மும்பையின் சர்க்கஸ் ஒன்றில் மரணக்கிணற்றுக்குள், 'மும்பை எக்ஸ்பிரஸ்' பைக் ஓட்டும் அப்பாவி- அவினாசி (கமல்). அக்காவின்(கோவை சரளா) அரவணைப்பை மட்டுமே கண்ட அவன் அவளுக்காக மட்டும் எப்போதும் மனம் இறங்குகிறான். அவள் கண் கலங்குவதை காணச்சகியாத அவன், அவளுக்காக அவளுடைய கணவருக்காக, சிறு குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்கும் (குதிரையை சவாரிக்கு விட்டும் பிழைக்கும்!) கும்பலிடம், ஒரு சந்தர்ப்பத்தில் சேர நேர்கிறது. அக்கும்பலில் ஏற்கனவே தலைமை நிர்வாகி 'பெர்சன்' 'ஏ', பசுபதி. அவருக்குத் துணையாள், ஏற்கனவே ஆறு குதிரையும் இரண்டும் பெண்டாட்டியும் வைத்திருந்தவரின் மகனான 'பெர்சன்' 'பி' வையாபுரி. இக்கூட்டத்தில் அக்காவின் கணவருக்குப் பதில், பெர்சன் 'புது' 'சி' யாகச் சேர்கிறார் கமல்.
குழந்தை கடத்தல் வைபவத்திற்கு முன் அவர்களது காரில் அடிபட்டு அவர்களோடு சேர்ந்துகொள்கிறான் ஒரு தெலுங்கு பேசும் இன்சூரன்ஸ் ஏஜண்ட்(ரமேஷ் அரவிந்த்!). குழந்தை கடத்தி முடிக்கப்பட (கடத்துவதற்குள் பெரும்பாடு ஆகிவிடுகிறது), கடத்திய குழந்தை வேறொன்றாகவும் கடத்தியதாக பணம் வசூலித்த குழந்தை வெறொன்றும் ஆகிவிடுகிறது. குழந்தை கடத்தப்பட்டதாக பணம் கொடுத்தவர் ஒரு கோடீச்வர செட்டியார் (சந்தானபாரதி!). கடத்திய குழந்தை, போலீஸ் உயரதிகாரியான நாசரின் ஆசைநாயகிக்கு பிறந்த பையன். அந்த ஆசை நாயகி மனீஷா கொய்ராலா.
பணத்தைக் கொடுத்து குழந்தையை மீட்க சந்தானபாரதியிடம் கொடுக்கச்சொல்லி நாசர், ரகசிய போலீசான சக்சேனாவிடம் கொடுத்தனுப்ப, சந்தானபாரதி, அவினாசிதான் ரகசிய போலிஸ் என அவரிடம் ஏமாந்து நிற்க, இனிமேல் நாசரை நம்பிப்பயனில்லை என 'அகல்யா' மனீஷா(அக்கு என்று கமல் ஆசையாகக் கூப்பிடுகிறார்!) நினைத்து, பணத்தோடு வேறெங்காவது சென்று செட்டில் ஆகிவிட மும்பை எக்பிரஸ¤க்குச் செல்ல, பணத்தைத் தேடி சந்தானபாரதி சக்சேனாவோடு பறக்க, தனது கூட்டாளி 'புது சி' தங்களை ஏமாற்றிவிட்டதாக பசுபதி அன் கோ தேட, கமலையே தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து அன்புக்கு ஏங்கும் குட்டிப்பையன் மனீஷாவை கமலோடு சேர்க்க முயற்சி பண்ண கடைசியில் கிடைத்த பணத்தை வைத்து எல்லோருடைய பிரச்சனையும் தீர்ந்து, சொந்த பிஸினஸாக மரணக்கிணற்றை வாங்கி சர்க்கஸ் நடத்துகிறார்கள் அவினாசி அன் கோ.
மும்பை எக்ஸ்பிரஸ் என்ன, ஜப்பான் எக்ஸ்பிரஸ் வேகத்திற்கு பறக்கிறது கதை! அம்மாவின் பாசத்திற்கு ஏங்கும் தன்னின் இன்னொரு வடிவமாக கமல் அச்சிறுபையனை காணும் கணங்களில் மட்டும் (இடைவேளைக்குப்பிறகு கொஞ்ச நேரம்!) கதை லேசாக நகர்வது போலிருக்கிறது. அதுவும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் தொடர் தருணத்திற்கு இது ஒரு இடைவேளையாகவே இருக்கிறது.
இத்துனூண்டு ஊறுகாயை வைத்துக்கொண்டு ஒரு ·புல் பாட்டில் சரக்கை உள்ளே ஏற்றுவதைப்போல திரைக்கதை பின்னியிருக்கிறார் கமல். ஆள்மாறாட்ட திரைக்கதையில் கமலுக்கு இணை இனி இல்லை என்றே சொல்லுமளவுக்கு இருக்கிறது திரைக்கதை. வசனத்தில் தன்னிடம் வசனம் எழுதிய எல்லோரிடமும் கற்றுக்கொண்டதை வைத்து நல்ல மார்க்கே வாங்கியிருக்கிறார் கமல். கிரேஸி மோகனின் சாயல் பல இடங்களில் பளிச்சிட்டாலும் கிரேசி மோகன் எழுதியிருந்தால் இன்னும் தூக்கிச்சாப்பிட்டிருப்பார் என்று தோன்றுகிறது; ஆனால் கிரேசி மோகன் எழுதாதது படம் ஓடுவதற்கு இன்னும் கொஞ்சம் பலம் என்றே நான் நினைக்கிறேன். நொடிக்கு ஒரு டயலாக் காமெடியென தொடர்ந்து வரும் கிரேசி மோகனின் காமெடி எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாமல் (தொடர்ந்து வெடித்துக்கொண்டேயிருக்கும் காமெடி வெடி!) காதலா காதலா கதை ஆகிவிட்டிருக்கலாம்! கமல் எழுதியதால் அது தவிர்க்கப்பட்டிருகிறது. கமலுக்கு வசனத்திற்கு அறுபது மதிப்பெண்கள் தாராளமாய் வழங்கலாம்.
யார் யாரிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன என்பதைக்கண்டறிந்து அவர்களை முழுமையாகப்பயன்படுத்திக்கொள்வதற்கு சினிமாவில் மிகத்திறமை வேண்டும். அது கமலிடம் இருக்கிறது என்பதெல்லாம் நான் இங்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. பட்டாசு பாலாவாகவும், எம்.எல்.ஏவின் ரௌடித் தம்பியாகவும், கொத்தாளத்தேவராகவும் திரிந்த பசுபதியை வைத்து இவ்வளவு அழகான காமெடி செய்யமுடியும் என்பதை கமலைத்தவிர யாரும் யோசிக்க மாட்டார்கள். சந்தானபாரதி, வையாபுரி மற்றும் ரமேஷ் அரவிந்தையும் சரியாக பொருத்தி விட்டிருக்கிறார் கமல். பணம் விளையாடும் சீரியஸான காமெடி கதையில் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளின் பாதிப்பை மிக அழகாக இணைத்துகலக்கியிருக்கிறார். ரமேஷ் அரவிந்த நன்றாகப்பண்ணுகிறார். படத்தின் பின்பாதியில் கொஞ்சம் நேரம் வயிறு வலிக்கும் அளவுக்கு 'செம' காமெடி.
நாசர், ராஜ்கமல் பிலிம்ஸின் ரெகுலர் கஸ்டமர் ஆக்டர். அவர் கேரக்டரை யாரை வைத்து வேண்டுமானாலும் பண்ணலாம் என்பதால் நாசர் நடிப்புக்கு ஏற்ற தீனி கிடைக்கவில்லை. அவரின் ஆசைநாயகியாக வரும் 'முன்னாள் கிளப் டான்சர்' மனீஷா பணத்திலேயே குறியாய் இருக்கிறார் எனினும் அதுதானே அவர்களுக்கு வாழ்க்கை! கிளைமேக்ஸ் வரை அவர் 'பணம் பணம்' என்பதிலே மனதை வைத்து இருப்பதால் கமலோடு அவர் மனதாலும் இணைகிறாரா என்பது நமக்கும் ஒரு கேள்வி!
தமிழிலும் சக்சேனா காரெக்டரை அவரே செய்தது நன்றாக இருக்கிறது. இந்தமாதிரி சீரியஸ் கம் காமெடி காட்சிக்கு அவர் மிகச்சரியான ஆள். டிரா·பிக் போலீஸ் மற்றும் கோவை சரளாவின் கணவராய் (வரும் தீனா; அறிமுகம். கமல் இவருக்கு குரல் கொடுத்திருக்கிறார்!) வரும் ஹிந்தி நடிகர்களும் சிரிக்க வைக்கிறார்கள். குரங்கும் குதிரையும் கூட நடிக்கின்றன. குதிரை ஓகே. பல காமெடிக்காட்சிகள் குதிரையால் வருகின்றன.
இத்தகைய ஒரு படத்துக்கு என்ன பெரிதாய் பாடல்கள் வைக்கமுடியும் என்பதால் பாடலில் முக்கிய கவனம் செலுத்தாதது போல இருக்கிறது. பையனின் 'அப்பா-அம்மா' செண்டிமெண்டுக்கும் கமலின் குரங்கு சேட்டைகளுக்கும் என இரு பாடல். பின்னணி இசையில் இசைராஜா இரு இடங்களில் தனித்து இனிமையாகத் தெரிந்தார்.
கமலுக்கு காது கேட்காது என்பதும் அவர் அனாதை என்பதும் அவர் சொல்ல நினைக்கும் கருத்துகளுக்கு பின்புலம் சேர்க்கின்றன. மரணத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் கூட கமல் வசனங்களில் வருகின்றன. பையன் 'ஹர்திக்' கலக்கல். கமல் சில காட்சிகளில் ரிஸ்க் எடுத்திருக்கிறார். எடிட்டிங் செய்தவரும் கஷ்டப்பட்டிருப்பார் போல!
டிஜிட்டல் தொழிட்நுட்பம் திருட்டு விசிடியில் படம் பார்ப்பது போன்ற நடப்பைத் தருகிறது. உண்மையிலேயே இது இப்படித்தான் இருக்குமா இல்லை தியேட்டரில் ஏதாவது செய்யவேண்டுமா? சில இடங்களில் (குறிப்பாக லாங் ஷாட்) மிக மோசம். பொருட்செலவு அவ்வளவாய் ஆகியிருக்காது என்பது என் எண்ணம். மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரின் காரணமாக ஏற்படும் காமெடி காட்சிக்கு, தமிழர் பாதுகாப்பு சபையினர் சிரிக்காமல் வெளியே எழுந்து வந்தால் படத்தின் பெயரை நானும் மாற்றச்சொல்கிறேன்.
டிவியிலோ திரை விமர்சனத்திலோ துண்டு துண்டாகக் காட்சிகளை நீங்கள் பார்த்தீர்களானால் 'என்னய்யா படம் இது' என்று நினைக்கத்தோன்றலாம். ஆனால் திரையில் முழு நீள படத்தில் காட்சிகள் அனைத்திலும் காமெடி.
கமலின் ரசிகன் என்பதால் சொல்லவில்லை, காமெடியின் ரசிகன் என்பதால் சொல்கிறேன், இந்தப்படத்துக்கு நான் கியாரண்டி. குழந்தைகளோடு செல்லுங்கள். மிகவும் ரசித்துச் சிரித்துவிட்டு வரலாம்.
எம்.கே.குமார்.
//கமலின் ரசிகன் என்பதால் சொல்லவில்லை, காமெடியின் ரசிகன் என்பதால் சொல்கிறேன்//
ReplyDeleteஇன்னாப்பா இது. இப்படி சொல்லிபுட்டே. அதுக்கு தான் படம் ஆரம்பிச்சி கடைசி வரை சிரிச்சிக்கிட்டே இருந்தியா? அதுலேயும் கமல் பிச்சைக்கார குழந்தையை பார்த்து வழக்கம் போல அழ வரும்போது சிரிச்சிக்கிட்டு இருந்தியப்பா. அதையும் காமெடின்னு நினைச்சிக்கிட்டியப்பா... :-)
மறுமொழிக்கு நன்றி மூர்த்தி மற்றும் அல்வாசிட்டி.
ReplyDeleteஅல்வா சிட்டி மக்கா, இதான்வெ, காமெடி சீனு வரும்போது அங்கிட்டு இங்கிட்டு பராக்கு பாக்கக் கூடாதுங்குறது!
கமல் அந்த பிச்சைக்கார குழந்தையைப் பாத்து அழ வரும்போது, 1.பசுபதி ரியாக்ஷன் பாரும்! 2. கேமரா திரும்பி இந்தப்பக்கம் வரும், அங்கே பலான புத்தகம் விக்கிற பையன் புத்தகம் வேணூமான்னு கேப்பான், பசுபதி மென்னு முழுங்குவார்!
இதுக்குத்தான்வெ சிரிச்சிருப்பேன்னு நினைக்கிறேன்! :-)
எம்.கே.
அன்பின் குமார்,
ReplyDeleteபடம் எப்பியிருக்கோ, உன்னோட விமரிசனம் கலக்கல். ஆனா, இதப்படிச்சுட்டு பாடத்தப்பாத்தா ஒருவேளை எதிர்பாப்பு கூடி படம் சுமார்னு தோணக்கூடிய அபாயமும் இருக்கு. இல்ல்?
அன்புடன் ஜெ
///ஆனா, இதப்படிச்சுட்டு பாடத்தப்பாத்தா ஒருவேளை எதிர்பாப்பு கூடி படம் சுமார்னு தோணக்கூடிய அபாயமும் இருக்கு. இல்ல்?///
ReplyDeleteநெஜமா வாய்ப்பு இருக்கு. அதுக்குத்தான் ரொம்ப அடக்கி வாசிச்சேன்(னு நெனைக்கிறேன்!) :-)
அதனால் உங்களுக்காக, படம் சுமார்தான்பா, ஆனா பாக்கலாம்ன்னு சொல்லிக்கிறேன். போறுமா? :-)
எம்.கே
படம் பார்த்துட்டு வந்த நம்ம பசங்க, படம் handycam-ல எடுத்த மாறி இருக்கு,பாதி படம் dark, தப்பி தவறி போயிடாதே-ன்னு சொன்னாங்க, இங்க வேற மாறி review குடுத்திருக்கீங்க... hmm...
ReplyDelete///படம் பார்த்துட்டு வந்த நம்ம பசங்க, படம் handycam-ல எடுத்த மாறி இருக்கு,பாதி படம் dark, தப்பி தவறி போயிடாதே-ன்னு சொன்னாங்க, இங்க வேற மாறி review குடுத்திருக்கீங்க..//
ReplyDeleteபாதி உண்மைதான், மக்கா! டிஜிட்டல் டெக்னாலஜி சில இடங்களில் மோசமாத்தான் இருக்கு. என் விமர்சனத்திலேயும் சொல்லியிருக்கேனே!
ஆனா, ஆளு கலரெ பாத்து வேலைய கொறை சொல்லமுடியுமா மக்கா?!
நன்றி.
எம்.கே.
குமார், வயிறு வலிக்கச் சிரிச்சீங்களா? என்னமோ போங்க.
ReplyDeletehttp://nizhalkal.blogspot.com/2005/04/blog-post_20.html
--Haranprasanna
அன்பின் பிரசன்னா,
ReplyDeleteமறுமொழிக்கு நன்றி!
உங்களது விமர்சனமும் படித்தேன். பசுபதியைக் கூட பாராட்டாதது எனக்கு ஆச்சரியம்!
படத்தை இரண்டாம் முறையும் சென்று பார்த்தேன் என்பது உங்களுக்கு நான் தரும் இன்னொரு கொசுறு தகவல். (நகைச்சுவைக்கு சலிப்பே இல்லை என்பது என் பாலிஸி!)
இரண்டாம் பார்வையின்னு ஒரு விமர்சனம் போடலாமானு யோசிக்கிறேன். :-)
எம்.கே.