வெண்ணிலாப்ரியன்.
என் காலுக்கடியில்
சாம்பல்மண்நிறத்தில் ஒரு ஒளிவட்டம்
தாய்மடி தேடும் ஆர்வத்தோடு
வரும்--போகும்.
எச்சில் பட்ட புறங்கை
எப்போதும் இனிக்கும் அதற்கு.
ஒற்றைக்காலில்
வன வாசம் போகும் நேரம்
என்னைச்சிறிது புணரும்.
வயதாகிப்போனதாய் உணரும் வேளையில்
இயலாமை வெறுக்கும்--இருப்பு தேடும்
நொந்த வெந்த நெஞ்சோடு
கழிவிரக்கத்தாயின் கருப்பையில்
நிராதரவாய் சூழ் கொள்ளும்.
மெல்ல மோகச்சூரியன் எட்டிப்பார்க்க
மீண்டும் ஓடி வரும் இறந்ததறியாமல்.
இறந்தவை இறந்தபடியிருக்க
எப்போதும் தெரிவதில்லை அதற்கு
ஒவ்வொரு முறையும்
எப்படி இறந்தோம் என்பது.
என்றாவது ஒருநாள்
கன்னிப்பெண்கள் இல்லாத நாளில்
கனவில் பெண்கள் வராத இரவில்
உணர்ந்துகொள்ளும்
எப்படி இறக்கிறோம் என்பதை!
அதுவரை தினமும் மலரும்!
வெண்ணிலாப்ரியன்.
குமார் ,
ReplyDeleteஅருமையாய் கவிதயைச் செதுக்குகிறீர்கள் ..
இன்னும் தொடருங்கள்.