Thursday, March 18, 2004

ஆட்டோகிரா·ப். - 1.

செந்திலுக்குத்திருமணம். திருமண அழைப்பிதழை தனது பழைய நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக சென்னையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டி கிளம்புகிறார். நெய்க்காரன் பட்டி ஓடைப்பாலத்தில் அமருகிறார். காய்ந்து கிடந்த ஓடைப்பாலத்தில் சலசலவென அலைபாய்ந்து வருகிறது தண்ணீர். கூடவே நினைவுகளும்.

மூச்சடைக்க ஓடி வந்து நிகழ்காலத்தில் கலக்கிறது வழியெங்கும் வாசம் வீசும் இனிமையான நினைவுகள். மல்லிகாவின் மேல் இயல்பாக வருகிறது முதற்காதல். காமமறியாத காதல். என்ன நடக்கிறது என்பதறிவிக்காமல் அப்படியே வந்த வழி போகும் காதல். இருவருமே தங்களுக்கு முடிந்ததை கைக்கொண்டு கனத்த மௌனங்களாய் இடைவெளி இயங்க பிரிகிறார்கள்.

மூன்று குழந்தைகளுக்குத் தாயான மல்லிகா கண்கள் விரிய அவனைப்பார்க்கிறாள். படக்கென்று வீட்டுக்குள் ஓடி பொட்டு வைத்துக்கொண்டு வருகிறாள். 'என்ன செந்திலு..எப்புடி இருக்கே..'என்று மனதுக்குள்ளிருந்து வருகிறது முகமறியாத முடிச்சு. அவிழ்ந்து போகாத முடிச்சு. கணங்கள் கட்டிச்சென்ற உணர்வுகளின் முடிச்சு.

கேரளாவின் ஆலப்புழாவிற்கு செல்கிறார் செந்தில். கண்கள் குளிரும் கேரளாவின் இயற்கை கொஞ்ச படகில் பயணிக்கும்பொழுது சப்பனங்களில் சல்லியம் செய்த லத்திகா மறுபடியும் வருகிறாள்.

அப்பாவின் உத்தியோக மாறுதலுக்காக கேரளா ஆலப்புழாவிற்கு நகர்கிறது அவரது குடும்பம். மேகத்திற்கிடையே நகர்ந்து கண்களில் தவழும் நிலவாய் கல்லூரிக்காலத்தில் அவனின் இதயத்திற்குள் விழுகிறாள் லத்திகா. தேவதையே நேரில் வந்ததுபோல வருகிறாள் அவள். விலங்கினத்திலே புள்ளிமான் புலியிடம் மாட்டிக்கொள்கிறது..ஆனால் மனித இனத்தில்..?

முடிந்ததை கைக்கொண்டு மௌனங்களோடு நழுவும் காலமல்ல இது. உற்சாகம் கொப்பளிக்கும் இளங்கன்று பருவம். அவளின் பார்வையையே வரமாய் வேண்டி அலையும் பருவம். எல்லாம் தன்னால் முடியும் என்று வெளியுலகம் அறியாது காதலில் மட்டுமே மூழ்கிக்கிடக்கும் காதற்பருவம். மனசு மட்டுமே மருகி அலையும் கணங்கள் இல்லை இவை. இரண்டாவதும் எதையும் நினைக்காது செய்துவிட்டு பிறகு முடிவெடுக்கத்தூண்டும் கூறுகள் கொண்டதுமான உடலும் ஏங்கும் காதல். தான் கடித்த ஆப்பிளை அவனிடம் கொடுக்கிறாள் அவள். அவன் ஆதாமாய் ஆகிறான். உலகின் முதல் இன்பம் அரங்கேறுகிறது இருவர் உடலுக்குள்ளும். முதல் முத்தம். வாழ்க்கையில் இதைவிட சுவை ஏதிலும் இருக்கிறதா என்ன?

இது போதுமல்லவா ஒருவனை தன்னிலை இழக்க வைப்பதற்கு. இழக்கிறான். அவளோடு வீணை வாசிக்கிறான். வீணைகளும் மாறுகின்றன. வாசிப்பது மட்டும் குறையவில்லை. ஆனால் இருவர் உலகமா இது? உலகம் தலையிடுகிறது. கோயிலுக்குச்செல்கிறேன் என்பதாய் நம்பிச் சொல்லிச் செல்லும் அவள், கண்களில் மாலையாய் நீரோடும் கழுத்தில் மாலையாய் பூவோடும் திரும்பி வருகிறாள். இவனை அடித்து நொறுக்குகிறார்கள்... மொத்தமாய் நொறுங்கிப்போகிறான்.

கோயமுத்தூருக்கு நகர்கிறது குடும்பம். குடிக்கும் விரக்திக்கும் நகர்கிறான் செந்தில். மனமுடைந்து அழுகிறார் அப்பா. துடுப்பைக்கரையில் போட்டுவிட்டு கடலுக்குள் செல்வது போல சென்னைக்குள் பிரவேசிக்கிறான் வாழ்க்கை தேடி. மூன்றாவதாய் வருகிறாள் அவள். துடுப்பு! திவ்யா. பூக்களின் வாழ்க்கையிலும் கூட போராட்டம் உண்டென்பதை உணர்த்தி காயங்களை பூக்களால் வருடுபவள்.

கோயிலின் கர்ப்பக்கிரகத்தினுள் இருக்கும் தூய்மை கொண்டது இந்நட்பு. ஆணும் பெண்ணும் கொள்ளும் அக நட்பு. திவ்யா சராசரிப்பெண்ணிலிருந்துதான் வந்திருக்கிறாள் என்பது புரிகிறது அவனுக்கு. தனது மனதைப்பற்றி தன்னைப்பற்றி இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாத கோபத்தில் பொது இடமென்றும் பாராது படபடவென்று அவனை அறையும் அளவுக்கு அவர்களின் நட்பு இறுகிப்போகிறது.

ரொம்ப தூரம் வந்து நண்பனுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுத்து திவ்யா பற்றிச்சொல்லிவிட்டு லத்திகாவைப்பார்க்காமல் போவதை அவன் விரும்பவில்லை. லத்திகாவை பார்க்கச்செல்கிறான் அவன். திருமணக்கோலத்தில் கண்களில் நீரோடு கடைசியாய் பார்த்த லத்திகாவை
மீண்டும் பார்க்க மனம் தாவிச்செல்ல உடல் தரையோடு வழுக்குகிறது. பார்க்கிறான். உலகமே இடிந்து அவன் தலையில் விழுகிறது. கதறிக்கதறி அழுகிறான்.

வாழ்க்கை தனது அடுத்த தளத்திலும் தனக்கு எதிராகவே இயங்குகிறது என்பதையறிகிறான். மனதிலிருக்கும் ஒட்டுமொத்த துயரங்களையும் அடக்கிக்கொண்டு லத்திகா அவனுக்கு நிதர்சனத்தைச்சொல்கிறாள். இத்தகைய தருணங்களில்லாமல் எவர் வாழ்க்கையுமில்லை என்கிறாள். விடைபெறுகிறார்கள்.

திருமண மேடை. புதுக்கனவுகளோடு இன்னொரு பெண். மல்லிகாவின் குஞ்சம் பற்றியோ லத்திகாவின் மூக்குத்தி மற்றும் கைக்குட்டை பற்றியோ திவ்யாவின் புனிதமான நட்பின் ஆழத்தைப்பற்றியோ அறியாமல் இன்னொரு பெண் அவனோடு இணைகிறாள்.

நாளை அவர்களும் இவைகளைப்பற்றிப்பேசிக்கொண்டே இப்படி ஒரு படத்தைப்பார்க்கலாம்.

முதல் சபாஷ் சேரனுக்கு. கேமராவைப்பின்னால் வைத்து கதாநாயகி மேல் தண்ணீரையடித்து ஓட விட்டு, கேமராவை முன்னால் வைத்து வெள்ளைத்துணியைக்கொடுத்து நனைத்து ஓடி வரசொல்லி, நாயகன் நாயகி இருவரையும் ஆழம் குறைந்த கடலுக்குள் அல்லது ஆற்றுக்குள் இறக்கிவிட்டு கெட்ட ஆட்டம் போடச்சொல்லி கேமராவை சுத்தி விட்டு, ஊஞ்சலில் ஆடும்பொழுது கேமராவை பாவாடைக்குக்கீழே தரையில் வைத்து...அல்லது அவளை சுத்த விட்டு டாப் ஆங்கிளில் கேமராவை கீழே இறங்கி வரவைத்து, கேமராவை நேரில் வைத்து அவளைக்குனியச்சொல்லி இல்லை இரட்டை அர்த்தங்களால் காட்சியை நிரப்பி கத்தி கபடா போன்றவைகளால் ரத்தம் சிந்தி இப்படி எவையுமில்லாமல் "நல்ல தரமான வியாபார ரீதியாக வெற்றியும் பெறும்" ஒரு படத்தைக்கொடுக்க நினைத்து அதை சாதித்தும் காட்டியதற்காக சேரனை இறுக அணைத்து வாழ்த்தலாம். இவரது தரம் இப்படத்திலும் தொடர்கிறது. சொந்தப்படம் என்றாலே கவர்ச்சியை வாறி இறைக்கும் அல்லது அவரே நடிகர் என்றால் மொத்தமாய் அனுபவித்துவிட்டுப்போவோமே என்றிருக்கும் சிலருக்கு மத்தியில் இந்த இளைய இயக்குனர்+நடிகர் எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர். இளைய இயக்குனர்களே பொறாமைப்படும் சமுதாய அக்கறை கொண்ட இயக்குனர் சேரனுக்கு எனது வாழ்த்துகள். படம் நன்றாயிருக்கிறது என்பதை விட, ஓடுகிறது என்பதில் நான் மிகவும் மகிழ்கிறேன்.

காட்சியின் ஒளிப்பதிவுகளில் கவிதைகள். ரவி வர்மன், விஜய்மில்டன், துவாரகாநாத், ஷங்கி மஹேந்திரா நால்வர் கூட்டணி. வெற்றி பெற்றிருக்கிறார்கள். 4 பருவங்களும் கண்ணுக்குள் நிற்கின்றன. காட்சிகள் மட்டுமின்றி வசனங்களும் கவிதைகள்.

மல்லிகா- இரு பெண்கள் போல நடித்த ஒருவர். தாவணி கட்டிவிடும் நேரத்தில் வெட்கப்படும் கண்களுக்கும் திருமண மேடையில் திரும்பிப்பார்க்கும் கண்களுக்கும் இடையே இருக்கும் காதல், காலம் அதிகமானாலும் சாகாததுதான் என்பதை நிரூபிக்கிறது.
வயதுக்கு வந்த ஒரு கிராமத்துப்பெண்ணின் வெட்கங்களும் எந்தவித கபடங்களும் இல்லாத ஒரு புன்னைகயுமாய் மல்லிகா கலக்குகிறாள்.

அடுத்ததாய் லத்திகா(கோபிகா). தேவதை என்றால் அது சிறிதும் மிகையில்லை. அப்படி ஒரு அழகு. கொஞ்சும் கிளி கோவம்பழம் சாப்பிடுவது மாதிரி தமிழ் பேசுகிறார். வீணையை மடியில் வைத்து அவர் வாசிக்கும்போது இன்னும் கொஞ்ச நேரம் வாசிக்க மாட்டாரா என்றிருக்கிறது. கொடுத்து வைத்த வீணை! வீணை வாசிக்கும் இடத்திலும் வீணை கற்றுத்தரும் இடத்திலும் காட்சியமைப்புகளும் இசையும் மனதுக்குள் ரம்மியத்தை உண்டு பண்ணுகின்றன.

சினேகா அண்மைக்காலங்களில் நன்றாக நடிக்கவும் செய்கிறார். இப்படத்தில் மிகவும் பண்பட்ட நடிப்பு. கொஞ்சம் கூட ஓவர் ஆக்டிங் இல்லாத அவரது நடிப்பை, வெறுமனே நடிப்பென்று ஜீரணிக்க கொஞ்சம் நேரம் ஆகிறது. நேரில் பார்ப்பது போன்ற ஒரு பதிவு. ஒருவேளை எனக்கு அப்படியாய் இருக்கலாம். திவ்யா (எனக்கும்) திவ்யமானவள்.

இரண்டு பாடல்கள் சூப்பர் ரகம். மற்ற பாடல்கள் ஓகே ரகம். பூக்களின் வாழ்க்கையிலும் போராட்டம் உண்டென்பதாய் வரும் பாடல் சாதிக்க நினைக்கும் இதயங்களுக்கு உற்சாக டானிக். ஞாபகம் வருதே பாடல் எங்கேயோ கேட்ட ஞாபகம் வரவைக்கிறது. வந்தல்லோ பாடல் ரசிக்க வைக்கிறது.

காதலில் தோற்றவன் தம்மடித்துக்கொண்டே தானா இருக்கவேண்டும்? மீண்டும் மீண்டும் அதையே கொஞ்ச நேரம் காட்டியிருப்பது அலுப்பை ஏற்படுத்தினாலும் மற்ற எங்கேயும் மருந்துக்கும் அலுப்பில்லை. காட்சிகளின் நீளம் அதிகமாய் சிலரின் குற்றச்சாட்டு. பௌர்ணமி இரவில் மணற்படுக்கையில் படுத்துக்கொண்டு வானத்தை ரசிப்பதில் எத்தனை இரவுகள் நீண்டால் என்ன?

காதல் கவிதைகள், இளமையோடு போன வசந்த காலக் கவிதைகள், இயற்கையின் எழிலைச்சொல்லும் ரசனைக்கவிதைகள், தோழமைக்கு சான்றாய் வரும் உற்சாகக்கவிதைகள், வாழ்க்கையை வெல்லும் எழுச்சிக்கவிதைகள் என காட்சிகளிலும் வசனங்களிலும் ஏகக்கவிதை மயம்.

யானை கட்டிய இடங்களில் மாடு கட்டிக்கிடப்பதும், நீரோடிய ஓடைகளில் காற்று தவழ்ந்து ஓடுவதுமாக காலம் செய்யும் மாயங்களும் கண்ணுக்குள் நிற்கின்றன.

படம் பார்த்துவிட்டு எழுந்து போகும் கணவன்மார்களின் காயங்களுக்கு மனைவியிடம் மருந்து கிடைக்கிறது. எத்தனை மல்லிகாக்களுக்கும் திவ்யாக்களுக்கும் அப்படி ஒரு மருந்து கணவர்களிடமிருந்து கிடைக்கிறது?

காலம் சொல்லும். சொல்கிறது. திரும்பிப்பார்க்கும் கண்களின் வழியாக!

எம்.கே.குமார்.


ஆட்டோகிரா·ப் - 2

நெலவாய் வந்தவளே!

நெலவாய் வந்தவளே...நேசமாய் நின்னவளே
நேத்து மொத காணலியே நீ எங்கே போனாயடி
பாவி என்னெ தவிக்கவிட்டு பட்டணந்தான் போனாயோ
பாவிமக போனீயடி பாவிமனம் வாடுதடி!

காடுகரை தூங்கலடி கட்டுச்சோறு கசக்குதடி
ஏறுமலை நீ இல்லாமெ ஏமாந்து நிக்குதடி
ஓடை மீனு போல நானு உள்ளுக்குள்ளே அழுவுறேன்டி
ஒன்னக்கண்ட கண்ணு ரெண்டும் தண்ணிக்குள்ளே முங்குதடி!

கம்மாக்கரை சொன்ன பாடம் கள்ளி ஒனக்கு மறந்துடுச்சா
கம்மாத்தண்ணி சொல்லுமடி அது காலாட்டி விட்ட கதை
ஆக்கி வெச்ச மீங்குழம்பும் அவிச்சப்போட்ட முட்டக்கூடும்
ஆலமரத்தடிலெ என்னப்போல அம்போன்னு கெடக்குதடி!

குறிஞ்சாக்கீரை கசக்கும் கோவம்பழம் இனிக்கும்
கோவம்பழம் நா...கொத்தும் கிளி நீன்னு
சொல்லிச்சொல்லி தந்தவளே சொல்லிவிட்டுப்பறந்துட்டியா
சொன்னவார்த்தை நிக்குதடி சொன்னகிளி காணலடி!

அப்பா அம்மா வெளயாட்டு ஆசையோடு ஆடினோமே
அஞ்சுபுள்ளெ பெத்துப்போட்டு தூளியிலே ஆட்டினோமே
அதுலெ ரெண்டை பெருமாப்பய தண்ணிக்குள்ளே வீசிப்புட்டான்
மிச்சமூனை பத்தரமா வளக்குறேனே பையுக்குள்ளே!

கூட்டாஞ்சோறு செஞ்சோமே கோயிலுக்கும் படச்சோமே
கட்டுச்சோறும் பசியோட காத்திருக்கே ஒனக்காக
எலந்தப்பழம் ஏத்தம்பழம் எல்லாம் எனக்கு கசக்குதடி
ஒன் எச்சிபட்ட ஈச்சம்பழம் தந்தசொவை தேடுதடி!

காலாற நடந்துக்கிட்டே கதெ கதையா சொன்னாயே
சொன்ன கதை நிக்குதடி சொன்னகிளி காணலடி

அப்பா வேசம் போட்ட நானு சாராயம் குடிச்சிவர
சண்டைக்கு வந்தியேடி சாராயம் வேணுமுனு
சரக்கு இல்லயின்னு சரசமா நா கிட்டெ வர
ஏறுமலை போனியடி எங்கப்பன் வீட்டுக்குன்னு

ஆத்தா நீ போகாதெ அப்படின்னு நா ஒங்கால்பிடிக்க
என்னத்தான் நீங்க எங்கால்லெ விழுவுறீக
சிங்கமுள்ளெ நீங்க.....சுண்டெலியா மாறலாமோ
அப்படித்தான் நீ சொல்ல அசட்டுசிரிப்பு சிரிச்சேனே

ஏழுமலை நாயி வந்து எதுத்து நின்னு பேசயிலெ
நா அவனெ மொறக்கையிலெ நீ எதுரே வந்து
கோபப்படாதீங்க அத்தான் கொறஞ்சிடும் ஆயிசு
புத்திகொண்டு அவனை பொறகு அடியுங்கோ

சொல்லிச்சொல்லி தந்தாயே சொல்லிவிட்டு போனாயே
சொன்ன வார்த்தை நிக்குதடி சொன்னகிளி காணலடி

இப்பத்தான் வந்து கருத்தப்பாண்டி சொன்னான்
பேச்சியம்மா வந்து பெரியமனுஷி ஆயிடுச்சின்னு
பெரியமனுஷி ஆனா என்னெ பேசக்கூடாதா பொண்ணு
ஓடி வா கண்ணே ஒனக்காக காத்திருக்கேன்.

வெண்ணிலாப்ரியன்.

Search This Blog