Wednesday, January 28, 2009

பசுபதியைப் பற்றிய சிறுகுறிப்புகள் - 4

திடுமென சிங்கப்பூரை நேசிப்பதாய் பசுபதி சொன்னதன் அதிசயம் எனக்குப்புரியவில்லை.

காதைத்தீட்டிக்கொண்டேன். ஆண்டு இறுதி விடுமுறைக்காக சென்னை சென்று திரும்பி வந்திருந்த அவனுடைய தோழி மீனாட்சி அவர்களைப் பார்த்தானாம் பசுபதி. மீனாட்சி அவர்களின் ஆதங்கமாய் பசுபதி சொன்னதன் சுருக்கமான விவரணங்கள் இவை.

கூவம் ஆற்றில் ஒரு பதின்ம வயதுப்பெண் மழைவெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகிறாள், ஆயிரம்பேர் கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். ஒருவர் கூட காப்பாற்ற முயற்சிக்கவில்லை.

வங்கிக்கிளைக்கு அக்கவுண்ட் அப்டேட் செய்யச்சென்றால் இரண்டு நாட்கள் கழித்து வரும்படி தலையை நிமிர்த்தி பார்க்காமலேயே சொல்கிறார் வங்கி அதிகாரி.

வீட்டிலிருந்த தமிழ்ப்புத்தகங்களை கோணியில் அடைத்து கிணற்றுக்கருகில் போட்டு விட்டார்கள் வீட்டிலுள்ளவர்கள். மனது கேட்காமல் ராமகிருஷ்ணா மிஷனுக்கு அள்ளிச்சென்று கொடுத்துவிட்டு வந்தாராம் தனது நண்பரொருவர். மணிமேகலையை கொடுக்கும்போது மட்டும் கண்களில் ஜலம். காரணம் அவருடைய இளங்கலை மற்றும் முதுகலையில் மணிமேகலை அவருக்கு மிகவும் பிடித்த பாடம். 94 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாம்.

ஹார்ட் பாதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு ஹார்ட் தேடி அலைந்து 24 மணி நேரத்துக்குள் ஒருவர் ஹார்ட் கொடுக்க முன்வந்துவிட்டார். ஹார்ட்டைக் கொடுக்க முன்வருபவர்கள் இந்தியாவில் இவ்வளவு எளிதாக கிடைக்கிறார்கள் என்றால் எங்கோ ஏதோ தவறு நேருகிறது என மீனாட்சி நினைப்பதாக அவன் சொன்னான்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவருக்கு உயிர் போய் இரண்டு நாட்களாகியும் வெண்டிலேஷன் செட்டப்போடு ஆஸ்பத்திரியிலே வைத்துக்கொண்டு போராடுவதாய் நாடகம் நடத்தியிருக்கிறார் ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர். ரமணா தோற்றது போங்கள்!!!

அண்மையில் இறந்துபோன புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரின் மனைவியைச் சந்தித்தாராம் மீனாட்சி. வீட்டில் அப்பா சேர்த்துவைத்திருக்கும் குப்பையையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு வா; உனக்கு நானிருக்கும் இடத்தில் வீடு வாங்கித்தருகிறேன் என்கிறாராம் அவரது பையன்.

மிகவும் புகழ்பெற்ற இருமனைவி கொண்ட எழுத்தாளர் ஒருவர் ஹாஸ்பிட்டல் செலவுக்கே கலைஞரிடம் கையேந்திக்கிடக்கிறாம். பெற்ற பையன்களும் மனைவிகளும் கண்டுக்காமல் விட்டுவிட்டார்களாம்.

சிறிது நேர அமைதிக்குப்பிறகு பசுபதி சொன்னான், பணம் மட்டும் சார்ந்து அமைவதா வாழ்க்கை?

No comments:

Search This Blog