புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியத்திற்கு நடந்த தேர்தலில், ஒன்றியத்தலைவர் தேர்வின்போது தமக்கு துணைத்தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வை ஆதரித்து, தி.மு.க.தலைவர் மற்றும் தளபதி உட்பட கழகத்தினர் அனைவருக்கும் எதிர்பாராத அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஒன்றிய தி.மு.க செயலாளர் ஒருவர். மற்ற இடங்களில் கூட்டணியில் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமாய் இருந்த தி.மு.க.காரர்களை விலக்கியும் விளக்கம் கேட்டும் உள்ள தி.மு.கழகம், இங்கு பரம வைரியான அ.தி.மு.க.விற்கே தி.மு.க செயலாளர் ஒருவர் ஆதரவு அளித்ததை உணர்ந்து ஆடித்தான் போய்விட்டது.
தளபதி ஸ்டாலின் நேரில் தொடர்பு கொண்டு பேசியும் கேட்காமல் அறந்தாங்கி எம்.எல்.ஏவும் (உதயம் சண்முகம்) இதற்கு உடந்தையாக இருந்ததையடுத்து கட்சித்தலைவர்கள் அதிர்ச்சியிலுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அத்தனை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி மன்ற தலைவர் தேர்தல்களிலும் தி.மு.க வெற்றிபெற்று சாதனை படைக்க ஒரே ஒரு யூனியனான ஆவுடையார்கோயிலை அ.தி.மு.கவிற்கு தமது கட்சியாளரே தாரை வார்த்ததை அடுத்து அதிமுகவிற்கு ஆதரவளித்த அந்த ஒன்றியச்செயலாளரை அதிரடியாய் பதவி நீக்கம் செய்துள்ளது தி.மு.க.
அறந்தாங்கி எம்.எல்.ஏ உதயம் சண்முகம்விடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ என்பதற்காய் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கழகம் யோசித்துக்கொண்டிருக்கிறது போலும்.
***********
இதுபற்றிய தினமலர் செய்திகள்.
தி.மு.க., கையில் புதுகை உள்ளாட்சி அதிகாரம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே ஒரு பஞ்சாயத்து யூனியனை தவிர மீதமுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஆட்சி அதிகாரத்தை போட்டியின்றி தி.மு.க., கைப்பற்றியுள்ளது.
இந்த இடங்களில் தி.மு.க., சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க., நகரச் செயலாளர் முத்துசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுபோன்று துணைத் தலைவராக தி.மு.க., மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுக்கோட்டை நகராட்சி தலைவராக ராமதிலகம் (தி.மு.க), துணைத் தலைவராக நைனா முகம்மது (தி.மு.க) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அறந்தாங்கி நகராட்சி தலைவராக மாரியப்பன் (தி.மு.க), துணைத் தலைவராக ஹாஜி முகம்மது (காங்கிரஸ்) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பஞ்சாயத்து யூனியன்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் விபரம் கீழ்வருமாறு:
* புதுக்கோட்டை: தலைவர் ஜெயா (தி.மு.க), துணைத் தலைவர் மகமாயி (தி.மு.க).
* அறந்தாங்கி: தலைவர் மெய்யனாதன் (தி.மு.க), துணைத்தலைவர் வெள்ளைச்சாமி (காங்கிரஸ்).
* கறம்பக்குடி: தலைவர் ஃபர்னட் மேரி (தி.மு.க), துணைத்தலைவர் ராமைய்யன் (சுயே)
* ஆவுடையார்கோயில்: தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க), துணைத்தலைவர் ராமனாதன் (தி.மு.க)
* கந்தர்வக்கோட்டை: தலைவர் மாரி அய்யா (தி.மு.க), துணைத்தலைவர் ராமைய்யா (காங்கிரஸ்)
* குன்னாண்டார்கோயில்: தலைவர் போஸ் (தி.மு.க), துணைத்தலைவர் அமுதாராணி(சுயே)
* திருமயம்: தலைவர் துரைராஜ் (தி.மு.க), துணைத்தலைவர் ஆவுடையப்பன் (தி.மு.க)
* திருவரங்குளம்: தலைவர் தங்கவேலு (தி.மு.க), துணைத்தலைவர் வடிவேலு (தி.மு.க)
*
* மணமேல்குடி: தலைவர் மஹமூதா பீவி (தி.மு.க), துணைத்தலைவர் முகம்மது அப்துல்லா (தி.மு.க)
* பொன்னமராவதி: தலைவர் ராஜு (தி.மு.க), துணைத்தலைவர் பழனியப்பன் (தி.மு.க)
கூட்டணி கட்சிகளுக்கு "வேட்டு' வைத்த விவகாரம் ஒன்றிய செயலர்கள் இருவர் உட்பட 21 பேர் நீக்கம்
சென்னை:கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக இரு ஒன்றியச் செயலர்கள் உள்ளிட்ட 21 பேர் தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த ஜெயலலிதா மோகன், சுஜாதா, சோழவரம் ஒன்றியத்தை சேர்ந்த கோபிநாத், ஆர்.கே.பேட்டை ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் கன்னியப்பன், திருவண்ணாமலை கீழ்பென்னாத்துõர் ஒன்றிய துணைச் செயலர் பன்னீர் செல்வம் ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
அதேபோல், விழுப்புரம் ஒலக்கூர் ஒன்றிய செயலர் சொக்கலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீதாபதி, தினகரன், சண்முகம், தியாக துருகம் ஒன்றியத்தை சேர்ந்த காந்திமதி, முருகாயி, அண்ணாமலை ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையர்கோவில் ஒன்றிய செயலர் ராமநாதன், இலுப்பூர் செயலர் பூபதி, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த குப்புசாமி, விவசாய அணி அமைப்பாளர் நவலடி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சுலோசனா, பொத்தனுõர் பேரூர் செந்தமிழ்செல்வன், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகர செயலர் காயாம்பூ உள்ளிட்டோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இவர்களோடு தி.மு.க.,வினர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைமையின் சார்பில் தேர்தல் தொடங்கிய நாளில் இருந்து கூட்டணி கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படுமென கூறி வந்ததை அனைத்துக் கட்சியினரும் அறிவர். "கூட்டணிக்கு துரோகம் செய்து வெற்றி பெற்று பதவிக்கு வந்தாலும், அப்படி வந்த பதவி அற்ப ஆயுளில் முடிக்கப்பட்டு விடும் என்பதால் அதை அற்ப சந்தோசம் என்று சொல்லலாம்' என்றே நான் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி ஒவ்வொரு கட்சியிலும் இருப்பதைப் போல தி.மு.க.,விலும் உள்ள சிலர் தவறு செய்திருக்கலாம்.
அப்படி செயல்ப்பட்டவர்கள் மீதும், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அப்பாவு, உதயம் சண்முகம், கே.பி.ராமசாமி ஆகியோர் மீதும், ஒன்றிய செயலர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உட்பட 20 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியில் இருந்து அவர்களை நீக்க நேற்றைக்கே முடிவெடுக்கப்பட்டது. முடிவுகள் முழுவதுமாக வருவதற்கு முன்பாகவே மூன்று எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 20 முக்கியஸ்தர்கள் மீது தி.மு.க., நடவடிக்கை எடுத்திருப்பதில் இருந்தே, எந்த அளவுக்கு கூட்டணிக் கட்டுப்பாட்டை காப்பாற்ற கட்சித் தலைமை முன் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
***********
அதிமுகவை திமுக ஆதரித்ததன் மூலம், தலைவர் பதவியைப் பெற்றிருக்கவேன்டிய முன்னாள் ஒன்றியத்தலைவர் திரு.சுந்தரராஜன் வெற்றிபெறமுடியாமல் போனதும் திமுகவிலிருந்த தீயத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான எனது அண்ணன் பெற்றிருக்கவேண்டிய ஆவுடையார்கோயில் ஒன்றிய துணைத்தலைவர் பதவி அநியாயமாய் தட்டிப்போய்விட்டதே என்பதும் எனக்கு மிகவும் வருத்ததிற்குரியதாய் இருக்கிறது.
காத்திருக்கலாம்.
அன்பன்,
எம்.கே.
No comments:
Post a Comment