தமிழக தற்போதைய அரசியலும் எதிர்காலத் தேர்தல் முடிவுகளும்- ஒரு பார்வை!
அமைதிப்படையில் அமாவாசை ஆசைப்படும் சட்டமன்ற அரண்மனை(க்குள்) மகாராணி ரெடி. தார தம்பட்டையுடனும் வல்லிய கோஷம் மற்றும் வாழ்க முழக்கமுடன் நுழைய, மாப்பிள்ளையும் அவரது வீட்டார்களுமே பாக்கி. ராணியை அடைய 80 வயதுக்காரர்களில் இருந்து எல்லோருக்கும் ஆசை. ராணியை ஏன் வழக்கம்போல் வளமையான தமது தோழியாக்கக்கூடாது என்று தோழியர் கூட்டம் ஒன்றும் களத்தில் குதித்துவிட்டது. ஏத்தனை முறை தோழியாய் இருந்தோம், இப்போது மட்டும் என்ன? எல்லோரும் ஆசைப்படலாம்; தவறில்லை. ராணிக்கு இப்போது என்ன பிரியம்? மீண்டும் தோழியா? இல்லை மீண்டும் ஆசைநாயகியா?
கடந்தமுறை ராணியை தோழியாக்கி வைத்திருந்தவர்களுக்கு அவ்வுறவை எப்படியும் தக்கவைக்க ஏகத்திட்டங்கள்; தந்திரங்கள்; செயல்முறைகள் என ஒருபக்கம். மறுபக்கம் பதினெட்டுப்பட்டி நாட்டாமைகளும் ஒன்றிணைந்து ராணியை மீட்டே தீருவது என்று கங்கணம். ஏற்கனவே ஒரு பஞ்சாயத்தில் ஒன்றிணைந்து வெற்றிபெற்ற ஆசை நாக்கிலே எச்சிலை ஊற்றுவித்தாலும் நாட்டாமைகளுக்குள்ளே இருக்கும் சுய அதிகார சுயலாப எண்ணங்கள் இனிய நாற்பதுவானதை இன்னா 234 என்றாக்கிவிடுமோ என்னவோ!
தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றதில் ஆரம்பித்து தலைகீழாய் நின்றும் இதுவரைக்கும் அங்கீகாரம் பெறமுடியாதது, யானைச் சின்னம் முதல் பூனைச் சின்னம் வரை கொண்டது, வட்டார கட்சி முதல் தேசிய கட்சி வரை என தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கட்சிகளுக்கும் இருக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை தேர்தல் நேரத்தில் அவர்களாகவே பறையடித்துக்கொள்ளும் அவர்களது ஒட்டு வங்கிப்பலமும் (பிச்சை கேட்டு வாங்கும்) உரிய மரியாதையும் தான்!
நிலைமை இப்படியெல்லாம் இருக்க, முதலில் அ.தி.மு.க வை எடுத்துக்கொள்வோம். இதன் சாதக பாதகங்களை இனி அலசுவோம்.
தமிழ்நாட்டின் கடலோரப்பகுதி அரசியல்வாதிகளில் பலர் (கட்சிபேதமின்றி) ஒரு விஷயத்தைப் பற்றி லேசாக ஒரு காலத்தில் கனவுகூடகண்டனர். இது மிகைப்படுத்துதல் இல்லை. உண்மை. வருத்தங்களில் தவித்தது போக, இன்னொரு சுனாமி வந்தால் நன்றாயிருக்குமோ என்பதுதான் அது.
சுனாமி நிவாரணத்தின் போது கலெக்டரும் மற்ற அதிகாரிகளும் ரேஷன் கார்டை அல்லது அதுபோன்ற ஒன்றைக் கையில் வைத்திருந்தவர்களுக்கெல்லாம் அவர்களது வாயில் அப்போது வந்ததை வைத்து அள்ளித்தள்ளியிருக்கின்றனர். அரிசியும் பணமும் அப்படி அரசாங்கம் அள்ளி வீசியது போல இதுவரைக்கும் யாரும் எப்போதும் தந்ததில்லை அல்லது தரமுடியாது என்கின்றனர். பல அரிசி லாரிகளை அரபிக்கடற்கரைபக்கம் வேறு அனுப்பியும் வைத்திருக்கின்றனர்.
சுனாமி நிவாரணத்தில் அரசு மிகுந்த அக்கறையுடனும் தீவிரத்துடனும் ஈடுபட்டிருக்கிறது. நடுநிலைமையாளர்கள் அனைவராலும் இதில் அரசின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டவையாக இருக்கின்றன. இது ஆளும் அதிமுகவிற்கு பெரும் பலம்.
வெள்ளம் மற்றும் அது சார்ந்த நிவாரணங்கள்:
சென்னையின் மிகத்தாழ்வான ஒரு பகுதி. ஒருவாரம் படகில் போக்குவரவு. எல்லோருக்கும் உணவு. ஒருவாரம் அப்பகுதியில் எந்தக்குழந்தையும் பள்ளிக்கு விடுமுறை எடுக்கவில்லை; எவரும் அலுவலகத்திற்கு செல்லாமல் இல்லை. ஏந்த யுவதியும் சமைக்க இயலவில்லை எனினும் சாப்பிடாமல் அல்லது தனக்கு வேண்டியவர்களைப் பட்டினியாய்ப் பார்க்கவில்லை. அந்த அளவுக்கு ஒட்டு மொத்த அரசாங்க இயந்திரங்களும் முழுமூச்சாய்ப் போராடி போர்க்கால அடிப்படையில் பணியாற்றி மக்களின் துயரைத் துடைத்திருகின்றன.
தமிழகத்தின் பலபகுதிகளில் கலெக்டர்களை வெள்ளத்திலும் மழையிலும் பார்க்கமுடிந்ததாம். அவர்களுடன் கடலோரக்காவல்படையினரும் பாதுகாப்பு கெலிகாப்டர்களும் காணப்பட்டனவாம்.
கார்த்திகையில் அல்லது ஐப்பசியில் விதைத்த சம்சாரிகளைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும், மார்கழி மாதத்தில் பிச்சை எடுக்கும் நிலையை ஒத்த்ப்ருப்பர். Pஊச்சிக்கு மருந்தடிக்கவோ உரம் போட்டு பயிரை செழுப்பி விடவோ வழியில்லாமல் தவிக்கும் நடுத்தர விவசாயிகள் கையில் இரு ஐந்நூறு தாள்! ல்லது ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு.!
1000 ரூபாய் வாங்க வருபவர்கள் கையில் ஐம்பது ரூபாயைச் சில்லறையாக கொன்டுவந்து விடவும் என்று அதிகாரிகள் சொல்லியது போக, போற வழியில் செலவு செய்துவிடமுடியாதபடி ஒரு தாளோ அல்லது இரு தாளோதான் கொடுக்கவேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டதாக ஒரு பேச்சும் இருந்ததாம். அந்த அளவுக்கு அதிரடி. அரு ரேஷன் கார்டுக்கு 2000, 1000 பத்து கிலோ அரிசி சேலை வேட்டி மண்ணென்னை இப்படி. இன்னும் சில மாதங்களுக்கு யாரும் மறக்கமாட்டார்கள்.
சேலையை வாங்கி வைத்துக்கொண்ட பெண்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சி இன்பமாய்! மறுபடியும் இன்னொரு வேட்டி சேலை! தரமும் பரவாயில்லாமல்! பொங்கலுக்கு!
இவையெல்லாம் 'மே'யில் வரும் தேர்தல் வெள்ளத்திற்கு நிவாரணநிதியப்பா என்பவர்களுக்கெல்லாம் யாரும் காதுகொடுப்பதாகத்தெரியவில்லை! "எவுக குடுத்தியே? போங்கப்பா!" என்கின்றனர்.
சரி இதெல்லாம் இப்போது, ஒட்டுமொத்த 5 ஆண்டு நன்மைகள் என்ன என்பவர்களுக்கு, ஜெ.யின் சில அதிரடிகளை எடுத்துக்கூறுவது பொருத்தமாயிருக்கும்.
முதலில் நான் அப்படி நினைப்பது,
1. "டாஸ்மாக்"- ரவுடிகளும் அரசியல் செல்வாக்குப்பெற்ற பொறுக்கிகளுமாய் இணைந்து கொள்ளைக்கூட்டம் நடத்திய ஒயின்ஷாப் மற்றும் சாராய வியாபாரத்திற்கு சம்பட்டியால் சமாதி! மிக மிக போற்றத்தக்க ஒரு நிர்வாகத்திறமையாய் அதுமட்டுமல்ல தைர்யமாயும் கூறலாம். அடிக்கடி செய்யவேன்டிய செக்கிங், போலிகலப்பு, பாரில் முறைகேடு ஆளும் கட்சி தலையீடு என்பனவற்றையெல்லாம் (வரும்) அரசு இன்னும் கொஞ்சம் முறைப்படுத்தினால் மிகப்பெரிய வருமானத்தை பவிசாய் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம்.
உடனே, டாஸ்மாக் சப்ளை செய்யும் ஆலை யாருடையது? சசிகலாவின் கணவர் நடராஜனின் அக்காள் புருஷனுடைய சகலையின் மாமா தம்பி மனைவியின் அக்கா புருஷனுடையது என்று சொல்லுவது சரியாகாது. ஆலையை ஏன் அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றால், ஒரே பதில் வேண்டாம். அரசு தயாரிப்பின் அவலம் எல்லோருக்கும் தெரியும், விறபனையுடன் போகட்டும் அது என்பேன் நான். இது, அரசு கோட்டா, ரெக்கமென்டேஷன், யூனியன், ஸ்டிரைக், போனஸ் கேட்டு உண்ணாவுரதம் ஊர்வலம் மொட்டையடித்தல் வேலை நிறுத்தம், உற்பத்திக்குறைவு, நஷ்டம், தனியாருக்கு தாரை வார்ப்பு என்பதாய் முடியவேண்டாம்.
2. மணற்கொள்ளைகளுக்கு முடிவு. அரசே நடத்தும் திட்டம். அட்டகாசம்!
3. தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து- எதிர்கால மனநோயாளிகளை உருவாக்கும் கல்வித்திட்டத்திற்கு மரண அடி. ஏகோவை அரசு கைவிட்டு தகுதிவாய்ந்த கல்வியாளர்களுடன் பேசி இதை எளிமையாக்கி எல்லோருக்கும் உகந்ததாய் நிரந்தரமாக்கவேண்டும். அப்படிச்செய்தால் பெற்றோர்களும் குழந்தைகளும் அடையும் சந்தோசத்திற்கு அளவு இருக்காது.
4. விவசாயிகள்: கடன் தள்ளுபடி கடன் வட்டி குறைப்பு உழவர் அடையாள அட்டை (ஐடி) ஐடி வைத்திருப்பவர்களுக்கு இன்சூரன்ஸ். கு.தலைவர் இறந்தால் ஒரு இலட்சம். காயங்களுக்கு நிவாரணம். பிரீமியம் அரசே கட்டும்! ஐட்ட் வைத்திருப்பவரின் மனைவி கர்ர்பமாக இருந்தால் அரசு உதவித்தொகை, பெண் குழந்தை பிறந்தால் உதவி. கரும்பு கொள்முதல் விலை ஏற்றம்
விவசாயிகள் காட்டில் அடைவிளைச்சல் என்றால் மற்ற எல்லா உழைப்பாளிகளுக்கும் இது போன்று இருக்கிறது. அரசு அலுவலர்கள் முதல் நெசவாளிகள் வரை அனைவைரையும் கவனித்தாகிவிட்டது. விடுதலைப்போராட்ட வீரர்களின் மனைவிகள் முதல் மாணவர்கள் வரை ஏகப்பட்ட சலுகைகள். நானெல்லாம் படிக்கும்போது ஒரு சைக்கிள் வாங்குவதன்பது எவ்வளவு பெரிய உள்ளக்கிடைக்கை! அருமையான சைக்கிள்! ம்ம்ம்.
5.வீரப்பன் மற்றும் வீராணம் ஆகியவற்றையும் (அதி.மு.க காரர்கள் சேர்ட்துக்கொள்ளலாம்.) யோசிக்காமல் விட்டுவிடமுடியாது. முடியாது என்ற ஒன்றை சாதித்துக்காட்டியதற்காக அவரைப்பாராட்டித்தான் ஆகவேண்டும்.
ஆளும் (அதிமுக) அரசின் வெற்றி தொடரவேன்டுமானால் அதன் ஐந்து வருட சாதனைகளைச் சொல்லிவிட்டுச்செல்லலாம். ஆனால் எதிர்க்கட்சிக்கு? ஒரே ஒரு சொல்தான்; ஒற்றைச்சொல். ஆது கூட்டணி!
ஏந்தக்கட்சிக்கும் தேர்தல் நேரத்தில் கொள்கைகள் கிடையாதெனினும் ஏதிர்க்கட்சியான தி.மு.கவிற்கு ஒவ்வொரு தேர்தல் முடிவுக்குப்பின்னும் கொள்கையுண்டு. சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் 40 சீட்டுகளையும் வென்ற மயக்கத்தில் ஏழு கட்சிகளையும் ஒருங்கிணைத்து மாநில தேர்தலுக்கு வித்திட்டு வெற்றியாசை காண்கிறார்காள். ஆனால் 40ஐப் பிரிப்பது எளிது. 234ஐ?
எல்லோருக்கும் ஏதாவதொரு ஆசை இருக்கிற பட்சத்தில் கூட்டணிக்குழப்பங்கள் வர பெருமளவு இடமுன்டு. இதைப்பயன்படுத்த ஆளும் கட்சி கடைவிரித்துக் கொண்டிருக்கிறது. அங்கு திருப்தியில்லாதவர்கள் இங்கு விலைபோகலாம்.
அவ்வகையில் தமிழக தேர்தலில் ஏற்பட வாய்ப்புள்ள கூட்டணிகள் பற்றிப் பார்ப்போம்.
1.அதிமுக கூட்டணி: (மதச்சார்பற்றா (அ) ஜனநாயக (அ) ஐக்கிய இப்படி ஏதாவது ஒன்றைப் போட்டுக்கொள்ளுங்கள்.
அ. அ.தி.மு.க.
ஆ. பாரதிய ஜனதா (கூட்டணி ஜெயித்தால் வீராப்பாய் வெளியில் போய் சொல்லிக்கொள்ளலாம், தமிழகத்தில் தாங்களில்லாமல் எதுவும் இல்லை என்று. தோற்றால் வழக்கம்போல சத்தம் போடாமல் உட்கட்சிப்பூசலை கூறிவிட்டுக் கலைந்துவிடலாம்!)இ. ம.தி.மு.க (அண்ணன் தம்பி பாசம் தலைவருக்கிருக்கலாம், தொண்டனுக்கு? கட்டியணைப்பவர்களாயினும் தலைக்கு கடைசியில் கத்தியைத்தான் வைப்பார்கள் என்பது முன்னாள் தி.மு.க தொண்டனுக்குத்தெரியாதா என்ன? சன்டிவியின் மறைப்புகள் வேகம் கொடுக்கும். தன்மானம் என்பதாய் சில கோடிகளையும் சேர்த்து நின்று சில எம்.எல்.ஏக்கலைக் கண்டெடுக்கலாம்.)
ஈ. தின்டிவனம் காங்கிரஸ்
உ. கம்யூனிஸ்ட் வலது அல்லது இடது(கடைசியில் தொகுதி கூடுதலாய் கிடைக்கலாம்.)
ஊ. தீரன் பா.ம.க மற்றும் இதர உதிரிக்கட்சிகள். (புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, வன்னியர் சங்கம், பிரிந்த முஸ்லீம் லீக், பிரிந்த பார்வார்டு பிளாக் இதர)
2. தி.மு.க கூட்டணி: (அதேதான். தேசிய ஜனநாயக் கூட்டணி இல்லாவிட்டால் வேறு பெயர். பி.ஜே.பி அங்கு இருப்பதால் இங்கு மதச்சார்பற்ற சேர்த்துக்கொள்ளப்படவேண்டும்.)
அ. தி.மு.க
ஆ. காங்கிரஸ் (இப்போதைக்கு வெளியில் வராது! காரணம் இருப்பதைக்கெடுத்து வெறுப்பை விரும்பவில்லை)
இ. பா.ம.க. (காரணம், ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் அன்புமணிசாரை மறப்பதற்கில்லை. வந்தவர்கள் போனவர்கள் போக தன்மானத்தொகுதிகள் கிடைக்கும்.எந்தக்கட்சி ஆட்சியமைப்பும் கவலையில்லை. கையில் நாலு உப்புக்குச் சப்பில்லாத எம் எல் ஏக்கள் இருந்தால் போதும்.)
ஈ. கம்யூனிஸ்ட் இடது அல்லது வலது
உ. ம.தி.மு.க, தி.மு.க வைவிட்டு வெளிவரும் பட்சத்தில் விடுதலைச்சிறுத்தைகள் ஐயாவின் தயவால் உள்ளே நுழையலாம். மீண்டும் உதயசூரியன் சின்னம் வேன்டாம் என்பதைக் கெஞ்சிக்கேட்டுக்கொள்ளலாம்.
எ. அ.தி.மு.கவில் இல்லாத முஸ்லீம் கட்சி, மற்ற கட்சிகள்.
3. விஜயகாந்த் கட்சி:
அ. கடைசி நேரத்தில் சில சங்கங்கள்; லெட்டர்பேட் கட்சிகள்
இவைகளைத் தவிர்த்து இன்னபிற கட்சிகள் சேர்ந்து நான்காம் அணியோ இல்லை வேறு கூட்டணிகளோ ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பில்லாதது போலத்தான் தெரிகிறது. ஏறக்குறைய கூட்டணிகள் முடிவாகிவிட்ட நிலையில் விஜயகாந்த் கட்சியை இழுக்க அதி.மு.க பேரம் நடத்தும் அல்லது மிரட்டும். எனினும் விஜயகாந்திற்கு காரியசித்தி ஏற்பட வழியில்லை என்றே தோணுகிறது.
பி.கு: இப்பதிவு எழுதியபோது வைகோவும் அதிமுக பக்கம் வரவில்லை; வி.சிறுத்தைகளும் வரவில்லை.
அன்பன்
தேர்தல்கிறுக்கன்.