கடந்த ஞாயிறு அன்று மாலை 4.30 மணிக்கு சிங்கப்பூரின் உட்லாண்ட்ஸ் நூலக கலையரங்கில், மலேசியாவின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் பல்வேறு படைப்புத்தளங்களின் வழியாக இலக்கிய உலகில் அரும்பணி ஆற்றிவரும் அறுபது வயது இளைஞருமாகிய டாக்டர். ரெ.கார்த்திகேசு அவர்களுடைய இரு புத்தகங்கள் வெளியீட்டு விழாவும் மற்றும் வாசக எழுத்தாளர்களுடான ரெ.கா அவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை திருமதி. ரமா சங்கரன் கவனித்துக்கொள்ள, சிங்கை முரசு மற்றும் சிங்கை கலை இலக்கிய குழுவின் அங்கத்தினர்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க, தேசிய நூலக வாரியம் விழாவை நடத்த உதவியது.
கூட்டத்தில் சிங்கப்பூரின் பிரபலங்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில், திருமதி .ரெ.கார்த்திகேசு அவர்களைத்தவிர, 'உத்தமம்' அமைப்பின் தலைவர் திரு. அருண் மகிழ்நன், அவரது சகோதரியும் மலாய பல்கலைக்கழக பேராசிரியையுமாகிய திருமதி. முல்லை அவர்கள், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சுப. திண்ணப்பன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தலைவர் கவிஞரேறு அமலதாஸ், முதுபெரும் 'ஆசியான்' கவிஞர் திரு. க.து.மு. இக்பால், முரசு நிறுவனர் திரு. முத்து நெடுமாறன், விகடன் புகழ் ஜே.எம்.சாலி, தேசிய பல்கலைக்கழக ஆய்வலர் திரு. இராம. கண்ணபிரான், தேசிய நூலக வாரிய தலைவர் திருமதி. புஷ்பா, வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி அமைப்பாளர் திரு. பாஸ்கரன், சிங்கப்பூர் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவரான திரு. இந்திரஜித், எழுத்தாளரும் கவிஞருமான திரு. ரெ.பாண்டியன், மானசஸென் ரமேஷ், ஒலி 96.8ன் மீனாட்சி சபாபதி, நடன ஆசிரியை அருண் பிரியலதா அவர்கள், திரு ரமேஷ், திருமதி சித்ரா ரமேஷ், திருமதி ஜெயந்தி சங்கரி, திருவாளர்கள் பாலு மணிமாறன், பனசை நடராஜன், மூர்த்தி, அருள் குமரன், 'குழலி' வலைப்பூவின் புருஷோத்தமன், திரு. சாந்தன் என ஏராளமானோரும் இன்னும் தமிழாசிரியர்கள் மற்றும் வாசக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதோடு வரவேற்புரையையும் நிகழ்த்தினார் நண்பர் ஈழநாதன். வரவேற்புரையைத் தொடர்ந்து ரெ.கார்த்திகேசு அவர்களின் 'விமர்சன முகம்' கட்டுரைத்தொகுப்பும் 'ஊசியிலை காடுகள்' சிறுகதைத்தொகுப்பும் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து ரெ.கா அவர்களது படைப்புளைப்பற்றிய தனது கருத்துகளைச் சொல்ல வந்தார் நண்பர் திரு. அருள்குமரன். 'சூரியனுக்கு டார்ச் அடிக்கும் சுண்டெலியாய்' தன்னை உருவகப்படுத்திக்கொண்ட அவர், ரெ.காவின் அறிவியல் புனைகதைப்பற்றியும் சொன்னார். ஏதோ ஒரு கதையில், 'ஏனய்யா அவரைக்கொன்றுவிட்டீர்கள்' என்று கண்ணீர் மல்காத குறையாக வருத்தம் தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து வந்தார் அறுபது வயது இளைஞர் திரு. அருண் மகிழ்நன். ரெ.காவின் நெருங்கிய நண்பரான இவரைப் பேச வைப்பதற்கு பின்னிருக்கும் காரணமாய், ஈழநாதன், "ரெ.காவின் படைப்புகளைப் பற்றிப் பேச எல்லோரும் இருக்கிறார்கள், ரெ.காவைப்பற்றிப்பேச அவரது நண்பரான நீங்கள் தான் சிறந்தவர்" என்று சொல்லி அப்படியே திருமதி. முல்லை அவர்களையும் பேசவைத்தார். 'எழுத்தை மட்டும் படித்துவிட்டு அப்படியே விட்டுவிட வேண்டிய எழுத்தாளர்களை ஏராளமாய் பார்த்ததாகச்சொல்லிய அருண்மகிழ்நன் அவர்கள், ரெ.கா வை தமது 40 ஆண்டுகால நண்பர்' என்றார். மிகச்சிறந்த மனிதர் என்றும் சொன்னார். அதையே வழி மொழிந்தார்கள் அவரது தங்கையாரும்.
கலந்துரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக இருந்ததால் வாழ்த்துரை மற்ற உரைகளெல்லாம் தவிர்க்கப்பட்டிருந்தன. ஏற்புரைக்கு வந்தார் திரு. ரெ.கா. அவருக்கு மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார் திருமதி சித்ரா ரமேஷ்.
தனது ஏற்புரையில் சிங்கப்பூர் மலேசிய உறவைப் பற்றிக் குறிப்பிட்ட ரெ.கா, மலேசியாவின் தற்போதைய இலக்கியப் போக்கு குறித்தான தனது பார்வையைச் சொன்னார். கலந்துரையாடல் தொடங்கியது.
ஒட்டுமொத்த கலந்துரையாடலிலும் கேட்கப்பட்ட கேள்விகள் ஐந்திலிருந்து ஆறுக்குள் இருக்கலாம். கேள்விகள் மிகப்பெரிய பதில்களுக்குள்ளே புகுந்து கலந்து கொண்டிருந்ததால் எல்லாம் சில குறிப்பிட்ட விஷயங்களுக்குள்ளே சுற்றிச் சுற்றி வந்தன. சிங்கப்பூரின் தற்போதைய இலக்கியப்போக்கு குறித்து அறிந்துகொள்ள விரும்பிய ரெ.காவுக்கு, திரு. அமலதாஸ் அவர்கள் தன்னால் முடிந்தவரை எல்லாம் எடுத்துச்சொன்னார். சுப. திண்ணப்பன் அவர்கள், "மலேசியாவில் தமிழை தமிழர்கள் வளர்க்கிறார்கள், சிங்கப்பூரில் அரசாங்கம் வளர்க்கிறது" என்று சொன்னார்.
சூழ்ந்துகொண்டிருந்த முக்கிய விடயங்கள்:
1. சிங்கப்பூர் அல்லது மலேசிய இலக்கியம் (வரலாறு) என்பது (சொல்வது) என்ன? புலம் பெயர்ந்த படைப்பாளர்களின் படைப்பு இத்தகைய சிப்பிக்குள் அடைபடுமா? அவர்களது படைப்புகள் அந்தந்த வாழும் நாட்டு இலக்கியத்தைச் சேருமா? இல்லை சொந்த நாட்டையா? இல்லை பயணக்கட்டுரை தவிர்த்து சிங்கப்பூரைப் பற்றி கதையோ நாவலோ எழுதியிருந்தால் அது சிங்கப்பூர் இலக்கியத்துக்குள் சேருமா? இல்லையா?அகிலனின் நாவலில் ஆரம்பித்து புயலிலிலே ஒரு தோணி வரை பேச்சு சென்றது. 'சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து எழுதுபவர்களது படைப்புகள் மட்டுமே சிங்கப்பூர் இலக்கியம்' என்று யாரோ ஓரிருவர் சொன்னார்கள்.
2. இணையம் தொடர்பான பேச்சுகள்: நாடு மறைத்து, நாட்டின் எல்லை மறைத்து, மக்களின் பிரிவுகொண்ட மனம் மறைத்து எல்லா இடைவெளிகளையும் எல்லைகளையும் விலக்கி புது இலக்கியம் படைத்துக்கொண்டிருப்பவை இணையத்தமிழ் என்றார் திரு. ரெ.கா. இணையத்தில் இலக்கியத்தரமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன என்றார். அச்சு ஊடகமெல்லாம் ஆடிப்போகும் அளவுக்கு நல்ல படைப்புகளும் ஏராளமான விஷயங்களும் இங்கு இருப்பதாகச்சொன்னார். வருங்கால இணையம் தமிழுக்கு படைக்கப்போகும் நன்கொடை மிகச்சிறப்பாக இருக்கலாம் என்றார். இணைய உறவுகளை நேரில் சந்திக்கும் போது கிடைக்கும் இன்பம் பற்றியும் சொன்னார்.
3. மலேசியாவில் 'காவ்யன்' என்ற தமிழ் எழுத்தாளர்களைக் கொண்ட அமைப்பு, தமிழில் கதைகள் எழுதுவதைக் குறைத்துக்கொண்டு மலாய் மொழியில் நிறைய எழுதுவதாகச் சொல்லி வருத்தப்பட்டார். 'நமது கலாசாரத்தை அவர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் மலாய் மொழியில் எழுதுவது நல்லதுதானே, அதை ஏன் தவறு என்கிறீர்கள்' என்று ஒரு வாசகி கேட்டார்.
4. சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சி (பிறப்பு வளர்ப்பு இணைந்து!)- அதன் திறனாய்வு பற்றிய (அவநம்பிக்கை) கருத்துகள்- தமிழ்முரசு தமிழுக்கு ஒதுக்கும் பக்கம் குறைவது- என இவ்விஷயங்கள் விவாதத்தில் பெரும் பங்கு பெற்றிருக்க, 'சிங்கப்பூரில் இருக்கும் மிக இளைய எழுத்தாளருக்கு வயது 42. அந்தளவுக்கு இங்கு தமிழ் வளர்ச்சி இருக்கிறது.' என்று தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார் ஒரு வாசகர். இக்கேள்விக்குப் பதிலை கவிஞரேறு அமலதாஸ் சொல்லியது பின்வருமாறு இருந்தது. "இதற்குக்காரனம் சமூகம் தானே ஒழிய அரசாங்கம் இல்லை! அரசாங்கம் இதோ இப்போது நடக்கும் போட்டிக்குக் கூட பத்தாயிரம் வெள்ளி கொடுக்க முன்வந்திருக்கிறது!'
இக்கேள்விக்கு சிறு விளக்கமாய் உள்ளே வந்த அருண்மகிழ்நன் அவர்கள், 'ஒரு உரசல் இல்லாமல், எத்தகைய படைப்புமோ இலக்கிய வளர்ச்சியோ நடைபெற வாய்ப்பில்லாது இருக்கலாம்; வாய்ப்புக்குறைவாக இருக்கலாம். ஆனால் பொருளியலிலோ கருத்திலோ, தனிமனித படைப்புகளிலோ ஒரு உரசல் இருக்கும்பொழுது எழுத்தாளர்களும் உருவாகலாம்; படைப்புகளும் உருவாகும்' என்றார்.
5. இணைய இதழ் மற்றும் அச்சு இதழ்களின் தரமும் அதன் இலக்கியப் பங்கும் வெகுவாக விமர்சிக்கப்பட்டன. அடிக்கடி ஜெயமோகன் என்ற வார்த்தையையும் சுந்தர ராமசாமி என்ற வார்த்தையையும் கையாண்டு மேற்கோள் காட்டினார் திரு. ரெ.கா. பின் நவீனத்துவம் சிங்கப்பூருக்கோ மலேசியாவுக்கோ வந்தால் தன்னைப்போன்றவர்களின் பாடு திண்டாட்டமே என்றார் கிண்டலாக. மலேசியாவில் அடுத்த தலைமுறையில் யாரும் குறிப்பிடும்படியான எழுத்தாளர்கள் இல்லை என்பதையும் வருத்தத்தோடு சொன்னார். புதுக்கவிதை மட்டுமே வாழலாம் என்றும் சொன்னார்.
6. அறிவியல் புனைகதைகளைப் பற்றி அளவளாவப் பேசினார் ரெ.கா. அருள்குமரனும் தான் படித்த எல்லாக் கதைகளிலிருந்தும் பல கேள்விகளைக்கேட்டார். அறிவியல் புனைகதை மட்டுமின்றி எல்லா கதை- இலக்கிய வட்டங்களையும் புகுந்து நுழைந்து வந்தார் ரெ.கா.
கூட்டத்தின் முடிவில் திருமதி. புஷ்பா நன்றி சொல்ல, கூட்டம் கலைந்தது. இந்நிகழ்வினை முதன்முறையாக நடத்திய கலை இலக்கிய குழு பற்றி ஒரு முழுமையான அறிமுகத்தை பார்வையாளர்களுக்கு வழங்கினார் ஈழநாதன். கைகோர்த்து செய்ல்படவே இக் 'கலை இலக்கிய குழு' என்பதைத் திட்டவட்டமாக எடுத்துரைத்தார். வலைப்பூ பற்றியும் சொன்னார்.
ஒட்டுமொத்த நிகழ்வின் மழையில் அனுபவமின்மையின் உருவம் சில இடங்களில் நனைந்து வெளிப்பட்டது. பேச வந்த கருத்துகள் அனைத்தும் கடல் போலிருக்க, கட்டு மரத்தைப் பற்றியே கொஞ்சம் அதிகமாக பேசியது போலிருந்தது. சில முக்கியப் 'பிரச்சனை முதலைகள்' தலையை நீட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் கடலுக்குள் புகுந்துகொண்டன. எல்லாம் ஆரம்பிக்கும் முன்பும், முடிந்த பின்பும் 'சுவீட் காரம் கா·பி' வழங்கப்பட்டது.
திரு. ரெ.கா அவர்களைப்பற்றி, அவரது இலக்கியவாழ்க்கை பற்றி, மலேசிய- சிங்கப்பூர் இலக்கியப்போக்கு குறித்தான அவரது பார்வை பற்றி, இணையம் பற்றி, இணையத்தில் அவருடைய படைப்பு பற்றி என விரிவான ஒரு அறிமுகத்துக்கு இச்சந்திப்பு உதவியது என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.
அரங்கத்தின் ஒரு மூலையில் இருந்த அந்த நிழல் கொஞ்சம் சிரித்து, "எக்ஸ்யூஸ் மி சீமான்களே! சீமாட்டிகளே!! நீலகண்ட சாஸ்திரி வந்திருக்கிறார், கொஞ்சம் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்!" என்பது போலிருந்தது எனக்கு! அது பிரமையாகக் கூட இருக்கலாம்!
எம்.கே.குமார்.
(அனைத்தும் நினைவிலிருந்து எழுதியவை! சில கருத்துகளோ வார்த்தைகளோ மாறியிருக்கலாம்!)
நன்றி: திருமதி. ரமா சங்கரன்
தேசிய நூலக வாரியம்
சிங்கை கலை இலக்கிய குழு.
9 comments:
/*சிங்கை முரசு மற்றும் சிங்கை கலை இலக்கிய குழுவின் அங்கத்தினர்கள்*/
இரண்டுமே ஒண்ணுதானுங்களே!
/*'உத்தமம்' அமைப்பின் தலைவர் திரு. அருண் மகிழ்நன்*/
தகவலுக்காக
Mr. Muthu Nedumaran (Kuala Lumpur, Malaysia)
Chair
Dr. K. Kalyanasundaram (Lausanne, Switzerland)
Vice-Chair
Mr. Arun Mahizhnan (Singapore)
Executive Director
நல்ல பதிவு....தாமதமாக வந்த என் மனக்குறையை நிவர்த்தி செய்தது !
குமார், நிகழ்ச்சியை நல்ல கவர் செய்து எழுதியிருக்கிறீர்கள். சிங்கப்பூரில் இருக்கும் மட்டும் ஒரு நிகழ்ச்சியையும் விடக்கூடாது என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு இந்த நிகழ்ச்சியை மிஸ் பண்ணியது பெரிய இழப்பாக இருக்கிறது. சில தவிர்க்க முடியாத முக்கிய அலுவல் காரணமாக ஓரிடத்தில் மாட்ட்டிக் கொண்டுவிட்டேன். அட்லீஸ்ட் லேட்டாவாவது வந்திருக்கலாமோ?
நல்ல விசயங்கள் எல்லாம் சிங்கையில் செய்கின்றீர்கள், நண்பர்களே. வாழ்த்துக்கள். இப்படிப் பதிவுசெய்யும்போதுதான் என்னைப்போன்று தூரத்தில் இருப்பவர்களும் நிறைய விசயங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இணையம் வாழ்க :-).
தகவலுக்கு நன்றி அருள் குமரன்.
பின்னூட்டங்களுக்கு நன்றி பாலுமணிமாறன், மூர்த்தி, அல்வா, டிசே தமிழன்!
விழா அமைதியாக இனிமையாக நடந்துமுடிந்தது.
விஜய், நீங்களும் வந்திருக்கலாம், பாலு மணிமாறன் லேட்டா வந்தார் ஒரு கேள்வி 'நச்சுன்னு' கேட்டார். போய்க்கிட்டே இருந்தார். :-)
எம்.கே
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இதுதான் சிங்கையில் நான் கலந்து கொண்ட முதல் கூட்டம்,இனி வரும் காலங்களிலும் இதுமாதிரியான நிகழ்ச்சிகள் பற்றி இணையதளத்தில் வெளியிடுங்கள், மிக்க உதவியாக இருக்கும், எனது பெயரை ஒரே ஒரு முறை மட்டுமே கேட்டு அதையும் நினைவில்வைத்து எம்.கே.குமார் எழுதியுள்ளார் அது மட்டும் அல்ல //அனைத்தும் நினைவிலிருந்து எழுதியவை! சில கருத்துகளோ வார்த்தைகளோ மாறியிருக்கலாம்!//
கூறியுள்ளாரே தவிர அணைத்தும் மிகச்சரியாக எழுதியுள்ளார் அவரது நினைவாற்றலுக்கு ஒரு பாராட்டு.
கலந்துரையாடல் என் போன்ற புதியவர்களுக்கு நிச்சயமாக உபயோகமாக இருந்தது
நன்றி குழலி.
எல்லாக் கூட்டத்துக்கும் வாருங்கள். சிங்கப்பூர் கலை இலக்கிய யாஹூ குழுமத்திலும் மெம்பராகுங்கள். எல்லா செய்திகளையும் பரிமாறிக்கொள்லலாம்.
sg_literatureandarts.yahoogroups.com
எம்.கே.குமார்.
அன்புக்குரிய குமார்,
விரிவான நிகழ்ச்சித்தொகுப்புக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
அன்று விழா 4-6 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் மிக நேரம் சென்று வரவேண்டாமே என்று 5.15க்கு நினைத்து வரவில்லை - வந்திருக்கலாம்.
அன்னிக்கே அவசரகதியில் படிச்சுட்டு போயிட்டே இருந்துட்டேன் (அதெப்படி படிக்க இருக்கும் பொறுமை நம்மில் பலருக்கும் பின்னூட்டமிட இல்லை என்பது என் நெடுநாளைய கேள்விக்கு விடைதெரிந்து விட்டது:)
அன்பு அன்பு,
மிக்க நன்றி.
எனக்கு அந்த பொறுமையின்மை நிறைய உண்டு.
சமீப காலத்தில் பின்னூட்டம் இட மூன்று தரம் முயற்சித்து மூன்று தரமும் முடியாமல் அடுத்த நாள் வந்து பின்னூட்டம் இடும் அளவுக்கு மனதில் தைத்த பதிவு பாலு மணிமாறனின் 'உதுமான் கனி இரங்கற்கூட்ட பதிவு!'
எம்.கே.
Post a Comment