Sunday, May 10, 2020

Qarib Qarib Singlle (Almost single) 2017 (Hindi)

Image may contain: 1 person

இர்பான்- பார்வதி இருவருமே நடிப்பில் அசுரர்கள். இருவரையும் வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். பெரிதாக ஒன்றுமில்லாத கதை. ஆனால் சிறுசிறு மென் உணர்வுகள் அவசியம். அதனால்தான் இவர்கள் தேவைப்பட்டார்கள்போலும். இருவரும் ஜஸ்ட் லைக் தேட் அதை டீல் செய்கிறார்கள்.

3 பெண்களுடன் காதலிலிருந்ததும் யாரும் மணந்துகொள்ளவில்லை யோகியை (இர்ஃபான்). மனம் முழுக்க அன்பிருந்தும் அவர் எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத ஆள். இரவில் போனின் இன்னொரு முனையில் காதலிக்கும்பெண் பேசிக்கொண்டிருக்கும்போதே (என்னைப்போல) தூங்கிவிடும் ஆண். பத்துமணி இரயிலுக்கு வரச்சொல்லிவிட்டு பத்தரைக்கு வந்து பொறிகடலை வாங்க வண்டியைவிட்டு கீழே இறங்கிப்போவான். விமானத்தில் முதல்வகுப்பில் இருவருக்கும் டிக்கட் எடுத்துவிட்டு விமானத்தைத் தவறவிட்டுவிட்டு அடுத்த விமானத்தில் போவான். எந்தப்பெண் இப்படிப்பட்டவனை(நம்மை)யெல்லாம் வைத்து வாழ்க்கை வண்டியோட்டும் சொல்லுங்கள். காதலித்த பெண்களனைவரும் அவனை மிகவும் மதிக்கிறார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. (பின்னே என்ன லூசா அவர்கள்?)

இத்தகைய ஒருவனை மேட்ரிமோனியல் வழியாக சந்திக்கிறாள் விதவையான 35 வயது ஜெயா (பார்வதி). அலுவலகத்தில் தன்னம்பிக்கை நிறைந்த பெண். ஆனால் தனிவாழ்வில் விதவைப் பேரிளம்பெண்ணுக்கே உரிய தயக்கமும் பயமும் ஆர்வக்கூச்சமும் கொண்டவள். 'உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்' கணக்காய், 'என் முன்னாள் காதலிகளைப்பார்; நான் யார் என்று சொல்வார்கள்' என்று பார்வதியை அழைத்துக்கொண்டு போகிறார் யோகி.

குடும்பமாகிவிட்ட காதலிகள் எல்லாம் இர்ஃபானை மதிப்போடு கொஞ்சத்தான் செய்கிறார்கள், கூட வந்த பார்வதி?

இருவரும் சேர்ந்து செல்லும் எல்லாவற்றிலும் வழக்கம்போல சொதப்புகிறார் இர்ஃபான். அவ்வளவு பொறுமையாகவெல்லாம் புரிந்துகொண்டு காத்திருக்கப்போகிறார்களா என்ன?

கடுப்பான பார்வதி, நம் இருவருக்கும் ஒத்துவராது, பிரிவோம். நான் இப்படியே என் முன்னாள் கல்லூரிக்காதலனைப் பார்த்துவிட்டுவருகிறேன் என்று அவரை அப்படியே விட்டுவிட்டு கிளம்புகிறார்.

இர்பான் என்ன ஆனார்? இருவரும் சேர வாய்ப்பிருந்ததா? இதுதான் மீதிப்படத்தின் கிளைமேக்ஸ் கதை.

பார்வதியா இது? பார்வதிக்கெல்லாம் வயசாகலாமா சார்? ஆகுதே சார்...
நடிப்பில் இருவருக்கும் தீனி. அதிலும் இர்ஃபானை அலேக்காய் சாப்பிட்டுவிட்டுப்போகிறார் பார்வதி. மறைந்த இர்ஃபான், என்ன ஒரு எளிமையான அலட்டிக்கொள்ளாத நடிகன்!

கொஞ்சம் ஜாலி. பார்க்கலாம்.

#MK_Movies

No comments:

Post a Comment