Monday, October 27, 2008

தினக்குரல் கருத்தோவியர் மூர்த்திக்கு தங்கப்பதக்கம்

ஸ்ரீலங்கா வெகுஜன ஊடக(Sri Lanka Massmedia Foundation) ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகத்துறையினருக்கான தெரிவில் தினக்குரலின் கேலிச்சித்திரக்காரர் ஏ.யோகமூர்த்தி 2008 ஆம் ஆண்டின் சிறந்த ஆக்கபூர்வமான கருத்தோவிய கலைஞராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாளை 28 ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மேற்படி ஊடக அமைப்பு நடத்தும் பரிசளிப்பு விழாவில் கலைஞர் மூர்த்திக்கு சான்றிதழ் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

எனக்குப்பிடித்த கேலிச்சித்திரக்காரர்களில் ஒருவர். வாழ்த்துகள்!!

அன்பன்,
எம்.கே.

நன்றி: தினக்குரல்

Sunday, June 01, 2008

"நாம்" - நற்புடை நாற்றங்கால்!



தமிழ் இலக்கிய உலகிற்கு இது புதுவரவுகளை ஆரத்தழுவும் காலம். தமிழ்நாட்டிலிருந்து தமிழினி வெளியிடும் "தமிழினி" மாத இதழ், எனி இந்தியன் வெளியிடும் "வார்த்தை" மாத இதழ், மலேசியாவிலிருந்து சிலமாதங்கள் வெளிவந்த 'காதல்' மாத இதழின் டீம் மறுபடியும் களம் இறங்கியிருக்கும் "வல்லினம்-காலாண்டிதழ்", மற்றுமொரு மலேசிய சிற்றிதழ் "அநங்கம்" ஆகியவை திறல் காட்ட தீரத்தோடு உலகத் தமிழ் இலக்கியக்களத்தில் குதித்திருக்க சிங்கப்பூரிலிருந்தும் அத்தகைய முனைப்போடு களம் கண்டிருக்கிறது "நாம்" - என்றொரு காலாண்டிதழ்.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்திருக்கும் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து இந்த புதிய காலாண்டிதழை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். இதழ் ஒன்றைத் தொடங்குதல் என்பது இலக்கிய ஆர்வம் கொண்ட பல இளைஞர்கள் / அறிஞர்களின் தனிப்பட்ட / இணைந்த கனவாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கேற்றவாறே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் நாட்பொழுதில் அவை மறைந்துபோன தடத்தையும் தமிழிலக்கிய வரலாற்றில் நிறைய காணலாம். உருப்பெற ஏற்பட்ட காரணங்களில் நூற்றில் ஒரு பங்குகூட அதன் வீழ்ச்சிக்கு வழிவிடமுடியும் என்பதால் தோன்றுவதும் தொடர்வதும் சார்ந்தவர்களின் மன உறுதியில் அமைந்திருக்கிறது.

பன்னெடுங்காலமாய் பொருளாதாரத்திற்கென புலம்பெயர்ந்த தமிழர்கள், போகுமிடங்களிலெல்லாம் இரு விஷயங்களைச் செய்தார்கள். ஒன்று கோவில் கட்டுவது, இரண்டாவது வட்டிக்கடை வைப்பது. மூன்றாவதாய் ஒன்றைச் செய்வதற்கும் இளைஞர்குழாம் சார்ந்த மனமொத்த இயக்கம் சிலதும் எப்போதும் முன்னெடுத்தே நின்றிருக்கிறது. சிங்கப்பூரிலும் ஆதிகாலம் தொட்டு அதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன. 29 வயதிலேயே பத்திரிகை ஆசிரியரான தமிழவேள் கோ. சாரங்கபாணி முதல், பட்டுக்கோட்டையையடுத்த பிச்சினிக்காட்டிலிருந்து வந்த திரு. இளங்கோ வரை பலர் இவ்வனுபவத்தில் வாழ்ந்திருக்கின்றனர். (இதுதொடர்பான தமது அனுபவத்தை திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் நிகழ்ச்சியிலும் பகிர்ந்துகொண்டார்.)

"நாம்" இதழை எதனடிப்படையில் வரையறுப்பது என்பதில் சில சிக்கல்கள் நீடிக்கின்றன. வடிவமைப்பில் உயிர்மையைக்கொண்டும் கூறுபொருளில் சிற்றிதழா அல்லது வெகுஜன இதழா என்பது சார்ந்தும், சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் வெளியீடு எனினும் வெளியீட்டு முகவரி இந்தியாவிலிருந்தும்/ தனிச்சுற்றுக்கு மட்டும் என முழுமையை அடைவதில் சில குறைபாடுகள் உள்ளன. இணைய நண்பர்களின் ஆக்கங்களையே பொதுவாகக் காணமுடிகிறது எனினும் இணைய எழுத்துகளின் மேம்பட்ட உள்ளீடுகளைக்கொண்டு அதுவே அதன் சிறப்பம்சமாக மாற நேரலாம்.

முதல் இதழின் அச்சகம், முதன்முதலில் புத்தகம் தயாரித்திருக்கிறது என நினைக்கிறேன். ஆங்காங்கு பக்கங்கள் "மை"யிட்டுக்கொண்டிருப்பதும், புகைப்படங்கள் தெளிவற்றிருப்பதும் முதல் இதழின் திருஷ்டிக்காக என்று எடுத்துக்கொள்வோம். அடுத்தடுத்த இதழ்கள் முக்கிய அச்சகங்கள் வழியாக முழுமைபெற்று வரும் என்று உறுதி தெரிவித்தார்கள் "நாம்" குழுவினர்.

இதழ் வெளியீட்டு நிகழ்வில் சிங்கப்பூரிலிருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் அல்லது அதன் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் என்பதிலும் வெளியிடப்பட்ட இடத்திற்காகவும் வெளியீட்டு நிகழ்வில் நான் கலந்துகொண்டமையில் களிப்படைகிறேன். முதல் இதழில் எனது ஒரு கதையும் வந்திருக்கிறது. கற்பனையாய் எழுதிய கதை, வெளியான தருணத்தில் உண்மையாய் ஆனதை செய்தியாய்க் கண்டு திரு. பாண்டித்துரை அழைத்து ஆச்சரியப்பட்டார்.

சிங்கப்பூரை உருவாக்கிய சர். ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ், 1822ல் உருவாக்கியதும் அவரது மறைவுக்குப்பின் 1859ல் மீண்டும் உருப்பெற்றதுமான 149 ஆண்டுகால வரலாற்றுச்சிறப்புடைய சிங்கப்பூர் பொட்டானிக் கார்டனில் வைத்து "நாம்" இதழ் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்து, சிங்கப்பூரின் மூத்த தமிழார்வலர்கள் திரு. கண்ணபிரான் மற்றும் திரு. செ.ப.பன்னீர் செல்வம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கையில், தமிழகத்திலிருந்து எடுத்துவரப்பட்ட ரப்பர் மரக்கன்றுகள் மலேயா முழுக்க நடுவதற்கு முன்பாக, இந்த பொட்டானிக் கார்டனில்தான் முதன்முதலாக சோதனையின் பொருட்டு நடப்பட்டது என்றார்கள். அத்தகு பெருமைமிக்க இத்தோட்டத்தில் இன்னொருமுறை ஒரு இலக்கியச்செடியை நட்டுவைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை குனிந்து உற்றுநோக்கிக்கொண்டிருந்த அந்த நீண்ட நெடிய மரத்தைப்போல இவ்விதழும் எல்லாவித சிறப்புகளும் பெற்று வளரவேண்டும்; வாழவேண்டும்.

எந்தவொரு இதழ் ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை மையமாக வைத்து குறைந்தது பத்து எழுத்தாளர்களாவது உருவாவார்கள் என்று தனது அனுபவத்தை வைத்துச்சொல்வாராம் திரு. மனுஷ்யபுத்திரன். அந்த வகையில் இந்த இதழ் பத்து எழுத்தாளர்களால் அல்லது எழுத்தார்வம் மிக்கவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது; இன்னும் பல பத்துப்பேர்களைக் கொண்டு சேர்க்கும் என நம்புவோம்.

(பத்து, பத்து என்றதும், சம்பந்தமில்லையெனினும் இது ஞாபகத்திற்கு வருகிறது. புரசைவாக்கம் குமுதம் அலுவலகத்திற்கு வெளியே "பத்து ரூபாய் நோட்டே, நீ போய் ஆயிரம் பேருக்கு உதவி செய்துவிட்டு பத்தாயிரம் ரூபாயாகத் திரும்பிவா" என்று எழுதப்பட்டிருக்கும். யாராவது இதை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.)

அன்பன்
எம்.கே.குமார்

Saturday, May 03, 2008

இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் - வண்ணதாசனுக்கு நன்றி!

திருச்சியின் மையப்பகுதியில் செருப்பு தைப்பவரைத்தேடி அலைந்து ஏழு எட்டு மணி அளவில் பிரதான சாலை ஒன்றில் ஒருவரைத் தரிசித்தேன். நீர்த்தேங்கியிருந்த பள்ளமான சாலைப்பகுதியைத் தாண்டி அவர் அமர்ந்திருந்தார். நான் சென்ற நேரம் அன்றைய அவரது பொழுதின் முடிவுக்காலமாதலால் எல்லா உபகரணங்களையும் மூட்டை கட்டிவிட்டி வெளியிலிருந்து பார்க்க நன்கு இறுக்கி நையப்பட்ட ஒரு குப்பைத்தொட்டியைப்போன்ற தோரணையுள்ள ஒரு இடமாக்கிவிட்டு எழுந்து நகரவிருந்தார். நான் வந்து அவரிடம் சேர்ந்தபொழுது அவர் என்னை வெகு எளிதாய் உதாசீனப்படுத்தியிருக்கக்கூடும். ஏனெனில் நான் வேண்டியது அத்தனை மூட்டையையும் பிரித்து எடுத்து செய்யத்தகுந்த வருமானம் தரக்கூடிய வேலையில்லை. ஆனாலும் சாலைத்தூசிகள் சூழ்ந்த உலகில் வண்டிச்சத்தங்களும் இரைச்சலும் முண்டியடிக்கும் வெளிச்சத்துக்கு ஏமாந்த அவ்வேளையில் ஒட்டுமொத்த மூட்டைகளையும் பிரித்து குத்தூசியையும் நூலையில் எடுத்து அவர் அவ்வேலையைச்செய்தார். இரண்டு விஷயங்கள் என்னை வசீகரித்தன. அவ்வேலையைச் செய்ய அவர் காட்டிய முனைப்பும் அக்கறையும் ஒன்று. மற்றொன்று எங்களிடையே சிறு மின்னலைப்போல தோன்றி மறைந்த நாங்கள் இருவரும் திருப்தியடைந்த ஒரு தருணம்! பெரும் மின்னல் ஒன்று வெட்டிச்சென்றபின் அதைச் சார்ந்து ஒரு வெளிச்சம் பரவிக்கிடந்து மறையுமே அதைப்போல அது இன்றுவரை மறைந்தும் மறையாததாய் இருக்கிறது. பல்வேறு பிரிவுத்துவம் வாய்ந்த இவ்வாழ்வில் எதையும் சாராது வரும் பூரணத்துவம் மிகுந்த அந்தத் திருப்தியானது எத்தகைய புனைவும் எளிதில் தராத ஒன்று. வண்ணதாசன் கதைகளில் அம்மின்னலும் அதன் தாக்கமும் எனக்கு நிறைந்திருக்கிறது.

வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்புகளில் 'நடுகை' (பாதிமட்டுமே) மற்றும் 'கிருஷ்ணன் வைத்த வீடு' ஆகிய இரண்டை மட்டும் வாசிக்கும் பாக்கியம் இக்காலத்தில் எனக்கு கிட்டியிருந்தது.

தனது திருமணத்திற்கு மேளம் வாசித்தவரைப் பற்றிய ஒரு கதை, அமரர் ஊர்தியைப் பின்தொடருபவனைப் பற்றிய இன்னொரு கதை, தனது மாமரத்திலிருந்து சிறுகுச்சி ஒன்று ஒடிக்கப்படுவதை உணர்ந்து வீட்டிலிருந்து எழுந்து வரும் கிழவியின் கதை, வெறும் மின்மினிப்பூச்சிகளின் வெளிச்சத்தில் அலசப்படும் "தாழம்பூ" தாத்தாவின் கதை, நகர வாழ்க்கையில் நிலை தடுமாறி ஊர் திரும்ப ஏங்கும் 'நெல்லை சிவாஜி' குத்தாலிங்கம் அண்ணாச்சியின் கதை என கதை என்ற பெயரில் நிகழ்வுகள் பதியப்படுவதை நெகிழ்ச்சியுடன் ஆமோதிக்கிறேன்.

நினைவில் ஒரே மாதிரியாகத்தான் நகர்ந்து போகிறார்கள் - மேளம் வாசிப்பவர்கள் அனைவரும் எனக்கு; தரையில் சிந்தும் பூக்களைத் தவிர்த்துக்கொண்டே அமரர் ஊர்தியைப் பின் தொடர்ந்து சென்றவர்களில் நானும் ஒருவன்; கிழவியினுடைய மாமர குச்சியின் வாசனையை குழந்தையின் காதுக்கடியில் கிடைக்கும் பால்வாசனையாய் உணர நேர்ந்தமையில் ததும்பிய மகிழ்வு; நீளமான கூந்தலைக்கொண்ட தலையில் தவழும் தாழம்பூவின் நறுமணத்தில் தாத்தாவை விட நான் திளைத்திருந்தமையில் கிடைத்த மோகம்; சில பேருடைய குடிவாசனை மட்டும் எப்போதுமே எனக்கு பிடித்திருந்தாய் இருக்கும் நிலைமை என மனம் இளகும் உயிர் நெகிழும் ஐம்புலன்களும் ஏங்கும் இலக்கிய சுகத்தை சில கதைகள் ஏற்படுத்திச்சென்றிருக்கின்றன.

அடுக்கி வைக்கும் செங்கல்களைப்போல நிகழ்வுகளால் கதையைக் கட்டமைக்கும் கலையைக் காண நேருவதுண்டு. ஒரே ஒரு செங்கல்லைக்கொண்டு தாஜ்மஹாலையே கட்ட முயலும் சம்பவத்திற்கிணையான இலக்கியங்களுமுண்டு. செங்கல்லையே காட்டாது அதைப்பற்றிய உலகை அலசும் கதைகளுமுண்டு. ஒரே ஒரு செங்கல்லைத் திரும்ப திரும்பப் பார்த்து அதன் செம்மைத்தனத்தை பதிய முற்படுவதும் உண்டு. வண்ணதாசனின் கதைகள் இதை அடிப்படையாகக்கொண்டது என நினைக்கிறேன். பலமுறை பார்ப்பதால் உண்டாகும் இயற்கையான சலிப்பையும் மீறி ஏதோ ஒன்று தர முயலுவது இவரது படைப்புகளின் வெற்றிக்கதையாகும்.

'யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்த', நடந்து பார்க்காத சசிப்பெண்ணின் பாதத்தை துணியால் வேலைக்காரன் மூடுவதை மறக்க நினைத்தும் முடியாத 'கிருஷ்ணன் வைத்த வீடு' மறக்க முடியாத ஒரு கதை மட்டுமல்ல; செவ்வியல் சிறுகதையின் கட்டுமான வடிவத்திற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணமும் என்பேன். சிறந்த வாசகனை இக்கதை தத்தெடுத்துக்கொள்ளும் என்பதை உணர நேருகையில் மகிழ்கிறேன்.

அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமா வீட்டிற்கு எதற்காகவோ சென்றிருந்தேன். அங்கு என்ன நடந்தது என்பதும் ஞாபகமில்லை. ஆனால் நான் திரும்ப வேண்டும். இரவு எட்டு-ஒன்பது மணிக்கு காட்டின் வழியே எனது வீட்டுக்கு நான் திரும்பவரவேண்டிய சூழ்நிலை. யாரும் துணைக்கு இல்லை. எதற்கு துணை என்று இப்போது நினைத்தாலும் அன்று அந்த இருளைக் கடந்து வீட்டுக்கு வந்துசேர்ந்த சம்பவத்தையே நான் அடைந்த மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். வெற்றி என்றால் யாரை எதிர்த்து? இருட்டையா? இருட்டு எனக்கு என்ன செய்தது? இருட்டு எப்படி எனக்கு எதிரியானது? இருட்டை ஜெயித்தேன் என்றால் இருட்டுக்கா நான் பயந்தேன்? இல்லை இருட்டின் அடையாளங்களுக்கா? இருட்டின் அடையாளங்கள்தான் என்ன? பூச்சி, பாம்பு, பேய், பூதம், திருடர்கள்? அதுசரி, இருட்டின் அடையாளங்கள் இவைகள் மட்டும் தானா?

இருட்டை தேர்ந்த புகைப்படக்கலைஞனைப்போல, ஓவியனைப்போல அடிக்கடி அலசுகிறார் வண்ணதாசன். சாலாச்சி அக்காவும், திலகா அக்காவும், சந்திமுனைப் பிள்ளையாரும் இருளும் வெளிச்சமும் போல எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

இவ்விரு தொகுப்புகளிலும் கதைகளை எங்கும் நான் காணவில்லை. வெறும் புனைவு மட்டுமே கதை என்று கொண்டோமானால் அவைகள் எவற்றையும் இத்தொகுப்புகளில் நான் காணவில்லை. புனைவுகளின் தட்டையான தடங்களை எங்கும் நான் தரிசிக்கவில்லை. வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை மட்டுமே கதைக்களங்களில் விரவிக்கிடக்கின்றன.

நண்பர் மானசாஜென்னிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது 'நிலை' என்று வண்ணதாசனின் ஒரு கதை இருப்பதாய்ச் சொன்னார். நான் இப்போது அதைப்படிக்கவில்லை. ஆனால் 'நிலை' என்ற பெயரில் ஏறக்குறைய ஏழுவருடங்களுக்கு முன் ஒரு கதை படித்தேன். சிறந்த சிறுகதைகளாய் யாரோ ஒருவர் தொகுத்த அத்தொகுப்பில் அதுவும் ஒன்று. நள்ளிரவு வரை வேலை செய்துவிட்டு தீபாவளிக்கு முந்தைய இரவில் வீடு திரும்பும் ஒருவனின் கதை அது. அந்தக் கதையும் அதில் வரும் லாரியில் அடிபட்டுச் செத்துக்கிடக்கும் ஒரு எலியும் இன்றுவரை நினைவிலாடுகின்றன.

இரண்டு விஷயங்களுக்காய் திரு. வண்ணதாசனுக்கு நான் நன்றி சொல்ல விழைவது எதார்த்தமானது என நினைக்கிறேன்.

ஒன்று, நேற்றுவரை இருட்டு, வெறும் இருட்டாகவே எனக்கு இருந்திருக்கிறது - இப்போது அது, நெருங்கிய ஒரு உறவாகி விட்டிருக்கிறது -

இரண்டாவது, எப்போதும் பார்வையிலிருந்து எளிதாய் நகர்ந்துவிடும் எந்த ஒன்றையும், இப்போது மீண்டும் ஒருமுறையாவது பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் - வண்ணதாசனால்!

அன்பன்,
எம்.கே.குமார்.

நன்றி: வாசகர் வட்டம், சிங்கப்பூர்.http://vasagarvattam.blogspot.com/

Thursday, April 24, 2008

நெடு நாட்களுக்குப்பிறகு எனக்குப்பிடித்த கலைஞர்!

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல் - அமைச்சர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சென்னை, ஏப்.24-

தமிழக சட்டசபையில் நேற்று இலங்கை பிரச்சினை பற்றி பேசுவதற்காக பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.

அப்போது நடந்த விவாதத்தில் ஜி.கே.மணி (பா.ம.க.) கண்ணப்பன் (ம.தி.மு.க.) சுதர்சனம் (காங்கிரஸ்) ஆகியோர் காரசாரமாக பேசினார்கள். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்து பேசியதாவது:-

வருந்துகிறேன்

இலங்கைப் பிரச்சினைக்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பரிவு உணர்வோடும், இரக்க சிந்தனையோடும், தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என்கின்ற பாச மனப்பான்மையோடும் கொண்டு வந்து, அதே அடிப்படையிலே விவாதம் நடைபெற்றிருந்தால் நான் மிகுந்த ஆறுதல் அடைவேன்.

ஆனால், எந்த நோக்கத்திற்காக ஜி.கே.மணி இந்தத் தீர்மானத்தை கொண்டு வருவதாகச் சொல்லி முன்மொழிந்தாரோ அந்த நோக்கம் சிதைகின்ற வகையில் சில வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன்.

ஆணிவேரை அசைக்கக் கூடாது

இந்த அவையை இந்திய அரசின் ஆதிக்கத்திலே உள்ள ஒரு நிர்வாகத்தின் அடிப்படையில் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கு நாம் எழுப்புகின்ற கருத்துக்கள், நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள், அந்த ஆணிவேரை அசைத்துவிடக் கூடாது.

இங்கே கண்ணப்பன், சுதர்சனத்தின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து சொல்ல எழுந்து உணர்ச்சி வேகத்தில், இலங்கையிலே உள்ள தமிழர்களைக் கொல்வதற்கு இந்திய அரசு சாதகமாக இருக்கிறது அல்லது தூண்டுகோலாக இருக்கிறது என்பது போன்ற கருத்து அமைந்த வாசகத்தை அவர் சொன்னதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

அவர் துடிப்பாகப் பேசக் கூடியவர். தீவிரமாகச் சிந்திக்கக் கூடியவர். நான் மறுக்கவில்லை. ஆனால், இப்படி கடுப்பாகப் பேசக் கூடியவர் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையிலே அவர் சொன்ன அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலே இருந்து நீக்குவதற்கு நான் பரிந்துரை செய்கிறேன். (கண்ணப்பன் சொன்ன சில வாசகங்களை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் ஆவுடையப்பன் நீக்கினார்).

ஒரே குழுவாக இருந்தால்

இதிலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதிலே எந்தவிதமான கருத்து மாறுபாடும் இந்த அரசுக்கு இல்லை. ஆளுங்கட்சிக்கும் எனக்கும் இல்லை. ஏனென்றால், இலங்கைப் பிரச்சினை ஆரம்பமான அந்தக் காலத்திலே இருந்து, தந்தை செல்வா அவர்களுடைய காலத்திலேயிருந்து நடைபெறுகின்ற போராட்டம், இந்த உரிமைப் போராட்டம். செல்வா மறைந்த பிறகு அவருடைய வழித் தோன்றல்களாக பல பேர் இந்தப் போராட்டத்திலே ஈடுபட்டு அறவழியிலே அவர்கள் நடத்திய கிளர்ச்சிகளெல்லாம் பயனற்றுப் போய்விட்டன.

பிறகு, விடுதலை பெற்றே தீரவேண்டும் என்று கிளம்பி அவர்கள் போராளிகளாக மாறினார்கள். போராளிகளாக மாறியவர்கள் ஒரு குழுவாக இருந்து அந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தால் இந்நேரம் அவர்கள் நேபாளத்தைப் போல வெற்றியினை ஈட்டியிருக்க முடியும். வேறு பல நாடுகளிலே நடந்த விடுதலைக் கிளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியைப் போல வெற்றி பெற்றிருக்க முடியும்.

குழுவுக்குள் ஏற்பட்ட மோதல்

போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே, போராளிகளுக்குள் போராடுவது என்ற இந்த போராளிகளுக்குள்ளே நடந்த போராட்டம் தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலே அவர்களுக்காக பரிந்துரை செய்து பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான், இடைக்காலத்திலே நாம் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை, `சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள்' என்பதுதான்.

அந்தப் போராளிக் குழு, ஒரே போராளிக் குழுவாக இருந்து ஒரே ஒற்றுமையோடு இலங்கையிலே நடைபெறுகின்ற அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும்; தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே செயல்பட்டதா என்றால் எதுவும் இல்லை. ஒரு குழுவை இன்னொரு குழு வீழ்த்த வேண்டும்; ஒரு குழுவை இன்னொரு குழு மாய்க்க வேண்டும்; ஒரு குழுவுக்கு செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற முறையிலே தான் ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் அங்கே கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்து விடக் கூடாது. அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? ம.பொ.சிவஞானம் போல விளங்கியவர். அவர் ஏன் கொல்லப்பட்டார்?

பலவீனப்படுத்திய ஒற்றுமையின்மை

இப்படி பல போராளிகள் அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டு, சுட்டுக் கொண்டு செத்திருக்கிறார்கள். இவைகளெல்லாம்தான் இந்தப் போராட்டத்தை பலகீனப்படுத்தியது. இத்தகைய விடுதலைப் போராட்டம் உலகத்திலே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்போது இந்த சின்னஞ்சிறு நாடு இலங்கையிலே வலுவிழந்ததற்குக் காரணம் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாதது தான். நாம் வலுவிழந்து போய் பகைவர்களுக்கு இடம் கொடுத்து விட்டோம்.

சிங்கள ராணுவம் இன்றைக்கு நம்மை ஏறி மேய்கிறது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் அதற்காக, நம்முடைய வீட்டுப் பிள்ளை கிணற்றோரத்திற்கு சென்று அதிலே விழுந்து விடுகின்ற நிலை வரும் போது அதைத் தாங்கிப் பிடிக்கின்ற அந்தத் தாய் உள்ளமாக, தமிழர்களுடைய உள்ளமாக, தமிழ்நாட்டிலே வாழ்கின்றவர்களின் உள்ளமாக இருக்கின்ற காரணத்தினால்தான், தொப்புள்கொடி உறவு உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டுமென்று ஜி.கே.மணி எண்ணினார். நானும் அதை ஆதரிக்கிறேன். அதே நிலையிலே கண்ணப்பன் ஆதரித்தால் நானும் அவ்வாறே ஆதரிக்கிறேன்.

மத்திய அரசை குறை கூறாதீர்

ஆனால், இதிலே இந்திய அரசை குறை கூறிப் பயனில்லை. அவர்கள் ஏற்கனவே பெரும் இழப்புக்கு ஆளானவர்கள். அவர்களுடைய பெருந்தலைவர் ராஜீவ்காந்தியை இந்தக் காரணத்திற்காக இழந்தவர்கள். அவர்களை நாம் பழி சொல்லியோ குறை கூறியோ பயனில்லை. இருந்தாலும், அந்தக் குடும்பத்திலே இன்னமும் அந்த மனித நேயம் உண்டு என்பதை சமீப காலத்து செய்திகளெல்லாம் நமக்கு விளக்குகின்றன.

அது வேலூர் சிறைச்சாலை செய்தியாக இருந்தாலும் சரி. அல்லது அன்றைக்கு சோனியாகாந்தி மன்னிப்பு கொடுத்த செய்தியாக இருந்தாலும் சரி. அந்த அம்மையார் தூக்கிலிடப்பட்டால் அவரின் குழந்தை என்ன கதி ஆவது என்று சிந்தித்தார் என்ற செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அவர்களிடத்திலே மனித நேயம் குடி கொண்டிருப்பதைக் காண்கிறோம். அந்த மனித நேயத்தின் அடிப்படையில், நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை எண்ணிப் பார்ப்பார்கள். அங்கே வாழ்கின்ற தமிழர்களுடைய உயிர்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

தீர்மானம்

``இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்'' என வலியுறுத்துகின்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். நீங்கள் அதை ஆதரித்துத் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏகமனதாக நிறைவேற்றம்

அதைத் தொடர்ந்து சுதர்சனம், ஜி.கே.மணி, கண்ணப்பன் ஆகியோர் இந்த தீர்மானத்தை முழுமனதோடு ஆதரிப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த அந்த தீர்மானம் ஏகமனதாக சட்டசபையில் நிறைவேறியது.


நன்றி: தினத்தந்தி.

Search This Blog