ஷ்ஹோஒ........ஷ்ஹோஓஓ....ஷ்ஹோஓஓஒ...............
வணக்கம் தலைவா. நான் தான் ரஜினி ராக்கப்பன், சிங்கப்பூர்ல இருந்து எழுதுறேன். மொத வரி ஏதோ புரியாத மாதிரி இருக்கேன்னு கொழம்பாதே தலைவா. தலைவருக்கு மொதமொறையா ஒரு கடுதாசி எழுதுறோமேன்னு ஒரு 'சீட்டி' அடிச்சுட்டு எழுத ஆரம்பிச்சேன், அதுதான் அது. விசில் சத்தம்.
வந்து பாரு தலைவா, நாடு விட்டு நாடு வந்தாலும் தலைவரு பாசம் போகுமா தலைவா. பிச்சுப்புட்டோம். தலைவர் படம்ன்னா தலைவர் படந்தான் சொல்லவைக்கிற அளவுக்கு நடத்திக்காட்டிப்புட்டோம் தலைவா.
ஒருவாரத்துக்கு முன்னாடியே, வுட்லாண்ட்ஸ் காஸ்வேபாயிண்டு தியேட்டர்ல போயி டிக்கட்டு புக் பண்ணச்சொல்லி நம்ம பாண்டிப்பயல அனுப்பி வெச்சிட்டோம். ரெண்டு நாளு பொயிட்டு, சும்மாவே திரும்பி வந்தான், என்னடான்னு கேட்டதுக்கு இன்னும் புக்கிங் ஆரம்பிக்கலையாம்ன்னு சொன்னான். இவன் ஒரு வெளங்காத பய தலைவா. பாபாவுக்கு அவனைத்தாம் அனுப்பிவெச்சோம். பாபா கதைதான் தெரியும்ல. அதனால திரும்பி மூணாவது நாளு நம்ம சேகரு பயல போகச்சொன்னோம்.
சேகரு நாட்டரசன் கோட்டை தலைவா. ஊர்ல 'பாட்ஷா ரஜினி ரசிகர் மன்றத்துல' உபதலைவர். நீலாம்பரிங்கிற மாமா பொண்ண விட, வீட்டுவேலைக்கார பொண்ணுதான் நல்லபொண்ணுன்னு நீ ‘படையப்பா’ல கல்யாணம் கட்டுனதுமாதிரி, மாமா பொண்ணை விட்டுட்டு, வீட்டுக்கு வேலைக்கி வந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்போ சிங்கப்பூர்ல கொத்துவேலை பாக்குறான். ஊருலேயிருந்து வந்த மொத நாளு கேட்டான், 'பாஸ், கன்ஷ்ட்ரக்ஷன் வேலை, கன்ஷ்ட்ரகக்ஷன்ல வேலையின்னு சொல்றாய்ங்களெ, அப்படின்னா என்ன வேலை பாஸ்ன்னு. அட கருமாந்திரம் புடிச்சவனே, ஊர்ல கொத்துவேலை இருக்குல, அந்தவேலைதானு சொன்னேன். ரஜினி ரசிகனாச்சே தலைவா. அன்னிக்கி களத்துல குதிச்சவன் தான். கம்பி கட்டுறதுல அவன அடிக்க ஆளு இல்லெ இன்னக்கி; நாட்டாங்கெல்லாம் அவனுக்குட்ட வேலை கத்துக்கணும். வேலை தலைவா வேலை; கடமை தலைவா கடமை; உழைப்பு தலைவா உழைப்பு.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, பதினாறு அடி உயரத்திலேயிருந்து ஒரு நாளு விழுந்ததுல கொஞ்சம் இடுப்பெலும்புல காயம். மத்தபடி இன்னக்கிம் மலை. அண்ணாமலை! படையப்பன்; ஆறு படையப்பன்! உன் கட் அவுட்டுக்கு பாலு ஊத்தும்போது இப்படி விழுந்திருந்தாகூட சந்தோசப்பட்டிருப்பனேன்னு அவன் ஒரு மாசம் பினாத்திக்கிட்டிருந்தான். நாட்டரசன் கோட்டை போனா மறக்காமெ பாரு தலைவா, பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல பதினாறு அடில ஃபிளக்ஸ் போர்டு உனக்கு, அவந்தான் வெச்சிருக்கான். அவன் பொண்டாட்டிய நாய் கடிச்சி நாட்டரசன் கோட்டை ஆசுபத்திரில வெச்சிருக்கானுவ நாலுமாசமா. போன மாசம் பாக்கப்போயிருந்தான். அப்போ வெச்ச போர்டு தலைவா அது.
உன் போஸ்டரைக்கூட கையெடுத்து கும்பிடுற பயகள்ல அவனும் ஒருத்தன் தலைவா. வந்தா டிக்கட்டோட வா இல்லாட்டி வராதேன்னு போகச்சொன்னோம். அன்னக்கி அவனுக்கு 4 மணி டு 8 மணி வரைக்கும் ஓவர்டைம்; பாத்திருந்தா 12 வெள்ளி சம்பளம் கூட கெடச்சிருக்கும். என்னடா, இன்னக்கி ஓவர்டைம் பாத்துட்டு நாளைக்கிப் போயி வாங்கிக்கலாமான்னு கேட்டேன். 'படுத்திருந்த நாயி வால்ல வெடியக்கொழுத்தி வெச்சதுமாதிரி' பயலுக்கு வந்திருச்சி கோபம். என்னைப் பாத்து, என்னப்பாத்து எப்படிடா இப்படிக் கேக்கலாம்ன்னு சொல்லிட்டு வேலைக்கி அரை நாள் லீவு போட்டுட்டு வுட்லாண்ட்ஸ் தியேட்டருக்கு கெளம்பிட்டான். தலைவருன்னா சும்மாவா. பாசக்கார பய தலைவா.
படத்துக்கு மொத்தமா கெளம்பிட்டு இருக்கும் போது இந்த ‘விக்ரம்’ பய ஒரு கமெண்டு விட்டான் பாரு. எல்லோரும் அவனை சாத்தலாமான்னு பாத்தோம், அப்படியான கமெண்டு தலைவா அது, என்னன்னு கேக்குறியா? “என்னடா பன்னிங்க எல்லாம் கூட்டம் கூட்டமா கெளம்பிண்டிங்க போலயிருக்கு”ன்னு தான்.
சிங்கப்பூர்ல 10 தியேட்டர்ல போட்டுருந்தாங்க தலைவா. என்னுடைய சிங்கப்பூரு 10 வருஷ வாழ்க்கையில இதுதான் தலைவா பத்து தியேட்டர்ல போட்ட மொத படம். அப்படியே மெரள வெச்சிட்டே தலைவா. டிக்கட்டுதான் 15வெள்ளி வாங்கிப்புட்டானுக. முக்கால் நாள் சம்பளம். போகட்டும் தலைவா, இதையெல்லாம் கணக்கு பண்ணலாமா?
படத்தைப்பத்தி என்ன சொல்ல தலைவா. வாற சீன்லையெல்லாம் உன்னையே பாத்துக்குட்டு இருந்ததால, படத்துல என்ன நடந்ததுன்னு ஒண்ணூமே ஞாபகம் இல்லை தலைவா. ஆனாலும் 'புதுக்கோட்டை பிரஹதம்மாள்' தியேட்டர்ல 'பாட்ஷா' படத்துக்கு அடிச்ச விசிலை விட அஞ்சு விசிலு அதிகமாத்தான் அடிச்சிருப்பேன்னு தோணுது. நல்லவேளை, தியேட்டர்ல இருந்தவங்க யாரும், இந்த "ஊர்ப்பயலுக" தொல்லை தாங்கமுடியலைன்னு பொலம்பா, சந்தோசமா குதூகலமா இருந்ததா ஒரு மனநிறைவு தலைவா. உன்னால, ரஜினியால தான் இந்த நிறைவு, ஒற்றுமை எல்லாம் சாத்தியம், நடக்கும் தலைவா.
படத்துல சிட்டிங்கிற எந்திரன் தன்னைத்தானே வெட்டிக்கிட்டு சாவுற காட்சியில பொலபொலன்னு அழுதுட்டேன் தலைவா. மனசைக் கரைக்கிற சீனு தலைவா அது. அது மாதிரி மனுசனை வெட்டுறதைக் கூட தாங்கிக்கிடுவோம் தலைவா; ஆனா மிஷினா இருந்தாலும் அது ரஜினி மெஷினா இருந்தா தாங்க முடியல தலைவா. இந்தமாதிரி சீனு இனிமே வெக்காத தலைவா. கடைசி இருபது நிமிஷம் 'டாம் அண்ட் ஜெர்ரி' மாதிரி சூப்பரு தலைவா.
கலாநிதிமாறன்கிட்டெ சம்பளம் கூட வாங்காம நடிச்சிருக்கேன்னு கேள்விப்பட்டேன் தலைவா. புல்லரிக்குது தலைவா. பணமா முக்கியம் தலைவா. பாசம் தலைவா; பாசம்!!. இதுதான் தலைவர்ங்கிறது. இந்த குணம் இல்லாமெ, பூஜை போடும்போதே, எந்த ஏரியான்னு வாங்கிக்கிட்டு, அட்வான்ஸையும் அள்ளிக்கிறதுனாலதான், சூப்பரு ஆக்டருன்னு சொல்லிக்கிட்டு திறியிறவங்க படமெல்லாம் பாக்ஸ் ஆஃபீலே படுத்துக்குது. மனசு வேணும், தலைவா, பணமா முக்கியம்.
எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு தலைவா. தலைவனுக்காக படமா, இல்ல சன் டிவிக்கான்னு. சன் டிவி உன்னைக் கூவி கூவி வித்துட்டாய்ன்ங்களோன்னு வேற யோசிக்கத்தோணுது. என்னவா இருந்தா என்ன தலைவா? வீட்டுக்காரன், வீட்டுக்கு உள்ளே வெச்சி சோறு போட்டா என்ன, இல்லெ, வெளியே வெச்சி சோறு போட்டா என்ன.? அந்த சோறு எங்களுக்கு கெடைக்கிறது பெரிய விஷயம் தானே. சந்தோசம் தானே.
அண்மையில பாலச்சந்தர் சார் உன்னைப் பேட்டி கண்டதா படிச்சேன், தலைவா.
நீ நடிச்ச படத்துல காலம் கடந்து நிக்கிற படம் எதுவா இருக்குமுன்னு கேட்டதுக்கு ராகவேந்திரா, பாட்ஷா, எந்திரன்னு சொல்லியிருக்கியே தலைவா? நல்ல படத்தையெல்லாம் சொல்லாம எப்படித் தலைவா, இப்படி படமா சொல்றே? இன்னக்கிம் என் பொண்டாட்டியக் கேட்டா ஆறிலிருந்து அறுபது வரைக்கும், முள்ளும் மலரும், ஜானின்னு சொல்லிக்கிட்டு திரிவா. அவ என்னைவிட அதிகமா உன் விசிறி தலைவா.
பொண்டாட்டிக்கிட்ட தோத்துட்டா வாழ்க்கையில ஜெயிச்சுடலாம்; பொண்டாட்டிக்கிட்டெ ஜெயிச்சுட்டா வாழ்கைக்கையில தோத்துடுவோம்னு மேடையில சொல்ல, நீ கையை மேலே தூக்கி தட்டுனதா கேள்விப்பட்டேன். லதா அண்ணி கையை இறக்கச்சொன்னதாவும் படிச்சேன். பொண்டாட்டி சொன்னதைக் கேட்டிருந்தா சிங்கப்பூருக்கே வராம ஊர்ல கடையாவது வெச்சிப் பொழச்சிருப்பேன் தலைவா. பொண்டாட்டி சொன்னதையெல்லாம் கேக்காம, ரசிகர் மன்றம், ரசிகர் மன்றம்ன்னு அலைஞ்சி கைக்காசெல்லாம் செலவு பண்ணி கடன்காரன்னா அல்லாடிக்கிட்டிருந்தேன். ஆனாலும் நீ சொன்னது சரிதான் தலைவா. கடைசியா, பொண்டாட்டிதான் புடிச்சி சிங்கப்பூருக்கு அனுப்பிவெச்சுட்டா.
ரத்தினம் ன்னு ஒரு பய தலைவா. இங்கதான் 'காடி' கழுவிக்கிட்டு இருந்தான். ரெண்டு வருஷ பெர்மிட் முடிஞ்சதும் அவன் மொதலாளி சீனன் அவனுக்கு பெர்மிட்டை நீட்டிக்கலை, அந்த அளவுக்கு ரத்தினம் வேலைக்காரன்னா பாத்துக்கோயேன். இந்த தடவை ஊருக்கு போனப்போ பாத்தா, டொயோட்டா குவாலிஸ் கார்லெ, 'கருப்பு மஞ்சள் சிவப்பு ' கொடி கட்டிக்கிட்டு போய்க்கிட்டு இருக்கான். என்னடா கேட்டதுக்கு விஜயகாந்த் கட்சியிலே மாவட்டச்செயலாளராம். இந்த தடவை தேர்தல்லெ கூட நிக்கப்போறானாம். எப்படிடான்னு கேக்கமுடியுமா? எப்படிங்கன்னு கேட்டேன். ரியல் எஸ்டேட் பிஸினசாம். அவனுக்கு முன்னாடி, ரசிகர் மன்றம் ஆரம்பிச்சது நான் தலைவா எங்க ஊர்ல. இங்க, இந்த வார கார்டுக்கு 300வெள்ளியாவது எடுக்க முடியுமான்னு அல்லாடுறேன். பணமா தலைவா முக்கியம், சொல்லு தலைவா.
சிவகுமார் பையன் சூர்யான்னு ஒரு பய தலைவா. நடிப்புல இப்பவே பயங்கரமா பாயுறான். இருபத்தஞ்சி படம் தான் நடிச்சிருக்கான். என்னடான்னு பாத்தா, எங்க ஏரியாவுல கஷ்டப்படுற குடும்பத்து பிள்ளைங்க, நல்ல மார்க் வாங்கி படிக்க வைக்க முடியலைன்னா, அவனே படிக்க வெக்கிறான்னாம். தலைவா, நாம 154 படம் நடிச்சுட்டோமே, ஏதாவது இப்படி பண்ணியிருந்தா ஒரு சந்தோசம் வருமுன்னு தோணுது தலைவா. லதா அண்ணியும் ஸ்கூல் நடத்துறதா கேள்விப்பட்டேன். என்ன ஸ்கூல்ல்ன்னு தெரியலை.
இந்தா, இந்தக் கடுதாசி எழுதும்போது பக்கத்துல படுத்து 'ஹான்ஸ்' போட்டுக்கிட்டு இருக்கானே, நம்ம ரவி, இப்பவே ஊர்ல கொடிகம்பம் நட்டு, ரெடியா நிக்கிகிறான். அண்ணன், கட்சி ஆரம்பிச்ச உடனே, நான்தான் மாவட்டச்செயலாளர் (அ) வட்டச்செயலாளர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கான், பேரு கூட 'விஜய்' ரவி ன்னு மாத்திக்கிட்டான்.
சாரி தலைவா, நீ பாட்டுக்கு இமயமலைக்கி கெளம்பிக்கிட்டு இருப்பே, இந்த நேரம் போயி உன்னை, என் கடுதாசிக் குடுத்து படிக்கச்சொல்லிட்டனேன்னு வருத்தமா இருக்கு. இமயமலையில எல்லாரையும் கேட்டதாச் சொல்லு தலைவா.
தொழில், குடும்பம், குழந்தை, கல்யாணம், பேரன் பேத்திகள், ஆன்மீக பயணங்கள், அரசியல் அன்புன்னு நீ, நிறைஞ்ச குடும்பஸ்தனா இருக்குறது மன நிறைவா இருக்கு தலைவா. அதுதான் எங்க சந்தோசம்மும். சரி தலைவா, அடுத்த படத்துலே பாப்போம்.
காலேஜ் படிக்கிற எம்பையனுக்கு பணம் கட்டணும்ன்னு நாலு தடவை பொண்டாட்டி போன் போட்டுட்டா. என்ன பண்றதுன்னு தெரியலை. 'விஜய்'ரவி கிட்டே கேக்கலாமான்னு பாத்தா நாலு காசு வட்டி கேக்குறாங்கண்ணோவ்.
பாப்போம், சரியா வரலையின்னா, படிப்ப நிறுத்திப்புட்டு, நம்ம பயலை இந்தப்பக்கம் இழுத்துட்டு வந்துருவோம். நமக்கும் வயசாயிருச்சில.
இப்படிக்கு
தலைவா உன் ரசிகன்,
ரஜினி ராக்கப்பன்
சிங்கப்பூர்
நன்றி:தங்கமீன்
3 comments:
பகிர்வுக்கு நன்றி
வருகைக்கு நன்றி அரசன்!
Post a Comment