Saturday, December 24, 2005

நினைவஞ்சலி-காவியத்தலைவன்!

Image hosted by Photobucket.com Image hosted by Photobucket.com Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.comImage hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com


தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை!

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகை நீ ஆளலாம்!

அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா!


நெஞ்சைவிட்டும் நினைவைவிட்டும் அகலாது என்றும் வாழும் தலைவனுக்கு!

அன்பன்
எம்.கே.

Tuesday, December 20, 2005

தவமாய் தவமிருந்து- யுகங்களின் கதை!

சில நாட்களுக்கு முன்பு 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமிக்கு' விமர்சனம் எழுத ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டாலும் எனது கைக்கு அகப்படாத நேரம், என்னை 'சிங்கபுரத்தில் ஒரு அப்பாவிச்சாமி' என்றாக்கிவிட்டு எங்கோ ஓடிப்போய்விட, இதோ தவமாய் தவமிருந்து பிடித்துக்கொண்டு வருகிறேன் கடந்துபோன அக்காலங்களை! ஒரு யுகங்களின் கதைகளுக்காக!

படம் பார்க்காதவர்கள் என்னைப்போல இந்த விமர்சனத்தையும் படிக்காதீர்கள். படம் பார்ப்பதற்கு முன் எத்தகைய அனுமானங்களையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் செல்வது நல்லது.

கடந்தமாதம் அண்ணனது கைப்பேசிக்கு அழைக்கிறேன் சிங்கப்பூரிலிருந்து. என்னிடம் பேசிவிட்டு, 'அப்பாவிடம் பேசு' என்று தருகிறார் அவர். இன்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். அப்பா எப்படி வாங்கியிருப்பார் அதை? உரம் போட்டுக்கொண்டிருந்த கைகளை அருகில் ஓடும் வாய்க்கால் நீரில் சளக்கென்று கழுவியா? இடுப்பிலிருந்த துண்டில் கையை துடைத்துவிட்டா? இல்லை துண்டில் போத்தியா? காதுக்கும் வாய்க்கும் இருக்கும் தொலைவு சரியாக படிந்திருக்குமா அவருக்கு?

"அப்பா...." இது நானல்ல; அவர்!

"அப்பா..சொல்லுங்கப்பா, நல்லாயிருக்கீங்களா?"

இருபக்க நலமும் அறிந்து பிறகு விரிகிறது அப்புன்னகை. ஆழ்கடலின் அலைகளறியா ஆழம்போன்ற புன்னகை. கடல்கடந்து நிலம்கடந்து மனிதக்குடிகளின் வாசத்திற்கு அப்பால் ஒரு வயலில் காட்டுவிளைநிலத்தில் உரம்போட்டுக்கொண்டிருந்தவனிடம் பேசவைக்கமுடிந்த அந்த விஞ்ஞானத்திற்குக்கிடைத்த ஒரு உழவனின் அங்கீகாரமாய் அப்புன்னகை. நானும் சிரிக்க அவரும் சிரிக்க இடைவெளிகளை சுகமாக நிரப்பிச்செல்கிறது நினைவுகள்.

சுகங்களை மட்டுமா நிரப்பிச்செல்லும் நினைவுகள்? திருவிழாச்செலவுக்கென்று அன்று அதிகாலையில் விறகுவெட்ட அப்பா போன விவரம் புரியாத வயதில், வீதி நண்பர்களுடன் மரத்திலிருந்து குதித்து கையை ஒடித்துக்கொண்டு கட்டுப்போட அவருக்காக காத்திருந்த நேரத்தில் கொண்டு வந்த பணம் கைச்செலவுக்கா, கையுடைந்த செலவுக்கா என்று தவித்துக்கொண்டிருந்த காலம் மறந்துபோகுமா அப்பா? 'மரம் வெட்டி வந்தகாசு மரத்தாலே போனது' என்பதை இப்போதும் இருவரும் உணர்ந்துகொள்வதும் உண்டுதானே!

பத்து வயதில் ஆடுகளுடன் உதித்த உலகம். மாடுகள், மரம் வெட்டல், வயல், விவசாயம், கூலிவேலை, மறுபடியும் மரம் வெட்டுதல்; மழை வரும்போது மட்டும் விவசாயம்; மற்றநாட்களில் கூலிவேலை! எங்கும் எப்போதும் நிழலை உணர்த்தாத நேர்மை! மகன்களிடம் கூட 'அப்பா' என்பதற்கு அடுத்த வார்த்தை இல்லாத மனம், அத்தனை வறுமைச்சூறாவளியிலும் பள்ளியைக்காட்டிய விவேகம்; பொறுப்பு. கைகளில் இருக்கும் காய்ப்புகளும் சிராய்ப்புகளும் காலில் இருக்கும் ஆறாத அப்புண்ணும் வாழ்க்கையின் வீரியத்தையும் வாரிசுகளின் வெற்றிகளையும் எக்கணமும் இசைத்துக்கொண்டேயல்லவா இருக்கின்றன!

மாடுகளின் பின்னே புழுதி உழவு முடிந்து வீட்டிற்கு வந்தபொழுதில் மகன்களுக்கு காலை அழுத்தி எண்ணெய் தேய்த்துவிடும் அன்பை எப்படி உணர்த்தமுடியும் மற்றவர்களுக்கு? தீபாவளிக்கு முதல்நாள் உடனடி கூலிவரும் இறால் பண்ணையின் எழும்புதல்களுக்கு, மண் சுமக்க அதிகாலையில் இருவரும் எழுந்து பத்து கிலோமீட்டர் சைக்கிளில் அழுந்திக்கொண்டு போனகதை எந்த வகையப்பா? ஒவ்வொரு சுமைக்குப்பிறகும் அப்பா..அப்பா...என்று முதுகுக்குப்பின்னால் வரும் உற்சாகவேதனைகளுக்கு எதையப்பா உவமையாய்க்காட்டமுடியும்?

அதிகாலைப்பனிமுதல் இரவின் தேரைச்சத்தங்கள் வரை அவையறியும் உங்களது இன்றுவரையான உழைப்பும் நிழலைக்கண்டுபிடிக்கமுடியாத அந்த நீண்ட நேர்மையும் எத்தனை இலக்கியங்கள் அப்பா! இந்தியவீடுகளில்தான் எத்தனை மகாத்மாக்கள்!

அப்பாவின் அவசர உடல்நலக்குறைவு காரணமாக மதுரையிலிருந்து மருத்துவமனை வரும் மகன் ராமலிங்கத்தின் நினைவலைகளில் எழும்புகிறது படம். உழைத்து உழைத்து ஓடாய்த்தேயும் அப்பா, அவரைச்சுற்றியே வாழ்ந்துவரும் பூமியாய் அம்மா, கெட்டுப்போகும் வாய்ப்புகளை அப்பாவிகளுக்காக கடைவிரித்துக்கொண்டிருக்கும் நகரத்திற்கு வரும் மூத்தமகன், கெடப்போகும் குடும்பத்திற்கு வரம் வாங்கி வரும் மூத்தமருமகள், குடும்பச்சுமையறியாது இளமைச்சுமையை ஏற்க முனையும் இரண்டாவது மகன், அத்திபூத்தாற்போல ஏதாவது தவத்தின் பலனாய் கிடைக்கும் நல்ல மருமகள்! இவர்களுக்குப்பின்னே வாழ்க்கையாய் ஓடுகிறது எதார்த்தம் படச்சுருளுக்குள்.

சினிமாவிற்குள் இலக்கியம் படைக்க முனைபவர்களில் சேரனுக்கு முக்கிய இடம் எப்போதும் உண்டு. அப்பணியில் இங்கே இன்னும் மிளிர்ந்திருக்கிறார். அவரது நடிப்புக்கில்லையெனினும் இயக்குதலுக்கு விருதுகள் இருக்கலாம். கதையின் நாயகன் ராஜ்கிரனுக்கு கண்டிப்பாய் விருது. முதுமையின் குடுகுடு நிலைமையில் இவரது நடிப்பு கொஞ்சம் பிசிறுகிறது.

ராஜ்கிரன், சரண்யா, மூத்தபையன், மூத்த மருமகள் (இவரைப்போன்ற மருமகள்கள் படம் சொல்லப்பட்ட ஏரியாவில் மிகவும் பிரசித்தம்), சேரன், பத்மலட்சுமி இவர்களைப்பற்றி விமர்சனத்தில் எல்லோரும் சொல்லிவிட்டார்கள். பெரிதாய் நன்றாய் நடித்திருக்கிறார்கள் என்று நானும் சொல்வதாயில்லை. வாழ்ந்திருக்கிறார்கள்.

இதுதவிர, மூன்று சம்பவங்களை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். மலை போல மிகப்பெரிய துயரம் நம் கண்ணெதிரே நின்றுகொண்டிருக்கும்பொழுது அதை எப்படித்தாண்டுவது அல்லது தாங்கிக்கொள்வது என்ற நிலைமையில், வீட்டிலிருக்கும் பெரியவர்கள் எப்படி ஒரு புல்லைக் கிள்ளுவது போல அதைக்கிள்ளிவிட்டுச் சென்றுவிடுகின்றனர் என்பதைக் காணும்பொழுது அவர்களின் அருகாமையின் அவசியம் நமக்குள் ஊருகிறது.

1. பத்மலட்சுமி காதலனுடன் ஓடிப்போய்விட்டு கையில் குழந்தையுடன் அவளது வீட்டிற்குத் திரும்பிவரும்பொழுது, 'வராதடி போ, இங்கெ யாரும் உனக்காக இல்லை' என்று அவரது தந்தை அழுதுகொண்டிருக்க, யாரையும் எதிர்பார்க்காமல் எத்தகைய வார்த்தையும் பேசாமல் விடுவிடுவென நேரே வந்து அவளது குழந்தையை வாங்கி, கொஞ்சிக்கொண்டு உள்ளே செல்லும் அப்பாட்டிக்கு என்ன பெயர் வைப்பீர்கள் நீங்கள்?

2. அனாதையாய் விட்டுவிட்டு ஒரே ஒரு ஆதரவும் சென்றுவிட்ட சூழ்நிலையில் எல்லாவற்றுக்கும் இரந்து பிழைத்து வந்த தன்னைப்பார்க்க ஓடிப்போன மகன் திரும்பி வந்தால் எப்படி அதை எதிர்கொள்வாள் அத்தாய்? அல்லது ஒரே ஒரு தூணான தான், பிழைப்பு என்று பொய்சொல்லிவிட்டு காதலியுடன் சென்றுவிட்ட சூழ்நிலையில் தன்னைப்பார்க்க வந்து அமர்ந்திருக்கும் தந்தையிடம் என்ன சொல்லமுடியும்? அவ்வளவு பெரிய துயரத்தை ஒரு வார்த்தையில் எம்பி தட்டிவிட்டுப்போய்விடுகிறார் தந்தை.

3. அச்சக சிப்பந்தியாய் காது சரியாகக் கேளாதவராய் வரும் ஒளிப்பதிவாளர் இளவரசு. (சாருநிவேதிதா தம்பி?) அப்பாவுக்கும் தந்தைக்குமான புரிந்துகொள்ளலை, முதலாளிக்கும் தீபாவளிச்செலவுப்பணத்திற்குமான மோதலை எவ்வளவு எளிதாய் முடித்துவிட்டுப்போகிறார்? இவர்களுக்கெல்லாம் வாழ்க்கையை கற்றுக்கொடுப்பது எது?

இதுபோன்ற காவியங்களுக்கு இளையராஜா இணைந்தால் நன்றாயிருக்குமல்லவா?

தனது இரு குழந்தைகளை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பிழைப்பை ஓட்டும் அச்சகத்திற்கு 1970+ஸில் ராஜ்கிரன் பயணமாகிற அதே மண்சாலை 2005லும் மகன் ராமலிங்கத்தின் ·போர்ட் கார் செல்லும் பொழுதும் அப்படியே இருப்பது நிகழ்கால அவலத்தைச்சொல்ல பின்வருகிறது.

படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்குள் ஆரம்பித்த எனது கண்கலங்குதல் படம் முடியும்வரை தொடர்ந்துகொண்டே இருந்தது. என்னருகில் இருந்த அந்த முதியவர், பிரிந்துபோன தந்தையும் மகளும் இணையும் இடத்தில் பெருங்குரலெடுத்தே அழத்தொடங்கினார். என்னை அவரும் அவரை நானும் ஏதோ ஒரு அர்த்தத்தில் பார்த்துக்கொண்டோம்.

காரைக்குடிக்கு கடந்த ஆகஸ்டில் வந்திருந்தபொழுது எந்த லாட்ஜிலும் இடமில்லை என்று சொன்னார்கள், காரணம் அவ்வளவும் ஷ¥ட்டிங்கிற்குப் புக்காகிவிட்டதாம். சிவகாசியில் பாதி, மஜாவில் பாதி, தவமாய் தவமிருந்து முக்கால்படம் என நம்ம ஏரியா (காரைக்குடி தேவகோட்டை) ஏரியா இப்போது பிரபலமாகியிருப்பது சந்தோசத்தைத்தருகிறது.

அப்பா, அம்மாவோடு குன்றக்குடி முருகன் கோவிலின் உச்சியில் நின்றிருப்பதாய் வரும் காட்சியை இருவருடங்களுக்கு முன் நான் எடுத்திருக்கிறேன். சேரன் காப்பியடித்திருக்கிறார். சேரனுக்கு காரைக்குடி ஏரியா அதுவும் அந்த கோயிலும் குளமும் (சதுரவடிவில் கற்களால் கட்டப்பட்ட ஒன்று) ரொம்பப்பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். தேசியகீதம் படத்திலும் பார்த்தேன்.

காரைக்குடியின் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் இருக்கும் ஒரு எஸ்டிடி பூத்/செராக்ஸ் கடை அது. இருவருடங்களுக்கு முன் அவரிடம் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு கேள்வியாய் கேளுங்க சார் என்று கடுப்படித்திருக்கிறார். அவரது கடையில் எல்லா நடிகர்களுடனும் அவரது போட்டோ இருக்கும். மருதநாயகத்துடனும் ஐஸ்வர்யாராயுடனும் இருக்கும் அந்த 'தாடிவாலா' போட்டோவைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு கடுப்பாகும். ஏதோ திரைப்படங்களுக்கு தயாரிப்பு உதவியாளராகவோ லொகேஷன் இன்சார்ஜ்சாகவோ இருப்பதாய் அக்கடையில் பணிபுரியும் பெண் சொன்னார். இப்போது அவர் காட்டில் மழை என நினைக்கிறேன். இப்படத்திலும் தீபாவளிக்கு ராஜ்கிரண் மளிகைச்சாமான் வாங்கச்செல்லும் போது அம்மளிகைக்கடை ஓனராய் அவர் நடித்திருக்கிறார்.

படத்துக்கு நீண்ட விமர்சனம் எழுதிய "தண்டோரா விக்னேஷ்" என்பவரது விமர்சனம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. அதற்கு மேல் சொல்லக்கூடாது, சொல்லவும் ஒன்றுமில்லை. எனினும் யோசிக்க நிறைய விஷயம் இருக்கிறது, யோசித்தால் இதன் தொடர்ச்சியாய் பதிவு மட்டுமல்ல படமும் எடுக்கலாம்.

1. சேரனின் மனைவி அவ்வளவு படித்தும் மாமனார்/மாமியாருக்கு அன்புகாட்டுபவராக நடந்துகொள்கிறார். அப்படி இல்லாமல் அம்மருமகளும் மூத்த மருமகளைப்போல இருந்தால்?

2. முதியவர்களான அப்பா அம்மாவிற்கு கட்டிடக்கூண்டிற்குள் பேத்தியோடு மகனோடு இருப்பது இங்கு பிடித்திருக்கிறது, எல்லோருக்குமா? (எனது அப்பா சென்னை/தூத்துக்குடி வந்தால் அதிகபட்சம் ஒருவாரம்தான். உடனே ஊருக்குப்போய்விடவேண்டும்.)

3. பேரன் பேத்திகளுக்கும் தாத்தா/பாட்டியோடு விளையாடுவதும் பேசுவதும் பிடித்திருக்கிறது. 'தாத்தா பாட்டி பக்க போனாவே ஒரு மாதிரி ஸ்மெல்ப்பா' என்று விலகியோடும் பேரன்/பேத்திகளை வைத்துக்கொண்டு அப்பா அம்மாவை என்ன செய்வது?

4. ஒரு இலட்சம் ரூபாய் ஒருமுறை கேட்கும் அண்ணன்/உறவினர் இருந்தால் பரவாயில்லை. அவ்வளவு சம்பாதிக்கிறாயே கொடுத்தாலென்ன என்று கேட்டுக்கொண்டே இருக்கும் அவ்வகையறாக்களை எந்த வகையில் சேர்ப்பது.?

இப்படி நிறையப்போகும். ஆனால் மூன்று மணி நேரத்திற்குள் நிறையத்தான் சொல்ல ஆசையில்லை பேராசை பட்டிருக்கிறார் சேரன். சென்னையில் சென்று முளைவிட ஆசைப்படும் விதையென காதலர்கள் படும் அவஸ்தையை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். "காதல்" படம் நச்சென்று சொல்லிவிட்டது. (விழுப்புரத்தில் பேருந்தில் சந்தித்த, குடும்பம் வெறுத்துவிட்ட அந்த ஜோடி (பிரிண்டிங் டெக்னாலஜி படித்த பையன் - புருவமுடி இணைந்திருந்த அப்பெண்) என்னிடம் பகிர்ந்துகொண்ட வேதனை நடுமூளையில் நச்சென்று அடிக்கிறது இப்போதும். இறைவா நலமாக இருக்கவேண்டும் அவர்கள்.)

'·பிளாஸ்பேக்' என்பதற்கு தமிழில் 'சேரன்' என்று யாரும் அர்த்தம் கொடுக்க முன்வருவதற்கு முன் சேரன் அடுத்த படத்தையும் இப்படி ஆரம்பிக்கக்கூடாது. ஆனால், ஒரு மகாத்மா என்ன ஓராயிரம் உண்மையான ஹீரோக்களின் வாழ்க்கையை அச்சுஅசலாய் கொடுக்க முனைந்ததற்கு சிரம் தாழ்ந்தி வணக்கங்கள்.

குடும்பம், கூட்டுக்குடும்பம், சகோதர பாசம், மனைவிக்கும் கணவனுக்குமான புரிந்துணர்வுகள் ('ஒருமுறைதான் ஒருமுறைதான்' பாடலைக்கேட்டு அயல்நாட்டில் வசிக்கும் தமிழ்ச்சமுதாயத்தினர் சிரித்திருப்பார்கள். இன்று அவர்கள்; நாளை நாம்!), மாமியார்/மாமனாரைப் பேணும் கட்டுப்பாடுள்ள ஒழுக்கங்கள், மூதாதையரின் பெயர் வைக்கும் வழக்கங்கள் இவையெல்லாவற்றையும் இழந்துவருதலுக்கு சாட்டையடியாய் புதுவித கிளைமேக்ஸ் வைத்திருக்கும் இயக்குநர் சேரனுக்கு மனம் கொண்ட பாராட்டுகள்.

அன்புடன்,
எம்.கே.

Thursday, December 08, 2005

திரு.தேவன் நாயர் மறைவு.

சிங்கப்பூரின் இன்றைய வெற்றிகர வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரும் சிறந்த தொழிற்சங்கவாதியும் போராட்டகுணத்தில் இரும்பு மனிதராகவும் விளங்கிய திரு. தேவன் நாயர், கனடாவிலுள்ள ஹாமில்டன் நகரில் நேற்று மறைந்துவிட்டார். சிங்கப்பூரின் மூன்றாவது அதிபராகவும் திரு.லீ குவான் இயூ அவர்களுக்கு நீண்டகால நெருங்கிய நண்பராகவும் விளங்கியவர் அவர்.

இடதுசாரிகளிடமிருந்தும் ஆங்கிலேயர்களிடமிருந்தும் நாட்டை மீட்டு வெற்றிப்பாதையில் செலுத்தவேண்டிய அவசர தருணத்தில், திரு. லீ குவான் யூ அவர்களுடன் இவர் ஆற்றிய பணி மகத்தானது.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் தனது மனைவியை இழந்த அவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். திரு.தேவன் நாயர் அவர்களது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.

தேவன் நாயர் பற்றிய எனது கட்டுரை: (தமிழோவியத்தில் வெளிவந்தது.)

http://tamiloviam.com/unicode/04280504.asp

http://tamiloviam.com/unicode/05050504.asp

எம்.கே.

Search This Blog