Friday, November 10, 2006
அமரர் கா.காளிமுத்து - சில நினைவுகள்!
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கிய முக்கியமானவர்களையும் தலைவர்களையும் அறிஞர்களையும் ஒவ்வொருவராக மரணம் கவ்வத்தொடங்கியிருப்பதிலிருந்து ஒரு தேர்ந்த காலம் பின் நகரத்தொடங்கியிருப்பதை உணர முடிகிறது.
சினிமாவில் ஆரம்பித்து கலை, இலக்கியம், அரசியல் என அனைத்து துறைகளிலும் அதன் ஆதிக்கம் மெல்லப் பரவத்தொடங்கிவிட்டது. தேர்ந்திருந்த அத்தகையவர்களின் இடத்தை இன்றோ நாளையோ ஆக்கிரமிக்கப்போகிறவர்களின் தரமும் ஞானமும் எத்தன்மை என்பதில் ஏற்படும் பற்றாக்குறைகளையும் அதன் வழிக்காட்டலையும் நினைத்து கலங்கத் தொடங்கியிருக்கிறது காலம்.
அ.தி.மு.க என்ற கட்சியைபொறுத்தவரை திரு. கா.காளிமுத்து அவர்களின் மரணம் மிகப்பெரிய இழப்பேயாகும். அக்கட்சியின் மேலிருந்த ஜெண்டில்மேன் பார்வையும் இலக்கிய-வாசக ஞானமும் திரு.காளிமுத்து அவர்களோடு அதிகம் சம்பந்தப்பட்டிருந்தது என்பது உண்மை. திரு.காளிமுத்து அவர்களைத்தவிர மேடைப்பேச்சில் சிறந்தும் தமிழிலக்கிய ஆர்வலராயும் இருக்கும் அ.தி.மு.க.கார்கள் சட்டென்று எனக்கு ஞாபகத்திற்கு வர மறுக்கிறார்கள். அரசியல், வன்முறையோடு கலந்துவிட்ட இக்கால்நூற்றாண்டில் இலக்கியத்தோடு அரசியலைப் இணைத்துக்கொண்டிருந்தவர்களின் காலம் மலையேறத்துவங்கிவிட்டதே அதற்கு காரணம் எனச் சொல்லலாம்.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அளப்பறிய தன்னம்பிக்கையுடையவரினும் அடிக்கடி நிதானம் தவறுபவர் என்பது பலரது கருத்து. அத்தகையவருக்கருகில் இருந்து ஆலோசனை சொல்வதிலும் வழிகாட்டுவதிலும் இருக்கும் பாரம்பரிய தகுதியுடைவர்களில் ஒருவராயும் திரு.கா.காளிமுத்து விளங்கினார். மனச்சாட்சிப்படி ஜானகியணியில் சேர்ந்திருந்த அவர் எம்ஜிஆருடைய அ.தி.மு.க.வின் நலன்கருதி செல்வி ஜெயலலிதாவுடன் இணைந்துகொண்டதும் முக்கியத்தருணங்களில் அவருக்குத் துணைநின்றதும் தேர்தல் காலங்களில் கூட்டத்தின் கவனத்தைத் திருப்பும் மிகச்சிறந்த பேச்சாளராய் இருந்த வகைகளிலும் செல்வி ஜெயலலிதாவுக்கும் இது தனிப்பட்ட முறையில் பேரிழப்பு.
கடந்த சட்டமன்றத்தேர்தலில் தொண்டர்களின் வேண்டுகோளால் அ.தி.மு.க பக்கமும் அப்போதைய கூட்டணியில் தி.மு.க பக்கமும் என மதில்மேல் பூனையாக அரசியல்நிலைமை கொண்டிருந்த திரு. வைகோ அவர்களை, 'இன்னும் எதற்கு கௌரவர்களின் பக்கம், பாண்டவர்களின் பக்கம் வா கர்ணா!' என்று மேடைக்கு மேடை கூவியழைத்து நீண்டநாள் நண்பனான கர்ணனை தம்பக்கம் வரவழைத்ததில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. மாபெரும் பேச்சாளர்களான இவ்விருவரும் சேர்ந்து ஒரு மேடையில் பேசினால் எப்படி இருக்கும் என்பதை அடிக்கடி நினைத்து வியந்திருக்கிறேன். அத்தகு தருணம் வாய்க்காமலே போய்விட்டது.
பாவப்பட்ட அரசியலில் பழிவாங்கும் எண்ணங்களுக்கு குறைவேது? புதிதாக ஆட்சிப்பொறுபேற்ற தி.மு.க அரசு, ஊழல் தடுப்பு வழக்கில் இவர் மேல் இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்தது. சட்டசபை வளாக அன்பகம் உணவகத்தை வாடகைக்கு விட்டதில் இவர் தலையிட்டு அரசுக்கு வருமானத்தை இழக்கவைத்ததாக இவரது மேல் வழக்கு தொடரப்பட்டு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்பதையும் மறந்து கலைஞரும் இப்படிச்செய்தார் என்பது வருத்தத்திற்குரியது. மதுரை கோர்ட்டில் ஆஜராகி வந்தார். இதனால் தற்போதையை அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருந்தவர் இப்போது நிரந்தரமாய் ஓய்வும் பெற்றுவிட்டார்.
சில வருடங்களுக்கு முன் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் உதவியால் அதிலிருந்து மீண்டு வந்தவர், 'திரு.வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசத்தைப் படிக்காமல் இறந்துவிட்டிருப்பேனோ' என்று மனம் நெகிழ்ந்து பேசியது இவரது இலக்கிய உணர்வுக்கும் ஆர்வத்திற்கும் பெரும் சான்று.
கடந்த வருடத்தில் சிங்கப்பூரில் ஒரு விழாவிற்குச் சிறப்புறை ஆற்ற வந்திருந்தார் திரு.கா.காளிமுத்து. பெருமாள் கோயிலின் கோவிந்தசாமி மண்டபத்தில் நடந்தது அக்கூட்டம். நானும் சென்றிருந்தேன். அடடா! அவர் நாவிலிருந்து கரை புரண்டோடிய அகநானூறென்ன, புறநானூரென்ன! தமிழைப் பிழையின்றிப் பெருமையுடன் பேசும் இத்தகையவர்களால் அல்லவா தமிழன்னை மகிழ்ந்து போயிருக்கிறாள்! கூட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. மாபெரும் வரவேற்பு பெற்ற அவரது உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய விழாக் குழுவினர், 'இன்றுபோல நாம் தீராத தமிழ்ச்சுவை பருக மீண்டும் அவரை இங்கு வரவழைப்போம்' என்று கூட்டத்தின் கரகோஷங்களுக்கிடையில் சொன்னது இன்றும் ஞாபகம் இருக்கிறது. ராமுத்தேவன் பட்டி விடுமா அவரை?
தமிழார்வலராயும் தேர்ந்த அரசியல் மற்றும் பேச்சாளாராயும் விளங்கிய திரு. கா.காளிமுத்து அவர்களுக்கு எனது அஞ்சலி. அன்னாரது குடும்பத்திற்கும், அ.தி.மு.க விற்கும், அருமைப்புதல்வனை இழந்து தவிக்கும் தமிழ்த்தாய்க்கும் எனது ஆறுதல்.
அன்பன்
எம்.கே.குமார்
Subscribe to:
Posts (Atom)