Sunday, May 10, 2020

Lucy - English (2014)

Image may contain: 1 person, closeup

ஐ-போனையோ ஆன்றாய்டையோ விரலால் உருட்டிக்கொண்டிருக்கும் அழகான/வடிவான உங்களுடைய, முதல் மூதாதை மனிதப்பெண்குரங்கு லூசி இந்தப்பூமியில் தோன்றி 3.2 மில்லியன் ஆண்டுகளாகிவிட்டன தெரியுமா?

அதாவது இத்தனையாயிரம் வருடங்களில் இரண்டு விஷயங்களே மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. ஒன்று தன் தேவைக்கேற்ப தன் தகவமைக்கு ஏற்ப தன்னைத்தானே வடிவமைத்துக்கொள்வது அல்லது தேடிக்கொள்வது. இரண்டு, அதை அடுத்த சந்ததிக்குக் கடத்திவிட்டுச்செல்வது. தொடர்ந்து இவ்வாறாக நடந்து நடந்துதான் இப்போது நீங்கள் ஆன்றாய்டுக்கு வந்திருக்கிறீர்கள், அதுவும் மனித மூளையின் வெறும் பத்து சதவீத புத்திசாலித்தனத்தை மட்டுமே பயன்படுத்தி.

உலகில் வாழும் உயிர்களில் அதிக புத்திசாலித்தனமான விலங்கு டால்பின். அதுவே ஏறக்குறைய 15 சதவீத மூளையைத்தான் பயன்படுத்துகிறது என்கிறார்கள். எண்ணற்ற நியூரான்களைக்கொண்டிருக்கும் இந்த மூளையின் செயல்பாட்டை மேலும் உயர்த்தினால்? டால்பினைப்போல நமக்கு நாமே ஒலியை உருவாக்கி அதை மீளொலியாய் திரும்பப்பெற்று ..இப்படி எதாவது சக்திபெற்று?

இந்தக்கற்பனையை அறிவியல் புனைவு திரில்லராக்கி கோடிகளைக் குவித்துவிட்டனர் பிரான்ஸைச் சேர்ந்த இயக்குனர் Luc Besson தம்பதியினர். 40 மில்லியனைப் போட்டு 450 மில்லியனை அள்ளிய படம்தான் இந்த லூசி.

தைவானின் தாய்பே நகரத்தில் படிக்கும் அமெரிக்க மாணவி லூசி Scarlett Johansson. புலிமீது தாவக் காத்திருக்கும் மான் போல வழுவழு சுறுசுறு. கவர்ந்திழுக்கிறார். (உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்.) Lucyயின் இரண்டு வார டேட்டிங்கில் இருக்கும் காதலன், அவளிடம் ஒரு ப்ரீப்கேசைக்கொடுத்து எதிரில் இருக்கும் ஹோட்டலில் நுழைந்து அங்கிருக்கும் Mr Jang என்பவரிடம் கொடுத்துவிட்டு வா. ரிசப்ஷனில் சொன்னால்போதும், அவரே வந்து வாங்கிக்கொள்வார் என்கிறான். டேட்டிங் கீட்டிங் என்றாலும் வாயும் வயிறும் வேறுதானே, இந்தவேலைக்கு எனக்குக்கிடைத்த ஆயிரம் வெள்ளியில் ஆளுக்கு ஐநூறு என்று பிரித்தும்கொடுக்கிறான்.

ரிசப்ஷனில் பேரைச்சொன்னதும் தன் படையோடு கீழே வருகிறான் வில்லன் ஜாங். லூசியையும் அள்ளிக்கொண்டு போகிறான்.

பெட்டியில் இருப்பது CPH4 எனப்படும் மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தும் செயற்கை போதைமருந்து. ஆறாவது வாரத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு- உடல் வேகமாக வளர இயற்கையாகவே சுரக்கும் ஒர் நுண்துளியின் பல்லாயிர மடங்கு வடிவம். ஒரு துண்டு உடலுக்கு ஒரு அணுகுண்டு.

நீலக்கலரில் பெட்டியில் இருக்கும் நான்கு பாக்கெட்டுகளையும் நால்வரின் வயிற்றுக்குள் வைத்துத் தைத்து பாரிஸ், ரோம் என்று அனுப்பிவிடுகிறார்கள். அதில் ஒருத்தி லூசி.

லூசியை அனுப்புவதற்குமுன் அடைத்துவைத்திருக்கும் இடத்தில் குண்டர்களில் ஒருவன் அவளை நெருங்க, எனக்கு மூடு இல்லை, கிட்டே வராதே என்கிறாள். கடுப்பில் ஓங்கி வயிற்றில் நாலு குத்துகுத்திவிட்டுப்போகிறான் அவன். லூசியின் வயிற்றிலிருக்கும் பாக்கெட் நெகிழ்ந்து உடலுக்குள் கலக்க ஆரம்பிக்கிறது அதிவேக மூளைபெருக்க போதைவஸ்து. அப்புறம் என்ன? சும்மாவே தீப்பிடிக்க வைக்கும் ஸ்கார்லெட் லூசி திருப்பாச்சி லூசியானால்? அட்டாசு பட்டாசுதான்.

உடலில் வலி உணர்வில்லை. மூளை ரேடியோ மேக்னெடிக் அலையை உணர்கிறது. தொட்டால் உடலை முழுதும் ஸ்கேன் செய்து என்ன நோய் என்கிறது. அதகளம்தான். குண்டர் கூடாரத்தைக் காலிசெய்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்று கன்பாயிண்டில் அனஸ்தீசியா இல்லாமல் ஆபரேட் செய்யச்சொல்லி மீதமுள்ள பாக்கெட்டை எடுத்துக்கொண்டு மற்ற மூவரையும் தேடுகிறாள்.

தன் நிலையைச் சொன்னால் உணர்ந்துகொள்ளும் விஞ்ஞானி/ ஆய்வாளர் யார் என கூகுளை ஸ்கேன் செய்து உலகப்புகழ்பெற்ற இயற்பியலாளர் Morgan Freeman ஐ பிடிக்கிறார். நான் உங்களைப் பார்க்க வருகிறேன் என்கிறாள்.

ஐரோப்பிய போதை மருந்து தடுப்பு பிரிவின் அதிகாரிக்கு அழைத்து மற்ற மூவரும் அங்கு வந்துகொண்டிருக்கும் செய்தியைச் சொல்கிறாள்.

தப்பிய தென்கொரிய வில்லன் Choi Min-sik ஐரோப்பாவில் அவளைத்துரத்த, பாக்கெட் உள்ள மூன்றுபேரையும் கடத்தல் பிரிவு அதிகாரிகள் துரத்த, லூசியை மரணம் துரத்த அவளோ, இதை என்ன செய்வது என்று பேராசிரியரைத் துரத்த... படம் ஜெட் வேகம்.

என்ன ஆனாள் லூசி? எதை இந்த உலகத்திற்கு விட்டுச்சென்றாள் என்பது மீதமுள்ள படம்.

சில காட்சிகளை மட்டும் படமே மறந்தாலும் மனம் மறக்காது. மிதக்கும் ராஃப்டில் கடலுக்குள் தொங்கியவாறு தலையை வைத்து ரோஸ்ஸுடன் பேசிக்கொண்டிருக்கும் ஜாக் (என்ன படம்?) அதிரடிக்கு முன்னால் ஒவ்வொரு சொட்டு நீர்த்துளியின் கணத்தைக் கணக்கிட்டுக் காத்திருக்கும் வீரன் விஸ் (என்ன படம்?) இப்படி...

அதேபோல, மூன்று மில்லியன் வருடத்துக்கு முன்னால் செல்லும் ஆன்றாய்டு காலத்து லூசி, அண்டர்வேர் கூட இல்லாத ஆதி 'ஏப்' லூசியின் விரலைத்தொடுவது அழகான என்றென்றும் நினைவில் நிற்கும்காட்சி.

எத்தனையோ மில்லியன் வருடங்கள் உங்களுக்கு இப்போது அந்த வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது, நீங்கள் அதைவைத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.

நல்ல ஒரு சை-ஃபி படம் பார்த்த திருப்தி, ஸ்கார்லெட்டையும். பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

#MK_Movies
#Lucy

No comments:

Post a Comment