ்ந்து செத்துப்போய்விட்டதாய்ச்சொல்வார் ஜெயமோகன். இது உண்மையாய்க்கூட இருக்கலாம். ஏனெனில் அந்தக்கதையில் ஜெயமோகனும் வருவார். சுந்தர ராமசாமி அவர்களும் வருவார்கள். ஜே.ஜே.சில குறிப்புகளும் வரும்.

ஆனால் கடைசியில் அதே நிலையில் தானும் இருப்பதாக கே.கே.எம். உணர்வார். கதையின் நாயகனும் உணர்வார்.

அந்தக்கதையின் நண்பரது வாழ்க்கை போல இந்தக்கதை. ஏறக்குறைய ஒன்றுதான்.

தெரிந்தவனிடம் தனது பெருமைகளையும் ஏழ்மையையும் சொல்லி இரண்டு ரூபாய் அன்போடு கேட்கும் அவர்கள் அது மறுக்கப்படும்போது இல்லை தாமதிக்கப்படும்போது கோபப்படுகிறார்கள். கொடுத்து வைத்தவர்கள் போல அடிக்கிறார்கள். சட்டையைப்பிடிக்கிறார்கள்.

சிறிது நேரம் கழித்து கோபம் தணிந்து தன்னிலை உணர்கிறார்கள். வருந்துகிறார்கள். அப்படியே மன்னிப்பும் கேட்கிறார்கள்.

இந்தக்கதையிலும் அதே கதைதான்.

வீட்டுக்கிணற்றுக்குள் எலி விழுந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை விடுங்கள். திலீப் குமார் அதை கதையாக எழுதுவார்.

அந்தக்கதையின் கிண்டலும் நக்கலும் இதிலும் அப்படியே தொடர்கிறது. முன்று மணி நேரம் போக்கு காட்டிய எலியை எடுப்பதில் அவரவர் தங்களது திறமையைக்காட்டுகிறார்கள்.

கடைசியில் கிணற்றுத்தண்ணீரைப்புனிதமாக்கவேண்டுமல்லவா? அதற்கும் பலப்பல ஐடியாக்கள். எல்லாம் முடிந்து பாட்டி, கங்காஜலத்தைக்கிணற்றில் தெளித்து அதைப்புனிதமாக்குவதோடு முடிகிறது கதை.

மீண்டும் தங்கசாலைத்தெரு. ஏகாம்பரேஷ்வரர் கோயில்.

கடைசி கதையான தடம், வாழ்க்கைக்கும் மரணத்திற்குமான அழியாத தடங்களை, வீடு திரும்புவோம் என்கிற நம்பிக்கையில்லாத ஒரு கைதியின் எண்ணம் மற்றும் வாழ்க்கை வழியே வெளிப்படுத்துகிறது.

நிதானமான நடையில் நல்ல கதை.

வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்
அன்பன்,
எம்.கே.குமார்.






No comments:

Post a Comment