Tuesday, February 17, 2004

ஓநாயிடம் மண்டியிடும் சிங்கம்.

உ.பி. யிலிருந்து இன்னும் நாலு சீட் கூடுதலாக வந்தால் போதும். இல்லையேல் மஹாரஷ்டிராவிலிருக்கும் அரசியல் குழப்பத்தையும் காங்-தேசிய காங்கிரஸ் பிரச்சினைகளையும் நன்றாகப் பயன்படுத்தி சிவசேனா - பி.ஜே.பி கூட்டணி நாலு சீட் அதிகம் பெற்று விட்டாலும் ஓகேதான். இல்லை பி.ஜே.பி நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும் கர்நாடகத்தில் ஒரு இரண்டு மூன்று சீட் பெற்றால் போதும். அதுவும் இல்லையா.. இருக்கவே இருக்கிறது பா.ம.க.

ரஜினி ரசிகர்களும் ரஜினியை மாதிரி மறப்போம் மன்னிப்போம் என்று ஆறு தொகுதிகளிலும் மறந்து ஓட்டுப்போட்டார்கள் என்றால் புதுச்சேரியை விட்டுவிடாலும் கூட ஐந்தில் எப்படியும் மூன்று நான்கு ஜெயித்துவிடும். பிறகு, வேறென்ன? அதில் ஒருவரான அன்புமணிக்கு மந்திரி பதவி தருகிறேன் என்றால் டாக்டரய்யாவுக்கு கூலி வேறு கொடுக்க வேண்டுமா என்ன? கரும்புக்கு! பறந்து வருவார்.

இதற்கிடையில் வட மாநிலங்களில் இம்முறை பி.ஜே.பி வழக்கத்தை விட பெரிய அலை கொண்டதாக ஜெயித்து 350 தொகுதிகள் கிடைக்கும் என்பதாயும் பத்திரிகை கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.

நிலைமை இப்படியிருக்க, கிடைக்கும் பத்தோ ஆறோ எப்படியாயினும் அதில் இரண்டு மூன்றுதான் பி.ஜே.பி ஜெயிக்கப்போகிறது தமிழ்நாட்டில். இதற்கு ஏன் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய உதவித்திட்டங்கள் எதுவும் செய்யாத மக்கள் விரோத ஆட்சி என்று ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டும் அதிமுக வுடன், வாஜ்பாய் ஆட்சியை முன்னால் கவிழ்த்த, அத்வாணியை செலக்டிவ் அம்னீஷியா கொண்டவர் என்று திட்டிய, கூட்டணி தர்மங்களும் நட்புகளும் உணரத்தெரியாத அதிமுக வுடன் அதன் தலைவி ஜெயலலிதாவுடன் மத்திய பி.ஜே.பி (மத்தியில் உண்மையில் வெற்றிகொடி நாட்டி வரும்) கூட்டணிக்காக ஏன் அலைகிறது, அவரிடம் மண்டியிட்டுக்கிடக்கிறது என்பது தெரியவில்லை.

நிலைமையை நன்கு பி.ஜே.பி உணருமானால் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடுதல் மிக நலம். யாருடைய தயவையும் கோராமல்.

அதிமுக வுடன் கூட்டு வைத்து (அவருக்கு கண்டிஷன் போடுவதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி.) அவர் போடும் கண்டிஷன்களுகெல்லாம் கட்டுப்பட்டு மீண்டும் ஒருமுறை அவரிடம் குட்டு வாங்கித்தான் உணருவேன் என்று பி.ஜே.பி அடம் பிடிப்பது அதன் தனித்துவத்துக்கு அழகல்ல. அப்படியே கூட்டணி வைத்து ஜெயித்து 'அரசில் அதிமுக வை சேர்த்தால்தான்' ஏன் 'எனக்கு துணைப்பிரதமர் தந்தால்தான் ஆதரிப்பேன்' என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவை அனைத்தையும் உணர்ந்து, பி.ஜே.பி தேர்தலை எதிகொள்ளுதல் நலம்.

(நண்பரிடமிருந்து)

No comments:

Post a Comment