புத்தகப் பார்வை-- குடிமுந்திரி மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு. தங்கர்பச்சான்.
எம்.கே.குமார்.
அழகி படத்தைப்பார்த்துவிட்டு நண்பர்களில் சிலர் 'ஓகேடா..'என்றவாறு போக நான், 'உன் குத்தமா' பாடலிலும் இன்னும் ஒரு இடத்திலும் கண்கலங்கினேன். மனதைப்பாதித்த சிறுவயது ஞாபகங்கள் அலைகளாய் ஓடிவந்து நின்றன. குழந்தைப்பருவத்தில் விளையாடியவர்களுக்கு மட்டும்தான் அந்த இழப்பின் வலி தெரியும். அதன் வீரியம் தெரியும்.
சென்ற மாதத்தில் ஒருநாள் நண்பர் ஒருவர், அந்தப்புத்தகத்தைக்கொடுத்தார். சிறுகதைத்தொகுப்பு. ஐந்து அல்லது ஆறு கதைகள் இருந்தன அவற்றில். ஒரு சில பக்கங்களைப்புரட்டியபோது நான் எங்களது 'வாழ்க்கைமீட்டான்' வயலின் மேலவரப்பில் ஓடிக்கொண்டிருந்தேன். அப்பா தூக்கமுடியாமல் கால் தாங்கிக்கொண்டு நெல்லுக்கட்டை தூக்கிக்கொண்டு நடக்கிறார். அது எனது பள்ளிக்குப் பணம் கட்டுவதற்காக வயலிலிருந்து வீட்டிற்குச்செல்லாமல் விற்பனைக்குச்செல்லும் கருதுக்கட்டு.
நெல்லுக்கட்டுக்கும் முந்திரி மரத்துக்கும் ரொம்ப வித்தியாசமில்லை. வாழ்க்கையை சுமந்து செல்லும் ஒரு முந்திரி மரத்தை வெட்டி விற்று தன் மகன் மிகவும் ஆசைப்பட்டவாறு புதிய ஷ¥ ஒன்றை வாங்கித்தருகிறார் அவனது அப்பா. எத்தனை வீடு மாறிய போதிலும் எதற்கும் உதவாது என்ற நிலையிலும் அந்த ஷ¥க்களை தாங்கிக்கொண்டே போகிறான் அவரது மகன். இது குடிமுந்திரியின் கதை.
அறிஞர் அண்ணாவின் சிறுகதை ஒன்று செவ்வாழை. குடியானவன் ஒருவனது வீட்டில் மிகவும் அன்போடு வளர்க்கப்படும் ஒரு செவ்வாழை மரம். ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து செவ்வாழை மரத்தைப்பார்த்து எப்படா காய் காய்க்கும் என்று ஆவலோடு இருப்பார்கள் குடியானவனின் பிள்ளைகள். செவ்வாழையும் வயதுக்கு வந்து ஒரு நாள் குலை ஒன்றும் தள்ளிவிடும். அவ்வளவுதான். அடுத்து வரும் நாட்கள் அத்தனையும் குழந்தைகளுக்கு செவ்வாழைப்பழ கனவுதான். அவனுக்கும் மனைவிக்கும் சந்தோசம் தாங்கமுடியாது. குழந்தைகள் பக்கத்துவீட்டு பிள்ளைகளுடன் திடீர் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். அவர்களின் மதிப்பு திடீரென்று கூடிவிடும். காயாகியதைக்கண்டு கனியாகும் நாளை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்க, அதிகாலை ஒன்றில் வந்து அறுத்துக்கொண்டு போய்விடுவார் குடியானவனின் முதலாளி. கதை முடிந்தது.
கி. ரா அவர்களின் 'கதவு' என்றொரு கதை. ஏறக்குறைய இதே போன்றதொரு சூழ்நிலை கதை முடியும்பொழுது.
மனத்தின் வலி பார்ப்பவர்களுக்குப்புரியாது. குடிமுந்திரியின் நிகழ்வும் அப்படித்தான். கதை முடியும்போது கண் கலங்கி விடுகிறது. 'அழகி'கள் போல அப்பாக்கள் வந்துபோகிறார்கள். வாழ்க்கைத்தோப்பில் இறைவன் விளையாடுவதைப்போல முந்திரித்தோப்பில் ஒளிந்து விளையாடுகிறான் ஒரு படங்காட்டி...கதைசொல்லி வழியாக. தான் என்ன தொழில் செய்கிறேன் என்றே தெரியாமல் மறைந்துபோன தன் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறார் 'குடிமுந்திரி' என்ற இச்சிறுகதைத்தொகுப்பை.
குடிமுந்திரியில் இன்னும் இருக்கும் கதைகளில் இரண்டு கதைகள் மனதுக்கு நல்ல கதையைப்படித்த திருப்தியைத் தருகின்றன.
அவற்றில் ஒன்று 'பசு.'
கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழும் ராயன் செத்துப்போகிறான் ஒருநாள். ராத்திரியிலே ஒண்ணுக்கிருக்க வந்தவர் வழி தவறி கெணத்துக்குள்ளெ விழுந்துவிட்டதாக ஊரார் நினைக்க, அதன் காரணம் அவனுக்கு மட்டும் தெரிகிறது. காரணம் ஜீரணிக்கமுடியாதது. மிகவும் அதிர்ச்சிதரக்கூடியது. இந்த மனுட வாழ்வில் இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் யோசித்தாலும் 'உண்மை சுடும்' என்கிறார் ஆசிரியர்.
முடிவு? சுபமில்லை. சிவக்கொழுந்தும் செத்துப்போகிறான். அடிவாங்கிய பசு பிடரி சரிந்து கால் தாங்கித்தாங்கி நடந்துபோகிறது.
இரா.முருகன் அவர்களின் கதைகளில் ஒன்று அது. பெயர் மறந்துவிட்டது. தியேட்டரில் வேலை பார்க்கும் மேனேஜர் ஒருவர், படம் பார்க்க வந்த சீமாட்டிகள் இருவரின் உதவியாளிடம் தியேட்டர் சைக்கிளைக்கொடுத்து தனது வீட்டில் போய் முறுக்கு வாங்கி வரச்சொல்வார். முதலில் முடியாது என்று மறுக்கும் அவனிடம் அப்படி இப்படி சொல்லி அனுப்புவார். படம் முடிந்தும் அவன் திரும்பி வராத நிலையில் போலீசு மேனேஜரைத்தேடி வரும். அவன் ஏரிக்கரையில் லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதாக. சைக்கிளை வைத்து தியேட்டருக்கு வந்தததாக.
மேனேஜர் படக்கென்று சொல்வார். அவன் தியேட்டர் சைக்கிளைத்திருடிக்கொண்டு போய்விட்டவன் என்று. செத்துப்போனவனா வந்து இல்லை, இவர்தான் முறுக்கு எடுத்து வர அனுப்பினார் என்று சொல்லப்போகிறான் என்று நினைத்துக்கொண்டு. ஆனால் விதி வேறு ரூபத்தில் வரும் அவருக்கு. எப்போதும் அவர் மதிக்காத தியேட்டரின் சிப்பந்திக்கு எல்லாம் விவரமும் தெரிந்து அவர் முன் மிகப்பிரமாண்டமாய் நிற்பான்.
யாருக்கும் தெரியாத தவறுதான் எப்போதும் ஆபத்து நிறைந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராது வெடிக்கும் இயல்புடையது. அந்த தவறின் நி¢ஜ இயல்பை நாம் தெரிந்துகொள்வதில்லை. தெரிந்துகொள்ளும்போது அந்த வெடிப்பை நம்மால் தாங்க முடிவதில்லை. மறைத்துவைத்த குண்டு வெடிக்காது என்று யார் சொல்லமுடியும்?
பசு கதையை படித்து முடிக்கும்போது நமது கண்களில் ஒரு கலக்கம். யாருடைய தவறு இது? எப்போது எவ்வளவு பெரிய மனிதர்களும் சறுக்குகிறார்கள் என்று ஆயிரக்கணக்கான கேள்விகள். மிக அருமையான கதை.(புத்தகத்தில் பக்கங்கள் மாறியுள்ளன.)
கதையில் குடித்துவிட்டு கோழிக்கறிக்காகச்சண்டை போடும் எமன் இருக்கிறான். காத்தவராயன் இருக்கிறான். கோயில் கிணத்தை தூறு எடுக்கும்போது அதன் நாற்றம் தாங்கமுடியாமல் யாருக்கும் தெரியாமல் அதில் ஒண்ணுக்கடித்து விடும் சாதாரணன் இருக்கிறான்.
கதையில் நாடகம் வரும் பகுதிகள் நகைச்சுவை.
அடுத்து வரும் கதைகளில் ஏழ்மை எழுத்தாளன் அவன் வயிற்றுப்பாட்டுக்கு வழிதேடி லண்டன் செல்லும் கதையும் ஒன்று. கதை முழுவதும் கதையாசிரியரின் வாழ்க்கையின் ஏழ்மை குறித்தான அங்கலாய்ப்புகள் தொடர்கின்றன.
இன்னொரு கதையில் தமிழ் மாநாடுகளின் உண்மைத்தோற்றம் என்ன என்பதைத்தர முயல்கிறார் ஆசிரியர். ஆசிரியருக்கு அதன் பால் மிஞ்சியது வெறும் ஊசிப்போகாத சாப்பாடு மட்டும்தான். அதுவாவது மிஞ்சுகிறதே என்று கிடைக்கும் ஒருவன் மகிழ்ச்சியோடு செல்கிறான்.
கதைகளில் வெறுமனே கற்பனைகள் மட்டுமே பயணிக்கவில்லை. எதார்த்தங்கள் இயல்பான வடிவிலே வந்து பிரச்சனைகளை நமக்குச்சொல்லிச்செல்கின்றன. ஆசிரியரின் உண்மையான வருத்தங்கள் அருமையாக பிரதிபலிக்கின்றன. சொல்ல வந்ததை வட்டார வழக்குகளோடும் சொல்லி முடிக்கின்றன.
இந்த வாரம் படிக்க நேர்ந்த தங்கர் பச்சானின் இன்னொரு படைப்பு. ஒன்பது ரூபாய் நோட்டு. நாவல்.
மிரட்டும் கதைக்களங்கள் இல்லை. சொந்தங்களாய் பந்தங்களாய் வந்து குழப்பும் பாத்திரப்படைப்புகள் இல்லை. கதாநாயகன் இல்லை. கதாநாயகியும் இல்லை. பேருந்திலே பயணிக்கும் ஒரு எழுபது பிளஸ் வயதுடைய மாதவப்படையாட்சியின் வாழ்க்கை கதை. கதை ஆரம்பம் கொஞ்சம் இழுப்பது போல இருந்தாலும் சில பக்கங்களைத்தாண்டிய பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது.
தன் மானம் கருதி சில நொடிகளில் ஒரு முடிவை எடுத்துவிட்ட பெரிய மனிதர் ஒருவர் அதனின்று மீள முடியாமல் போக, அனைத்தையும் இழந்து மீண்டும் வாழ்ந்த மண்ணுக்கே வருகிறார்..மண்ணோடு மனம் மகிழ்ந்து உறவு கொண்டாடும் வேளையில் அவரது சிதறிப்போன குடும்பம் நெஞ்சைக்கிள்ளுகிறது. தான் நட்ட பலா மரத்திற்கு அடியில் அதிகாலையில் அவரைப்பார்க்கிறார்கள் பிணமாக.
பேருந்தில் வரும் உரையாடல்களும் பயணங்களின் சகிப்பதற்கற்ற போக்குகளும் உணர்ந்து எழுதப்பட்டிருக்கின்றன. கதையெங்கும் பத்திரக்கோட்டை, புலியூர் மண்ணின் மணம் பலாப்பழச்சுவையாய் இனிக்கிறது. மாதவப்படையாட்சி மனதில் நிற்கிறார்.
ஒருசில இடங்களில் நகரம் வான்வில்லாய் வந்து போனாலும் முந்திரித்தோப்புகளும் புத்தம் புதிய சிவப்பு நிற மாங்காய்களும் முள் விரிந்து மணம் பரப்பக்காத்திருக்கும் பலாக்களுமாய் கதை முழுவதும் அவைகளின் வாசனை.
படங்காட்டி ஒளிந்துகொண்டிருக்கிறார். வெளியில் வந்தால் இன்னும் 95% வாசனை வெளியே வரலாம்.
வணக்கங்களுடனும் நன்றிகளுடனும்,
எம்.கே.குமார்.
அனுப்புநர்: வாசன்
ReplyDeleteகுமார்:
ரொம்ப நாளைக்கு முன் படித்த பொன்னீலன் சிறுகதை ஒன்று,ஒரு வகையில் நீங்கள் சொல்லியுள்ள கதைகளின் இணையான துயரத்தைக் கொண்டது,மாறுப்பட்ட தளத்தில்.
குழந்தை பேறுக்காக வீட்டிற்கு வந்துள்ளாள் பெண்.பெற்றோர்,
பாட்டி என அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.வீட்டின் முன்தோட்டத்திலுள்ள மரத்தில் கூடுகட்டி வாழும் தேன்சிட்டும் குஞ்சு பொரிக்கவுள்ளது.அதனையும் ஆவலுடன் கண்ணுற்று வருகின்றனர் இக்குடும்பத்தார்.
குழந்தை பேறுக்காக மருத்துவமனை சென்றும், தேன்சிட்டு என்னவாயிருக்கும் எனும் நினைவு விட்டகலாத பெண்ணின் தந்தை,தான் மட்டும் தேன்சிட்டை பார்க்க ஆவலாய் வருகிறான்.கூடு கலைந்து கிடக்கிறது.
பதை பதைத்து போன அவனுக்கு கூட்டை வெறித்து பார்த்துக் கொண்டு நின்றிருந்த பங்காளி பற்றி ஞாபகம் வருகிறது.
பங்காளி வீட்டிற்கு சென்று பார்த்தால்,குழந்தை பேறில்லாத
பங்காளியும்/மனைவியும் குழந்தை பேறடைய - தேன்சிட்டின் குஞ்சுகளை அரிவாள் மனையில் அரிந்து கொண்டுள்ளனர்..
மனசு கனத்துவிட்டது வாசன். இதுமாதிரி கருத்துடனான கதைகள் எத்தனை வந்தாலும் சில கதைகள் மட்டும் அப்படியே மனசுக்குள்ளே புதைந்துவிடுகின்றன. அண்ணாவின் செவ்வாழை போலவும் (இக்கதை உண்மையில் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமையைச் சொல்ல வந்தபோதும்) நீங்கள் சொன்னனைக்கதையும் என்றும் மறக்க முடியாதவாகி விட்டன.
ReplyDeleteஒரு தேர்ந்த கதையைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
எம்.கே.குமார்.