Thursday, June 13, 2019

நா. கோவிந்தசாமி அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவுவிழா 26-05-2019

அமரர் நா. கோவிந்தசாமி அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவுவிழா கடந்த மே 26 அன்று மாலை 4மணி முதல் 6மணி வரை நூலகத்தின் The POD அரங்கில் நடைபெற்றது. சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக்கழகத்தின் திரு. அருண்மகிழ்நன்  உள்ளிட்ட நாகோவின் செயல்பாடுகளை நீண்ட நாளாக வியப்பவர்கள் சிலரின் முயற்சியால், சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய தமிழ்ச்சேவைப்பிரிவும் சிங்கப்பூர் வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய விழா, நா.கோ அவர்கள் ஒரு எழுத்தாளராய், ஒரு கல்வியாளராய், ஒரு இணையத்தொழிற்நுட்பராய் சாதித்தவைகளை பலரின் நினைவுக்குக் கொண்டுவந்தது.


மௌனவாசிப்பு என்பது கற்கும் குழந்தைகளுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும், சத்தமாக வாசிக்கும் பழமையான கற்றல்-கற்பித்தல் முறைகளில் மாணவர்-ஆசிரியர் பங்கீடுகளின் நுட்பத்தையும், ஆழ்ந்த வாசிப்பின் முன் அல்லது பின் நிகழவேண்டிய முறைகள் குறித்தும் நா.கோ ஆய்வுகொண்டிருந்த கருத்துமுறைகள் தன்னை எவ்வாறு மேம்படுத்தின என்றும் சிங்கப்பூர் கல்வி கற்பித்தல் முறைகளில் ஆரம்பகால கட்டத்தில் ஒரு கல்வியாளராய் நா.கோ எத்தகைய தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டார் என்றும் பகிர்ந்துகொண்டார் தேசிய கல்விக்கழக தமிழ்த்துறை துணைத்தலைவர் திருமதி சீதாலட்சுமி அவர்கள்.

ஒரு இலக்கியவாதியாய் நாகோவின் பங்களிப்பைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர், பத்திரிகையாளர் கனகலதா அவர்கள். தீவிர தமிழிலக்கியப் பரிச்சயங்களையும் அது சார்ந்த வாசிப்பையும் விமர்சனத்தையும் முன்னெடுத்துச்சென்ற நா.கோவின் பணியை முக்கியமாகக் குறிப்பிட்டார் அவர். சிங்கப்பூரின் மூத்த முக்கிய எழுத்தாளர்களுடைய நூல்களை மீண்டும் பதிப்பிக்க தன்னுடைய ஆர்கிட், கணியன் பதிப்பகங்கள்மூலம் நா.கோ முன்னின்றிருக்கிறார். மற்றவர்களின் படைப்புகளுக்கு தான் அளிக்கும் விமர்சனத்திலும் 'நல்லா இருக்கு, நல்லா இல்லை என்பதைத்தாண்டி இவற்றையெல்லம் வாசியுங்கள்' என்று ஒரு படைப்பைத்தாண்டிய விமர்சனத்தை அப்போதைய படைப்பாளிகள்மீது நிறுத்தியிருக்கிறார். எத்தகைய முரண்பாடுகள் வந்தாலும் தன்னுடைய தேர்வின்மீதும் கருத்துகள்மீதும் உறுதியாய் நின்றிருக்கிறார்.  கொஞ்சமே எழுதியிருந்தாலும் தன் படைப்புகளில் தன்னையே முன்வைத்திருக்கிறார், கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார். ஒரு எழுத்தாளனாய் தன் படைப்புகளின் வழி நவீன சிந்தனைப்போக்குக்கு வழிகோலியிருக்கிறார். அவர் இல்லாத இந்த இருபது வருடங்களில் இங்கு நிகழ்ந்ததென்ன, இன்னும் இருபது வருடங்கள் நம்மிடையே அவர் இருந்திருந்தால் சிங்கப்பூரில் தமிழிலக்கியம் என்பதெல்லாம் பெரும்இலக்கியத்தேடல் அனுபவமாய் நிகழ்ந்திருக்கும். இனிமேல் அதன்தொடர்ச்சியைக் கொண்டுசெல்வதே அவருக்கு சிங்கப்பூர் தமிழிலக்கியம் செய்யும் பெருந்தொண்டு என்பனகுறித்து தம் கருத்துகளைப் பகிர்ந்தார் லதா.

கணினி தொழில்நுட்பத்தில் நாகோவுடன் பணிபுரிந்த, டாக்டர் டான் டின் வீ அவர்கள், தானும் நா.கோவும் நான்கு ஆண்டுகள்தான் ஒன்றாகப் பணிபுரிந்தோம் என்பதே பெரும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஏனெனில் செய்துமுடித்த பணிகள் அவ்வளவு. சிங்கப்பூரில் கணினியில் ஆங்கில, சீன, மலாய் மொழியுருக்களைக் கொண்டுவரும்போது தமிழுக்கு அத்தகைய பங்களிக்க, யாரால் தமக்கு உதவ இயலும் என்று விசாரித்தபொழுது நா.கோவை அறிமுகப்படுத்தியதும் அவருடைய அயராத முயற்சிகளில் தமிழ் எழுத்துரு எவ்வாறு முதலில் சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவமொழிகளில் ஒன்றாகக் கணினியில் வந்தது என்பதையும் சொல்லி ஆச்சரியப்படுத்திக்கொண்டேயிருந்தார். கணியன் பூங்குன்றனாரின் பொன்மொழியையும் பகிர்ந்துகொண்ட அவர், தான் முற்பிறப்பில் தமிழனாய் பிறந்திருப்பேனோ என்ற நண்பர்களின் கிண்டலையும் ரசித்தார்.

1985இல் கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழ்மாநாடு ஒன்றில் நா.கோவுடன் அறிமுகம் ஆனதுமுதல் கணியன் எழுத்துரு உருவாக்கம்பெற்ற கதை, நா.கோவிற்கும் தனக்கும் உருவான மாற்றுப்பாதைகள் என இப்போது எளிதாய்த்தோன்றும் தமிழ் எழுத்துருகளின் பாதையில், ஆனால் ஆரம்ப ஆராய்ச்சிகளின் தடுமாற்றமும் தவிப்பும் கவனிப்பும் ஆர்வமும் கொண்ட நாகோவும் அவரும் இணைந்த இணையத்தமிழ் வரலாற்றை நேர்மையாக விவரித்தார் கணினி யுகத்தின் தமிழ் எழுத்துரு பிதாமகர்களில் ஒருவரான ’முரசு அஞ்சல்’ முத்து நெடுமாறன் அவர்கள்.

”தி சிராங்கூன் டைம்ஸ்” இதழின் 2019 மே மாத இதழை நா.கோ சிறப்பிதழாக சிராங்கூன் டைம்ஸ் நிறுவனர் திரு முஸ்தபா அவர்கள் வெளியிட நா.கோ அவர்களின் மனைவி  உஷா -  மகன் இசக்கியல் கீரன்  பெற்றுக்கொண்டார்கள். நா.கோ சிறப்பிதழில், லதாவின் நேர்காணல், ஜெயமோகன் எழுதிய நா.கோ குறித்த கட்டுரை மற்றும் நா.கோவின் அழகிய நினைவுகளைக்கூறும் பல படைப்புகளும் புகைப்படங்களும் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.


கலந்துரையாடலை வழிநடத்திய திரு அருண்மகிழ்நன், நா.கோவிற்குப்பிறகு, மலேஷியாவில் முத்து நெடுமாறனைப்போல தமிழுக்கென முன்நிற்கும் கணினி விற்பன்னர் எவரையும் சிங்கப்பூர் முகிழ்த்திராதது பெரும்குறை என்றார். கல்விப்பின்புலத்தில் நா.கோ வின் பெயரால் விருது அமைப்பு பற்றியும் மென்பொருள் ஆய்வுக்கென நிதி அமைப்பு  ஏற்படுத்துவது குறித்தும் கருத்தாடல்கள் வந்தன.



நன்றியுரை வழங்கிய வாசகர் வட்டத்தின் செயலாளரும், சிராங்கூன் டைம்ஸ் பொறுப்பாசிரியருமான திரு ஷாநவாஸ், கோ.சாரங்கபாணியின் பெயரில் ஒரு தமிழ் அறகக்ட்டளையை நிறுவி தஞ்சைத்தமிழ்பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர், மலேஷிய, இலங்கைப் படைப்புகளுக்கு விருதுவழங்கிவருபவரும், இதுவரை வந்துள்ள ஏறக்குறைய 44 மாத இதழ்களுக்கு ஒரு இலட்சம் வெள்ளிக்குமேல் நன்கொடை அளித்து தொடர்ந்துநடத்திவருபவருமான முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் திரு முஸ்தபா அவர்கள், நா.கோவின் பெயர் எந்நாளும் நிலைத்திருக்கும்பொருட்டு வருடாந்திர இலக்கிய விருதுஒன்றுக்கும் ஆவணசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வாசகர் வட்டம் இணைந்துநிற்கும்.



2015 ஆகஸ்டு மாதம் தி சிராங்கூன் டைம்ஸ் இதழை நிறுவனர் மீண்டும் ஆரம்பிக்க, பொறுப்பாசிரியராக ஷானவாஸ் இருக்க, நானும் தோழி பாரதி மூர்த்தியப்பனும் இணையாசிரியர்களாக இருந்தோம். இதுவரை வந்த சிங்கப்பூர் படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்த புனைவுகளை மீண்டும் பதிப்பித்து முதழ் இதழை ஆரம்பிக்கலாம் என்று திட்டம் போட்டோம். அந்த வகையில் இதுவரை வந்த கவிதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப்போட்டு பிறகு சிறுகதைக்கென நாங்கள் எடுத்துக்கொண்டது நா.கோவிந்தசாமியின் ’ஒரு ஆன்மாவின் திரை அகற்றப்படுகிறது’ சிறுகதையை. அவருடைய புத்தகத்தில் இருந்து நானே அதைத்தட்டச்சிட்டேன். தன்னையே புனைவாக முன்வைக்கும் நவீன இலக்கியத்தின் வடிவம்கொண்ட அச்சிறுகதை வாசிப்பவரைக் கேள்விகேட்டுகொண்டேயிருக்கும். எனக்குப்பிடித்த சிங்கப்பூர் புனைவாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக நா.கோவைச்சொல்வேன்.

இரவில் தடுமாறி அலைந்துகொண்டிருக்கும் ஒருவனுக்கு ஒரு விளக்கை ஏற்றுவதுபோல தம்படைப்புகளினுடையே அலைந்துகொண்டிருந்த ஆர்வமுள்ள சகசிங்கப்பூர் படைப்பாளிகளுக்கு அவர் நல்ல இலக்கியப்படைப்புகளையும், காலச்சுவடு போன்ற இதழ்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். அந்தத்தொடர்ச்சி அப்போதிருந்த சக படைப்பாளிகள், ஆசிரியர்கள் என அவருடைய நண்பர்கள் என எல்லோரிடமும் பரவியிருக்கக் காரணமாயிருந்திருக்கிறார். மூத்த முக்கிய படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய படைப்பை மீள்வாசிப்புருவாக்கம் செய்யும் (ஏறக்குறைய விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பின் அரும்பணிக்கு இணையான) செயலையும் நா.கோ அப்போதே சிங்கப்பூரில் முன்னெடுத்திருக்கிறார்.

இணையத்தொழிற்நுட்பர்கள் பலரும் இப்போது மாரடைப்பு உள்ளிட்டவைகளால் அகால மரணம் அடையும்செய்திகேட்டு அதிர்ச்சியுறும்பொழுதில் முதன்முதலில் தமிழைக் கணினியில் புகுத்தியதும் அவர்தான், தமிழ்க்கணினி தொழிற்நுட்பர்களில் முதன்முதலில் மாரடைப்பு ஏற்பட்டதும் அவருக்குத்தான் என்று நினைக்கத்தோன்றுகிறது.

சிறுவயதில் தன் தாயை இழந்து, உடலுழைப்பாளியான தன் தந்தையால் தன்னை சரிவரக் கவனிக்கமுடியாததால் இந்தியாவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து, மீண்டும் சிங்கப்பூர் வந்து பள்ளிகளில் சேர்ந்து படித்து, தன் வாழ்க்கையில் நா.கோ சாதித்தவை என்பது எவருக்கும் ஒரு எளிய பாடம்.

அசாத்திய வேலைவேகம், திட்டமிட்ட நிகரபாய்ச்சல்கள், சரியான எதையும் எவருக்கும் பின்வாங்காத தன்மை, செலுத்ததத்தவறாத கோபங்களும்கொண்ட இலட்சியமனிதராக விளங்கியும்,
அதிகபட்ச தீவிர தமிழ் இலக்கிய பரிச்சயங்களையும் அது சார்ந்த வாசிப்பையும் விமர்சனத்தையும் முன்னெடுத்துச்சென்ற பணியே அவருடைய முதன்மையான பணி என அவரைப் பெருமைப்படுத்தலாம்.


முதன்முதலில் சிங்கப்பூர் தமிழ் இணையத்தில் தமிழ் எழுத்துரு புகுத்தும் வேலையில் அவர் சிங்கப்பூர் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார். அவருடைய ஒரு தேர்வு ”அந்த மஞ்சள் கோட்டைத்தாண்டாதீர்கள்” என்ற திரு க. இளங்கோவன் எழுதிய கவிதை. இருபது வருடங்களுக்கு முன்பே அவர் அக்கவிதையைத் தேர்ந்தெடுத்தது குறித்து நான் இப்போதும் விழிப்புறுகிறேன். இன்னும் நா.கோ தாண்டியிருக்கவேண்டிய மஞ்சள்கோடுகள் காத்திருக்கின்றன. அவரைத்தான் காணோம்!

எம்.கே.குமார்

Search This Blog