இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல் - அமைச்சர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்னை, ஏப்.24-
தமிழக சட்டசபையில் நேற்று இலங்கை பிரச்சினை பற்றி பேசுவதற்காக பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.
அப்போது நடந்த விவாதத்தில் ஜி.கே.மணி (பா.ம.க.) கண்ணப்பன் (ம.தி.மு.க.) சுதர்சனம் (காங்கிரஸ்) ஆகியோர் காரசாரமாக பேசினார்கள். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்து பேசியதாவது:-
வருந்துகிறேன்
இலங்கைப் பிரச்சினைக்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பரிவு உணர்வோடும், இரக்க சிந்தனையோடும், தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என்கின்ற பாச மனப்பான்மையோடும் கொண்டு வந்து, அதே அடிப்படையிலே விவாதம் நடைபெற்றிருந்தால் நான் மிகுந்த ஆறுதல் அடைவேன்.
ஆனால், எந்த நோக்கத்திற்காக ஜி.கே.மணி இந்தத் தீர்மானத்தை கொண்டு வருவதாகச் சொல்லி முன்மொழிந்தாரோ அந்த நோக்கம் சிதைகின்ற வகையில் சில வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன்.
ஆணிவேரை அசைக்கக் கூடாது
இந்த அவையை இந்திய அரசின் ஆதிக்கத்திலே உள்ள ஒரு நிர்வாகத்தின் அடிப்படையில் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கு நாம் எழுப்புகின்ற கருத்துக்கள், நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள், அந்த ஆணிவேரை அசைத்துவிடக் கூடாது.
இங்கே கண்ணப்பன், சுதர்சனத்தின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து சொல்ல எழுந்து உணர்ச்சி வேகத்தில், இலங்கையிலே உள்ள தமிழர்களைக் கொல்வதற்கு இந்திய அரசு சாதகமாக இருக்கிறது அல்லது தூண்டுகோலாக இருக்கிறது என்பது போன்ற கருத்து அமைந்த வாசகத்தை அவர் சொன்னதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
அவர் துடிப்பாகப் பேசக் கூடியவர். தீவிரமாகச் சிந்திக்கக் கூடியவர். நான் மறுக்கவில்லை. ஆனால், இப்படி கடுப்பாகப் பேசக் கூடியவர் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையிலே அவர் சொன்ன அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலே இருந்து நீக்குவதற்கு நான் பரிந்துரை செய்கிறேன். (கண்ணப்பன் சொன்ன சில வாசகங்களை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் ஆவுடையப்பன் நீக்கினார்).
ஒரே குழுவாக இருந்தால்
இதிலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதிலே எந்தவிதமான கருத்து மாறுபாடும் இந்த அரசுக்கு இல்லை. ஆளுங்கட்சிக்கும் எனக்கும் இல்லை. ஏனென்றால், இலங்கைப் பிரச்சினை ஆரம்பமான அந்தக் காலத்திலே இருந்து, தந்தை செல்வா அவர்களுடைய காலத்திலேயிருந்து நடைபெறுகின்ற போராட்டம், இந்த உரிமைப் போராட்டம். செல்வா மறைந்த பிறகு அவருடைய வழித் தோன்றல்களாக பல பேர் இந்தப் போராட்டத்திலே ஈடுபட்டு அறவழியிலே அவர்கள் நடத்திய கிளர்ச்சிகளெல்லாம் பயனற்றுப் போய்விட்டன.
பிறகு, விடுதலை பெற்றே தீரவேண்டும் என்று கிளம்பி அவர்கள் போராளிகளாக மாறினார்கள். போராளிகளாக மாறியவர்கள் ஒரு குழுவாக இருந்து அந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தால் இந்நேரம் அவர்கள் நேபாளத்தைப் போல வெற்றியினை ஈட்டியிருக்க முடியும். வேறு பல நாடுகளிலே நடந்த விடுதலைக் கிளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியைப் போல வெற்றி பெற்றிருக்க முடியும்.
குழுவுக்குள் ஏற்பட்ட மோதல்
போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே, போராளிகளுக்குள் போராடுவது என்ற இந்த போராளிகளுக்குள்ளே நடந்த போராட்டம் தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலே அவர்களுக்காக பரிந்துரை செய்து பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான், இடைக்காலத்திலே நாம் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை, `சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள்' என்பதுதான்.
அந்தப் போராளிக் குழு, ஒரே போராளிக் குழுவாக இருந்து ஒரே ஒற்றுமையோடு இலங்கையிலே நடைபெறுகின்ற அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும்; தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே செயல்பட்டதா என்றால் எதுவும் இல்லை. ஒரு குழுவை இன்னொரு குழு வீழ்த்த வேண்டும்; ஒரு குழுவை இன்னொரு குழு மாய்க்க வேண்டும்; ஒரு குழுவுக்கு செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற முறையிலே தான் ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் அங்கே கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்து விடக் கூடாது. அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? ம.பொ.சிவஞானம் போல விளங்கியவர். அவர் ஏன் கொல்லப்பட்டார்?
பலவீனப்படுத்திய ஒற்றுமையின்மை
இப்படி பல போராளிகள் அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டு, சுட்டுக் கொண்டு செத்திருக்கிறார்கள். இவைகளெல்லாம்தான் இந்தப் போராட்டத்தை பலகீனப்படுத்தியது. இத்தகைய விடுதலைப் போராட்டம் உலகத்திலே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்போது இந்த சின்னஞ்சிறு நாடு இலங்கையிலே வலுவிழந்ததற்குக் காரணம் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாதது தான். நாம் வலுவிழந்து போய் பகைவர்களுக்கு இடம் கொடுத்து விட்டோம்.
சிங்கள ராணுவம் இன்றைக்கு நம்மை ஏறி மேய்கிறது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் அதற்காக, நம்முடைய வீட்டுப் பிள்ளை கிணற்றோரத்திற்கு சென்று அதிலே விழுந்து விடுகின்ற நிலை வரும் போது அதைத் தாங்கிப் பிடிக்கின்ற அந்தத் தாய் உள்ளமாக, தமிழர்களுடைய உள்ளமாக, தமிழ்நாட்டிலே வாழ்கின்றவர்களின் உள்ளமாக இருக்கின்ற காரணத்தினால்தான், தொப்புள்கொடி உறவு உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டுமென்று ஜி.கே.மணி எண்ணினார். நானும் அதை ஆதரிக்கிறேன். அதே நிலையிலே கண்ணப்பன் ஆதரித்தால் நானும் அவ்வாறே ஆதரிக்கிறேன்.
மத்திய அரசை குறை கூறாதீர்
ஆனால், இதிலே இந்திய அரசை குறை கூறிப் பயனில்லை. அவர்கள் ஏற்கனவே பெரும் இழப்புக்கு ஆளானவர்கள். அவர்களுடைய பெருந்தலைவர் ராஜீவ்காந்தியை இந்தக் காரணத்திற்காக இழந்தவர்கள். அவர்களை நாம் பழி சொல்லியோ குறை கூறியோ பயனில்லை. இருந்தாலும், அந்தக் குடும்பத்திலே இன்னமும் அந்த மனித நேயம் உண்டு என்பதை சமீப காலத்து செய்திகளெல்லாம் நமக்கு விளக்குகின்றன.
அது வேலூர் சிறைச்சாலை செய்தியாக இருந்தாலும் சரி. அல்லது அன்றைக்கு சோனியாகாந்தி மன்னிப்பு கொடுத்த செய்தியாக இருந்தாலும் சரி. அந்த அம்மையார் தூக்கிலிடப்பட்டால் அவரின் குழந்தை என்ன கதி ஆவது என்று சிந்தித்தார் என்ற செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அவர்களிடத்திலே மனித நேயம் குடி கொண்டிருப்பதைக் காண்கிறோம். அந்த மனித நேயத்தின் அடிப்படையில், நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை எண்ணிப் பார்ப்பார்கள். அங்கே வாழ்கின்ற தமிழர்களுடைய உயிர்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
தீர்மானம்
``இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்'' என வலியுறுத்துகின்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். நீங்கள் அதை ஆதரித்துத் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏகமனதாக நிறைவேற்றம்
அதைத் தொடர்ந்து சுதர்சனம், ஜி.கே.மணி, கண்ணப்பன் ஆகியோர் இந்த தீர்மானத்தை முழுமனதோடு ஆதரிப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த அந்த தீர்மானம் ஏகமனதாக சட்டசபையில் நிறைவேறியது.
நன்றி: தினத்தந்தி.