தனது பணக்கார காதலியுடன் புத்தாண்டை ஐந்துநட்சத்திர விடுதியில் கொண்டாடுவதற்கு 40,000 ரூபாய்க்கென (S$ 1111.11) தாறுமாறாய் அலையும் (பணக்காரன்போல நடிக்கும்) ஒரு இளைஞனின் கதை, கொடுக்கவேண்டிய வட்டி மற்றும் அசல் என அதே 40,000 ரூபாய்க்கு தனது ஒரே மகனை படிப்பை நிறுத்திவிட்டு கூலித்தொழிலாளியாய் கடன்கொடுத்தவர் அமர்த்திக்கொள்ள, அந்த பணத்தை எப்படியாவது கொடுத்து தனது மகனை மீட்டு படிக்கவைக்கவேண்டும் என்று கணவனை இழந்த ஒரு கிராமத்து எழைத்தாயும் அவரது வயதான மாமனாரும் படும் போராட்டக்கதை, ஒரு இந்துமத ஊர்வலத்தில் எதேச்சையாய் மாட்டிக்கொண்டு, சந்தேகக் கண்ணுடன் அவமானப்படுத்தப்பட்டதால் திசை திரும்பிப்போன தனது தம்பியைத் தேடும் ஒரு அப்பாவி முஸ்லீமின் கதை, தனக்குப் பிடித்த இசையில் தான் கண்டிப்பாய் வெல்வேன் என தன்னம்பிக்கையுடன் இருக்கும் சகமனித உணர்வுகள் குறித்த புரிதலற்ற ஒரு நவீன கலாச்சாரத்து மேல்தர இளைஞனின் கதை, தன்னை வைத்து சம்பாதித்தது போதும் தானே தன்னுடைய திருநங்கைத்தோழியுடன் சேர்ந்து தனியே தொழில் தொடங்கி கொஞ்சம் காசு சேர்க்கலாம் என்ற நினைப்பில் தனியே கிளம்பும் ஒரு உடல்வணிகப்பெண்ணின் கதை என ஐந்து சிறுகதைகளை ஒன்றாய் நேர்க்கோட்டில் செதுக்கியிருக்கிறது இந்த வானம்.
உண்மையைச் சொல்லப்போனால் தனித்தனிப் படமாய் இயக்கும் அளவுக்கு வீறுகொண்ட கதைக்களனும் செறிவும் கொண்ட விதைகள் இக்கதைகள். சிம்புவின் பகுதியைத் தவிர மற்ற நான்கு கதைகளும் நெஞ்சை உலுக்குகின்றன.
ஐந்து கதைகளில் ஒன்றுதானே என்று எந்த கதையிலும் இயக்குனர் சமரசம் கொள்ளாமல் எல்லாக் கதைகளின் முக்கிய கதாபாத்திரங்களையும் பொருத்தமானவர்களாய்த் தேர்ந்தெடுத்து போட்டிருப்பதே கதையின் வீச்சை நமக்குள் ஊடுருவிக் கொண்டுசெல்கின்றன.
சரண்யா, பிரகாஷ்ராஜ் போன்ற ’டாப் ஸ்டூடன்ஸ்’களை விட்டுவிட்டாலும் அனுஷ்கா, அவருடைய தோழியாக வரும் திருநங்கை, பரத், அவரின் காதலியாக வரும் ‘பசங்க’ படத்தில் வந்த ’சோபிக்கண்ணு’ வேதா (நம்பவே முடியவில்லை, நல்ல நடிப்பும் தேர்வும்) என அனைவரும் நடிப்பில் தேர்ந்து செய்திருக்கிறார்கள்.
ஒரு காட்சியில் மட்டுமே வரும் ராதாரவி, பசங்க ஜெயபிரகாஷ், டாக்டராக வரும் இன்னொரு நடிகர், ’நல்லா வெச்சு காப்பாத்துறேன்’ புகழ் பிரமானந்தம், பிரகாஷ்ராஜின் மனைவியாக வரும் சோனியா அகர்வால், கிட்னி புரோக்கராய் வரும் இருவர்கள் என ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ஒவ்வொரு கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் முழுமையான ஒன்றுதலுடன் படத்தை முன்னிறுத்தியிருக்கிறார்கள்.
நடிகர்களில் ஒரே ஒரு திருஷ்டியாய் சிம்பு. வேறு ஏதாவது ஒரு புது இளைஞனைப் போட்டிருந்தால் கூட இவரது கதைப்பகுதி இன்னும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் இருந்திருக்குமோ என்னவோ! ”என்ன வாழ்க்கையிடா இது..”என்று அவர் நம்மைப் (கேமிராவைப்) பார்த்துச் சொல்வது ’என்னப்பா செய்யிறது, உங்கப்பா டிரவுஸர் அவுத்த நேரம் அப்படி’ என்று சொல்லத்தோன்றும் அளவுக்கு எரிச்சல் வரச்செய்கிறது. அதுவும் இறுதி நேரத்தில் கூட அவர் அப்படி பேசுவது “ஓகே சார்.. ஷாட் ரெடி..ஆக்ஷன்” என்று டைரக்டர் சொல்வது போல நமது காதில் கேட்கிறது, அந்த அளவுக்குச் செயற்கைத்தனம்.
கூட, ’நயன் தாரா பேட்டி இருக்காம்பா டிவில, கண்டிப்பா பாக்கணும்’ என்பன போன்ற ’கொழுப்பு’களும் சிம்புவுக்குக் கூலி கொடுக்கும். (தனுஷப்பார்த்து கொஞ்சமாவது திருந்துங்க சார். அழுவுறது மட்டுமே நடிப்புன்னா, கமலுக்கு இந்நேரம் 50 தேசியவிருது கிடைச்சிருக்கணும்!!!)
வட்டிக்குக்கொடுத்தவன் பள்ளிக்கூடத்தில் வந்து குழந்தையை இழுத்துச்செல்லும்போது கையாளாகாத தனத்துடன் நிற்கும் ஆசிரியரில் இருந்து, ’நாங்க அவங்க இல்லையா.. ’என்று ஒரு முஸ்லீம் அப்பாவி, போலீஸ் அதிகாரியிடம் மன்றாடுவது வரை சமுதாயத்தின் விழுதுகளைத் துளிர்க்கச்செய்கிற காட்சிகள் அதிகம்.
40,000 ரூபாயில் ஒரு குடும்பத்தின் தலைமுறையும் கல்வியும் எதிர்காலமும் நாட்டமுடியுமென்கிற அவல நிலையில் ஒரு குடியானவன் இருக்கின்ற வாழ்க்கைச் சூழ்நிலையையும் அதே 40,000 ரூபாய்க்கு ஒரு இரவு புத்தாண்டுக்கொண்டாட்டத்தை அனுபவிக்கலாம் என்கிற அளவுக்கு சமுதாயத்தின் இரு நீண்ட அகன்ற பொருளாதார விளைவுகளையும் வேறுபாடுகளையும் ஒரே கோட்டில் நிறுத்தியிருப்பதிலும், ஒரு பெண் என்ன கொடுத்து உயிருக்குப் போராடும் தன் தோழியை காப்பாற்றுவாள், நகை, பணம் என்பதையெல்லாம் தாண்டி “விலைமாதாய்” இருந்தாலும் அவளாய் ’கொடுக்கும் அளவுக்கு” ”அவளுக்கென்று ஒரு கற்பு இருக்கிறது அவளிடம்” என்பதைக் காட்டும் இடத்திலும், தான் அவமானப்படுத்தியவனே தன்னைக் காப்பாற்றுவதை ஒரு புதிய புரிதலாக எடுத்துக்கொள்ளும் நவீன இளைஞனின் புன்னகைத்தலிலும் என, இயக்குனரைப் பாராட்ட வார்த்தைகளில்லை.
ஆண்கள் – பெண்கள் கழிப்பறையைப் பார்த்துவிட்டு எங்களுக்குன்னு ஒண்ணு இல்லை , எந்தப்பக்கம் போறது என திருநங்கை, சலனமற்று கூறும் உடல்மொழியில் சில சிரிப்புகளும் எனது பின்னிருக்கையில் கேட்கத்தான் செய்தன. காலமே மாற்றும்.
கத்திமேல் நடக்கும் இஸ்லாம் தீவிரவாதத்திலும் ஒரு நெகிழ்ச்சியான உணர்வை படம் தரத்தவரவில்லை, இறுதிக்காட்சிகளைத் தவிர! இறுதிக்காட்சிகள் ஆஹாஓஹோவெல்லாம் இல்லை!
ரயிலில், போலீஸ் ஸ்டேஷனில் என படம் ஓரிரு இடத்தில் ஒன்றாகும்போது கமல்ஹாசன் ஞாபகம் வருகிறது. (யாரிடம் சொல்லாதீர்கள், நல்லவேளை கமல் இக்கதையைக் கேட்டிருந்தால் நானே எல்லாக் கேரக்டரிலும் நடிக்கிறேன் என்று சொல்லி 20 வேடங்களிலும் நடித்திருப்பார் என படம் பார்க்கும்போதே நினைத்தேன்... நானும் கமல்ரசிகன் தானாக்கும்!)
காசு பற்றிய ஒரு பாடலும் உடல்வணிகம் பற்றிய இன்னொரு பாடலும் கதைக்கேற்று சிறப்பிக்கின்றன. ’எவண்டி உன்னைப் பெத்தான் அவன் கையில கெடைச்சான் செத்தான்’ – கலக்குங்க சிம்பு!
இத்தகைய ஒரு பெரியவரிடமிருந்து காசைத் திருட மனம் வருவது அதுவும் அந்தப்பெண்ணுக்காய் என்பது கொஞ்சம் அதீத உணர்வோ என்று தோன்றியது, கஞ்சா, போதை வாலிபர்கள் தவிர! சிம்புவின் திருந்தும் இடம் தவிர (அதுவும் ஓவர் ஆக்டிங்!) அவருடைய வேறு எந்த கதைப்பகுதியும் நெஞ்சுக்கு நெருக்கத்தில் வரவில்லை.
சந்தானம் கலாய்க்கிறார்.
என்ன..லா...படம் எடுக்குறான், கதையப் போட்டு ’ரோஜாக்’ பண்ணி வெச்சிருக்கான் என்று ஒரு நண்பர் சிலாகித்துக்கொண்டார்.
சொல்லாத முடிவுகளே கணமிகுந்தவை. மூட்டைப்பூச்சிகளாய், அட்டைப்பூச்சிகளாய், கண்ணுக்குத்தெரியாத சமுதாயப் புற்றுநோய்களாய் அடுத்தவர் வாழ்வை உறிஞ்சும் கிட்னி புரோக்கர்களும், ஏமாற்றுப்போலீஸ்காரர்களும், வட்டிக்காரர்களும், பெண்ணுடல் வியாபாரிகளும் புரோக்கர்களும் என்ன ஆவார்கள் என்பதை யாரும் சொல்லவில்லை. இந்த வானமும் சொல்லவில்லை; ஆனால் அந்த ’வானம்’ பார்த்துக்கொண்டிருக்கிறது.
வானம் – அத்தனைக்கும் ஒரே சாட்சி!
எம்.கே.குமார்.