Wednesday, September 15, 2004

திருந்துங்கள் தந்தைகளே!

கடந்த ஒரு வார காலத்தில் நான் படிக்கும் இரண்டாவது செய்தி இது. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது பெண்ணின் தலையை வெட்டிய தந்தையர்கள். காரணம் என்ன பெரிதாய் இருக்கப்போகிறது? வேற்று ஜாதிகள். வேறு உறவுமுறைகள்.
கம்ப்யூட்டரில் பார்த்து கம்ப்யூட்டர் வழியே பேசி கண்டம் விட்டு கண்டம் தாண்டியெல்லாம் திருமணம் நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இன்னும் காதலுக்குப் பகைவர்களாய் இருந்துகொண்டிருக்கும் இவர்களை நினைத்தால் அய்யோ பாவம் என்றும் அவர்கள் செய்யும் செயலை நினைத்தால் ஆத்திரமும் கோபமும் வருகிறது.
அண்மையில் சென்னை விமான நிலையத்தில் ஒரு காட்சி என்னைக் கொஞ்சம் சுவாரஸ்மாக்கியது. ஐரோப்பிய தேசத்துப்பெண் டார்க்புளூ ஜீன்ஸ¤ம் வெளிர் ஊதா டிஷர்ட்டும் போட்டுகொண்டு மலங்க மலங்க விழித்துக்கொண்டிருக்கிறார். மலங்க மலங்க விழித்தலில் பயமோ அல்லது வேறு எந்த நடுநடுக்கமோ இல்லை. பார்க்கும் எல்லோரிடமும் சின்ன வாஞ்சையோடு அல்லது எதிர்பார்க்கும் உறவுப் பாளமான சிறிய புன்னகையோடும் நிற்கிறார். அருகில் நின்றிருக்கும் வாலிபர் முகத்தில் 'ஹாலிவுட் படத்தை டைரக்ட் செய்யும் பொறுப்பு' வந்துவிட்டதைப்போன்று முதிர்வு. புன்னகையை எதிர்பார்த்துக்காத்திருக்கும் அவருக்கு அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாக நானும் ஒரு மெல்லிய புன்னகையை நழுவி விட்டுச் செல்கிறேன். அவருக்குப் பெருமை. தனது கணவரின் முகத்தைப் பார்த்துவிட்டு டார்க்புளூ டி ஷர்ட்டுக்கு மேலே தொங்கும் மஞ்சள் நிறத்தாலியை விரல்களால் இதமாகத் தடவிக்கொள்கிறார். ஆஹா!
மேல்தட்டு மக்கள். வாழ்க்கையில் எது முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டவர்கள். இச்சமுதாயத்தின் வாய்ப்பூச்சுகளுக்கும் வாய்ப்பேச்சுகளுக்கும் 'ஸீயு' என்ற ஒற்றை வார்த்தையைப் பதிலாக்கி விட்டுச்செல்பவர்கள். வெளிநாடுகளில் இருந்து வரும்பொழுது ஏதும் வாங்கிவராவிட்டாலும் வாங்கி வந்தாலும் ஏதாவது குறை சொல்லும் இவர்களைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத்தொ¢ந்திருக்கிறதன் விளைவே இந்த ஜஸ்ட் ஸீயூ.
சாராயக்கடையின் நேற்றைய பாக்கியை ஓடிப்போன மகளின் வழி சொல்லிக்கேட்டிருப்பான் சாராயக்கடைக்காரன். அவனை ஒன்றும் செய்யமுடியாது. வீட்டில் வந்து மூளை சாய்ந்த நிலையில் நல்ல பசி மயக்கத்தில் திடுமென்று ஆவேசம் வந்து எழுந்து அரிவாளை எடுத்திருப்பார்கள். பொத்தி பொத்தி வளர்த்த கணங்கள் கண்ணுக்குள் வராது. வயிற்றின் நாளைய கூப்பாடுகளும் தேடுதல் தேவைகளும் அப்போது தோணாது.
வெட்டிய பிறகு அவரது நிலையில் அதிரடி மாற்றங்களோ அல்லது மனசு சமாதானக்கூண்டாகவோ ஆகிவிடாது. அல்லது அவரை அந்நிலைக்குத்தள்ளிய இச்சமுதாயத்தின் வாயிலும் அடப்பாவி என்ற ஆச்சரியக்குறியும் பழிச்சொல்லும் மட்டுமே வந்து நிற்கப்போகிறது. அப்படியிருக்க என்ன காரணத்தினால் இப்படிச்செய்கிறோம் என்பதை அவர்கள் ஒரு நிமிடம் யோசித்தால் போதாதா?
அட, என்னய்யா வேண்டும் உமக்கு? நன்றாய் உமது மகள் வாழவேண்டும் அவ்வளவுதானே? கூப்பிடு. உனது பெண் காதலிக்கும் பையனைக் கூப்பிடு. மனதாரப் பேசு. அவளை வளர்த்த கதையைச்சொல். கஷ்டத்தைச் சொல். உனது தேவையைச் சொல். புரிந்துகொள்கிறானா பார். உனது மகளின் மனதைப் பக்குவப்படுத்து. நிதானமாகப் பேசு. இதிலெல்லாமா உனது மகளிடம் நீ பேசக்கூடாது?
காதல் என்பது என்ன ஐயா? அழகான உணர்வுகளின் நீட்சி இல்லையா? உனது உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமலா இருப்பாள் நீ பதினைந்து வருடங்கள் பொத்திப்பொத்தி வளர்ப்பவள்? காதல் உணர்ச்சி கொண்டவள்? ஜாதி மாறிப்போவதைச் சாடி ஏசும் சமுதாய மாக்களா உனக்குச் சோறு போடப்போகிறார்கள்? உனக்கு நல்லது கெட்டது செய்யப்போகிறார்கள்?
ஒரே ஒரு நிமிட யோசனை எவ்வளவு அழகான வாழ்வை நிர்மாணிக்கிறது பாருங்கள்!
எம்.கே.

1 comment:

எம்.கே.குமார் said...

வாங்க மூர்த்தி. மறுமொழிக்கு நன்றிகள்.

டேட்டிங்க்கில் ஆரம்பிக்கும் காதல் எதுவும் சரியானதாக இருக்காது என்பது என் எண்ணம். உங்கலைப்போலவே எனக்கும் ஒரு ஆசை இருக்கிறது. ஜாதி மாறி மதம் மாறி காதலித்துத் திருமணம் செய்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தங்களது வெற்றிக்கதையைச்சொல்லி படித்த சமூகத்தினரையும் படிக்காதவர்களையும் விழிப்புணர்வுக்கு கொண்டு வரவேண்டும். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது நடக்கும் என்றே நம்புகிறேன்.

எம்.கே.

Search This Blog