Friday, September 25, 2020

"இடபம்" – நாவல் கலந்துரையாடல்

நாவல்களை வாசித்து விவாதிப்போம், அதுவே விமர்சன - வாசிப்பு-ரசனை சார்ந்த ஆழமான பார்வையைக்கொடுக்கும்’ என்ற வாசகர் வட்டத்தின் அடிப்படைக்கூறுகளில் ஒன்றை மீண்டும் இந்த ஆகஸ்ட் மாதம் முதல் செய்யலாம் என்று பேச்சு வந்தது. அண்மைக்கால அல்லது எப்போது வாசித்தாலும் ஏதாவதொன்றை புதியதாகக் கொடுக்கக்கூடிய நாவல்களைப் பட்டியலிட்டோம். அவ்வகையில் 'இடபம்' என்ற நாவலைப் பரிந்துரை செய்தார் அழகுநிலா. (அவருக்கு அந்நாவலைப் பரிந்துரைத்தவர் கவிஞர் சாம்ராஜ் என்று நிகழ்ச்சியின்போது சொன்னார்). நிகழ்ச்சி செய்தியை குழு மற்றும் பொதுவில் பகிர்ந்தோம்.

இலங்கேஷ் வாசகர் வட்ட உறுப்பினர்களில் ஒருவர். வாசிப்பில் பேரார்வம் உள்ளவர். அறிவித்த ஓரிரு நாட்களில் நாவலை அவர் வாசித்துவிட்டு அற்புதமான பங்கு வர்த்தகம் என்னும் கதை களம் அதை கொலை களமாக மாற்றியிருக்கும் கண்மணி யாரம்மா நீர், எங்கிருந்து வருகிறீர்கள் இப்படி எழுத! நவீன இலக்கிய வாசகனுக்கு கெட்ட வார்த்தை புதிதல்ல, ஆனாலும் அழகிய “மயிரான்” என்னும் தமிழ் வார்த்தையுடன் தொடங்கிய நாவலை வாசித்தவுடன் சுதாரித்து கொண்டிருக்க வேண்டும், பழக்க தோஷம் எடுத்ததை முடிக்க வேண்டுமென்று! விழுங்க முடியாமல் தவிக்கிறேன் இப்புத்தகத்தை ஏன் எடுத்தேன் என்று. இடபம் முழு அபத்தம். இது இலக்கியமே அன்று, இது என்ன குப்பையின் குவியல், இது பல புத்தகத்திற்கு நடுவே வைக்கபட வேண்டியவை அல்ல, பலான புத்தகத்தின் நடுவே இருக்க வேண்டியவை” என்று குழுவில் போட்டுவிட்டார். விவாதம் சூடுபிடித்தது.

இதற்கிடையில் சிவானந்தம் நீலகண்டன் “சந்தைக்குள் நுழைந்த சரசக்காளை” என்று கட்டம் கட்டி நிகழ்ச்சிக்கு முன்பே கட்டுரையை அவுத்துவிட்டுவிட்டார். பலர் படித்துவிட்டு நிகழ்ச்சியில் இதைப்பேசவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டிருந்தனர்போலும். (நான் நிகழ்ச்சி முடிந்தபின்பே விமர்சனத்தைப் படிப்பேன் என (ஸ்பாய்லர்ஸ் காரணமாக) பிடிவாதமாய் இருந்தேன்.

இதற்கிடையில் இலங்கேஷ் அவர்களை ஒரு இஞ்சி டீயோடு வசிப்பிடத்துக்கருகில் சந்தித்து ’இடபம்’ நாவலையும் வாங்கிக்கொண்டேன்.

நாவலை வாசிக்கும்போதே வடிவேல் என்னும் மகானின் ’அழகர் ஆற்றில் இறங்கிய, எதார்த்த-பதார்த்த நல்ல சம்பவங்கள்’ நினைவுக்கு வந்தன’ என்றும் அதையே வீடியோவாகவும் எனக்கு அனுப்பி குதூகலமாக்கிவிட்டார் இலங்கேஷ். முகநூலிலும் போட்டுவிட்டேன்.

இவற்றையெல்லாம் பார்த்து அழகுநிலா ஹேப்பியாய் வாசகர்வட்டம் அனல் பறக்கும் என்று நினைத்திருப்பார்போலும். நிகழ்ச்சியும் வந்தது. அவர் சாமர்த்தியமாக மறைந்திருந்து தாக்கும் உத்தியை அன்று எடுத்துவிட்டார். நானும் அப்படி இருக்கவே எத்தனித்தேன். இடையில் ஓந்தியைக் கொண்டுவந்து என்னை நேரிடையாய் சமர் செய்ய மாட்டிவிட்டுவிட்டார்

முதலில் திரு. ரமேஷ் (சித்ரா) பேசினார். நாவல் ஏன் தன்னை ஈர்க்கவில்லை என்று சொன்னார். அடுத்ததாக சிவா பேசினார். தன் விமர்சனம் ஒருதலைப்பட்சம் என்று ’விமர்சனத்துக்கு விமர்சனம்’ வந்த கதையைச்சொல்லி விமர்சனம் செல்லவேண்டிய தூரமும் புரிந்துகொள்ளப்படவேண்டிய விதவித பாதைகளின் அவசியமும் பற்றிச் சொன்னார். விஜி என்ற வாசகர் நீண்ட விமர்சனம் வைத்தார். கவிஞர் பாரதி மூர்த்தியப்பன் அவர்களும், பங்குவர்த்தகம்-படுக்கை என இரு சம்பவங்கள் மட்டும் அடுத்தடுத்த வருவதாலும் வேறு எதுவும் நாவலில் இல்லாததால் என்னால் நாவலை ரசிக்கமுடியவில்லை என்றும், தான் செய்வதும் அடுத்தவர்களின்மேல் தன் கருத்தும் நாயகிக்கு உண்மைத்தன்மையாக நாவலில் வரவில்லை என்றும் சொன்னார்.

இதற்கிடையில் தான் ரயிலில் பயணம் செய்வதாலும் தன் கருத்து அவ்வப்போது தடைபட நேரும் என முன்னறிவிப்போடு லைனில் வந்தார் இலங்கேஷ்.

ரயிலின் டட் டட் டட் கதவு மூடி-திறக்கும் ஒலியிடையே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இலங்கேஷ் ஒழுக்கம் என்ற வார்த்தையைச் சொன்னாரா தெரியவில்லை. பாய்ந்துவிட்டார்கள் ரமா சுரேஷும் அழகுநிலாவும். அதெப்படி ஒழுக்கம் குறித்து பேசுகிறீர்கள் என கத்த, கூச்சல் குழப்பம் நிகழ்ச்சியில். விர்ச்சுவல் என்பது எந்த ஒரு எழவுக்கும் சரியில்லை. ஒரு அடிபிடி சண்டையையாவது ஒழுங்காகப் போடமுடிகிறதா? என்ன இருந்தாலும் அடிபிடி சண்டைக்கு நிகழிடம்தான் நன்று. ஒழுக்கம் பற்றி ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிடிமானம் இருந்திருக்கும்போல. அவரவர் விமர்சனத்துக்குள் அதைப்புகுத்திகொண்டுவந்துவிட்டார்கள். இப்போதுவரை அது எப்படி நாவல் விமர்சனத்துக்குள் வந்தது என்று எனக்குப்புரியவில்லை. நான், குறுக்கே புகுந்து, ஐயாக்களே அம்மாக்களே, அது கதாநாயகியின் பிரச்சனை. நாம் நாவலைப்பற்றி மட்டும்பேசுவோமே என்று சொல்ல, ஆமாம் என்றனர் ஒருசிலர்.

இதற்கிடையில் நாவலைப்பற்றி பேச வந்தார், போராளி என அறியப்படும் செந்தில்குமார். ’நாவலை ஏன் ஒரு நாவலாக அதன்போக்கிலே நாம் ரசிக்கமறுக்கிறோம்?’ என்று கேட்டார். கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி. என்னாச்சு என்று விஜய்சேதுபதியாய் நானும் நிமிர்ந்து உட்கார்ந்தேன். நாவலின் போக்கு, ஒழுக்கத்தின் அணிகலன்கள், ஆண்களின் மனநிலை, பெண்களின் மனநிலை என அட்டகாசமாக வகுப்பு எடுத்தார். ஒரு தோழிக்குச் சொல்ல வந்தததைப்போல (நமக்கு ஏன் சொல்கிறார் என்று நினைத்தாலும்) நறுவிசாக சொன்னார். ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தைக் கொடுத்தது அது.

எனக்கு இருந்த விமர்சனங்கள் எளியவை.

இந்நாவல் பெண்களுக்குப் பிடிக்கும் என்றேன். காரணம் தமக்கு நிகழாததை குடும்ப நாவல்களில் பார்த்து ரசிப்பதுபோல, சில விஷயங்களை இதுபோன்ற நாவல்கள் ரசிக்கவைக்கும். இரண்டாவது நாயகிக்கு நாவலில் வரும் எல்லா உறவும்  ’டச் அண்ட் கோ’ மட்டுமே. காதல் வலி, பிரிவு, பின்தொடர்தல், ஆசிட் வீசுதல், சோக கீதம் பாடுதல் என எதுவும் இல்லை. ’அவள் அப்படித்தான்’ படத்திலே இக்காட்சிகள் வந்துவிட்டாலும் நாவலாக பெண்களுக்குப் பிடிக்கலாம் என்றேன்.

மேலும் ’நாவலிலிருந்து எந்த அனுபவமும் எனக்குள் நிற்கவில்லை. கிளைக்கவுமில்லை’ என்றேன். ’பங்குச்சந்தை தகவல்கள் கூகுள்போல சொல்லப்பட்டும், படுக்கையறைச் சம்பவங்கள் சரோஜாதேவி போல குவிதலை நோக்கி மட்டும் சொல்லப்பட்டும் கடந்துபோகின்றன’ என்றேன். மேலும் உடலுறவை ”காத்ரீனா புயலாக அவன் தாக்க, நான் பிதற்றிக்கொண்டாடினேன். இரண்டாவது சுற்றில் அதுவே சாண்டி புயலாக வலுப்பெற திண்டாடித்தான் போனேன” என்ற வரிகளும் ”நான் காமுகியாக மாற, காட்டான் திணறித்தான்போனான்” போன்ற வரிகள் என்னை நிலைகுலைய வைத்தன’ எனச்சொன்னேன்.

மணிக்கு 140கிலோமீட்டர் வேகத்தில் படுக்கையில். என்ன அசுரத்தனம். நாயகிக்கே பெருமைபிடிபடாமல் புளகாங்கிதமடையில் நமக்கென்ன என்று விட்டுவிட்டேன். வடிவேலு சொல்வதைப்போல என் அக்கா சுண்டுனா ரத்தம் வரும் அளவுக்கு கிளிமூக்கு என்று நாயகியே சொல்லும்போது நமக்கென்ன பொறாமை. நான் எழுத்தாளரைத்தான் யோசித்தேன். ஏம்மா படுக்கையழகைச் சொல்றதுக்கு சாண்டிப்புயல் காத்ரீனா புயல்ன்னு சரோஜாதேவி மொழிக்கு கொண்டுவந்திட்டீங்களே என்று நினைத்துக்குறிப்பிட்டேன். (அதை கவிஞர் சாம்ராஜ் கண்டித்தார். சரோஜாதேவி என்பது தடித்தபண்டம் சாரி தடித்தவார்த்தை என்றார். அதுவும் சரிதான்.) ஒட்டுமொத்தமாக அப்படிச்சொல்லமுடியாது. ஓரிரு இடங்களில் அத்தகைய உணர்வு வந்தது என்பதையும் சொன்னேன்.

மேலும் ’அந்தரங்கப்பகுதியை சுத்தமாக வைத்திருத்தலும் நேசிக்கும் துணையை நேசிப்பதேயாகும்’ என்று ஒரு வரி நாவலில் வந்ததையும் நினைவு கூர்ந்தேன். (இப்படியெல்லாம் ஒருவர்கூட நாவலில் வந்த ஒரு நல்ல வரியைச்சொல்லவில்லை!) இறுதிக்காட்சிகளில் நாவலின் நாயகியின் மனம் ஒரு பணக்கார சீமாட்டியின் மேட்டிமைத்தனத்தோடு முடித்திருக்கிறார் நாவலாசிரியர் என்றேன். இனி அவள் அவ்வாறே பயணப்படக்கூடும் என்றேன்.

இறுதியாக பேச வந்தார் கவிஞர் சாம்ராஜ். புத்தகத்தை நிலாவுக்கு அறிமுகப்படுத்தி நிலா நமக்கு அறிமுகப்படுத்தி களேபரத்தை உருவாக்கியவர்.

அனைத்து கருத்துக்களையும் மறுத்தார் அவர். காரணம் ஒன்றே ஒன்றுதான் என்றார். அண்மையில் மலேசியாவில் வல்லினம் போட்டியில் முதற்பரிசு பெற்ற கதையை எழுதியவர் ஒரு பெண் என்றும் அது ஏறக்குறைய இத்தகைய கருப்பொருளைக் கொண்டதால் எதிர்ப்பும் ’அவரைப் பத்திரமாக கொண்டுபோய் வீட்டில் விட்டுவிடுங்கள் என்று நவீன் சொல்லுமளவுக்கு நடந்தது அதிர்ச்சி அளித்தது’ என்று நடப்பியலைச் சொல்லி, பாலியல் சம்பந்தப்பட்ட கதைகளைப் பெண்கள் எழுதுவதே இல்லை. உலகம் அவர்களை அப்படிப் பார்க்க எத்தனித்து அச்சமூட்டுகிறது. அத்தகைய போக்கில் இது நேரிடையான திறந்த வெளிப்பாதை. அதற்காகவே இதைப்பாராட்டலாம் என்றார். எனக்கு அதிர்ச்சி. பா.கண்மணி கணவருடன் பெங்களூருவில் வசித்துவருவதாக போட்டிருக்கிறதைப் படித்துவிட்டேன். கணவனோடு வசித்தாலும் கணவனாக வசித்தாலும் ஆணோ பெண்ணோ எனக்கெதுக்கு அந்த அடையாளம் என்று கேட்க சூம் வரை வந்துவிட்டது வாய். இருந்தாலும் அவருக்கு கண்மணி அவர்களைத் தெரிந்திருக்கலாம் என்பதாலும் திடீரென பெண் எழுத்தாளர்களின்மேல் பாசம் வந்ததாக நான் நினைத்ததாலும் அதைக்கேட்கவில்லை. மேலும் பங்குச்சந்தை செய்திகளே எனக்கு நாவலில் அவசியமில்லை. நான் நாயகியின் அச்சமில்லாத, யாரைப்பற்றியும் கவலையில்லாத, தனக்குப்பிடிட்த்ததைச் செய்யும் உண்மைத்தனத்தை மட்டுமே ரசிக்கிறேன், அதுவே போதும் என்றார்.

நிகழ்ச்சியில் காச்சர் கோச்சர் நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பாளர் நல்லதம்பி அவர்கள் கலந்துகொண்டார். பெங்களூர் நகரத்தைப் பற்றியும் இந்நாவலின் களம் மற்றும் விதம் பற்றியும் சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மொத்தமாக இந்த கலந்துரையாடலில் நான் அறிந்துகொள்ள சிலவிஷயங்கள் நடந்தன.

முதலில் எல்லோரும் ஒழுக்கம் பற்றி பேச ஆசைப்படுகிறார்கள். இரண்டு, எல்லா ஆண்களுக்கும், ஒரு பெண்ணின் திறந்த வாழ்க்கையைப் பார்த்து அசூயை அல்லது அதிர்ச்சி அல்லது காட்டிக்கொள்ளாத அதிர்ச்சி அல்லது ஏதோ ஒரு வெண்ணெய் இருப்பதாக எல்லா ஆண்களும் பெண்களும் தனக்குத்தானே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மூன்று, ஆண் எழுதினால் நாவல் விமர்சனம் வேறுமாதிரி செய்யவேண்டும் என்றும் பெண் எழுதினால் அதை வேறுமாதிரி விமர்சனம் செய்யலாம் என்றும் பொதுக்கருத்து இருப்பதாக தெரியவருகிறது. நான்காவது, சண்டைபோட ’சூம்’ கருவி சுத்த வேஸ்ட் என்பதாகும்..

’ஒரு சோட்டா கவர்மெண்டுக்காக, ஒரு எழுத்தாளன் நாவல் எழுதுவானா’ என்பார் ஜெயமோகன். நாவல் என்றாலே வாசிக்கும்போது விரியும் வாழ்வுக்கலையும் தரிசனமும் அப்படி. பெண்கள் எழுதினால் இது எதுவும் தேவையில்லை போலிருக்கிறது. குறிப்பாக சாருநிவேதிதா மட்டும் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் எவ்வ்ளவு நன்றாய் இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். 

Search This Blog