Tuesday, April 12, 2005

இந்தியா- வல்லரசாகிறதா?

திடீர் பணக்காரனைக் கல்யாணம் செய்தவளின் அல்லது புதிதாய் 'ஸ்டார்' ஆனவனின் பொலிவான முகத்தைப்போல ஜிவ்வென்றிருக்கிறது இந்தியா. 'இந்த வாரம் இவர்', 'அடுத்த மாதம் அவர் மற்றும் இவர்' என இந்தியாவிற்கு விஜயம் செய்யும் பெரிய (நாட்டு மற்றும் குட்டி நாட்டு) தலைகளின் பெயர்கள் இப்போதெல்லாம் கண்களில் நிறைந்து போகின்றன. விடாமல் கை குலுக்கிக்கொள்ளும் காட்சிகளும் கூட அரசியல் அரங்கில் நிறைய காணக்கிடைக்கின்றன. இவை எல்லாம் சொல்லும் சேதிகள்தாம் என்ன? 'சின்ன' அண்ணனாகிறது இந்தியா!

'இந்தமாதம் வந்த நிலவாய்' இந்தவாரம் இந்தியா வந்தவர் சீனாவின் புது அதிபர் திரு.வென். மன்மோகன்சிங் அவர்களின் கைகளைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு இப்போது இந்தியத்தலைமை என் கைகளுக்குள் இருக்கிறது என்று சொன்னாரா தெரியவில்லை. ஆனால் இரண்டு மாதம் அல்லது இரண்டு வருடம் போனால் தெரியும்; சொல்ல மறந்தாரா இல்லை சொல்ல விரும்பவில்லையா என்று!

15 ஒப்பந்தகள் கையெழுத்தாகியிருக்கிறதாம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே. மிகவும் நல்ல சேதி! 'இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கும் எதிர்காலம், மேற்கத்தியர்களே நில்லுங்கள் மேடையை விட்டு ஓடுங்கள்...' என்று பாடல் மட்டும்தான் பாடவில்லை திரு. வென். மத்தபடி அவர் ஆசை அனைத்தையும் சொன்னார்.

மென்பொருளின் உலக (புலி) ராஜாவும் வன்பொருளின் உலக (சப்பைமூக்கு) ராணியும் இணைந்தால் உலகையே ஆட்டிவைக்கலாம் என்று அவர் மிகுந்த ஆவலோடுதான் சொல்லியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் கூரிய நாசியோடு மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கின்றன அமெரிக்க புலனாய்வுப் புலிகள். எங்கே இடித்தால் இவர்களுக்கு வலிக்கச்செய்யலாம் என்பது அவர்களின் நேரடியான தற்போதைய இலக்கு. அண்மையில் வந்துவிட்டுச்சென்ற அமெரிக்காவின் புதிய தற்காப்பு அமைச்சர் காண்டோலீசா ரைஸ்ஸ¤க்கு (அவரே ஒரு பெண்புலி!) மோப்பம் பிடிப்பது ஒன்றும் கஷ்டமான வேலையாக இல்லை. வீட்டிற்கு வந்த மருமகள் விளக்கு வைப்பதைப்போல இந்தியா வந்துவிட்டுச்சென்றதும் உடனே விளக்கைப் பற்ற வைத்தார் அவர். பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்பனை! பலே லேடி பலே!

இப்போது வென்னின் பயணம் மிகவும் உன்னிப்பாய்க் கவனிக்கப்படுகிறது. பரம்பரை பரம்பரையாய் அடித்துக்கொண்டு செத்த பங்காளிகள் கூட இப்போதெல்லாம் மனதளவில் இல்லாவிட்டாலும் 'வரும்படிக்காகவாவது' சமாதானமாகி வருவதை உலகின் எல்லா திசைகளிலும் காணமுடிகிறது. தைவான்- சீனா, சிங்கப்பூர்-மலேசியா, வடகொரியா-தென்கொரியா, இந்தியா-பாகிஸ்தான், அமெரிக்கா-சீனா, ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து என நமது கண்களே அதற்குச்சாட்சி.

இந்நிலையில் உலகப்பொருளியலில் கவனிக்கத்தக்க மாற்றம் பெற்று வரும் இவர்கள் 'இருவரும்' ஒன்று சேர்ந்தால் சிக்கல்கள் ஆகிவிடுமே என்று 'பெரிய அண்ணன்கள்' நினைத்து பயப்படுவது தெளிவாகிறது. இதற்கு வலு சேர்ப்பது போல சிக்கலான பிரச்சனைகளையெல்லாம் பெரிய மூட்டையாய்க் கட்டி 'பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று இவர்களும் உதறிவிட்டு, 'வரும்படி' வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்! எல்லாம் நல்ல படியாய் நடக்கும்வரை நல்லவைதான்.!

இதற்கிடையே இந்தமாதக் கடைசியில் இந்தியா வருகிறார் ஜப்பானிய பிரதமர்! ஆஹா அடுத்த பெருசு! 'வென்'னின் வருகையே அவரைக் கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டதாம். முன்னால் போனவர் எல்லா சீட்டையும் பிடித்துவிடுவாரோ என்ற பயமாயிருக்கலாம்; ஆனால் "எங்களுக்கும் இந்தியாவிற்கும் நீண்டநாள் நல்ல தொடர்பு. இதற்கும் அதற்கும் சம்பந்தமுமில்லை; பாதிப்புமில்லை" என்று சொல்லிவிட்டாரவர். விஷயமறிந்தவர்!

ஆசியாவில், சீனாவும் ஜப்பானும் பிற்காலத்தில் பெரிய எதிரிகளாகலாம். (இரண்டாம் உலகப்போரை மறக்கவில்லை சீனா!) இந்தியாவிற்கு ஜப்பான் எப்போதும் நண்பன். சீனா தற்போதைய நண்பன். 'வீட்டோ' சட்டை போட்டிருப்பவனை விட 'அச்சட்டைக்காய்' நம்மோடு வீதியில் போராடும் ஆள்தான் நம்முடைய தற்போதைய இலக்கு. இவ்விஷயத்தில் ஜப்பானை எதிர்த்து நேற்றுகூட பெரிய கலவரம் சீனாவில்!

எல்லாம் பார்க்கும்பொழுது இந்தியா 'லைம்லைட்டில்' இருப்பது தெரிகிறது. தக்கவைப்பது நம் தருதலைகளின்...சாரி, நம் தலைவர்களின் கையில் இருக்கிறது! மேடையில் ஏறுவார்களா? இல்லை வழக்கம் போல மேடைக்கு விளக்குப்பிடிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

எம்.கே.குமார்

5 comments:

  1. குமார், இப்போதுதான் என்.டி.டிவியில் இதைப்பற்றிய விவாதத்தினைப் பார்த்தேன். சப்பைமூக்கு காரர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிக்கிம் இந்திய எல்லைக்குள் இருக்கிறது என்று நமக்கே படம் போட்டு காட்டுகிறார்கள். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இவற்றில் எவ்வளவு நடைமுறைக்கு வரும் என்பதையும் யோசிக்க வேண்டும். அமெரிக்கர்களுக்கு கண்டிப்பாக மூக்கு வேர்க்கும். ஆசிய எல்லைக்குள் நடக்கும் மாறுதல்கள் உலகமெங்கும் தீவிர கவனத்துடன் பார்க்கப்படுகிறது. விரிவாக நேரம் கிடைக்கும் போது இந்த ஜியோபாலிடிக்ஸ் பற்றி எழுதுகிறேன். இப்போதைக்கு, சாஸ் ஊற்றி நூடுல்ஸ் தருகிறார்கள். நாளைக்கு தான் தெரியும் இதனால் பேதியாகுமா இல்லை சாதாரணமாக இருக்குமா என்று.

    ReplyDelete
  2. நரைன், கரெக்டாச் சொன்னிங்க!

    நூடுல்ஸ் தான்! பின்னால் ஆப்பு வைக்கும் சீனக்காரர்களிடம் கொஞ்சம் அல்ல நிறையவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்!

    நேரம் இருக்கும்போது கண்டிப்பாக எழுதுங்கள்.

    நன்றி.
    எம்.கே.

    ReplyDelete
  3. இந்தியா வல்லரசாவதை விட நல்லரசாக இருப்பது முக்கியம் என விரும்புகிறேன்.
    http://kuzhali.blogspot.com/2005/04/2020_17.html

    ReplyDelete
  4. "Indians and Chinease cant never make a business to gather
    Chinese cant give a bargain and an Indian cant live with out a bargain."
    Qoute from famous comdeian Russel Peter.

    ReplyDelete
  5. //இந்தியா- வல்லரசாகிறதா?" //

    super Joke :-)

    ReplyDelete