Thursday, February 09, 2012

மௌனகுரு – ’த்ரில்’ குரு!


Mouna Guru will rock: Arulnidhi
தரமான சினிமாவின் ஆதார ஸ்ருதியாய்க்கொள்ளப்படும் சிறந்த திரைக்கதை மற்றும் குறைவான வசனங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி வெளிவந்திருக்கும் படம் மௌனகுரு.

இந்திய போலீஸ் என்பது ஆண்டாண்டு கால பண்ணைத்தனத்தின் எதேச்சதிகாரத்தின் மிச்சமிருக்கும் எச்சம். அந்த எச்சம் ஒரு சாமன்யனை என்ன வேண்டுமானாலும் செய்யும். நீதி நேர்மை சத்தியம் அதன் முன் நிற்கவே முடியாது என்பதை மீண்டும் அழுத்தமாய்ச் சொல்கிறது இப்படம்.

அருள்நிதி சும்மாவே மௌனகுருவாகத்தான் இருப்பார். அப்படி ஒரு கேரக்டரும் அமைந்துவிட்டால்.? ’கருணாகரன்’ என்ற இந்த கதாபாத்திரத்திற்கு  அவரின் உடல்மொழியும் கேரக்டரும் மிகப்பொருத்தமாக அமைந்துவிட இந்தக்கதைக்கு வேறு எந்த கதாநாயகனுக்கும் இப்படி ஒரு சங்கமம் நேராது. தான் பைத்தியம் இல்லை என்று தன் அண்ணன், அம்மா மற்றும் காதலியிடம் நெக்குருகும் காட்சியில் கண்ணில் நிற்கிறார். கொல்லப்படப்போகிறோம் என்கிற பல இடங்களில் கண்களில் காட்டும் பயம், அதிர்வு மற்றும் தொக்கிக்கொண்டிருக்கும் உயிராசை ஆகிவற்றில் இவருக்கு இது முதல்படம்.

காதலியாக, மருத்துவம் படிக்கும் இனியா. கொடுத்த வாய்ப்புக்கு நிறைவாக வந்துபோகிறார். மருத்துவம் படிக்கும் பெண் ஆதலால், நாயகன் மனநல மருத்துவமனையில் கையாளப்படுதலை இன்னும் கொஞ்சம் எடுத்தாண்டிருக்கலாம். எதார்த்த காட்சிகள் குறைவு.

ஜான் விஜய் ’ஓரம்போ’ படத்திலிருந்து இவருக்கு நான் ரசிகன். அலட்டாத வில்லத்தனம் இவரது ஸ்பெஷல். அஸிஸ்டெண்ட் கமிஷனர் மாரிமுத்து என்ற காதாபாத்திரத்தை இவ்வளவு சிறப்பாய் வேறு யாரும் செய்திருக்கமுடியாது.

கர்ப்பிணி போலீஸ் அதிகாரி பழனியம்மாளாக உமா ரியாஸ்கான். நெஞ்சில் உரமும் நேர்மையும் இருக்குமிடத்தில் இருக்கும் மேம்பட்ட மிரட்டல் நடிப்பு இவரிடமிருந்து. சபாஷ்!

மனநல மருத்துவமனையில் கிடைக்கும் நண்பனாய் (ஆடுகள தனுஷின் நண்பன்) முருகதாஸ். ’ரொம்ப மெதுவா வளர்ற போலயிருக்கு’ என்று எதார்த்தமாய் கிண்டல் செய்வதும் ’சொல்லிட்டுப்போறது ரொம்ப கஷ்டம், சொல்லாமப்போறது கொஞ்சம் கஷ்டம்’ என்று தப்பிக்க வழி கூறுவதும் இவரை ஒரு ’கேரக்டர் ஆர்டிஸ்டா’க்கியிருக்கிறது.

தலைமுடியில் ஸ்டைல் செய்திருக்கும் கல்லூரி விடுதி நண்பரொருவர் வார்டனிடம் அதற்கு சொல்லும் காரணத்தை ’மிஸ்’ செய்துவிடாதீர்கள்.

மாரிமுத்து (ஜான் விஜய்), இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் (மது), சப் இன்ஸ்பெகடர் செல்வம் (பாலகிருஷ்ண்)  மற்றும் ஏட்டு பெருமாள்சாமி (கிருஷ்ணமூர்த்தி) ஆகிய நால்வரின் கயமைத்தனத்தில் மாட்டிக்கொண்ட அப்பாவி கருணாகரனுக்கு ஏதும் ஆகிவிடாதக்கூடாதே என பார்வையாளன் பதறும் வேளையில் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி பழனியம்மாளை ஏதும் செய்துவிடுவார்களோ என மனப்பறையில் அதிர்ந்துகொண்டேயிருப்பது திரைக்கதையின் நல்ல உத்தி.

பாதிரியாரின் கதை யாரும் எதிர்பார்க்காத இன்னொரு திரைக்கதை திருப்பம்.

வசனங்கள் மிகப்பெரிய பலம். காட்சிக்கும் திரைக்கதைக்கும், காமெடிக்கும்.

நிறைய என்கவுண்டர் வாய்ப்புகளிலிருந்து கருணாகரன் தப்பிப்பதில் ஹீரோத்தனம் ஏதுமில்லாமல் ஆண்டவனே அந்த வாய்ப்புகளை கொடுப்பது போலிருப்பது எதார்த்தமாய் இருந்தாலும் ’இத்தனை வாய்ப்பா’ என்ற சிறிய நெருடல் மேலிடுகிறது.

திரில் கலந்த திரைக்கதைக்கேற்ற ஒளிப்பதிவில் மகேஷ் முத்துசாமி பின்னியிருக்கிறார். இசையமைப்பாளர் தமனின் பின்னணி இசை குறிப்பிடத்தக்க ஒன்று.

இடைவேளைக்கு முன் வரும் அந்த 10 நிமிட காட்சியை எடுக்க ஐந்து நாட்கள் கஷ்டப்பட்டதை தனது படைப்பின் மேலுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாய்ச் சொல்கிறார் அறிமுக இயக்குனர் சாந்தகுமார்.

எதிர்பார்ப்புடன் கூடிய ஒன்றோடொன்று பின்னப்பட்ட திரைக்கதை, அதற்கேற்ற வசனங்கள், இறுதிவரை விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்லும் திரில் இயக்கம் என முதல் படத்தில் முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.

நல்ல கதையும் அதைச்சொல்லும் மேம்பட்ட திரைக்கதையும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் ஒளிப்பதிவும், பின்னணி இசையும், திரைக்கதைக்கேற்ற நடிகர்களையும் கொண்ட ஒரு சினிமா முயற்சி வெற்றியைத்தக்கவைக்கும் என்ற பாரம்பரியமிக்க எதார்த்தத்தை மீண்டும் நிரூபணம் செய்கிறது இந்த மௌனகுரு.


எம்.கே.குமார்.

No comments:

Post a Comment