Wednesday, October 29, 2003

pithamagan

பிதாமகன்:

தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென்று, ரைட் ரைட் போகலாம் என்கும் கண்டக்டர் , 'உனது ரோஜா இதழ்கள் எப்போது என் முத்தத்தை என்னிடம் பிரதிபலிக்கும் என் அன்பு டைப்பிஸ்ட் கனகாவே' என்று மனைவியின் மூக்கை தடவிக்கொண்டிருக்கும் கனகாவின் காதலன், 'அதெல்லாம் இப்போ முடியாது போயிட்டு நாளைக்கி வாங்க. எனக்கு அர்ஜெண்டா வேலையிருக்கு..'என்று எதிரில் நிற்கும் நம்மை சிறிதும் சீண்டாமல் கடிகாரத்தைப்பார்த்துக்கொண்டு அய்யோ நாலு மணி ஆச்சா என்று டிரா வைத்த மேஜையை இழுத்து பூட்டும் அரசாங்க உத்தியோகஸ்தர், 'யோவ் மாசக்கடைசியா, பாத்து செய்யி..'என்று நடைபாதைக்கடைக்காரனிடம் மாமுல் வாங்கும் போலீஸ்காரர் வரை அனிச்சையாய்ப்பேசும் சிலரை நாம் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது.
அப்படி ஒரு அனிச்சையாய், "ம்ம். மொகத்தைப்பாக்காதவங்களாம் கடைசியா மொகத்தைப்பாத்துக்குங்க.......மூடப்போறேன்" என்று பிணத்தை எரிப்பதற்கு முன் அவனிடமிருந்த வரும் வார்த்தைகள் மயானத்துக்கும் அவனுக்கும் உள்ள ஒட்டுமொத்த உறவையும் சொல்ல அறிமுகமாகிறான் சித்தன்.

ஓ போட்டு, கதாநாயகியின் மார்பில் தலைவைத்து மெலோடியஸ் பாடி, அவளது புடவையை அல்லது அது சார்ந்த பகுதிகளை மொத்தமாய் இழுத்து ஒரு மார்கழிக்குளிர் பாடலைப்பாடி, நான்கு தடியர்களை பொட் பொட்டென்று தட்டி, கடைசியில் போலீசின் உதவியோடு படத்தை முடித்துவைக்கும் ஹீரோவுக்கு இப்படி ஆரம்ப காட்சியிலிருந்து கடைசிக்காட்சி வரை ஒரே மாதிரி மாக்கான் கணக்காய் முகத்தை வைத்துக்கொண்டு இரண்டு உதடுகளை ஒரு மாதிரி விரித்து காவிப்பற்கள் வழிந்தோட அதைத்தான் சிரிப்பென்று நினைக்கவைத்து மொத்தமாய் ஆக்ரோஷம் வந்தால் சிங்கம் மாதிரி என்ன, சிங்கமாகவே கர்ஜிக்கும் கைதேர்ந்த நடிப்புக்கலையும் ஒரு ஹீரோவுக்கு இருப்பது மிகவும் ஆச்சரியம்.

கண்களில் கொலைவெறி தாண்டவமாட பழிக்குப்பழி வாங்கும் வேகத்தில் உடல் இயங்க நந்தாவில் கலங்கடித்த அந்தச்சிறுவன், இதில் போடி நாயக்கணூர் கிராமத்து இளைஞனாய் லுங்கியைக் கட்டிக்கொண்டு பேச்சில் அசரவைக்கும் வியாபாரதந்திரத்தைக் கைகொண்டு, நவரச பாவத்தையும் முகத்தில் காட்டி, காதலி நெஞ்சில் மட்டுமல்லாமல் நம் நெஞ்சிலும் முழுவதுமாக இடம் பிடித்து அழ வைக்கும் ஷக்தியாய் வந்து படம் முடிந்தும் நினைவில் நிற்கும் சிரிப்பைத்தந்தவனாய் ஆகிப்போவது அற்புதம்.

காட்சிக்குக்காட்சி கவிதையாய் கொஞ்சம் முயன்றால் ஊர்வசியின் இடத்தைக்கூட பிடித்துவிடும் அளவுக்கு மஞ்சு. 'அப்படி அவகிட்டெ என்ன இருக்கு, ஏதோ அவகிட்ட மட்டும்தான் இடுப்பு இருக்க மாதிரி' என்று சிம்ரனைத்தாக்கும், வெறும் கவிதைகளில் கதைகளில் மட்டுமே வரும் நம்மில் சிலரது ஆதர்ச கதாநாயகியாய் வரும், பொறி உருண்டையையும் 'நாளைக்கி எங்க பாலிடெக்க்னிக்கு வாரீங்களா வெளையாடலாம்' என்று தன் அப்பாவி முகத்தை வைத்து அபிநயம் பிடிக்கும் அந்த மஞ்சுவை இப்படி அழகான பாத்திரங்களில் அள்ளி ஊத்தி தண்ணிருக்கு வடிவத்தைக்கொடுத்திருக்கிறார் பாலா.

மயானத்துக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு நம் கண் முன்னே காட்சியாகவும் கருத்தாகவும் வந்துபோகிறது. வாழ்க்கையில் சொந்தபந்த சாவு என்பதையே கண்டிராத அவன் முதன்முதலாய் தன்னை வளர்த்த சாமியார் சாவும்போது எத்தகைய உணர்வையும் முகத்தில் காட்ட தெரிந்துகொள்ளாமல் ஆனாலும் ஏதோ ஒன்று இழந்துபோனது அறிந்து பாடும் அந்தப்பாடல் கண்களை பனிக்கப்போவது நிஜம்.
ஆனால் அவனே தனக்காக ஒருவன் தன்னிடம் பாசம் காட்டிய ஒருவன் இறந்துபோகும்போது அதே பாடலைப்பாடி தனக்குள் இருக்கும் அந்த இழப்பைக்கண்களால் காட்டி கோரதாண்டவம் ஆடி இருப்பது அசத்தல்.

படம் பாதி வரை என்ன பாதிக்கும் மேலே வரை மிகவும் காமெடியாய் நகர்கிறது. பாலாவை இந்தக்கோணத்தில் யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சீரியஸான கதையையே இப்படி நகைச்சுவையாக நகர்த்தியத்தியதில் படத்தின் வெற்றி முகம் ஓங்கி நிற்கிறது.

படம் பார்க்கும்போது, ஷக்தியை மட்டுமே சுற்றி கதை நகர்கிறதே இரு ஹீரோ பிரச்சனை எதுவும் வந்திருக்காதோ என்னும்போது அப்படியே ஒரு ஹீரோ கதையை முடித்து சமப்படுத்திவிடுகிறார்.

படம் இடைவேளை வரை ஷக்தி - மஞ்சு-கருவாயா- அத்தான் கூட்டணி நம்மைச்சிதற அடிக்கிறது நகைச்சுவை வெடியால். மேல்தட்டு மக்களுக்காகவே கமல் பண்ணிவிடும் சில காமெடிகள் அவருக்கு தோல்வியை ஏற்படுத்திக்கொடுத்துவிடும் அபாயம் இதில் பாலாவுக்கு இல்லை. படத்தில் கஞ்சாவை அடக்கிக்கொண்டு சீக்கிரம் நானும் உன் இடத்துக்கு வந்துருவேன், கட்டையை எரிக்கும்போது நெஞ்சிலே போட்டு அடிக்காதப்போய்...என்று வெட்டியான் சித்தனிடம் சொல்லும் பாத்திரங்களும் இருக்கிறார்கள். சிம்ரனை அழைத்து வந்து ஆட்டம் போடும் ஒரு பதினைந்து நிமிட நகைச்சுவை+ கதை நகர்த்தல் காட்சிகளும் இருக்கிறது. இவையெல்லாம் தரை டிக்கெட்டில் அமர்ந்து பீடியை இழுத்துக்கொண்டு படத்தைப்பார்த்துக்கொண்டிருக்கும் அவனுக்கும் புரியும் என்பதால் பாலாவிற்கு அங்கும் தோல்வியில்லை.

தன் அகப்பையில் அகப்பட்டதைத்தேடி தடவி எடுத்துக்கொடுத்திருக்கிறார் இளையராஜா. பேசமால் படத்துக்கு பின்னணியை மட்டும் அவர் பார்த்துக்கொண்டு நந்தாவில் வெளுத்து வாங்கிய யுவனிடம் விட்டிருக்கலாம். எங்கெங்கோ....கால்கள் செல்லும் பாதையையோ, எங்கே செல்லும் இந்தப்பாதையையையோ நாம் பெறாமல் வருந்துகிறோம். வரும் அவைகளும் அந்த அளவுக்கு அழுகையைத்தரவில்லை.

படத்தின் ஒளிப்பதிவாளர் (ரத்னவேலுதானா? நந்தா, சேதுவுக்கு அவர்தான்) பெயரை நான் பார்க்கவில்லை. தயாரிப்பு போடும்போதுதான் உள்ளே சென்றேன். காட்சிகள் அருமை. ரயிலில் முதன்முதலில் பயணிக்கும் வெட்டியானின் பார்வை போகும் வண்ணம் காமிரா அணில்குஞ்சாய் மரத்திற்கு மரம் கிளைக்குக்கிளை தாவுகிறது. மயானத்தின் கோரத்தை அழகாய்க்காட்டும்போதும் சரி, லைலாவை கவிதையாய் கண்முன்னே நிறுத்தும்போது சரி அசத்துகிறார் மனிதர்.

பாலாவின் டச் நிறையவே இருக்கிறது. தலையில் முட்டி மூளை கலங்குவதும் ஆணுறுப்பை அறுப்பதும்போன்று குரல்வளையை கடிக்கிறான் மனிதன். நெய்முறுக்கு போன்று பொறி உருண்டை. ஆனால் ராஜசிறீயை விட்டுவிட்டார். என்னாச்சு?

படத்தில் ரசிகாவா? ஒரு அக்கா வருகிறார். மலையாள வில்லன் போல ஒருத்தர். பெயர் தெரியவில்லை. நந்தாவில் வந்த ராஜ்கிரண் போல கெட்டப். ஓஹோ...இதுதான் கஞ்சாச்செடியா? கஞ்சாப்பொடி பார்த்திருக்கிறேன். செடியை இப்போதுதான்.

படம் பார்க்கும்போது, சில நினைவுகள் என்னையும் அறியாமல் எனக்குள் வந்துபோயின.
மகாநதி ஜெயில் சண்டை, எங்க ஊர் கோயில் திருவிழா சக்கிரி, ஒரு மயான கவிதை, நெஞ்சுக்கூடு மட்டும் எம்பி மேலே எழும் எரியும் பிணம், என்னைப்பெரிதும் வாட்டிய என் பெரியம்மாவின் மரணம் அது சம்பந்தப்பட்ட சுடுகாட்டு சம்பவங்கள். வாழ்க்கை கனவுதான். ஆனால் நிஜமான கனவுகள்.

கதையில் ஒரு சில இடங்களில் சின்ன சின்ன ஓட்டைகள் இருக்கின்றன. எதுவுமே தெரியாத அப்பாவி போல பார்ப்பவர்களுக்கு தோன்றும் சித்தன், ஷக்தியைக்கொன்றது அவன்தான் என்று எப்படி வில்லனைத் தெரிந்துகொண்டான் என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அனைத்தையும் அமைதியாக நோட்டமிடும் சித்தனுக்கு இது தெரியாதா என்ன என்றும் நாம் பதில் சொல்லிவிடும் படியும் வாய்ப்பிருக்கிறது.

பாலாவின் பட தர வரிசையில் என்னைப்பொருத்தவரை மூன்று படங்களும் அதற்குரிய இடத்தையே பெறுகின்றன. ஆனால் வெற்றிப்பாதையில் இது முதல் இடத்தைப்பெறும் என்பது என் கணிப்பு.

சில படங்களை மட்டுமே திரையில் பார்ப்பது என்ற என் கொள்கையில் அன்பே சிவத்துக்கு அடுத்ததாய் இது. காசு வீணாகவில்லை.

வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்
எம்.கே.குமார்.


No comments:

Post a Comment