Monday, February 16, 2004

மதச்சார்பற்ற கூட்டணியா? மானங்கெட்ட கூட்டணியா?

ஆஹா. மறுபடியும் அந்த வார்த்தையைக் காதார கேட்டுவிட்டேன். எங்கே தமிழ்நாட்டில் இந்த வார்த்தை இல்லாமல் ஒரு கூட்டணியோ அரசியல் நிகழ்ச்சிகளோ நிகழ்ந்துவிடுமோ என்று எனக்கு உண்மையிலே கொஞ்சம் கிலியும் வந்துவிட்டது. அப்படியெல்லாம் நடந்தால் அப்புறம் என்னாகும் தாய்த்தமிழ்நாட்டின் தெருக்கோலங்கள்.?

ஐந்து வருடங்கள் தன்னை அதுக்குள்ளே நுழைத்துக்கொண்டு செல்வச்செழிப்பாக்கிவிட்டு (தமிழ்நாட்டையோ இந்தியக்கண்டத்தையோ அல்ல!) கழன்று கொண்டது தி.மு.க. நுழையும் போதும் வெளியேறும்போதும் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள், தமிழருக்கும் தமிழ் நெஞ்சங்களின் அடுத்த தலைவரான தளபதிக்கும் விளக்கி டியூசனெல்லாம் எடுக்க அவசியமில்லாமல் இப்போதும் சொல்லிவிட்டார்.

செத்துப்போன மாறனுக்கு அளித்த அமெரிக்க பயணமும் இன்னபிற வஸ்துகளும் செய் நன்றி மறவாத கலைஞருக்கு மாறன் தான் வந்துதான் சொல்ல வேண்டும் கனவில்.

'நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக' என்பதெல்லாம் பழைய வாசகம் இல்லை. அடுத்து கொஞ்சம் பொலிவுற்று வருகிறது. 'நேருவின் பேத்தியே வருக..நிலையான ஆட்சி தருக.' என்ற அந்த வாசகம். கலாநிதிமாறனின் தம்பிக்கு தென்சென்னையை(அல்லது மத்தியசென்னையை) ஒதுக்கி இத்தாலிய ராணிக்கு இந்திய மகுடத்தை அள்ளித்தலையில் வைத்துவிட்டு டி ஆர் பாலுவுக்கு ஏதாவது சுற்றுப்புறத்தைக்கொடுத்துவிட்டு தென்(மத்திய)சென்னைக்கு தொழில்துறையைக்கேட்பார் தானைத்தலைவர். அப்படியே சில மாதங்களில் சரத் பவாரின் உதவியாலோ இல்லை மாயாவதியின் திடீர்ப் பேராசையாலோ சோனியா ஆட்சி கவிழ்ந்து நிற்கும்போது நிறங்கள் மீண்டும் மாறும்.

ராஜூவின் மரணத்துக்கும் தி.மு.க வுக்கும் 0.0000001 அளவு கூட சம்பந்தம் இல்லை என்று சத்தியம் செய்வார்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ்காரர்கள். அதை ம.தி.மு.க பொதுச்செயலர் வை.கோ புலி போல முழங்கி தனது துண்டை இருக்கிக்கட்டி நாலு பக்கமும் இழுத்து இருமாப்போடு ஆமோதிப்பார். ஆமோதித்துவிட்டு "ஆகவே, ஈழத்தில் நமது பிரபாகர வழிச்சொந்தங்கள் இன்னும் அமைதியாக வாழ இப்போது நமக்கு வேண்டும் நமது ஆட்சி" என்று முழங்குவார். வாசனும் இளங்கோவனும் எதிர் எதிர் திசையில் நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் தலையை ஆட்டுவார்கள்.

ஓடுகிற நாயின்...... சேர்ந்து ஆடுவது போல இப்போதுதான் திடீரென்று புத்தி வந்தது போல பா.ம.க வும், ம.தி.மு.க வும்.

ம.தி.மு.க வின் லெட்சணத்துக்கு அவர்களை வாஜ்பாயைத்தவிர யாரும் இந்த அளவுக்குக் கண்டுகொள்ளமாட்டார்கள். இது அவர்களுக்குத்தெரிய காலம் வரும். நரியின் விளையாட்டு நயம் படத்தான் தெரியும் போல மெதுவாக தன் வாலைத்தூக்கிக் காட்டி ஹெ..ஹெ. எனச்சிரிப்பார் கலைஞர்.

செத்து மண்ணோடு மண்ணாகி விட்ட வைகோவின் ரத்தத்¢லகங்கள் பூரிப்பார்கள் தலைவரின் முடிவைக்கேட்டு. "தி.மு.க.வின் தோழமையை தாங்கள் இழந்துவிடுவோம் எனப்பயமாயிருப்பதால், அதுவும் அ.தி.மு.க பி.ஜே.பியை நெருங்கி வருவதால் நாங்கள் தி.மு.க பக்கம் சாய்கிறோம்" ஆஹா! என்ன உணர்வுப்பூர்வமான வாசகமடா இது! எச்சில் தெறிக்க எல்.கணேசன் பேசும்போது எரிச்சல் தான் மிஞ்சுகிறது.

தோழமை எதற்கய்யா உமக்கு? தாய்க்கட்சியோடு தோழமை வைத்துக்கொள்ள ஏன் தனிக்கட்சி.? தாய்க்குணம் படைத்தவர்களுடன் சேர்ந்து விட வேண்டியதுதானே! மேடையில் சிங்கம் போல முழங்க ஸ்டாலினிக்குத்தெரியுமா? சின்னப்பையன்! 'வா சிங்கமே!' வந்து விட்டார் வைகோ. ரொம்ப நாளாய் வரமாட்டேன் என்று சொன்னவர். கூப்பிடுவது யார்? தனக்குத்தானே எரித்துக்கொண்ட சாந்தனும் உதயனுமா? குலம் காத்த ( வைகோ வின் பிச்சைக்காரக்கதையைச்சொன்ன) கோமான். கலைஞர்.

உங்களோடு சேர்ந்து கொள்ளையடித்தால் எவ்வளவு தருவீர்கள்? பத்து சதவீதம்? உடனே களத்தில் குதித்தார் தன்மானத்துக்குப்பெயர் போன டாக்டரய்யா. வந்த வேகத்தில் அவரும் சொல்வார்... நான் கேட்க ஆசையாயிருந்த வார்த்தையை......"மதச்சார்பற்ற கூட்டணி"

தயவுசெய்து பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். "மானங்கெட்ட கூட்டணி" இது நன்றாயிருக்கும் உங்களுக்கு.

(நண்பரிடமிருந்து.)

No comments:

Post a Comment