Saturday, June 12, 2004

மத்தியப்பிரதேசம்.

இருபத்தைந்து வயதுக்கு உட்பட்டவரா/ மேற்பட்டவரா நீங்கள்?

திருமணம் முடித்தவரா/ முடிக்காதவரா (ஹனிமூன் முடிந்து இப்போதுதான் வந்திருப்பவரா) நீங்கள்?

சிவாஜி கோட் போட்டுக்கொண்டு நடித்த 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' மாதிரியான படங்களை விரும்புவரா/ வெறுப்பவரா நீங்கள்?

அனுபவித்ததை, தான் பெற்ற உடற்செல்வங்களை, மறைக்க முடியாத விஷயங்களை மற்றவர்களுக்கும் சொல்ல விரும்புவரா/ விரும்பாதவரா நீங்கள்?

நேராக நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கும்பொழுது உங்களது கால் கட்டைவிரலைப் பார்க்க முடிந்தவரா/ முடியாதவரா நீங்கள்?

வாங்க! வாங்க! உங்களைப்பத்தித்தான் பேசுறோம். படிச்சுட்டு உங்க கருத்தைச்சொல்லுங்க.


மத்தியப்பிரதேசம்.

காஷ்மீரை தலையாக்கி விட்டு கன்யாகுமரியை பாதமாக இந்தியாவை நிற்கவைத்துப் பார்த்தோமாகில் மத்தியப்பிரதேசம் என்னவாகும் என்று நான் சொல்லாமல் உங்களுக்கு விளங்கிவிடும். மத்தியப்பிரதேசம் சில சமயங்களில் செழிப்பான வளமான பகுதி. சில சமயங்களில் மெலிந்திருந்தாலும் தாகமூட்டும் பிரம்மனின் கஞ்சத்தனம் வழுக்கியோடும் வளைவுப்பகுதி. இயற்கையின் நியதியில் 'இது போதும்' என்று 'பிடி' மட்டுமே கொடுக்கும் படைப்புகள் கூட வஞ்சகமில்லாமல் வாழ்வை ரசிக்க வைப்பன என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இனி மத்தியப்பிரதேசத்திற்கு வருவோம்.

மத்தியப்பிரதேசத்தின் எல்லைகள் நாமறிந்ததுதான். மேலே மேடான பகுதிகளையும் கீழே சரிவான பகுதிகளையும் கொண்ட இத் தக்காணபீடபூமி உருவானது எப்படி அறிவியலாரும் ஆன்மீகரும் ஆளுக்கொரு தியரிகளைச் சொல்லிக்கொண்டிருந்தாலும் திலீப்குமார் சொல்வது மிகவும் எளிமையானதும் சரியாகப்பொருந்தும் என நினைக்கிறேன். மேல் பாகத்தில் ரகசியமாய்த்துவங்கி, அமைதியாய் முன் எழுந்து, அவசரமில்லாமல் முன் வட்டம் போட்டு, பின் வெடுக்கென்று இறங்கிச்சரிந்து உருவாகியிருக்குமாம் அது. உருவாகும் தருணம் எது தெரியுமா? வைகறைக்கு முன்பான அந்த இளம் இருட்டில் ஒளியின் முதல் கீற்று சந்தடியின்றி திடீரென்று இழைந்து பகலாக்கி விடுவதைப்போன்றதாம் அத்தருணம். உண்மைதானா? வருவதறியாமல் வருவதா அது? காதல் மட்டும் தான் 'அப்படி' என்று படித்ததும் படங்களில் பார்த்ததும் தவறா? இல்லை காதல் தான் தவறா? காதல் தவறெனில் காதல் மூலம் வருவதனைத்தும் தவறா? மனைவியிடம் 'விழுவதறியாமல் விழுவதைப்போல' வருவதறியாமல் வந்து வற்ற மறுக்கிறதா அது? மனைவியிடம் மாட்டியவர்கள் வற்றிப்போகிறார்களே! இது மட்டும் எப்படி?

மோதகம், தலையில் குட்டு, அருகம்புல், மாம்பழம், தந்தம் என்பதையெல்லாம் தாண்டி மத்தியப்பிரதேசம்தான் நினைவுக்கு வரும் அவனைக் காணும் பொழுதும் நினைக்கும் பொழுதும் எனக்கு. 'அது' கொஞ்சம் அழகுதானோ என்று உள்ளுணர்வில் தோன்றுவதும் கூட அவனால் தானோ என நினைக்கிறேன். செல்லமாய்த்தட்டி அதை அசைத்துப்பார்க்கவேண்டும் என அவ்வப்பொழுது வரும் ஆசையையும் உண்மையில் மறைக்கமுடியாது. தட்டிப்பார்க்கவேண்டும் என்று ஆசை வருவதே தவறு. இன்று இங்கே வரும் 'தட்டிப்பார்க்கும் ஆசை', நாளை சென்னைப் பேருந்தில் வந்தால்? மோதகம், தலையில் குட்டு இதுமட்டுமில்லாமல் இன்னபிற 'வீங்கு' 'உள்காய வெளிக்காய' சமாச்சாரங்களும் இலவசமாய்க் கிடைத்துவிடும் ஆன் தி ஸ்பாட். இதெல்லாம் தேவையா? தட்டிப்பார்ப்பது அவ்வளவு நல்லதில்லை என்றுதான் உடம்பு சொல்கிறது..மனது? எருதின் நோய் காக்கைக்குத்தெரியுமா? அதுவும் கருங்காக்கைக்கு?

காக்கையைக் கூட இம்மாதிரி விஷயங்களுக்கு இழுப்பதெல்லாம் தவறு. எந்தக்காக்கை பேருந்தில் பயணிக்கும் பக்கத்து சீட்காரனுக்கு இடமில்லாமல் வயிற்றை வைத்து நிரப்பிக்கொண்டிருக்கிறது? எந்தக்காக்கை தூக்கிக்கொண்டு பறக்க முடியாமல் அதிகாலை மெரீனாவில் வாக்கிங் போகிறது அதைக்குறைக்க? எந்தக்காக்கை மல்லாக்கப் படுத்துக்கொண்டிருக்கும்பொழுது குழந்தைகள் ஏறி சறுக்கு விளையாட்டு விளையாடுகிறார்கள் அதன்மீது?

எப்படி உருவாகிறது என்பதைச் சுருக்கமாக நாம் சொல்லிகொண்டாலும் மத்தியப்பிரதேசத்தை விலாவாரியாக விரித்துப்பேச நம்மால் இயலும். இளம் மத்தியப்பிரதேசம் அழகானது என்று நகரத்திலே சொல்லிகொள்கிறார்கள். நடிகர் ஒருவருக்கு அதுவே அழகு என்றும் இளம் நடிகைக்கு அதுவே அவலம் என்றும் உழைப்பின் ஊதியத்தை அதை வைத்தும் கணிக்கிறார்கள். லேசாக அசைத்தால் நடிகை என்றும் நன்றாய் அசைத்தால் நாட்டியசுந்தரி என்றும் அதுவே பெயரை அறிவிக்கிறது. நடன இயக்குனருக்கும் நடிகைக்கும் காதல் வருவதில் கூட காரணமாகி விடுகிறது அது. பிறகு பிரிவுகள். பிரச்சனைகள்.

ரேமண்ட், ஆல்லென் சோலி, பீட்டர் இங்கிலாண்ட், ஆரோ, டெனிம் இன்னபிற இத்தியாதிகள் தராத இமேஜைக்கூட 'இளம் மத்தியப்பிரதேசம்' தந்து விடுவதுண்டு. அயலூரிலிருந்து வீடு திரும்பும்போதோ அயல்நாட்டிலிருந்து நாடு திரும்பும்போதோ 'சம்பந்தப்பட்ட பகுதிகள்' மப்பும் மந்தாரமுமாய் செழிப்பாயிருந்தால் 'பயல் செழுப்பம். பொண்ணு குடுக்கலாம்' என்பார்கள் எனது ஊரில். மத்தியப்பிரதேசத்தைப்பார்த்து மயங்குகிறார்கள் இப்படி. பொண்ணு படும் பாடு இவர்கள் அறிவார்களா தெரியவில்லை.

இதெல்லாம் ஒரு புறமிருக்க இல்லத்தரசிகள் பலருக்கு இதுவென்றால் அலர்ஜி என்கிறது ஒரு ஆதாரம் தராத தகவல் களம். காலையில் ஐந்து மணிக்கு கட்டிலை விட்டு எழுப்பி சாலையோரமும் கடலோரமும் ஓட வைப்பதில் பரங்கியர்களைப்போல இரக்கமில்லாமல் கணவர்கள்மேல் அவர்கள் நடந்துகொள்வதாகவும் அத்தகவல்களம் சொல்கிறது. சிலபெண்கள் அவ்வளவெல்லாம் கஷ்டப்படுத்தாமல், போனால் போகிறதென்று சமைப்பது, வீடு கிளீன் செய்வது, குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது, சென்னையாய் இருந்தால் நள்ளிரவு இரண்டு மணிக்கு ஷகீலாவோடு புரண்டு கொண்டிருந்த கணவரை புரட்டி, எழுப்பி பத்து குடம் (மட்டுமே) 'அடித்து' எடுக்க வைப்பது போன்ற 'எளிதான' வீட்டு வேலைகளை மட்டும் செய்யச்சொல்லி விடுகிறார்களாம். 'மத்தளமாவது பரவாயில்லை எங்களுக்கு எல்லா பக்கமும்' என்கிறது ஆணுரிமைச்சங்க தகவல்களை மேற்கோள் காட்டிய அத்தகவல்களம். நிஜத்தில் அப்படியெல்லாம் இருக்கிறதா? எத்தனை பேர் உண்மையை ஒத்துக்கொள்வார்கள்?

தேனிலவு முடிந்து வரும்பொழுதே அதற்கான அறிகுறிகள் தெரிந்துவிடுவதாக ஒரு தரப்பு சொல்கிறது. எவ்வளவு நிஜமிருக்கிறது இக்கூற்றில்? ஒரு இன்னிங்ஸ் மட்டுமே முடிந்த வேளையில் இத்தகைய சமாசாரங்கள் எப்படி நிஜமாகும் என்பதைத் தெரிந்தவர்கள் சொல்லலாம். அப்படியே நிஜமானாலும் இத்தகைய நிகழ்வுகளுக்கு எவை முக்கியக் காரணமாயிருக்கின்றன? திடீரென்று வந்து சேர்ந்த சந்தோசங்களும் சொந்தங்களுமா? இல்லை முழு நேரமும் சும்மாயிருந்து(!?) மாமியாரின் அன்புக்கட்டளைக்கு ஆட்பட்டு நடக்கும் வரவேற்புகளிலினாலா? இல்லை 'மச்சினி கிச்சினி' சம்பந்தபட்ட வேறெதுவும் காரணங்களா?

நிலைமை இப்படியிருக்க, சீன நண்பனொருவன், 'இந்தியப்பெண்களுக்கு மட்டும் எப்படி ஆண்களுக்கு நிகராக 'மேலே சொன்ன மேட்டர்' விரைவில் வளர்ந்து சீக்கிரமாக செழிப்பாகிவிடுகிறது என ஒரு சந்தேகத்தை என்னிடம் வைத்தான். யோசிக்க வேண்டியதுதான். ஜோதிகாக்களையும் கிரண்களையும் பேட்டி எடுத்துப்பார்க்கலாம். மும்தாஜ்வேறு எந்த வாய்ப்புகளும் இல்லாமலிருக்கிறாராம். ஏதாவது கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுங்களேன் என்று யாரையும் கேட்க நமக்குத்தைரியம் இல்லாத வேளையில் வெறுமனே பேட்டி எடுத்து ம.பி மட்டுமின்றி அருணாச்சல, உத்தரப்பிரதேச, ஹிமாச்சல 'மலை'ப்பிரதேசம் பற்றியும் நலம் விசாரிக்கலாம்.

குற்றவாளிகளையும் 'அன்பளிப்பு'களையும் கையாளுவதில் மட்டுமில்லாமல் இந்தமாதிரி விஷயத்திற்கும் எடுத்துக்காட்டாய் எப்போதும் நமக்கு உணர்த்தப்படுபவர்கள் காவல்துறை நண்பர்கள். இதை வைத்துக்கூட நாம் ஒருமாதிரி காரணங்களை யோசிக்க முடியும். ஊரான் காசில் உடம்பு வளர்த்தால் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா, நின்றுகொண்டே எந்த வேலை பார்த்தாலும் இதுமாதிரி வர வாய்ப்பிருக்கிறதா? இல்லை இவையெல்லாம் காரணமில்லையெனில் என்னதான் காரணம் என்று காவல்துறையின் மத்தியப்பிரதேசத்தைக் களமாக்கி காமெடி செய்யும் விவேக நடிகரைக்கேட்கலாம். விவேக நடிகருக்கும் உற்சாகபானத்தின் காரணமாக அண்மையில் அப்படி இப்படி ம.பி வளர்ந்து வருவதாக ஒரு நாளேட்டு வாரச்செய்திமலரில் கருப்புப்பூனை சொல்கிறது. ஆக அனைத்திற்கும் உற்சாக பானம் தான் காரணமா? இல்லை உற்சாகம் காரணமா.? யோசிக்க வேண்டியதுதான்.

திருமணம் முடியாத நண்பனொருவனுக்கும் இடைப்பகுதி செழிப்பாகி வருகிறது என்ற ஆச்சரிய செய்தி கேட்டு ஆடிக்காற்றில் சருகு போல பறந்து சென்றேன். காரணம் யாதுவென்று விசாரித்தேன். சரியான காரணங்கள் இல்லை. ஆக தேனிலவு மட்டுமே ம.பி. செழிப்பாவதற்கு காரணமில்லை என்பது மட்டும் புரிகிறது. வேறு என்னதான் காரணம். (பி.கு: நண்பன் என்றால் நண்பன்தான்) நண்பன் தாய்லாந்துப்பக்கம் கூட செல்லவில்லை என்பது அவனிடமிருந்து நான் பெற்ற உபரி தகவல். இதற்கிடையில் கொடியிடை நூலிடை பற்றியெல்லாம் விசாரித்து பெண்பார்க்கபோவதாக அவன் சொல்லியபோது 'மைக்ரோ அவனில்' பாப் கார்ன் வெடித்தது எனக்குள். என்ன செய்ய?

எப்படித்தான் வருகிறது இது? எங்கிருந்து உதயமாகிறது? கிழக்கு எப்போது வெளுக்கிறது? மறையுமா இது? வழி இருக்கிறதா இதற்கு? நிமிர்ந்து நின்று கட்டை விரலைக் கூட பார்க்க முடியாதவாறு படுத்தும் இதற்கு என்னதான் தீர்வு? வருமுன் காப்பவன் அறிவாளியாம், அவ்வைப்பாட்டி சொல்லிவிட்டாள். எப்படிக் காப்பது? வந்த பின் எப்படிக்குறைப்பது? உங்களிடம் இது எப்போவாவது மாட்டியிருக்கிறதா? வந்து விட்டுப்போயிருக்கிறதா? போய் விட்டு வந்திருக்கிறதா? வருவதாகச்சொல்லியிருக்கிறதா? மத்தியப்பிரதேசத்தை செழிப்பாக்குவதுதான் எங்கள் ஆட்சியின் குறிக்கோள் என்கிறார் செல்வி உமாபாரதி. சீன நண்பன் ஞாபகத்துக்கு வருகிறான் எனக்கு. உங்களுக்கு?

ஒரு இளம்பிராயத்து ம.பி வாசி.

No comments:

Post a Comment