Tuesday, August 16, 2005

பொன்னியின் செல்வனும் தேவி தியேட்டரும்!

கடந்த 12 ஆம் தேதி மாலை 5.30 மணி. சென்னை தேவி தியேட்டர் வாசலில் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கிறார் அவர். கையில் செல்பேசி காதுக்கு சேதி சொல்லிக்கொண்டிருக்கிறது. ஐம்பது ரூபாய் டிக்கெட் இரண்டு எடுத்துவிட்டு வந்து 6.45 மணிக்காட்சிக்காய் காத்திருக்கும் போது அவரைக் காண நேருகிறது. எனது இரண்டாம் டிக்கெட்டுக்குரியவர், 'அவரை இப்படி பார்த்துக்கொண்டே இருப்பதால் என்ன பயன், ஒரு வார்த்தை பேசிவிடலாமே', என அவரருகில் நெருங்கி பேச ஆரம்பிக்கிறார்.

ஒரு சில தலையசைப்புகளுக்குப்பின் புன்முறுவலுக்குப்பின் அவர், TN 10 AF 100 (ஏ, எஃப் தவறாயிருக்கலாம்) என்ற எண்ணுடைய காரில் ஏறி பறந்துவிடுகிறார். நாங்கள் தியேட்டரை நோக்கித் திரும்புகிறோம்.

அவர், சூர்யா மூவீஸ் ஏ.எம்.ரத்னம்! பொன்னியின் செல்வன் படத்தயாரிப்பாளர். நடிகர் ரவிகிருஷ்ணாவின் தந்தை! 'பொன்னியின் செல்வன்' படம் அன்று அத்தியேட்டரில் ரிலீஸ்!

சரி, இனி பொன்னியின் செல்வனைப் பார்ப்போம்.

முகத்தில் பாதி (வெந்நீர் பட்டதால்) விகாரமுடைய ஒரு இளைஞன், சமுதாயத்தில் நிறைய வேதனைகளைச் சந்திக்க நேருகிறது. விளைவாக சுய தாழ்மையுணர்ச்சிக்குள் ஆட்பட்டுக்கொள்கிறான் அவன். அதிலிருந்து மீள, நிறைய சம்பாதித்து முகத்தைச் சரி செய்துகொள்ளவேண்டும் என முடிவு செய்து இராப்பகலாய் உழைக்க ஆரம்பிக்கிறான். சொந்த பணப்பிரச்சனைகளும் மற்ற பிரச்சனைகளும் அவனை வேறு திசைக்குள் துரத்த, இறுதியில் எதை அடைகிறான் அவன் என்பதுதான் படம் சொல்லும் கதை!

படத்தின் கதையை இயக்குநர், தயாரிப்பாளரிடம் சொன்னபோது ஏகத்துக்கும் கண்ணீர் விட்டு கதையைப்பற்றிக் கதறியழுது (சான்ஸை வாங்கி) விட்டிருப்பார் போலும்! படம் முழுக்க சோகத்தையும் செண்டிமெண்டையும் வாரியிறைக்க முயன்றிருக்கிறார்கள். ஊனமுற்ற ஒருவனைக் கதாநாயகனாகக் கொண்டு அல்லது பாவப்பட வைக்கும் ஒருவனைப்பற்றிய கதையைக் கொண்டு படமொன்றை எடுத்தால், அப்படத்தை வெற்றிப்படமாக்கிவிடலாம் என அவர்கள் நினைத்திருந்தால் அவர்களுக்கு இப்படம் பெரிய அடியாய்க் கொடுக்கும்.

அடுத்து என்ன காட்சி வரும் என்பதை எவரும் சொல்லிவிடலாம். அவ்வளவு அபத்தம் நிறைய இடங்களில். 'அழகிய தீயே' ராதாமோகனுக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை.

ஹீரோவாய் வரும் ரவிகிருஷ்ணா, தனக்கு பாவப்பட்ட கேரக்டர்கள் நன்றாய் ஒத்துவருமென்று எவரோ சொல்லக்கேட்டு (கெட்டுப்)போயிருக்கிறார். டக்கென்று ஏதாவது நாலு படங்களில் ஆக்ஷன் செய்து நமது எண்ணத்தை இவர் மாற்றலாம். ஏதோ ஒன்று குறைகிறது இவரிடம். குரலா? என்ன எளவோ தெரியவில்லை!

இசை வித்யாசாகராம். முதல்முறையாய் கேட்டேன். ஒன்றும் நிற்கவும் இல்லை; நிலைக்கவும் இல்லை. ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.

படத்தின் கதாநாயகியாய் வரும் கோபிகா, வருகிறார்; சிரிக்கிறார்; சீ என்கிறார்; ஜோக்கடிக்கிறார்; அழுகிறார் அப்புறம் கதாநாயகனுடன் சேர்ந்து நடக்கிறார். இவரது குடும்பம் எங்கிருக்கிறது, என்ன செய்கிறார்கள், இவர் அவரைக் காதலிப்பதை குடும்பத்தார் கண்டுகொள்ளவேயில்லையா இப்படியெல்லாம் கேள்வி கேட்பது ராதாமோகனுக்கு பிடிக்காது போலிருக்கிறது. ஒரே ஒரு காட்சியில், கோபிகாவின் பெயரைச்சொல்லி 'அவளா? உள்ளே இருக்கா போங்க' என்று கோபிகாவின் அப்பா டயலாக் பேசுகிறார். இவர்தான் அவருடைய அப்பாவா என்பதும் எனக்கு சரியாகத்தெரியவில்லை. மன்னித்துக்கொள்ளவும்.

ரேவதி பாவம். நண்பர்களாக வருபவர்கள், காமெடிக்காட்சிக்கு அல்லது ஜோக்குக்காகவே வருகிறார்கள்; போகிறார்கள். பிரகாஷ்ராஜ் மேக்கப் இல்லாமல் வந்து தத்துவம் பேசிவிட்டுப்போகிறார். புது ஹீரோயின் 'அளவான' கட்டழகி. இன்னும் சில மாதங்களில் ஒரு பாடலுக்கும் அப்புறம் வடிவேலுக்கும் ஜோடியாகலாம்.

இத்தனை களேபரத்துக்கிடையிலும் கொடுத்த பணத்திற்கு மோசம் வைக்காமல், போரடிக்கவும் விடாமல் ஒற்றை ஆளாய் படத்தைத் தனது தலையில் சுமந்து செல்வது வசனகர்த்தா (திரு.விஜி) மட்டுமே! (அழகிய தீயிலும் இவராய்த்தான் இருக்கவேண்டும். அதேபோன்ற ஜோக்குகள்.) தத்துவம் காமெடி இரண்டுக்கும் ஈடுகொடுத்து ரசிகர்களுக்கும் கொஞ்சம் தீனி போடுவது இவர் மட்டுமே. படம் கொஞ்சம் ஓடினால் அது சிரிக்க வைக்கும் வசனங்களுக்காக மட்டுமே இருக்கும்.

மிகப்பெரிய விஷயமான, படத்தின் தலைப்பை விட்டுவிட்டோமே! படத்தின் ஹீரோ ரவிகிருஷ்ணா ரேவதியின் பையன், அதாவது 'பொன்னியம்மா'வின் பையன். அதனால் தான் பொன்னியின் செல்வன். அடப்பாவிகளா! எவ்வளவு அருமையான காவியம் கொண்ட தலைப்பு. கெடுத்துவிட்டார்கள்! இன்றிரவு வந்தியத்தேவன் வந்து அவர்கள் வயிற்றில் குத்தட்டும்!

ஏ எம் ரத்னம் சார் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

எம்.கே.குமார்.

7 comments:

  1. இயக்குனர் ராதா மோகனை நம்பி இருந்தேன், இப்படி ஆகிவிட்டதே?
    30 நாளாவது ஓடுமா?
    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  2. --வந்தியத்தேவன் வந்து அவர்கள் வயிற்றில் குத்தட்டும்---

    நீங்க குந்தவையோடு டூயட்டா :P :-)

    ReplyDelete
  3. aiyooo..thalaippai paarthu eemaanthu poga irundheen.. mikka nanRi Kumar !

    V M

    ReplyDelete
  4. thappichenda sami!

    nichayama paathiruppen - azhagiya theeye pathippula..

    Thiyaagi M K Kumar vaazga!

    ReplyDelete
  5. படம் நன்றாக வரவில்லை என என்னிடமும் சொன்னார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை.

    எப்போது திரும்பி வந்தீர்கள் ஊரில் இருந்து? தனிமடலிடவும்.

    நன்றி

    ReplyDelete
  6. பின்னூட்டங்களுக்கு நன்றி சிவா, பாபா, வீ எம், சுரேஷ் மற்றும் மூர்த்தி.

    குந்தவையை சமீப காலமாய் காணவில்லை பாபா. வேறு ஆளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். :-)

    எல்லா நண்பர்களுக்கும் அறியத்தருவது, பொன்னியின் செல்வன் படத்திற்கு விகடன் 43 மதிப்பெண்கள் கொடுத்துள்ளது. படத்தை நாலா பக்கமும் குறை சொல்லிவிட்டு 43 மதிப்பெண்கள் தருவது விகடனால் மட்டுமே முடியும். செழிப்பாக விகடன் வாழ்க!

    எம்.கே.குமார்.

    ReplyDelete
  7. அடப்பாவி மக்கா எனக்கு ரசனை குறைவா?! எனக்கு படம் பிடித்திருந்தது அனுபவித்து பார்த்தேன், ரவி கிருஷ்ணாவின் பாத்திர தேர்வு தான் கொஞ்சம் உறுத்துகின்றது, நீங்கள் கூறியது போல ஏதோ ஒன்று குறைகின்றது, படத்தில் அதிக பட்ச சோகமெல்லாம் எனக்கு தெரியவில்லை, ஒரு வேளை இதெல்லாம் சோகமாக தெரியவில்லையோ என்னவோ?! கோபிகா "நாளைக்கு எனக்கு பிறந்த நாள் என்று கூறியதற்கு நாளைக்கு ஸ்கூல் காலேஜ் எல்லாம் லீவு விட சொல்கிறேன் போதுமா என்பது போன்ற சிறு சிறு நகைச்சுவைகளை ரசித்து பார்த்தேன்.

    காம்ப்ளெக்ஸ்ல நாம குடியிருக்கலாம் ஆனா காம்ப்ளெக்ஸ் நம்மகிட்ட குடியிருக்க கூடாது (கவிஞர் கோந்துவாயன் வசனம் மாதிரி இருந்தாலும்) போன்ற வசனங்கள் ரசிக்க வைத்தன.

    ஒரே ஒரு சண்டை காட்சியிருந்தாலும் சற்று எதார்த்தமாகவே இருந்தது, இந்த பறந்து பறந்து அடிப்பதெல்லாம் இல்லை.

    ஹீரோயிசம் இல்லாமல், தனி மனித துதி பாடாமல், ஆபாசம் இல்லாமல், இரட்டை அர்த்த நகைச்சுவையில்லாமல் இருந்தது. என்ன கொஞ்சம் நாடக பாணியில் இருந்தது.

    ஒருவேளை நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்ததால் எல்லாம் நல்லதாகவே பட்டதோ என்னவோ.

    நன்றி

    ReplyDelete