Tuesday, December 28, 2010

மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் - ஒரு பகிர்வு

துணை நடிகர்களைத் தேடுவதில் ஒரு இயக்குநரின் பங்கு என்ன என்பது எனக்குச் சரிவர தெரியவில்லை. அவர்களே தேடுவார்களா, இல்லை துணை நடிகர் ஏஜெண்ட்டிடம் சொல்லி, இந்த மாதிரி ஆள் வேண்டும் எனப் பிடித்துதரச்சொல்வார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் சத்தியமாய்த் தெரிகிறது. சிலர் இதில் கடுமையாய் உழைக்கிறார்கள். இது இவர்தான் என்று முழுமையாய் தான் நம்பும் அளவுக்கு அக்கதாபாத்திரத்தை அவர்கள் தேடுகிறார்கள் அல்லது உருவாக்குகிறார்கள்.

அத்தகைய தூண்டுதலில், சில பேரை சில வேடங்களில் அவர் "நடிக்கவில்லை; அவரேதான் அது" என்று மனம் ஒருங்கிணைத்துக்கொள்ளும். அவரைப் பின்னாளில் வேறொரு படங்களில் பார்த்தால் கூட அவ்வளவாக மனம் ஒப்புக்கொள்ளாது.

அந்த வரிசையில் எனக்கு பல பொருத்தங்கள் உண்டு.

  • 'பருத்திவீரனில்' வரும் பொணந்தின்னி (மைனாவில் நாயகனின் அப்பா),
  • 'நான் கடவுளில்' வரும் அம்பானி பற்றி கமெண்ட் அடிக்கும் மாற்றுதிறன் சிறுவன் (பின்னாளில் ஒரு படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருப்பார்)
  • 'விருமாண்டி'யில் கொலையைப் பார்த்துவிட்டு, பார்க்கவில்லை என்று பொய்ச்சாட்சி சொல்ல வரும் ஒரு புதுமுகம் (பின்னாளில் இவர் 'திருட்டுப்பயலே' படத்தில் நாயகனின் நண்பராக ஆஸ்திரேலியாவில் இடுப்பு டான்ஸ் தேடுவார்)
  • 'விருமாண்டி'யில் வரும் சண்முகராஜன் நல்லகாமன் போலீஸ்.. அதற்குப்பிறகு பல படங்களில் இவரை வில்லனாகப் பார்த்தாலும் அந்த வேடமும் அவருடைய ஒரு நக்கலான சிரிப்பும் கண்ணை விட்டு மறையவில்லை.
  • 'அயன்' படத்தில் சேட்டு வீட்டு கணக்குப்பிள்ளை (இவர், 'பிதா மகன்' படத்தில், சூர்யா ரயிலில் விற்பனை செய்யும்பொழுது அருகில் அமர்ந்திருப்பார். இவரை எப்படி கரெக்டாக அயன் படத்தில் பிடித்துப்போட்டார் இயக்குனர் என்பது எனக்கு ஒரு ஆச்சரியம்)
  • 'அங்காடித்தெரு' நாயகன் மகேஷ் (அங்காடித்தெருவில், வெங்கடேஷ், பழ. கருப்பையா இவர்களையெல்லாம் அந்தந்த கேரக்டராகவே மனசு ஒப்புக்கொள்கிறது)
  • 'மைனா'வின் நாயகன் விதார்த்
  • 'பருத்திவீரன்' ப்ரியாமணி அம்மா (கமல்தான் இவரை விருமாண்டியில் அறிமுகப்படுத்தினார்)
  • 'எம்டன் மகன்' சரண்யா (அ) 'களவாணி' சரண்யா
  • 'பூ' படத்தின் நாயகி
  • 'பிதா மகன்' விக்ரம் (இந்த வேடம் அவர்தான், இதற்குப்பிறகு எத்தனையில் அவர் நடித்தாலும் இதுவே அவர் உச்சமாக இருக்கும்!)

- இன்னும் நிறையப்பேர் இவ்வரிசையில் உண்டு. ஒரு அனுபவத்தின் முழுமையில் இதை உள்வாங்கும்போது இவர்கள் அந்த வேடத்தின் ஆளுமையாய் ஆகிவிட்டது உண்மையாய் இருக்கிறது.

மிகச்சிறிய கதாபாத்திரமேனும் அதற்குத்தகுந்த ஆட்களைத் தேர்வு செய்வதில் எனது சினிமா ரசிப்புத்தன்மையின் அனுபவத்தில், கமல் முதலில் நிற்கிறார். அதற்கடுத்த நிலையில் பாலா. அமீர், செல்வராகவன், வசந்தபாலன் ஆகியோரும் இந்த லிஸ்டில் உண்டு.

கமலின் அற்புதமான திறமைகளில் இதுவும் ஒன்று என்பதை அவருடைய படங்களை உன்னிப்பாய்க் கவனிப்பதன் மூலம் நாம் உணரமுடியும்.

அயன் படத்தில் பல கதாபாத்திரங்கள் 100 சதவீத வெற்றித்தேர்வாய் இருந்தது என்பதை நான் இங்கே பதிவு செய்கிறேன். சூர்யாவின் அம்மா முதல், சேட்டு மகன் அவருடைய குரல் வரை, அனைத்தும் கச்சிதப்பொருத்தம்!

இந்த கதாபாத்திர - தேர்வில், மிகவும் கடைசியில் இருப்பது கே.எஸ். ரவிகுமார் என்பதாக நான் நினைக்கிறேன். காரணம், எந்த கழுதையாய் இருந்தாலும் அதை நடிக்கவைத்து எடிட்டிங்கில் ஏற்றிவிட்டு விடலாம் என்பது அவர் எண்ணமாய் இருக்கலாம், இதற்கெல்லாம் அவர் அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை என்பது பல படங்களில் தெரியும்.

இந்த கதாபாத்திர முழுமையில் இயக்குனரின் ஈடுபாட்டுக்கும் அற்புத தேர்வுக்காகவும் ஒரு விருது வழங்கப்படலாம்.

எம்.கே.

No comments:

Post a Comment