Tuesday, April 26, 2005

டாக்டர். ரெ. கார்த்திகேசு -- ஒரு விமர்சன முகத்துடன்!

கடந்த ஞாயிறு அன்று மாலை 4.30 மணிக்கு சிங்கப்பூரின் உட்லாண்ட்ஸ் நூலக கலையரங்கில், மலேசியாவின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் பல்வேறு படைப்புத்தளங்களின் வழியாக இலக்கிய உலகில் அரும்பணி ஆற்றிவரும் அறுபது வயது இளைஞருமாகிய டாக்டர். ரெ.கார்த்திகேசு அவர்களுடைய இரு புத்தகங்கள் வெளியீட்டு விழாவும் மற்றும் வாசக எழுத்தாளர்களுடான ரெ.கா அவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை திருமதி. ரமா சங்கரன் கவனித்துக்கொள்ள, சிங்கை முரசு மற்றும் சிங்கை கலை இலக்கிய குழுவின் அங்கத்தினர்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க, தேசிய நூலக வாரியம் விழாவை நடத்த உதவியது.

கூட்டத்தில் சிங்கப்பூரின் பிரபலங்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில், திருமதி .ரெ.கார்த்திகேசு அவர்களைத்தவிர, 'உத்தமம்' அமைப்பின் தலைவர் திரு. அருண் மகிழ்நன், அவரது சகோதரியும் மலாய பல்கலைக்கழக பேராசிரியையுமாகிய திருமதி. முல்லை அவர்கள், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சுப. திண்ணப்பன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தலைவர் கவிஞரேறு அமலதாஸ், முதுபெரும் 'ஆசியான்' கவிஞர் திரு. க.து.மு. இக்பால், முரசு நிறுவனர் திரு. முத்து நெடுமாறன், விகடன் புகழ் ஜே.எம்.சாலி, தேசிய பல்கலைக்கழக ஆய்வலர் திரு. இராம. கண்ணபிரான், தேசிய நூலக வாரிய தலைவர் திருமதி. புஷ்பா, வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி அமைப்பாளர் திரு. பாஸ்கரன், சிங்கப்பூர் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவரான திரு. இந்திரஜித், எழுத்தாளரும் கவிஞருமான திரு. ரெ.பாண்டியன், மானசஸென் ரமேஷ், ஒலி 96.8ன் மீனாட்சி சபாபதி, நடன ஆசிரியை அருண் பிரியலதா அவர்கள், திரு ரமேஷ், திருமதி சித்ரா ரமேஷ், திருமதி ஜெயந்தி சங்கரி, திருவாளர்கள் பாலு மணிமாறன், பனசை நடராஜன், மூர்த்தி, அருள் குமரன், 'குழலி' வலைப்பூவின் புருஷோத்தமன், திரு. சாந்தன் என ஏராளமானோரும் இன்னும் தமிழாசிரியர்கள் மற்றும் வாசக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Image hosted by Photobucket.com

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதோடு வரவேற்புரையையும் நிகழ்த்தினார் நண்பர் ஈழநாதன். வரவேற்புரையைத் தொடர்ந்து ரெ.கார்த்திகேசு அவர்களின் 'விமர்சன முகம்' கட்டுரைத்தொகுப்பும் 'ஊசியிலை காடுகள்' சிறுகதைத்தொகுப்பும் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து ரெ.கா அவர்களது படைப்புளைப்பற்றிய தனது கருத்துகளைச் சொல்ல வந்தார் நண்பர் திரு. அருள்குமரன். 'சூரியனுக்கு டார்ச் அடிக்கும் சுண்டெலியாய்' தன்னை உருவகப்படுத்திக்கொண்ட அவர், ரெ.காவின் அறிவியல் புனைகதைப்பற்றியும் சொன்னார். ஏதோ ஒரு கதையில், 'ஏனய்யா அவரைக்கொன்றுவிட்டீர்கள்' என்று கண்ணீர் மல்காத குறையாக வருத்தம் தெரிவித்தார்.
Image hosted by Photobucket.com

அவரைத்தொடர்ந்து வந்தார் அறுபது வயது இளைஞர் திரு. அருண் மகிழ்நன். ரெ.காவின் நெருங்கிய நண்பரான இவரைப் பேச வைப்பதற்கு பின்னிருக்கும் காரணமாய், ஈழநாதன், "ரெ.காவின் படைப்புகளைப் பற்றிப் பேச எல்லோரும் இருக்கிறார்கள், ரெ.காவைப்பற்றிப்பேச அவரது நண்பரான நீங்கள் தான் சிறந்தவர்" என்று சொல்லி அப்படியே திருமதி. முல்லை அவர்களையும் பேசவைத்தார். 'எழுத்தை மட்டும் படித்துவிட்டு அப்படியே விட்டுவிட வேண்டிய எழுத்தாளர்களை ஏராளமாய் பார்த்ததாகச்சொல்லிய அருண்மகிழ்நன் அவர்கள், ரெ.கா வை தமது 40 ஆண்டுகால நண்பர்' என்றார். மிகச்சிறந்த மனிதர் என்றும் சொன்னார். அதையே வழி மொழிந்தார்கள் அவரது தங்கையாரும்.

கலந்துரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக இருந்ததால் வாழ்த்துரை மற்ற உரைகளெல்லாம் தவிர்க்கப்பட்டிருந்தன. ஏற்புரைக்கு வந்தார் திரு. ரெ.கா. அவருக்கு மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார் திருமதி சித்ரா ரமேஷ்.
தனது ஏற்புரையில் சிங்கப்பூர் மலேசிய உறவைப் பற்றிக் குறிப்பிட்ட ரெ.கா, மலேசியாவின் தற்போதைய இலக்கியப் போக்கு குறித்தான தனது பார்வையைச் சொன்னார். கலந்துரையாடல் தொடங்கியது.

ஒட்டுமொத்த கலந்துரையாடலிலும் கேட்கப்பட்ட கேள்விகள் ஐந்திலிருந்து ஆறுக்குள் இருக்கலாம். கேள்விகள் மிகப்பெரிய பதில்களுக்குள்ளே புகுந்து கலந்து கொண்டிருந்ததால் எல்லாம் சில குறிப்பிட்ட விஷயங்களுக்குள்ளே சுற்றிச் சுற்றி வந்தன. சிங்கப்பூரின் தற்போதைய இலக்கியப்போக்கு குறித்து அறிந்துகொள்ள விரும்பிய ரெ.காவுக்கு, திரு. அமலதாஸ் அவர்கள் தன்னால் முடிந்தவரை எல்லாம் எடுத்துச்சொன்னார். சுப. திண்ணப்பன் அவர்கள், "மலேசியாவில் தமிழை தமிழர்கள் வளர்க்கிறார்கள், சிங்கப்பூரில் அரசாங்கம் வளர்க்கிறது" என்று சொன்னார்.
Image hosted by Photobucket.com

சூழ்ந்துகொண்டிருந்த முக்கிய விடயங்கள்:

1. சிங்கப்பூர் அல்லது மலேசிய இலக்கியம் (வரலாறு) என்பது (சொல்வது) என்ன? புலம் பெயர்ந்த படைப்பாளர்களின் படைப்பு இத்தகைய சிப்பிக்குள் அடைபடுமா? அவர்களது படைப்புகள் அந்தந்த வாழும் நாட்டு இலக்கியத்தைச் சேருமா? இல்லை சொந்த நாட்டையா? இல்லை பயணக்கட்டுரை தவிர்த்து சிங்கப்பூரைப் பற்றி கதையோ நாவலோ எழுதியிருந்தால் அது சிங்கப்பூர் இலக்கியத்துக்குள் சேருமா? இல்லையா?அகிலனின் நாவலில் ஆரம்பித்து புயலிலிலே ஒரு தோணி வரை பேச்சு சென்றது. 'சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து எழுதுபவர்களது படைப்புகள் மட்டுமே சிங்கப்பூர் இலக்கியம்' என்று யாரோ ஓரிருவர் சொன்னார்கள்.

2. இணையம் தொடர்பான பேச்சுகள்: நாடு மறைத்து, நாட்டின் எல்லை மறைத்து, மக்களின் பிரிவுகொண்ட மனம் மறைத்து எல்லா இடைவெளிகளையும் எல்லைகளையும் விலக்கி புது இலக்கியம் படைத்துக்கொண்டிருப்பவை இணையத்தமிழ் என்றார் திரு. ரெ.கா. இணையத்தில் இலக்கியத்தரமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன என்றார். அச்சு ஊடகமெல்லாம் ஆடிப்போகும் அளவுக்கு நல்ல படைப்புகளும் ஏராளமான விஷயங்களும் இங்கு இருப்பதாகச்சொன்னார். வருங்கால இணையம் தமிழுக்கு படைக்கப்போகும் நன்கொடை மிகச்சிறப்பாக இருக்கலாம் என்றார். இணைய உறவுகளை நேரில் சந்திக்கும் போது கிடைக்கும் இன்பம் பற்றியும் சொன்னார்.
3. மலேசியாவில் 'காவ்யன்' என்ற தமிழ் எழுத்தாளர்களைக் கொண்ட அமைப்பு, தமிழில் கதைகள் எழுதுவதைக் குறைத்துக்கொண்டு மலாய் மொழியில் நிறைய எழுதுவதாகச் சொல்லி வருத்தப்பட்டார். 'நமது கலாசாரத்தை அவர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் மலாய் மொழியில் எழுதுவது நல்லதுதானே, அதை ஏன் தவறு என்கிறீர்கள்' என்று ஒரு வாசகி கேட்டார்.

4. சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சி (பிறப்பு வளர்ப்பு இணைந்து!)- அதன் திறனாய்வு பற்றிய (அவநம்பிக்கை) கருத்துகள்- தமிழ்முரசு தமிழுக்கு ஒதுக்கும் பக்கம் குறைவது- என இவ்விஷயங்கள் விவாதத்தில் பெரும் பங்கு பெற்றிருக்க, 'சிங்கப்பூரில் இருக்கும் மிக இளைய எழுத்தாளருக்கு வயது 42. அந்தளவுக்கு இங்கு தமிழ் வளர்ச்சி இருக்கிறது.' என்று தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார் ஒரு வாசகர். இக்கேள்விக்குப் பதிலை கவிஞரேறு அமலதாஸ் சொல்லியது பின்வருமாறு இருந்தது. "இதற்குக்காரனம் சமூகம் தானே ஒழிய அரசாங்கம் இல்லை! அரசாங்கம் இதோ இப்போது நடக்கும் போட்டிக்குக் கூட பத்தாயிரம் வெள்ளி கொடுக்க முன்வந்திருக்கிறது!'

இக்கேள்விக்கு சிறு விளக்கமாய் உள்ளே வந்த அருண்மகிழ்நன் அவர்கள், 'ஒரு உரசல் இல்லாமல், எத்தகைய படைப்புமோ இலக்கிய வளர்ச்சியோ நடைபெற வாய்ப்பில்லாது இருக்கலாம்; வாய்ப்புக்குறைவாக இருக்கலாம். ஆனால் பொருளியலிலோ கருத்திலோ, தனிமனித படைப்புகளிலோ ஒரு உரசல் இருக்கும்பொழுது எழுத்தாளர்களும் உருவாகலாம்; படைப்புகளும் உருவாகும்' என்றார்.

5. இணைய இதழ் மற்றும் அச்சு இதழ்களின் தரமும் அதன் இலக்கியப் பங்கும் வெகுவாக விமர்சிக்கப்பட்டன. அடிக்கடி ஜெயமோகன் என்ற வார்த்தையையும் சுந்தர ராமசாமி என்ற வார்த்தையையும் கையாண்டு மேற்கோள் காட்டினார் திரு. ரெ.கா. பின் நவீனத்துவம் சிங்கப்பூருக்கோ மலேசியாவுக்கோ வந்தால் தன்னைப்போன்றவர்களின் பாடு திண்டாட்டமே என்றார் கிண்டலாக. மலேசியாவில் அடுத்த தலைமுறையில் யாரும் குறிப்பிடும்படியான எழுத்தாளர்கள் இல்லை என்பதையும் வருத்தத்தோடு சொன்னார். புதுக்கவிதை மட்டுமே வாழலாம் என்றும் சொன்னார்.

6. அறிவியல் புனைகதைகளைப் பற்றி அளவளாவப் பேசினார் ரெ.கா. அருள்குமரனும் தான் படித்த எல்லாக் கதைகளிலிருந்தும் பல கேள்விகளைக்கேட்டார். அறிவியல் புனைகதை மட்டுமின்றி எல்லா கதை- இலக்கிய வட்டங்களையும் புகுந்து நுழைந்து வந்தார் ரெ.கா.
கூட்டத்தின் முடிவில் திருமதி. புஷ்பா நன்றி சொல்ல, கூட்டம் கலைந்தது. இந்நிகழ்வினை முதன்முறையாக நடத்திய கலை இலக்கிய குழு பற்றி ஒரு முழுமையான அறிமுகத்தை பார்வையாளர்களுக்கு வழங்கினார் ஈழநாதன். கைகோர்த்து செய்ல்படவே இக் 'கலை இலக்கிய குழு' என்பதைத் திட்டவட்டமாக எடுத்துரைத்தார். வலைப்பூ பற்றியும் சொன்னார்.

ஒட்டுமொத்த நிகழ்வின் மழையில் அனுபவமின்மையின் உருவம் சில இடங்களில் நனைந்து வெளிப்பட்டது. பேச வந்த கருத்துகள் அனைத்தும் கடல் போலிருக்க, கட்டு மரத்தைப் பற்றியே கொஞ்சம் அதிகமாக பேசியது போலிருந்தது. சில முக்கியப் 'பிரச்சனை முதலைகள்' தலையை நீட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் கடலுக்குள் புகுந்துகொண்டன. எல்லாம் ஆரம்பிக்கும் முன்பும், முடிந்த பின்பும் 'சுவீட் காரம் கா·பி' வழங்கப்பட்டது.

திரு. ரெ.கா அவர்களைப்பற்றி, அவரது இலக்கியவாழ்க்கை பற்றி, மலேசிய- சிங்கப்பூர் இலக்கியப்போக்கு குறித்தான அவரது பார்வை பற்றி, இணையம் பற்றி, இணையத்தில் அவருடைய படைப்பு பற்றி என விரிவான ஒரு அறிமுகத்துக்கு இச்சந்திப்பு உதவியது என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.

அரங்கத்தின் ஒரு மூலையில் இருந்த அந்த நிழல் கொஞ்சம் சிரித்து, "எக்ஸ்யூஸ் மி சீமான்களே! சீமாட்டிகளே!! நீலகண்ட சாஸ்திரி வந்திருக்கிறார், கொஞ்சம் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்!" என்பது போலிருந்தது எனக்கு! அது பிரமையாகக் கூட இருக்கலாம்!

எம்.கே.குமார்.

(அனைத்தும் நினைவிலிருந்து எழுதியவை! சில கருத்துகளோ வார்த்தைகளோ மாறியிருக்கலாம்!)

நன்றி: திருமதி. ரமா சங்கரன்
தேசிய நூலக வாரியம்
சிங்கை கலை இலக்கிய குழு.

Sunday, April 17, 2005

மும்பை எக்ஸ்பிரஸ்-விமர்சனம்!

மும்பையின் சர்க்கஸ் ஒன்றில் மரணக்கிணற்றுக்குள், 'மும்பை எக்ஸ்பிரஸ்' பைக் ஓட்டும் அப்பாவி- அவினாசி (கமல்). அக்காவின்(கோவை சரளா) அரவணைப்பை மட்டுமே கண்ட அவன் அவளுக்காக மட்டும் எப்போதும் மனம் இறங்குகிறான். அவள் கண் கலங்குவதை காணச்சகியாத அவன், அவளுக்காக அவளுடைய கணவருக்காக, சிறு குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்கும் (குதிரையை சவாரிக்கு விட்டும் பிழைக்கும்!) கும்பலிடம், ஒரு சந்தர்ப்பத்தில் சேர நேர்கிறது. அக்கும்பலில் ஏற்கனவே தலைமை நிர்வாகி 'பெர்சன்' 'ஏ', பசுபதி. அவருக்குத் துணையாள், ஏற்கனவே ஆறு குதிரையும் இரண்டும் பெண்டாட்டியும் வைத்திருந்தவரின் மகனான 'பெர்சன்' 'பி' வையாபுரி. இக்கூட்டத்தில் அக்காவின் கணவருக்குப் பதில், பெர்சன் 'புது' 'சி' யாகச் சேர்கிறார் கமல்.

குழந்தை கடத்தல் வைபவத்திற்கு முன் அவர்களது காரில் அடிபட்டு அவர்களோடு சேர்ந்துகொள்கிறான் ஒரு தெலுங்கு பேசும் இன்சூரன்ஸ் ஏஜண்ட்(ரமேஷ் அரவிந்த்!). குழந்தை கடத்தி முடிக்கப்பட (கடத்துவதற்குள் பெரும்பாடு ஆகிவிடுகிறது), கடத்திய குழந்தை வேறொன்றாகவும் கடத்தியதாக பணம் வசூலித்த குழந்தை வெறொன்றும் ஆகிவிடுகிறது. குழந்தை கடத்தப்பட்டதாக பணம் கொடுத்தவர் ஒரு கோடீச்வர செட்டியார் (சந்தானபாரதி!). கடத்திய குழந்தை, போலீஸ் உயரதிகாரியான நாசரின் ஆசைநாயகிக்கு பிறந்த பையன். அந்த ஆசை நாயகி மனீஷா கொய்ராலா.

பணத்தைக் கொடுத்து குழந்தையை மீட்க சந்தானபாரதியிடம் கொடுக்கச்சொல்லி நாசர், ரகசிய போலீசான சக்சேனாவிடம் கொடுத்தனுப்ப, சந்தானபாரதி, அவினாசிதான் ரகசிய போலிஸ் என அவரிடம் ஏமாந்து நிற்க, இனிமேல் நாசரை நம்பிப்பயனில்லை என 'அகல்யா' மனீஷா(அக்கு என்று கமல் ஆசையாகக் கூப்பிடுகிறார்!) நினைத்து, பணத்தோடு வேறெங்காவது சென்று செட்டில் ஆகிவிட மும்பை எக்பிரஸ¤க்குச் செல்ல, பணத்தைத் தேடி சந்தானபாரதி சக்சேனாவோடு பறக்க, தனது கூட்டாளி 'புது சி' தங்களை ஏமாற்றிவிட்டதாக பசுபதி அன் கோ தேட, கமலையே தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து அன்புக்கு ஏங்கும் குட்டிப்பையன் மனீஷாவை கமலோடு சேர்க்க முயற்சி பண்ண கடைசியில் கிடைத்த பணத்தை வைத்து எல்லோருடைய பிரச்சனையும் தீர்ந்து, சொந்த பிஸினஸாக மரணக்கிணற்றை வாங்கி சர்க்கஸ் நடத்துகிறார்கள் அவினாசி அன் கோ.

மும்பை எக்ஸ்பிரஸ் என்ன, ஜப்பான் எக்ஸ்பிரஸ் வேகத்திற்கு பறக்கிறது கதை! அம்மாவின் பாசத்திற்கு ஏங்கும் தன்னின் இன்னொரு வடிவமாக கமல் அச்சிறுபையனை காணும் கணங்களில் மட்டும் (இடைவேளைக்குப்பிறகு கொஞ்ச நேரம்!) கதை லேசாக நகர்வது போலிருக்கிறது. அதுவும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் தொடர் தருணத்திற்கு இது ஒரு இடைவேளையாகவே இருக்கிறது.

இத்துனூண்டு ஊறுகாயை வைத்துக்கொண்டு ஒரு ·புல் பாட்டில் சரக்கை உள்ளே ஏற்றுவதைப்போல திரைக்கதை பின்னியிருக்கிறார் கமல். ஆள்மாறாட்ட திரைக்கதையில் கமலுக்கு இணை இனி இல்லை என்றே சொல்லுமளவுக்கு இருக்கிறது திரைக்கதை. வசனத்தில் தன்னிடம் வசனம் எழுதிய எல்லோரிடமும் கற்றுக்கொண்டதை வைத்து நல்ல மார்க்கே வாங்கியிருக்கிறார் கமல். கிரேஸி மோகனின் சாயல் பல இடங்களில் பளிச்சிட்டாலும் கிரேசி மோகன் எழுதியிருந்தால் இன்னும் தூக்கிச்சாப்பிட்டிருப்பார் என்று தோன்றுகிறது; ஆனால் கிரேசி மோகன் எழுதாதது படம் ஓடுவதற்கு இன்னும் கொஞ்சம் பலம் என்றே நான் நினைக்கிறேன். நொடிக்கு ஒரு டயலாக் காமெடியென தொடர்ந்து வரும் கிரேசி மோகனின் காமெடி எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாமல் (தொடர்ந்து வெடித்துக்கொண்டேயிருக்கும் காமெடி வெடி!) காதலா காதலா கதை ஆகிவிட்டிருக்கலாம்! கமல் எழுதியதால் அது தவிர்க்கப்பட்டிருகிறது. கமலுக்கு வசனத்திற்கு அறுபது மதிப்பெண்கள் தாராளமாய் வழங்கலாம்.

யார் யாரிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன என்பதைக்கண்டறிந்து அவர்களை முழுமையாகப்பயன்படுத்திக்கொள்வதற்கு சினிமாவில் மிகத்திறமை வேண்டும். அது கமலிடம் இருக்கிறது என்பதெல்லாம் நான் இங்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. பட்டாசு பாலாவாகவும், எம்.எல்.ஏவின் ரௌடித் தம்பியாகவும், கொத்தாளத்தேவராகவும் திரிந்த பசுபதியை வைத்து இவ்வளவு அழகான காமெடி செய்யமுடியும் என்பதை கமலைத்தவிர யாரும் யோசிக்க மாட்டார்கள். சந்தானபாரதி, வையாபுரி மற்றும் ரமேஷ் அரவிந்தையும் சரியாக பொருத்தி விட்டிருக்கிறார் கமல். பணம் விளையாடும் சீரியஸான காமெடி கதையில் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளின் பாதிப்பை மிக அழகாக இணைத்துகலக்கியிருக்கிறார். ரமேஷ் அரவிந்த நன்றாகப்பண்ணுகிறார். படத்தின் பின்பாதியில் கொஞ்சம் நேரம் வயிறு வலிக்கும் அளவுக்கு 'செம' காமெடி.

நாசர், ராஜ்கமல் பிலிம்ஸின் ரெகுலர் கஸ்டமர் ஆக்டர். அவர் கேரக்டரை யாரை வைத்து வேண்டுமானாலும் பண்ணலாம் என்பதால் நாசர் நடிப்புக்கு ஏற்ற தீனி கிடைக்கவில்லை. அவரின் ஆசைநாயகியாக வரும் 'முன்னாள் கிளப் டான்சர்' மனீஷா பணத்திலேயே குறியாய் இருக்கிறார் எனினும் அதுதானே அவர்களுக்கு வாழ்க்கை! கிளைமேக்ஸ் வரை அவர் 'பணம் பணம்' என்பதிலே மனதை வைத்து இருப்பதால் கமலோடு அவர் மனதாலும் இணைகிறாரா என்பது நமக்கும் ஒரு கேள்வி!

தமிழிலும் சக்சேனா காரெக்டரை அவரே செய்தது நன்றாக இருக்கிறது. இந்தமாதிரி சீரியஸ் கம் காமெடி காட்சிக்கு அவர் மிகச்சரியான ஆள். டிரா·பிக் போலீஸ் மற்றும் கோவை சரளாவின் கணவராய் (வரும் தீனா; அறிமுகம். கமல் இவருக்கு குரல் கொடுத்திருக்கிறார்!) வரும் ஹிந்தி நடிகர்களும் சிரிக்க வைக்கிறார்கள். குரங்கும் குதிரையும் கூட நடிக்கின்றன. குதிரை ஓகே. பல காமெடிக்காட்சிகள் குதிரையால் வருகின்றன.

இத்தகைய ஒரு படத்துக்கு என்ன பெரிதாய் பாடல்கள் வைக்கமுடியும் என்பதால் பாடலில் முக்கிய கவனம் செலுத்தாதது போல இருக்கிறது. பையனின் 'அப்பா-அம்மா' செண்டிமெண்டுக்கும் கமலின் குரங்கு சேட்டைகளுக்கும் என இரு பாடல். பின்னணி இசையில் இசைராஜா இரு இடங்களில் தனித்து இனிமையாகத் தெரிந்தார்.

கமலுக்கு காது கேட்காது என்பதும் அவர் அனாதை என்பதும் அவர் சொல்ல நினைக்கும் கருத்துகளுக்கு பின்புலம் சேர்க்கின்றன. மரணத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் கூட கமல் வசனங்களில் வருகின்றன. பையன் 'ஹர்திக்' கலக்கல். கமல் சில காட்சிகளில் ரிஸ்க் எடுத்திருக்கிறார். எடிட்டிங் செய்தவரும் கஷ்டப்பட்டிருப்பார் போல!

டிஜிட்டல் தொழிட்நுட்பம் திருட்டு விசிடியில் படம் பார்ப்பது போன்ற நடப்பைத் தருகிறது. உண்மையிலேயே இது இப்படித்தான் இருக்குமா இல்லை தியேட்டரில் ஏதாவது செய்யவேண்டுமா? சில இடங்களில் (குறிப்பாக லாங் ஷாட்) மிக மோசம். பொருட்செலவு அவ்வளவாய் ஆகியிருக்காது என்பது என் எண்ணம். மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரின் காரணமாக ஏற்படும் காமெடி காட்சிக்கு, தமிழர் பாதுகாப்பு சபையினர் சிரிக்காமல் வெளியே எழுந்து வந்தால் படத்தின் பெயரை நானும் மாற்றச்சொல்கிறேன்.

டிவியிலோ திரை விமர்சனத்திலோ துண்டு துண்டாகக் காட்சிகளை நீங்கள் பார்த்தீர்களானால் 'என்னய்யா படம் இது' என்று நினைக்கத்தோன்றலாம். ஆனால் திரையில் முழு நீள படத்தில் காட்சிகள் அனைத்திலும் காமெடி.

கமலின் ரசிகன் என்பதால் சொல்லவில்லை, காமெடியின் ரசிகன் என்பதால் சொல்கிறேன், இந்தப்படத்துக்கு நான் கியாரண்டி. குழந்தைகளோடு செல்லுங்கள். மிகவும் ரசித்துச் சிரித்துவிட்டு வரலாம்.

எம்.கே.குமார்.

Tuesday, April 12, 2005

இந்தியா- வல்லரசாகிறதா?

திடீர் பணக்காரனைக் கல்யாணம் செய்தவளின் அல்லது புதிதாய் 'ஸ்டார்' ஆனவனின் பொலிவான முகத்தைப்போல ஜிவ்வென்றிருக்கிறது இந்தியா. 'இந்த வாரம் இவர்', 'அடுத்த மாதம் அவர் மற்றும் இவர்' என இந்தியாவிற்கு விஜயம் செய்யும் பெரிய (நாட்டு மற்றும் குட்டி நாட்டு) தலைகளின் பெயர்கள் இப்போதெல்லாம் கண்களில் நிறைந்து போகின்றன. விடாமல் கை குலுக்கிக்கொள்ளும் காட்சிகளும் கூட அரசியல் அரங்கில் நிறைய காணக்கிடைக்கின்றன. இவை எல்லாம் சொல்லும் சேதிகள்தாம் என்ன? 'சின்ன' அண்ணனாகிறது இந்தியா!

'இந்தமாதம் வந்த நிலவாய்' இந்தவாரம் இந்தியா வந்தவர் சீனாவின் புது அதிபர் திரு.வென். மன்மோகன்சிங் அவர்களின் கைகளைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு இப்போது இந்தியத்தலைமை என் கைகளுக்குள் இருக்கிறது என்று சொன்னாரா தெரியவில்லை. ஆனால் இரண்டு மாதம் அல்லது இரண்டு வருடம் போனால் தெரியும்; சொல்ல மறந்தாரா இல்லை சொல்ல விரும்பவில்லையா என்று!

15 ஒப்பந்தகள் கையெழுத்தாகியிருக்கிறதாம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே. மிகவும் நல்ல சேதி! 'இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கும் எதிர்காலம், மேற்கத்தியர்களே நில்லுங்கள் மேடையை விட்டு ஓடுங்கள்...' என்று பாடல் மட்டும்தான் பாடவில்லை திரு. வென். மத்தபடி அவர் ஆசை அனைத்தையும் சொன்னார்.

மென்பொருளின் உலக (புலி) ராஜாவும் வன்பொருளின் உலக (சப்பைமூக்கு) ராணியும் இணைந்தால் உலகையே ஆட்டிவைக்கலாம் என்று அவர் மிகுந்த ஆவலோடுதான் சொல்லியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் கூரிய நாசியோடு மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கின்றன அமெரிக்க புலனாய்வுப் புலிகள். எங்கே இடித்தால் இவர்களுக்கு வலிக்கச்செய்யலாம் என்பது அவர்களின் நேரடியான தற்போதைய இலக்கு. அண்மையில் வந்துவிட்டுச்சென்ற அமெரிக்காவின் புதிய தற்காப்பு அமைச்சர் காண்டோலீசா ரைஸ்ஸ¤க்கு (அவரே ஒரு பெண்புலி!) மோப்பம் பிடிப்பது ஒன்றும் கஷ்டமான வேலையாக இல்லை. வீட்டிற்கு வந்த மருமகள் விளக்கு வைப்பதைப்போல இந்தியா வந்துவிட்டுச்சென்றதும் உடனே விளக்கைப் பற்ற வைத்தார் அவர். பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்பனை! பலே லேடி பலே!

இப்போது வென்னின் பயணம் மிகவும் உன்னிப்பாய்க் கவனிக்கப்படுகிறது. பரம்பரை பரம்பரையாய் அடித்துக்கொண்டு செத்த பங்காளிகள் கூட இப்போதெல்லாம் மனதளவில் இல்லாவிட்டாலும் 'வரும்படிக்காகவாவது' சமாதானமாகி வருவதை உலகின் எல்லா திசைகளிலும் காணமுடிகிறது. தைவான்- சீனா, சிங்கப்பூர்-மலேசியா, வடகொரியா-தென்கொரியா, இந்தியா-பாகிஸ்தான், அமெரிக்கா-சீனா, ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து என நமது கண்களே அதற்குச்சாட்சி.

இந்நிலையில் உலகப்பொருளியலில் கவனிக்கத்தக்க மாற்றம் பெற்று வரும் இவர்கள் 'இருவரும்' ஒன்று சேர்ந்தால் சிக்கல்கள் ஆகிவிடுமே என்று 'பெரிய அண்ணன்கள்' நினைத்து பயப்படுவது தெளிவாகிறது. இதற்கு வலு சேர்ப்பது போல சிக்கலான பிரச்சனைகளையெல்லாம் பெரிய மூட்டையாய்க் கட்டி 'பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று இவர்களும் உதறிவிட்டு, 'வரும்படி' வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்! எல்லாம் நல்ல படியாய் நடக்கும்வரை நல்லவைதான்.!

இதற்கிடையே இந்தமாதக் கடைசியில் இந்தியா வருகிறார் ஜப்பானிய பிரதமர்! ஆஹா அடுத்த பெருசு! 'வென்'னின் வருகையே அவரைக் கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டதாம். முன்னால் போனவர் எல்லா சீட்டையும் பிடித்துவிடுவாரோ என்ற பயமாயிருக்கலாம்; ஆனால் "எங்களுக்கும் இந்தியாவிற்கும் நீண்டநாள் நல்ல தொடர்பு. இதற்கும் அதற்கும் சம்பந்தமுமில்லை; பாதிப்புமில்லை" என்று சொல்லிவிட்டாரவர். விஷயமறிந்தவர்!

ஆசியாவில், சீனாவும் ஜப்பானும் பிற்காலத்தில் பெரிய எதிரிகளாகலாம். (இரண்டாம் உலகப்போரை மறக்கவில்லை சீனா!) இந்தியாவிற்கு ஜப்பான் எப்போதும் நண்பன். சீனா தற்போதைய நண்பன். 'வீட்டோ' சட்டை போட்டிருப்பவனை விட 'அச்சட்டைக்காய்' நம்மோடு வீதியில் போராடும் ஆள்தான் நம்முடைய தற்போதைய இலக்கு. இவ்விஷயத்தில் ஜப்பானை எதிர்த்து நேற்றுகூட பெரிய கலவரம் சீனாவில்!

எல்லாம் பார்க்கும்பொழுது இந்தியா 'லைம்லைட்டில்' இருப்பது தெரிகிறது. தக்கவைப்பது நம் தருதலைகளின்...சாரி, நம் தலைவர்களின் கையில் இருக்கிறது! மேடையில் ஏறுவார்களா? இல்லை வழக்கம் போல மேடைக்கு விளக்குப்பிடிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

எம்.கே.குமார்

Monday, April 11, 2005

மாலனுக்கு ஒரு கடிதம்! பி.கே.எஸ்ஸுக்கும்!

அன்பு மாலன் அவர்களுக்கு,

வலைப்பூக்களின் ஆரம்பம் முதல் அவற்றில் தாங்கள் காட்டிவரும் காட்டிவரும் ஆர்வமும், தொண்டும் பாராட்டப்படக்கூடியது. உண்மையில், ''அட! மாலனெல்லாம் நமக்கு பின்னூட்டமிடுகிறாரே என்று வலைப்பூக்கள் ஆரம்பித்தவர்கள் இங்கே அதிகம்!'

புற்றீசல்கள் போல கிளம்பி வளரும் இவற்றில் இனிமேல் எதையும் படீக்கவோ எழுதவோ நேரமிருக்காது. (உருப்படியாய் இருக்குமா என்பது பெரிய கேள்வி!) (ஏற்கனவே பல மடற்குழுக்கள் படித்து மாதமாகிறது!) காசி, இப்போதே சிறந்ததையும் அதிக மார்க்கு வாங்கியதையும் போட ஆரம்பித்துவிட்டார். காலை பத்து மணிக்கு போட்ட பதிவு பதினொரு மணிக்கு கீழே சென்றுவிடுகிறது! {:-)} அடுத்து வேறு ஏதேனும் கொண்டு வருவார். இப்படிப்போகும் நிலைமையில் ஒருநாள் எல்லாவற்றையும் இழுத்து மூட்டை கட்டிவிட்டு பொண்டாட்டியையும் பிள்ளையயும் கோர்ட் வாசலில் இருந்து கூட்டி வரவேண்டிய நிலைமை வரலாம். :-)

இணையத்தில் எழுதுபவர்களுக்கு இலக்கியத்தோடு கொஞ்சம் பாலம் ஏற்படுத்துவதில் சுஜாதா, பாரா(பொறுத்துப்பொறுத்துப்பார்த்தார், நேரவிரயம் கண்டு நிம்மதியாய் ஓடிவிட்டார்!), இரா.மு, ஜெ.மோ(ரொம்ப அடக்கி வாசிப்பார் இந்த கச்சடாவெல்லாம் கவைக்குதவாது என்பது தெரியும்!), ஞானி வரிசையில் நீங்களும் இருந்தீர்கள். நான் எதிர்பார்த்த மாதிரியே நடந்துவிட்டது!

எப்போதாவது ஒரு இன்லெண்ட் லெட்டரில் வரும், 'ஒரு பிடி சேற்றை' அள்ளி தூர எறிந்துவிட்டு, எழுத ஆரம்பித்துவிடுபவர்களுக்கு இப்படி முகத்திற்கெதிராய் அளவுக்கதிகமாய் சேற்றை பார்ப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்!தாமரை இலை தண்ணீர் போல 'ஒட்டாமல் வாழ்ந்தால்' நிற்கலாம் என நினைக்கிறேன். தண்ணீர் இருந்தால்தான் வாழ முடியும் என்றிருந்தாலும் தண்ணீரோடு கலந்து உறவாடி வாழ வேண்டியது அதற்கு அவசியமில்லை.

உங்களது 180 நிமிடங்கள் இருக்கட்டும். உங்களுக்கும் ஜெ.மோ வுக்கும் எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என்று நான் மண்டை காய்ந்து போகிறேன்.
இணணயத்திலும் சரி மற்ற அலுவல்களிலும் சரி.

இந்த பிரிவு மற்ற சில ஆக்கபூர்வ விஷயங்களுக்கு உங்களுக்கு உதவுமாயின் சென்று வாருங்கள். கண்டதெற்கெல்லாம் பதில் சொல்லி காலம் கழிப்பது விரயத்தின் உச்சம்!

அண்மையில் அனுராக் வலைப்பதிவில் தங்களது பேட்டியைப் படித்தேன். 'பழைய ஜெயகாந்தனைப் பிடிக்கும்' என்று நீங்கள் சொல்லியிருந்ததையும் அதற்கு சில நாட்களுக்கு முன் நான் ஆர்வமுடன் வாங்கிப்படித்த 'ஹரஹரசங்கர' நாவலின் ஒற்றுமையையும் நினைத்து (சாரு, ஒரு கூட்டத்தில், ஹரஹரசங்கராவை ஜெகே எழுதினாரா? அவர் எழுதுற வேலயை விட்டு ரொம்பநாளாச்சுங்க என்று ஒரு பதில் சொன்னார்!) இதனை ஒரு பதிவாக எழுத எண்ணியிருந்தேன். (எழுதிவிட்டேன், போடவில்லை!) நிற்க.

இதற்கிடையில் பி.கே.எஸ் பதிவை இப்போதுதான் நான் படித்தேன்.ஜெகேவை 'முழுமையாக' இன்னும் படிக்க்வில்லையாதலால் உங்கள் இருவருடைய கருத்துமோதல்களிலும் நிஜம் தெரியவில்லை எனக்கு. ஆனால் தனிமனித தாக்குதல்களுக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லை என்றே தோன்றியது.

ஜெகேயைப் பற்றி நீங்கள் எழுதியதில் அளவுக்கதிகமான "யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கு" இருக்கிறது என்று பி.கே.எஸ் நினப்பாரானால், பி.கே.எஸ்சினுடைய பதிவில் "கொஞ்சம் ரசிகத்தன்மை" இருப்பது என்னால் உணர்ந்துகொள்ளமுடிகிறது!

ஹர ஹர சங்கராவை ஜெயகாந்தன் எழுதியதுபோல 'ஹர ஹர ஜெயகாந்தா'வை பி.கே.எஸ் எழுதியிருப்பது தெரிந்தது. (ஆனால் பி.கே.எஸ் ஜெ.கேயைப் பற்றி நிறைய தெரிந்தவர். அவரைப்படித்தவர்)

ஆகையால் தனிமனித தாக்குதல்களுக்கும் படைப்புகளின் பொதுமதிப்பீடுகளுக்கும் யாரும் இடம் கொடுக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்!நன்றி, மீண்டும் வருக!

எம்.கே.குமார்
*****

அன்பு பி.கே.எஸ்,

இலக்கிய உலகு என்ன, 'எல்லா இடத்திலும் அரசியல்தான்' என்பது இன்றைய உலகில் யாருக்கும் தெரியாமல் இல்லை. சில பெரிய விருதுகளுக்குக்கூட சில நல்ல எழுத்தாளர்கள், கட்சிக்கரை வேட்டி கட்டவேண்டிய காலமாகிவிட்டது. இதிலெல்லாம் புதிது என்று எதுவுமில்லை. (சில சிற்றிதழ் 'சிங்கங்களெல்லாம்' கூட வார இதழ்களில் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்!)அதெல்லாம் இருக்கட்டும்.

ஜே.கே.யின் சிகரங்களைக் காட்டுகிறேன் என்று ஜெயஜெய சங்கராவை,
அ.மியையும் கோவை ஞானியையும் கொண்டு காட்டியிருப்பது சரியானதல்ல என்பது என் கருத்து. அதே நாவலை மிகக்கேவலமாக இகழ்ந்தவர்கள் என்று ஒரு இலக்கியவாதிகள் லிஸ்ட் நான் தரட்டுமா? (அ.மி பயங்கரமான கிண்டல் பேர்வழி என்பது வேறு விஷயம்!)

எனது கருத்துப்படி, அந்த நாவல் நடுநில விமர்சனப்பார்வையில் எழுதப்பட்டது அல்ல. (அது கட்டுரை இல்லையே, நாவல் தானே! புனனவடிவம் தானே! அதிலென்ன நடுநிலைப்பார்வை என்று நீங்கள் கேட்டால் அது உண்மை என்பேன்.!)அதற்கு சங்கரரை வைத்து எழுதாமல் யாராவது 'புதுச்சாமியார்' அல்லது 'புதிதாக சாமியாரனவர்' பற்றி கதை எழுதியிருந்தால் பதினைந்து ரூபாய்க்கு பரவாயில்லை என்று விட்டிருக்கலாம்.

சர்ச்சைக்குரிய நேரத்தில் சர்ச்சைக்குரியவரைப் பற்றி சர்ச்சைக்குப்பெயர்போன நாவலாசிரியர் இப்படி, அதாவது 'அவரது தரத்தில்' எழுதாதுதான் வருத்தமளிக்கிறது. (படிக்கும்போது அப்படி நினக்கத் தோன்றுவது வேறு வருத்தமான விஷயம்!) கதையின் ஆரம்பத்தில் "என்ன நடந்தாலும் ஹீரோ நல்லவன்" என்ற முடிவோடு கதையின் போக்கு எழுதப்பட்டதாகவே எனக்குத் தோன்றியது. இது எனது விமர்சனம். இதுதான் சரி என்று சொல்லவில்லை.

இந்த விஷயத்தில் மாலனின் வரிகள் எனக்குப்பிடித்தன. தீப்பொறி பறக்கும் ஜெயகாந்தன் எங்கே? இவர் எங்கே? என்றுதான் நானும் நினைத்தேன். நிற்க.

இப்பதிவில் ஜெகேயை தூக்கிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று மாலனை, ஒண்ணுந்தெரியாத பாப்பா' ரேஞ்சுக்கு கொண்டு சென்றிருப்பது தவறென நினைக்கிறேன். தமிழ் எழுத்துலகில் அவருக்கும் ஒரு நல்ல இடம் இருக்கிறது!

உங்களது வாதப்படி, மாலன், ஜெகேயைப் பற்றி அப்படி எழுதியது தவறானால், நீங்கள், மாலனைப் பற்றி இப்படி எழுதுவதும் எவ்விதத்திலும் சரியாகாது என்பதும் நீங்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்தானோ என்பதும் நடுநிலைமையாளர்களின் இன்னொரு பார்வை!மற்றபடி மாலனியத்தியலோ ஜெயகாந்தியத்திலோ உங்களளவுக்கு எதுவ்ம் தெரியாது எனக்கு!

எம்.கே.குமார்.

Tuesday, April 05, 2005

அவலம் கண்ணா அவலம்!

தண்ணீருக்குள்ளே ஒரு ஊரு நம்ம பணமும் கெடக்கு பாரு!

"வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைச்செய்துபார்" இது நமக்கான பழமொழி! அரசியல்வாதிகளுக்கு இது எப்படி மாறும் தெரியுமா? "வீட்டைக்கட்டிப்பார் கணக்கில் காசு சேரும் பார்."

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட 'துரையரசபுரம்' கிராமத்தில், வீடு வேண்டும் என்று யார் கேட்டார்களோ தெரியாது. நான்கு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட 500 தொகுப்பு வீடுகள். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மக்களுக்காக அரசாங்கம் கட்டியவை தாம் இவைகள். அரசாங்கம் கட்டிவிட்டு அபப்டியே கால்நடையாய் போய்விட்டது. காசு கணக்கில் ஏறியபின், எது நடந்தால்தான் என்ன; நடக்காவிட்டால்தான் என்ன?

வீடு கட்டுகிறார்கள் சரி. வீட்டை என்ன 'கண்மாயிலா' கட்டவேண்டும்? (கண்மாய் என்றால் தெரியும் தானே?! பெரிய நீர்நிலை. ஏரி!) மொத்தமாய் நீருக்குள்ளே மூழ்கி முத்தெடுக்கவா ஏரிக்குள்ளே கட்டினார்கள்? வீட்டைக் கட்ட உத்தரவிட்டார்களே ஏன் அதைத் திறந்துவைக்கவில்லை? மக்களுக்காகத் தானேயய்யா அது? மக்கள் எங்கே இருக்கிறார்கள்? கண்மாய்க்குள் கரையும் நம் காசுகள்!

பாருங்கள் ஐயா பாருங்கள்! அவலங்களைப் பாருங்கள்.
Image hosted by Photobucket.com
"அம்மா ஆட்சியாம் இதில் அவர்களையே கேளுங்கள்"--ஐயா கட்சி.
Image hosted by Photobucket.com
"ஐயா கட்சி போட்ட திட்டம்; அவர்களையே கேளுங்கள்"-- அம்மா கட்சி.
Image hosted by Photobucket.com
"எனக்கு வேலை கிடக்கு; என்னை விட்டு விடுங்கள்."---அறந்தாங்கித் தொகுதியின் நீண்ட நாள் எம்.எல்.ஏ தற்போதைய எம்.பி: திருநாவுக்கரசர்!

பாரு தம்பி பாரு! பணமும் கெடக்கு பாரு! வாயைப்பொளந்து தூங்கு தம்பி! வல்லரசா ஆயிருவோம்!

எம்.கே.குமார்