Sunday, June 01, 2008

"நாம்" - நற்புடை நாற்றங்கால்!



தமிழ் இலக்கிய உலகிற்கு இது புதுவரவுகளை ஆரத்தழுவும் காலம். தமிழ்நாட்டிலிருந்து தமிழினி வெளியிடும் "தமிழினி" மாத இதழ், எனி இந்தியன் வெளியிடும் "வார்த்தை" மாத இதழ், மலேசியாவிலிருந்து சிலமாதங்கள் வெளிவந்த 'காதல்' மாத இதழின் டீம் மறுபடியும் களம் இறங்கியிருக்கும் "வல்லினம்-காலாண்டிதழ்", மற்றுமொரு மலேசிய சிற்றிதழ் "அநங்கம்" ஆகியவை திறல் காட்ட தீரத்தோடு உலகத் தமிழ் இலக்கியக்களத்தில் குதித்திருக்க சிங்கப்பூரிலிருந்தும் அத்தகைய முனைப்போடு களம் கண்டிருக்கிறது "நாம்" - என்றொரு காலாண்டிதழ்.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்திருக்கும் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து இந்த புதிய காலாண்டிதழை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். இதழ் ஒன்றைத் தொடங்குதல் என்பது இலக்கிய ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் / அறிஞர்களின் தனிப்பட்ட / இணைந்த கனவாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கேற்றவாறே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் நாட்பொழுதில் அவை மறைந்துபோன தடத்தையும் தமிழிலக்கிய வரலாற்றில் நிறைய காணலாம். உருப்பெற ஏற்பட்ட காரணங்களில் நூற்றில் ஒரு பங்குகூட அதன் வீழ்ச்சிக்கு வழிவிடமுடியும் என்பதால் தோன்றுவதும் தொடர்வதும் சார்ந்தவர்களின் மன உறுதியில் அமைந்திருக்கிறது.

பன்னெடுங்காலமாய் பொருளாதாரத்திற்கென புலம்பெயர்ந்த தமிழர்கள், போகுமிடங்களிலெல்லாம் இரு விஷயங்களைச் செய்தார்கள். ஒன்று கோவில் கட்டுவது, இரண்டாவது வட்டிக்கடை வைப்பது. மூன்றாவதாய் ஒன்றைச் செய்வதற்கும் இளைஞர்குழாம் சார்ந்த மனமொத்த இயக்கம் சிலதும் எப்போதும் முன்னெடுத்தே நின்றிருக்கிறது. சிங்கப்பூரிலும் ஆதிகாலம் தொட்டு அதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன. 29 வயதிலேயே பத்திரிகை ஆசிரியரான தமிழவேள் கோ. சாரங்கபாணி முதல், பட்டுக்கோட்டையையடுத்த பிச்சினிக்காட்டிலிருந்து வந்த திரு. இளங்கோ வரை பலர் இவ்வனுபவத்தில் வாழ்ந்திருக்கின்றனர். (இதுதொடர்பான தமது அனுபவத்தை திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் நிகழ்ச்சியிலும் பகிர்ந்துகொண்டார்.)

"நாம்" இதழை எதனடிப்படையில் வரையறுப்பது என்பதில் சில சிக்கல்கள் நீடிக்கின்றன. வடிவமைப்பில் உயிர்மையைக்கொண்டும் கூறுபொருளில் சிற்றிதழா அல்லது வெகுஜன இதழா என்பது சார்ந்தும், சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் வெளியீடு எனினும் வெளியீட்டு முகவரி இந்தியாவிலிருந்தும்/ தனிச்சுற்றுக்கு மட்டும் என முழுமையை அடைவதில் சில குறைபாடுகள் உள்ளன. இணைய நண்பர்களின் ஆக்கங்களையே பொதுவாகக் காணமுடிகிறது எனினும் இணைய எழுத்துகளின் மேம்பட்ட உள்ளீடுகளைக்கொண்டு அதுவே அதன் சிறப்பம்சமாக மாற நேரலாம்.

முதல் இதழின் அச்சகம், முதன்முதலில் புத்தகம் தயாரித்திருக்கிறது என நினைக்கிறேன். ஆங்காங்கு பக்கங்கள் "மை"யிட்டுக்கொண்டிருப்பதும், புகைப்படங்கள் தெளிவற்றிருப்பதும் முதல் இதழின் திருஷ்டிக்காக என்று எடுத்துக்கொள்வோம். அடுத்தடுத்த இதழ்கள் முக்கிய அச்சகங்கள் வழியாக முழுமைபெற்று வரும் என்று உறுதி தெரிவித்தார்கள் "நாம்" குழுவினர்.

இதழ் வெளியீட்டு நிகழ்வில் சிங்கப்பூரிலிருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் அல்லது அதன் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் என்பதிலும் வெளியிடப்பட்ட இடத்திற்காகவும் வெளியீட்டு நிகழ்வில் நான் கலந்துகொண்டமையில் களிப்படைகிறேன். முதல் இதழில் எனது ஒரு கதையும் வந்திருக்கிறது. கற்பனையாய் எழுதிய கதை, வெளியான தருணத்தில் உண்மையாய் ஆனதை செய்தியாய்க் கண்டு திரு. பாண்டித்துரை அழைத்து ஆச்சரியப்பட்டார்.

சிங்கப்பூரை உருவாக்கிய சர். ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ், 1822ல் உருவாக்கியதும் அவரது மறைவுக்குப்பின் 1859ல் மீண்டும் உருப்பெற்றதுமான 149 ஆண்டுகால வரலாற்றுச்சிறப்புடைய சிங்கப்பூர் பொட்டானிக் கார்டனில் வைத்து "நாம்" இதழ் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்து, சிங்கப்பூரின் மூத்த தமிழார்வலர்கள் திரு. கண்ணபிரான் மற்றும் திரு. செ.ப.பன்னீர் செல்வம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கையில், தமிழகத்திலிருந்து எடுத்துவரப்பட்ட ரப்பர் மரக்கன்றுகள் மலேயா முழுக்க நடுவதற்கு முன்பாக, இந்த பொட்டானிக் கார்டனில்தான் முதன்முதலாக சோதனையின் பொருட்டு நடப்பட்டது என்றார்கள். அத்தகு பெருமைமிக்க இத்தோட்டத்தில் இன்னொருமுறை ஒரு இலக்கியச்செடியை நட்டுவைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை குனிந்து உற்றுநோக்கிக்கொண்டிருந்த அந்த நீண்ட நெடிய மரத்தைப்போல இவ்விதழும் எல்லாவித சிறப்புகளும் பெற்று வளரவேண்டும்; வாழவேண்டும்.

எந்தவொரு இதழ் ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை மையமாக வைத்து குறைந்தது பத்து எழுத்தாளர்களாவது உருவாவார்கள் என்று தனது அனுபவத்தை வைத்துச்சொல்வாராம் திரு. மனுஷ்யபுத்திரன். அந்த வகையில் இந்த இதழ் பத்து எழுத்தாளர்களால் அல்லது எழுத்தார்வம் மிக்கவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது; இன்னும் பல பத்துப்பேர்களைக் கொண்டு சேர்க்கும் என நம்புவோம்.

(பத்து, பத்து என்றதும், சம்பந்தமில்லையெனினும் இது ஞாபகத்திற்கு வருகிறது. புரசைவாக்கம் குமுதம் அலுவலகத்திற்கு வெளியே "பத்து ரூபாய் நோட்டே, நீ போய் ஆயிரம் பேருக்கு உதவி செய்துவிட்டு பத்தாயிரம் ரூபாயாகத் திரும்பிவா" என்று எழுதப்பட்டிருக்கும். யாராவது இதை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.)

அன்பன்
எம்.கே.குமார்

Search This Blog